இந்த குப்பைகளின் மதிப்பு, உலகின் ஒட்டுமொத்த வெள்ளி உற்பத்தியின் மதிப்பைவிட அதிகம்!



இவைதான் இரு சோறு பதங்கள்.ஒன்று, 2019ம் ஆண்டில், உலகளாவிய மின்னணு கழிவுகளின் மதிப்பு 62.5 பில்லியன் அமெரிக்க டாலர். இது உலகின் ஒட்டுமொத்த வெள்ளி சுரங்கங்களில் இருந்து பெறப்படும் வருடாந்திர வெள்ளி உற்பத்தியின் மதிப்பைவிட மூன்று மடங்கு அதிகம்!

மற்றொன்று, 2021ம் ஆண்டில் மட்டும் தூக்கி எறியப்பட்ட பழைய மின்னணுப் பொருள்களின் எடை 5.7 கோடி டன் இருக்கும் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளார்கள். இந்த 5.7 கோடி டன் என்பது சீனப் பெருஞ்சுவரின் எடையைவிட அதிகம்!

இந்த இரண்டு புள்ளிவிவரங்களும் குறிப்பிடுவது ஒன்றைத்தான். அது, உலகின் அச்சுறுத்தலாக இன்று திகழ்வது இ-வேஸ்ட் எனப்படும் மின்னணு கழிவுகள்தான் என்ற உண்மை.மாறிவரும் பருவ நிலை, வெகுவாக அதிகரித்துள்ள சூழ்நிலை மாசு இவற்றை மையமாகக் கொண்ட நெருக்கடிகள் இப்போது உலக நாடுகளை வெகுவாக கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்த நெருக்கடிகளை திறம்பட சமாளிப்பதற்கும், பசுமையான எதிர்காலத்தையும், நிலையான வணிக வளர்ச்சியையும் உறுதிசெய்யவும், அதிகரித்து வரும் சூழ்நிலை மாசு மற்றும் அதற்கு காரணமாக இருக்கும் கழிவுகளைக் குறைப்பதிலும் அவற்றை மறுசுழற்சி செய்வதிலும் நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் திறமையான பயன்பாட்டை உறுதி செய்யவும், அந்த பொருட்களினால் உருவாகும் கழிவுகளைக் குறைக்கவும்; அந்த பொருட்களின் மறுசுழற்சி ஊக்குவிக்கப்படுவதையும் உறுதி செய்ய சர்க்குலர் எகானமி நமக்கு உதவுகிறது. இந்த சர்க்குலர் எகானமியை நடைமுறைப்படுத்துவது வருவாய் ஈட்டுதல், செலவு குறைப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வணிக சந்தைகளை ஒரு நாட்டில் உருவாக்க உதவும்.

அதென்ன சர்க்குலர் எகானமி?

இது ஒரு புதுமையான பொருளாதார மாடல். முடிந்தவரை நம்மிடம் உபயோகத்தில் இருக்கும் பொருட்களை பழுது பார்த்தல், புதுப்பித்தல், மீண்டும் பயன்
படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்வதில் இது கவனம் செலுத்துகிறது. எனவேதான், இன்று சர்க்குலர் எகானமியை நடைமுறைப்படுத்துவது வணிக நிறுவனங்களின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு நோக்கங்களின் (Corporate Social Responsibility) ஒரு பகுதியாக மாறி வருகிறது.

இன்று பல்வேறுபட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் பயன்பாடு அன்றாட வாழ்க்கை மற்றும் வணிக நடவடிக்கைகளின் பெரும்பகுதியாகத் திகழ்கிறது. இந்த எலக்ட்ரானிக் பொருட்கள் இல்லாமல் நம்மால் வாழ்வதோ தொழில் செய்வதோ சாத்தியமில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறொம்.பெருமளவில் உபயோகிக்கப்படும் இந்த எலக்ட்ரானிக் பொருட்களால் மிகப் பெருமளவுக்கு மின்னணு கழிவுகள் எனப்படும் எலெக்ட்ரானிக் குப்பைகள் உருவாக்கப்படுகின்றன.

அதாவது சீனப் பெருஞ்சுவரின் எடையை விட அதிகமாக... வருடாந்திர வெள்ளிச் சுரங்கங்களின் மதிப்பை விட அதிகமாக இ-வேஸ்ட் சேருகிறது.இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு, உலகளாவிய வணிக நிறுவனங்கள் தங்கள் மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதிலும் புதுப்பிப்பதிலும் சர்க்குலர் எகானமி நடைமுறைகளைப் பயிற்சி செய்யத் தொடங்குவது அவசியம். இதனால் சுற்றுச்சூழல் மாசு தொடர்பான நெருக்கடிகளைக் குறைக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு ஒரு நல்ல சுற்றுச்சூழல் உள்ள உலகத்தை உருவாக்கவும் முடியும்.

காலாவதியான மொபைல் போன்கள், தொலைக்காட்சிகள், ஆடியோ பிளேயர்கள், ஸ்டீரியோக்கள், நகலெடுக்கும் இயந்திரங்கள், தொலைநகல் இயந்திரங்கள், டேப்லெட்டுகள், கணினிகள் மற்றும் பல மின்னணு சாதனங்கள் அன்றாட பயன்பாட்டிலிருந்து வெளியேறியவுடன் மின்னணு கழிவுகளாக மாறுகின்றன. இந்த மின்னணு கழிவுகள் பொதுவாக விலைமதிப்பற்ற உலோகக் கூறுகளை உள்ளடக்கியவை. எனவே அவை முறையாக மறுசுழற்சி செய்யப்பட்டால் அதிக பொருளாதார மதிப்பைக் கொடுக்கும்.

அந்த வகையில் உலக நாடுகளால் பின்பற்றப்படும் உபயோகமான சில சர்க்குலர் எகானமி நடைமுறைகள் இவைதான்.

*எலக்ட்ரானிக் பொருட்களை பயனுள்ள மறுசுழற்சிக்கு ஏற்ப வடிவமைக்கப்பட வேண்டும். அத்தகைய கவனத்துடன் எலக்ட்ரானிக் பொருட்களை வடிவமைப்பது, அவை மறுசுழற்சி மூலம் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய உதவும்.

*பயனுள்ள மறுசுழற்சி நடைமுறைகளைக் கொண்டுவருவதை மின்னணுப் பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, உலகப்புகழ் பெற்ற மின்னணுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான டெல் (Dell) நிறுவனம் தங்கள் மின்னணுப் பொருள்கள் உற்பத்தியிலும், விற்பனையிலும் சர்க்குலர் எகானமி கட்டமைப்பை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

*விற்பனையாளர்களால் ஆதரிக்கப்படாத (Not Supported) மின்னணு உபகரணங்கள் மறுசுழற்சி செய்யப்பட வேண்டும்.

*நகர்ப்புற சுரங்க நடைமுறைகள் (Urban Mining) உலகளாவிய அரசாங்கங்களால் ஊக்குவிக்கப்பட வேண்டும். நகர்ப்புற சுரங்கம் என்பது உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் குவிந்து கிடக்கும் மொத்த மின் கழிவுகளிலிருந்து மதிப்புமிக்க உலோகங்கள் பிரித்தெடுக்கப்படும் செயல்முறையாகும். ஆப்பிரிக்க நாடுகளில் நகர்ப்புற சுரங்க நடைமுறை மிகுந்த லாபத்தைக் கொடுப்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது

*சிறந்த சுற்றுச்சூழல் செயல்திறனுடன் சந்தையில் விற்கப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் அடையாளம் காணப்பட வேண்டும். அத்தகைய தயாரிப்புகளை விற்கும் விற்பனையாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

இதனால் மற்ற எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனையாளர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த எலக்ட்ரானிக் பொருள்களை தயாரித்து விற்பனை செய்ய உந்துதல் பெறுவார்கள். மேலும் எலக்ட்ரானிக் பொருட்களை கணிசமான அளவு மறுசுழற்சி செய்யும், புதுப்பிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தும் நுகர்வோர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

*உலக அளவில் மிக அதிக அளவில் வெளியற்றப்படும் மின் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கும், புதுப்பிக்கவும் தேவையான திறன்களை சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு (NGOs) நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் உலக நாடுகளின் அரசாங்கங்கள் உருவாக்க வேண்டும்.

*சர்க்குலர் எகானமி கொள்கைகள் பொருள்களின் கொள்முதல் (Procurement) மற்றும் தயாரிப்பு மேலாண்மை (Production Management) நடைமுறையில் நன்கு ஒருங்கிணைக்கப்பட வேண்டும்
உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) மின் கழிவு மேலாண்மையில் சர்க்குலர் எகானமி கொள்கைகளை செயல்படுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வையை வடிவமைத்துள்ளது.

இந்தப் புதிய பார்வை உலகளாவிய மின்னணுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் சர்க்குலர் எகானமி கொள்கைகளை ஒருங்கிணைக்க உதவும். இதனால் நாட்டின் இயற்கை வளங்கள் நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டு அவை வீணடிக்கப்படுவது குறைக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் , அவை மறுசுழற்சி மூலம் திறம்பட புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுவதும் உறுதி செய்யப்படும்.

2030ம் ஆண்டுக்குள் உலக அளவில் வெளியேற்றப்படும் வருடாந்திர மின் கழிவுகளின் மொத்த எடை 74,000,000 மெட்ரிக் டன் என்ற அபாயகரமான அளவைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இது அமெரிக்காவில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் மொத்த எடையைப் போல 203 மடங்கு அதிகம். எனவே, உலகளாவிய அரசாங்கங்களும் வணிக நிறுவனங்களும் மின் கழிவுகளின் மேலாண்மை, மின்னணு பொருட்களின் கொள்முதல், மறு சுழற்சி மேலாண்மை தொடர்பான தங்கள் நடைமுறைகளை மறுபரிசீலனை செய்வதற்கும்; அவற்றை சர்க்குலர் எகானமி
கொள்கைகளின் அடிப்படையில் மறுசீரமைப்பதற்கும் முயல வேண்டும்.

தெரிஞ்சுக்குங்க...

*மின்னணு கழிவுகளிலிருந்து பல உலோகங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இரும்பு, இரும்பு அல்லாத பொருட்கள், பிளாஸ்டிக், கண்ணாடிகள், மரத்துண்டு, செராமிக் உள்ளிட்டவை கிடைக்கின்றன.

*இ-வேஸ்ட் உருவாக்கத்தில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது.

*அதிக மின்னணு கழிவுகள் உருவாகும் நாடுகளில் இந்தியாவின் இடம் 5.

*மின்னணு கழிவுகளின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 10 சதவீதமாக உள்ளது.

*உலக அளவில் ஆண்டுதோறும் 2 கோடி டன் முதல் 5 கோடி டன் வரையில் மின்னணு கழிவுகள் உருவாகின்றன.

*இந்தியாவில் ஆண்டுதோறும் உருவாகும் மின்னணு கழிவுகளின் அளவு 17 லட்சம் டன். 2012ம் ஆண்டில் இது 8 லட்சம் டன்னாக இருந்தது.

*உலக அளவிலான இ-வேஸ்ட்டில் இந்தியாவின் பங்கு 4 சதவீதம். உலக அளவிலான ஜிடிபியில் இது 2.5 சதவீதம்.

*வளர்ந்த நாடுகள் தங்களின் மின்னணு கழிவுகளை வளரும் நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் தொழில் வாய்ப்புகள் என்கிற பெயரில் ஏற்றுமதி செய்கின்றன. இந்தியாவும் மிகப் பெரிய அளவில் மின்னணு கழிவுகளை இறக்குமதி செய்கிறது.

*கர்நாடகாவைச் சேர்ந்த செரிப்ரா நிறுவனம் (cerebra computers) ஆண்டுக்கு 36,000 டன் மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஆலையை வைத்துள்ளது.

*உலக அளவில் நகரங்களின் திடக்கழிவில் மின்னணு கழிவின் பங்கு 5 சதவீதம். இதர கழிவுகளை விடவும் இவை அபாயகரமானவை.

*வளர்ந்த நாடுகளில், அடுத்த 5 ஆண்டுகளில் இதர கழிவுகளை விட மின்னணு கழிவு வளர்ச்சி 3 மடங்கு அதிகரிக்கும்.

*மின்னணு கழிவில் பெரும்பான்மை வகிப்பது கம்ப்யூட்டர், செல்போன்.

*இந்தியாவில் 70 சதவீத மின்னணு கழிவுகள் எரிக்கப்படுகின்றன அல்லது புதைக்கப்படுகின்றன.

*மின்னணு கழிவுகளை புதைக்கிறபோது நிலத்தடி நீர் வளமும், மீத்தேன் வாயுவும் குறைகின்றன. எரிக்கிறபோது 25 மடங்கு அதிகமான கார்பன் டையாக்ஸைட் வெளிப்படுகிறது.

*இந்தியாவில் மின்னணு கழிவுகளைக் கையாளும் வேலைகளில் 25,000 பேர் ஈடுபடுகின்றனர். கழிவுகளை சேகரிப்பது, உலோகங்களைப் பிரிப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்கின்றனர். இது அபாயகரமான வேலை என்று ஐநா குறிப்பிட்டுள்ளது.

*நேபாளம், வங்கதேசம், தாய்லாந்து, கானா முதலிய நாடுகள் அதிக அளவில் மின்னணு கழிவுகளைக் கையாளுகின்றன.

*ஒரு டன் மின், மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் இரண்டு டன் கரியமில வாயு உமிழ்வைத் தடுக்க முடியும்.

என்.ஆனந்தி