21 ஆண்டுகளாக கரகம் ஆடும் கல்லூரி மாணவ மாணவிகள்!



மொத்தம் பனிரெண்டு மாணவர்கள். அதில் பத்துப் பேர் மாணவிகள். அத்தனை பேரின் காஸ்ட்யூம்களும் ரோஜா நிறத்தில் கண்ணைப் பறிக்கிறன்றன. அதே வண்ணத்தில் மலர்கள் அலங்கரிக்கப்பட்ட கரகங்களைக் கொண்டு வந்து மேடையில் வரிசையாக வைத்து கும்பிடுகிறார்கள். சிலர் நான்கு ஏணிகளைக் கொண்டு வந்து ஓரமாய் வைக்கிறார்கள். மணைப் பலகையை விட பெரியதாக நீளமாய் இரண்டு பலகைகள், கூடவே அம்மிக்கல் மீது உருட்டும் உருளி போல் உருட்டை. இவையெல்லாமே மேடையேறுகின்றன.

இரண்டு காவடிகள், இரண்டு பெரிய தாம்பூலத்தட்டுகள், இரண்டு எவர்சில்வர் குடங்கள். நாதஸ்வர இசைக்கலைஞர்களும் மேடையில். வாத்தியம் முழங்குகிறது. ஒரு மாணவி மயில்தோகை கட்டிக் கொண்டு ஆடுகிறார். அடுத்து ஒரு மாணவனும் மாணவியும் காவடி ஆட்டம் தூள் கிளப்புகிறார்கள். எண்ணி சில நிமிடம். காட்சி மாறுகிறது. இப்போது அனைவரும் நடனமாடியபடியே வந்து கரகங்களை கும்பிட்டுத் தூக்கித் தலையில் வைக்கிறார்கள்.

பதினோரு பேரும் ஒன்று சொன்ன மாதிரி ஆட, இடது, வலதுபுறக்கோடியில் இருக்கும் மாணவிகள் கரகமாடிக்கொண்டே குடத்தின் மீது ஏறி ஆடுகிறார்கள்.
குடத்தை அவர்கள் நாட்டியமாடும் கால்கள் நகர்த்துகிறது. கைகள் கும்பிடுகிறது. தலை கரகத்தை சரியாமல் தாங்குகிறது. அதேபோல இரண்டு பேர் தாம்பூலத்தட்டின் மீது ஏறி நடனம் புரிகிறார்கள்.

அதோடு விட்டார்களா... அந்த நீண்ட இரண்டு பலகைகள் அம்மிக்குழவி போன்ற இரண்டு உருளைகள் மீது வைக்கப்பட்டிருக்க, அந்தப் பலகையின் இருமுனைகளிலும் கால்களை வைத்துக் கொண்டு கைதேர்ந்த சர்க்கஸ் கலைஞர்கள் போல் ஆடுகிறார்கள் இரண்டு மாணவர்கள். அதற்கடுத்து நான்கு ஏணிகள் இரண்டிரண்டாக சேர்த்து கூம்பு வடிவில் வைக்கப்படுகிறது. அதன் மீது பின்னோக்கிப் படுத்த வாக்கிலே, கரகம் தலையில் சுமந்து ஆடியபடியே ஏறுகிறார்கள் இரண்டு பேர். அதையடுத்து அந்த ஏணிகள் எல்லாம் நெட்டுக்குத்தலாக வைக்கப்பட்டு, அந்த ஏணியில் ஏறியபடி கரக ஆட்டம் தூள் பறக்கிறது.

அடுத்து இரண்டு பேர் தரையில் ஒரு சேலையை விரிக்கிறார்கள். அதில் மாணவி ஒருவர் கரகாட்டம் ஆடியபடியே கால்களை நீட்டியவாக்கில் அமர்ந்து அப்படியே உருண்டபடி சேலையைச் சுற்றுகிறார். இரண்டு முறை உருண்ட பிறகு சேலையை கொசுவம் முடிந்து இடுப்பில் கட்டுகிறார். முந்தானையைத் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு சேலை கட்டி முடித்துக் கொண்டு எழுந்து ஆட ஆரம்பிக்கிறார். அத்தனையும் கரகத்தை தலையில் வைத்துக் கொண்டே ஆடினபடியே நடக்கிறது.

இப்படி அடுத்தடுத்த காட்சி மாறுதலுக்கும் அரங்கில் சொல்ல முடியாத அளவு கைதட்டல். பார்வையாளர்களில் முன் வரிசையில் அமர்ந்திருந்த விவிஐபி பட்டிமன்றப் புகழ் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் எழுகிறார். அதற்கு முன்புதான் இரண்டு மணி நேரம் தனக்கான பட்டிமன்றத்தை முடித்துவிட்டு அமர்ந்திருந்தவர் இந்த நிகழ்வில் நெகிழ்ந்து போனார்.

மேடையில் ஏறி அந்த கலைக்குழுவை மனதார இப்படிப் பாராட்டுகிறார்.‘‘எங்க ஊர்லதான் ராத்திரி 10 மணிக்கு ஆரம்பிச்சு, அதிகாலை அஞ்சு மணிவரைக்கும் ஆடுவாங்க. அது உடம்பா என்னன்னு தெரியாது. அப்படி வில்லு மாதிரி. அத்தனை பேரையும் ஆட வைப்பாங்க. அது அவங்களுக்குத் தொழில்.

ஆனா, இங்கே கல்லூரியில் படிக்கும் மாணவக் கண்மணிகள் இந்தக் கலையை மேடையேற்றி செய்தது பெரிய வியப்புக்குரியது. இங்கே இப்படி ஒண்ணு நடக்கிறது உங்க எல்லோருக்குமே பெருமை. இது கல்லூரிக்கும், இங்குள்ள பேராசிரியர்களுக்கும், இதை உருவாக்கினவர்களுக்கும்தான் பெருமை. கலை என்றால் களைப்புத் தெரியாது. ஈடுபாட்டோட செய்யுங்க. புகழ் பெறுங்க!’’

கடந்த பொங்கல் திருவிழாவை ஒட்டி கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. அதில் அரங்க நிகழ்ச்சிகளில் ஒன்றாக நடந்ததுதான் மேலே வர்ணிக்கப்பட்ட மாணவ - மாணவிகளின் கரகாட்டம்.

இந்தக் கரகாட்டக்குழுவை உருவாக்கி, பயிற்சி எடுத்து நடத்திக்காட்டுவது எல்லாமே இந்தக்கல்லூரி மாணவ - மாணவிகள்தான். இந்தக் கலைக்குழு கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக நடக்கிறது. தமிழகம் மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் சென்று பல்வேறு போட்டிகளில், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று வந்திருக்கிறது.

ஒரு மாணவருக்கு கல்லூரிப் பிராயம் என்பது இளங்கலை மூன்றாண்டுகள், முதுகலை இரண்டாண்டுகள் ஆக மொத்தம் ஐந்தாண்டுளில் முடிந்து விடும். இந்தக் கரகாட்டக்குழு இப்படி 22 ஆண்டுகளாக மாணவர்களாலேயே நடத்தப்படுவதற்குக் காரணம் அதன் தொடர் ஓட்டம்தான். அதைப்பற்றி இந்தக் கரகாட்டக்குழுவில் பங்கேற்ற மாணவ - மாணவிகளிடமே பேசினோம்.
‘‘பொதுவா கல்லூரி ஆரம்பித்தவுடனே யாருக்கெல்லாம் கரகம் ஆடறதுல விருப்பம் இருக்கு, பெயர் கொடுங்கன்னு கேட்பாங்க. வேற நாட்டியம் பழகியிருக்கிறவங்க, அல்லது ஆர்வம் உள்ளவங்க பேர் தருவாங்க. அப்படி வர்றவங்களுக்கு சீனியர்ஸ் பிராக்டிஸ் கொடுப்பாங்க.

தினசரி நாம இன்ஸ்டா, ஃபேஸ்புக்னு ஒரு மணி நேரமாவது செலவு பண்றோம். அந்த நேரத்தை இங்கே கொடுத்தால் போதும். ஒரே வாரத்தில் கரகம் வசப்பட்டு விடும்.
நான் இப்ப எம்.எஸ்சி கெமிஸ்ட்ரி படிக்கிறேன். 2019ல் இங்கே வந்து ஃபர்ஸ்ட் இயர் ஜாயின் பண்ணினேன். அதுக்கு முந்தி ஃபோக் டேன்ஸ் கொஞ்சம் தெரியும். கரகத்தை வலைத்தளங்களில் பார்த்திருக்கேன். அது ஆடணும்ன்னு நினைச்சிருக்கேனே ஒழிய, எங்கே கத்துத் தருவாங்கன்னு தெரியலை.

இங்கே வந்தவுடனே கரக குரூப்ல சேர்றவங்க வாங்கன்னு கூப்பிட்ட உடனே போய் சேர்ந்துட்டேன். எனக்கு சீனியர் அண்ணா எல்லாம் கத்துக் கொடுத்தாங்க. அந்த சீனியர்களுக்கு அவங்க சீனியர்கள் கத்துக் கொடுத்திருக்காங்க. அப்படித்தான் எங்க கல்லூரியில் கரகக்குழு நீண்ட காலமா இருக்குன்னு எங்க மாஸ்டர்கள் சொல்லியிருக்காங்க.

இங்கே இப்ப நான்தான் சீனியர். இதுவரைக்கும் 40 நிகழ்ச்சிக்கும் மேல பண்ணிட்டேன். எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்கற அளவும் வளர்ந்துட்டேன். இதுக்கு ஆர்வம் மட்டுமல்ல, எங்க ஆசிரியர்களும், இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த கல்லூரியும்தான் காரணம்!’’ புன்னகையுடன் சொல்கிறார் இந்தக் கரகக்குழுவின் சீனியரான கார்வண்ணன்.

இதுவரை இவர் சுமார் 150 ஜூனியர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளாராம். இவர் இந்தக்கல்லூரியை விட்டுச் சென்ற பின்பு அடுத்த நிலையில் உள்ள சீனியர்கள் ஜூனியர்களுக்கு கற்றுக் கொடுப்பார்களாம்.‘‘கரகாட்டம்ன்னா அன்றைக்கும் இன்றைக்கும் சில விஷயங்களில் கொச்சைப்படுத்துவாங்க. அதுக்கெல்லாம் நாங்க இடம் கொடுப்பதில்லை. இது ஒரு உன்னதமான கலை. அழிந்து வரும் கலையும் கூட. அதை நம் பண்பாடு, கலாசாரத்தை போற்றிப் பாதுகாக்கிற நோக்கோட கொண்டு போறதுதான் நோக்கமாக இருக்கிறது.

எங்கள் நடனத்தைப் பார்த்து விட்டு பல்வேறு கல்லூரி கலை நிகழ்ச்சிகளுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் கூட கூப்பிட்டிருக்காங்க. போய் ஆடிட்டு வந்திருக்கோம். தமிழ்நாட்டில் எத்தனையோ கல்லூரிகளுக்குப் போயிருக்கிறோம். எங்கேயும் எங்களைப் போல் கரகநாட்டியக் கலைக்குழு இல்லை. அப்படியே ஒன்று ரெண்டு பேர் இருந்தாலும், அவர்கள் இப்படி கரகத்தை முறைப்படி கற்று ஆடுவதில்லை. கரகத்தை கயிறு போட்டுக் கட்டி இழுத்துப்பிடித்துக் கொண்டுதான் ஆடியிருக்கிறார்கள்!’’ என்கிறார் கார்வண்ணன்.

கரகக்குழு மாணவிகள் டீமில் சீனியர்களில் ஒருவர் காயத்ரி. மூன்றாமாண்டு பிகாம், சி.ஏ படிக்கிறார். அவரிடம்  பேசினோம்.‘‘சின்ன வயசிலிருந்தே நாட்டியம்ன்னா ரொம்ப பிடிக்கும். நான் படிச்ச அசோகபுரம் கேர்ள்ஸ் ஹைஸ்கூல்ல சீனியர்ஸ் ஒரு முறை கரகம் ஆடினாங்க. அப்பவே அது போல ஆடணும்ன்னு ஆசைப்பட்டேன். பிராக்டீஸும் பண்ணினேன். சில காரணங்களால் ஸ்டேஜ்ல ஆட முடியாமப் போச்சு.

இங்கே கரகக்குழு இருக்குன்னு தெரிஞ்சு முதல் வருஷமே சேர ஆசைப்பட்டேன். அப்ப கொரோனாவால முடியலை. இரண்டாம் வருஷம்தான் ஜாயின் பண்ணினேன். இப்ப வரைக்கும் 14 நிகழ்ச்சிகள் பண்ணிட்டேன். இதுவரைக்கும் என் பார்வையில் 20 மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்திருக்கேன்!’’ என்ற காயத்ரியிடம், ‘கரகம் ஒரு நம் கலாசார, பண்பாட்டு கலை வடிவம் என்றாலும் கூட நம் திருவிழாக்களில், வேறு நிகழ்ச்சிகளில் ஒரு மாதிரி குத்தாட்டம் போட்ட மாதிரி ஆடறது, இரட்டை அர்த்த வசனங்களில் பேசறது, பாடறது நடக்கும்.

அதையெல்லாம் பார்த்தவங்கதான் நம்ம பெற்றோர். அப்படியிருக்கும்போது நம்ம பொண்ணு கரகம் ஆடறதா, வேண்டாம்ன்னு எதிர்ப்பு வருமே. அப்படி ஏதும் உங்களுக்கு இருந்ததா’’ என்று கேட்டோம்.‘‘பொதுவாகவே எங்க அம்மாவுக்கு நாட்டியம் ஆடறது பிடிக்காது; விடமாட்டாங்க. ஆனா, வீட்ல மற்றவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.. கரகத்துக்குன்னு  அவங்க தனியா எதுவும் சொன்னதில்லை. எனக்கு இஷ்டம், ஆர்வம்ன்னுதான் இதைக் கத்துக்கிட்டேன்.

ஆனா என்னோட சேர்ந்த கேர்ள்ஸ் பல பேர் நல்லா டான்ஸ் பண்றவங்கதான். ஆனா, அவங்க வீட்ல கரகாட்டத்துக்குப் போக வேண்டாம்ன்னு தடுத்திட்டதாக சொல்லியிருக்
காங்க!’’ என்றார். கலாசார நடனம் என்று எந்தக் கல்லூரியில் போட்டி வைத்தாலும் போய் விடுவதை இவர்கள் வழக்கமாக வைத்துள்ளார்களாம். அப்படி சென்ற இடங்களில் எல்லாம் முதல் பரிசுதான்.

‘‘எங்க வீட்ல எந்த எதிர்ப்பும் இருந்ததில்லை. எங்காவது வெளியூர் போயிட்டு லேட்டா வரும்போதுதான் கொஞ்சம் பயந்துக்குவாங்க. கரகம் பழகுறதன் மூலமா மனம் ஒரு நிலைப்படுது. அதனால் பாடம் கற்கும் போது மனதில் நன்றாகப் பதிகிறது!’’ என்கிறார் காவ்யாஸ்ரீ என்பவர். இவர். பிகாம், சி.ஏ படிக்கிறார். இவரைப் போல பிகாம், சிஏ படிப்பவர்கள் மட்டும் இக்குழுவில் பனிரெண்டு பேர் உள்ளனராம். தமிழ் பாடப்பிரிவில் 2 பேர் மட்டுமே உள்ளனர் என்பது இன்னொரு ஆச்சர்யம் ப்ளஸ் அதிர்ச்சி.

இந்தக் கரகக்குழு உருவானதன் பின்னணி குறித்து நம்மிடம் மனம் திறந்தார் பேராசிரியர் கு.முத்துக்குமார். ‘‘நம் மண்ணுக்கேத்த பாரம்பர்யக்கலைகள் போற்றப்பட வேண்டும், அவை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பது எங்கள் கல்லூரி நிர்வாகத்தில் ஆரம்ப காலத்திலிருந்தே உள்ள நடைமுறை. அதற்கான அத்தனை வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள்.

அப்படித்தான் 21 ஆண்டுகள் முன்பு இந்தக் கரகக்குழு இங்கே உருவாக்கப்பட்டது. வருடந்தோறும் கரகக்குழுவில் இங்கே கற்றுக் கொண்டு செல்லும் மாணவ - மாணவிகள் மட்டும் சுமார் ஐம்பது பேர். இன்றைக்குப் பார்த்தால் எப்படியும் 600 பேருக்கு மேல் கரகம் கற்றுள்ளார்கள். அவர்கள் எல்லாம் ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக வெவ்வேறு துறையில் வல்லுநர்களாக உலகம் பூராவும் விரவியிருக்கின்றனர். அவர்களுடன் கரகமும் சென்றுள்ளது.

தாங்கள் கற்றுக் கொண்ட கலையை, தாம் வசிக்கும் மண்ணில் அவர்கள் கொண்டு போய் விதைக்கவும் செய்கிறார்கள். பல்வேறு விருதுகளையும் இந்தக்கலைக்குழு வாங்கி வந்துள்ளது. அது எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் கல்லூரிக்கு மட்டுமல்ல, நம் மண்ணுக்கும் பெருமை!’’ பெருமையுடன் சொல்கிறார் கு.முத்துக்குமார்.

கா.சு.வேலாயுதன்