முதல் குற்றம் பண்ணியவரின் நேர்மையும்... நிறைய குற்றம் பண்ணியவரின் முதல் நேர்மையும் இணையும் புள்ளிதான் இந்தப் படம்!



‘‘சினிமாவில் போலீஸ் என்றாலே நமக்கு ஒரு கற்பனைத் தோற்றம் முன்னாடி வந்து நிற்கும். ஆனா, எங்க ஊர் மதுரை பக்கம் போலீஸ்காரர்களின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதை யதார்த்தத்துக்கு மிக அருகில் நெருங்கிச் சொல்லும் படம்தான் ‘கிரிமினல்’. நிச்சயமா அதகளம் செய்யும்...’’ என்ற முன்னோட்டத்துடன் பேச ஆரம்பித்தார் இயக்குநர் தட்சிணாமூர்த்தி ராமர். இதில் சரத்குமார், கெளதம் கார்த்திக், ஜனனி, ரவீணா ரவி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்கள்.

வழக்கமா போலீஸ் கதையில் துப்பாக்கிதான் இருக்கும். முதல் பார்வை போஸ்டரில் சைலன்சர் இருக்கிறதே?

இது வழக்கமான போலீஸ் கதை கிடையாது. எல்லோரும் சொல்ற வார்த்தை மாதிரி தெரியலாம். படம் பார்த்தால் உங்களுக்கே தெரியும். எங்க ஊர்ல போலீஸார் வழக்கை எப்படி கையாள்வார்கள் என்பதை காட்டவேண்டும் என்ற சிந்தனையில உருவான ஸ்கிரிப்ட் இது. அதுவும் டீக்கடையில் எதேச்சையாக உதிச்ச கதை என்றும் சொல்லலாம்.இன்னொரு யதார்த்தமான உண்மை என்னனு  பார்க்கும்போது, வழக்குனு வரும்போது போலீஸ் சினிமாத்தனமா துப்பாக்கி எடுத்துட்டு போய் நிக்கமாட்டாங்க. கையில இருக்கிற பிரம்பை எடுத்துதான் அடிக்கப் பார்ப்பாங்க.

இதுல போலீஸ் பின்னணியை ஏன் தேர்ந்தெடுத்தோம்னா ஊர் பக்கங்களில் சொந்தக்காரங்க வேலையில இருப்பாங்க. பொது இடத்திலேயே சித்தப்பா, மாமானு சொந்தம் கொண்டாடுவாங்க. எங்க படத்திலும் அது வரும். சரத் சாருடன் டிராவல் பண்ணும் சப் இன்ஸ்பெக்டர் கேரக்டர் சரத் சாரை சித்தப்பானுதான் கூப்பிடுவார்.
போஸ்டர்ல வரும் ஆயுதத்துக்கான பதிலை சொல்வதாக இருந்தால் ஹீரோ ரொம்ப நிதானமானவர். நேர்மையாக இருந்தவர் திடீர்னு தவறு செய்தால் வாழ்க்கைக்கு அது இடையூறாக இருக்கும். அந்த சூழ்நிலையில் நிதானம் இழந்தவராக மாறுகிறார். அப்போது அவர் கையில் எடுக்கும் அனைத்துமே ஆயுதங்களாக மாறுது.

கதையில இரண்டு எமோஷனல் ஏரியாவை தொட்டுள்ளோம். வழக்கமா இருக்கிற க்ரைம் த்ரில்லர்ல இன்ெவஸ்டிகேஷன் நடக்கும். இன்வெஸ்டிகேஷன் என்று வரும்போது ஒரு கொலை நடக்கும். கொலையாளி யாராக இருக்கும் என்ற டுவிஸ்ட் இருக்கும். ஆடியன்ஸ் நினைக்கும் எதுவும் இல்லை என்பதை உடைப்போம். அதைத் தாண்டி புதுசா என்ன பண்ணினோம்னா தப்பு பண்ணியவன் எமோஷன், விசாரணை அதிகாரியின் எமோஷன் இருக்கும். தப்பு பண்ணியவனின் நியாயம், நேர்மையா இருந்தவனின் ஒரு தவறு என இரண்டு எதிர்முனை மோதி நிற்கும்.

முதல் குற்றம் பண்ணியவரின் நேர்மையும், நிறைய குற்றம் பண்ணியவரின் முதல் நேர்மையும் இணையும்போது நல்லது நடக்கும். அதுதான் படத்தோட கான்ெசப்ட்.நிறைய குற்றம் செய்து நல்லது பண்ணும் கேரக்டர்ல  கெளதம் கார்த்திக்; நிறைய நல்லது செய்து தப்பு பண்ணிய கேரக்டரில் சரத் சார்  நடிக்கிறார்கள்.கிரிமினல் யார் என்ற கேள்விக்கு பதில் நாம்தான்! நூறு சதவீதம் யாரும் சரியாக இருப்பதில்லை என்ற கோணத்தில்தான் இந்த டைட்டில் வைத்தேன்.

ஒரு குற்றம் செய்யும்போது நாம் குற்றவாளியாகத்தான் இருப்போம். தவறு நடக்கும்போது நாம் நினைப்பது, ‘கொலை பண்ணவில்லை, திருடத்தானே செய்தேன்’ என்ற மனநிலையும், திருடும்போது ‘பொய்தான் சொன்னேன்’ என்ற மனநிலையும்தான் இருக்கிறது.சட்டத்தின் பார்வையில் எல்லாமே குற்றம். அப்படி படத்துல எல்லோருமே கிரிமினலாதான் தெரிவாங்க. இந்தப் படம் பார்க்கும்போது நாம் எவ்வளவு தூரம் நல்லவங்க, எவ்வளவு தூரம் கெட்டவங்க என எடைபோட்டுப் பார்க்கலாம்.

மொத்தம் 13 பேர் கதையை நகர்த்துவாங்க. அவர்கள் அனைவரும் தப்பு பண்ணவங்க. இவர் பார்வையில் அவர் தப்பானவர்... அவர் பார்வையில் இவர் தப்பானவர் என்பதுதான் உங்க கேள்விக்கான பதில்.

சரத்குமார் முகத்துல சோகம் வழியுதே?

சரத்குமார் சார் நூற்றி ஐம்பது படங்களுக்கு மேல் பண்ணியுள்ளார். அதுல எண்பது, தொண்ணூறு படங்களில் போலீஸா பண்ணியுள்ளார். அதுல இருந்து என்ன வித்தியாசம் என்றால் இதுவரை பண்ணாத எமோஷனல் போலீஸ் கேரக்டரை இந்தப் படத்தில் பண்ணியுள்ளார் என்பதுதான்.ஊர் பக்கம் இருக்கும் பெண் பிள்ளையோட அப்பா போலீஸா இருந்தா எப்படியிருப்பார் என்பதுதான் அவர் கேரக்டர். இந்தக் கதையில் இருந்த எமோஷனலுக்காகத்தான் கமிட் பண்ணினேன்னு சரத் சார் பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

கேரக்டர் பேர் சோழவர்மன். சாரிடம் கதை சொல்லும்போது பயத்துடன்தான் போனேன். அவரிடம் எல்லாமே  டக்... டக்...னு இருக்கும். நிறைய கேள்வி கேட்பார். ‘ஐந்து நிமிடம் டைம். அதுக்குள்ள லைன் இம்ப்ரஸ் ஆச்சுனா தொடர்ந்து பேசலாம்’ என்று சொல்லிதான் கதை கேட்க தயாரானார்.நான், ‘இரண்டு நிமிஷம் போதும் சார்’னு கதை சொல்ல ஆரம்பிச்சேன். சாருக்கு லைன் பிடிச்சதும் மறுநாள் அப்பாயின்ட்மென்ட் கொடுத்து முழுக் கதையையும் சொல்லச் சொன்னார்.

கதை சொன்னதும் பவுண்ட் ஸ்கிரிப்ட் கொடுத்தேன். அதையும் படிச்சவர் ரொம்ப நாளுக்குப் பிறகு ரைட்டிங்காகவும் எனக்கு பிடிச்சதுனு பாராட்டினார்.ஸ்பாட்டிலும் கோ டைரக்டர் பங்களிப்பு எப்படியிருக்குமோ அதைக் கொடுத்தார். 

காஸ்டியூம் சேஞ்சுக்காக மட்டும்தான் கேரவன் யூஸ் பன்ணினார். அவரே சக ஆர்ட்டிஸ்ட்டைக் கூப்பிட்டு டயலாக் சொல்லிக் கொடுப்பது, கன்டினியூட்டியை ஞாபகப்படுத்துவது என பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். சரத் சார் பங்களிப்பு இல்லையென்றால் எங்களால் திட்டமிட்டபடி எடுத்திருக்க முடியாது.

கெளதம் கார்த்திக் பற்றி நிறைய ரூமர் சுத்துது. அது எல்லாமே பொய். ஃப்ரெண்ட்லியா பழகக்கூடியவர். வீட்டுக்கு போனா, எல்லோரிடமும் எங்க டைரக்டர்னு அறிமுகப்படுத்துவார். தண்ணிகேட்டா அவர்தான் எடுத்துட்டு வாருவார். கதை சொன்னதும் இரண்டு நாள் டைம் கேட்டார். அதுதான் என் வழக்கம்னு சொன்னார். கதை சொல்லிட்டு வெளியே வந்த அரை மணி நேரத்தில் பண்றேன்னு சொல்லிட்டார். ஹீரோவாக எந்த இடத்திலும் குறுக்கீடு பண்ணவில்லை.

ஸ்பாட்டில் எல்லா நாளும் அவர்தான் இரண்டு மணி நேரம்  முன்னாடி இருப்பார். ஏழு மணிக்கு ஃபர்ஸ்ட் ஷாட் என்றால் ஐந்து, ஐந்தரைக்கு இருப்பார்.
மதுரை களம் என்பதால் வீட்டிலேயே ரிகர்சல் எடுத்துகிட்டார். மதுரை பக்கம் ‘சாப்டியா’ என்பதையே கொஞ்சம் கோபமாதான் கேட்பாங்க. அதையெல்லாம் அழகா ஸ்கிரீனுக்கு கொண்டு வந்தார்.

எங்கிட்ட கூட நோட்ஸ் இருக்காது. அவர் குறிப்பு எடுத்து பக்காவா இருப்பார். சரத் சார் - கெளதம் காம்பினேஷன் பிரமாதமா வந்துச்சு. இருவரும் முதன் முதலா சந்திக்கும் காட்சியை ஒன்றரை கால்ஷீட்ல ப்ளான் பண்ணி வெச்சிருந்தோம்.  ஐந்து மணிக்கெல்லாம் பேக்கப் சொல்ற மாதிரி பின்னியெடுத்தாங்க. இருவருக்குமிடையே டெடிகேஷன்ல போட்டியே நடக்கும்.
ஜனனியிடம் கதை சொல்லும்போது, போர்ஷன் கம்மியா இருக்கும்; ஆனா, அழுத்தமான கேரக்டர்னு  சொல்லிதான் ஆரம்பிச்சேன். கதையை முழுசா கேட்டதும் வான்மதி கேரக்டர் பண்றேன்னு சொல்லிட்டாங்க.

ரவீணா ரவி சென்னையில வளர்ந்தவர். பதினைந்து நாட்கள் ரிகர்சல் எடுத்ததோடுமட்டுமல்லாமல், மதுரைக்கு வந்து என் குடும்பத்தோடு பழகி மதுரைக்கார பெண்ணாகவே மாறினார்.

முக்கியமான வேடம். பிரமாதப்படுத்தினாங்க. கருணாகரன் ஹீரோ ஃப்ரெண்ட் கேரக்டர்ல வர்றார். சுபத்ரா ராபர்ட் போலீஸாக வர்றார்.படத்துல நடிச்ச எல்லோரும் சிறந்த ஒத்துழைப்பு கொடுத்தாங்க. யாருமே கேரவன் பக்கம் போகமாட்டாங்க. மானிட்டரை சுத்தி பத்து, பதினைந்து சேர் போட்டு உட்கார்ந்துடுவாங்க. அவர்களுக்கு போர்ஷன் இல்லன்னாலும் ஸ்பாட்டுக்கு வருவாங்க.

டெக்னீஷியன்ஸ் யாரெல்லாம் இருக்காங்க?

மியூசிக் டைரக்டர் சாம் சி.எஸ். எங்க ஊர்க்காரர். அதுக்காகவே கொஞ்சம் எக்ஸ்ட்ராவா செய்வார். கரெக்‌ஷன் சொல்லாதளவுக்கு அவருடைய ஒர்க் இருக்கும். இரண்டு பாடல்கள். வழக்கம்போல் பின்னணி இசையில அவருடைய வித்தையைக் காட்டினார்.படம் குவாலிட்டியாக வந்ததற்கு காரணம் ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார். சூழ்நிலை எப்படியிருந்தாலும் எல்லோரிடமும் சுமுகமா பேசி படப்பிடிப்பு நடத்துவார். நான் ஒரு டோன் சொன்னேன். அவர் ஒரு டோன்ல பண்ணி இதை டிரை பண்ணலாம்னு சொன்னார். அது பிடிச்சதால அப்படியே எடுத்தோம்.

ஆர்ட் டைரக்‌ஷன் சூர்யா. பிரபல ஆர்ட் டைரக்டர் ராஜீவன் மகன். அப்பாவுக்கு பெருமை சேர்க்கும்படி கலக்கியிருக்கிறார். எடிட்டிங் மணிகண்ட பாலாஜி. ‘மனிதன்’, ‘இறைவன்’ பண்ணியவர்.பர்சா பிக்சர்ஸ் மீனாட்சி சுந்தரம், பிக் பிரிண்ட் கார்த்திகேயன் சேர்ந்து தயாரித்துள்ளார்கள். கிரியேட்டிவிட்டி சைட்ல தலையிடாத தயாரிப்பாளர்கள். நான் சொன்ன பட்ஜெட்டைவிட அதிக பட்ஜெட்ல எடுக்க சொல்லி ஒத்துழைப்பு கொடுத்தாங்க. கதைக்குத் தேவையான டெக்னீஷியன்ஸ், ஆர்ட்டிஸ்ட்ஸ் என எல்லாவற்றிலும் சுதந்திரம் கொடுத்தாங்க. ஒரு இயக்குநருக்கு அதைவிட வேறு என்ன வேணும்.

எல்லாம் சரி... பாலா, அமீர் சொல்லாத மதுரை படமா?

மதுரை என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற மனநிலை இருக்கும். மதுரையில கேமரா வைக்காத இடமே இல்லை. ஆனா, அவர்கள் காட்டாத மக்களைக் காட்டி
யிருக்கிறேன். மதுரை பின்னணியில் த்ரில்லர் இன்ெவஸ்டிகேஷன் வந்ததில்லை. எங்க ஊர் பக்கம் விசாரணை எப்படி இருக்கும் என்பதை யதார்த்தமா சொல்லியுள்ளேன். மற்றபடி பாலா, அமீர் அண்ணன் சொன்ன மதுரை வாழ்வியல் அப்படியே இருக்கும்.

எஸ்.ராஜா