நேற்று சமந்தா... இன்று மம்தா...
ஆட்டோ இம்யூன் பிரச்னையான ‘மையோசிடிஸ்’ நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா இப்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.அந்த சோகத்திலிருந்து சினிமா ரசிகர்கள் மீள்வதற்கு முன்பாக இப்போது மம்தா மோகன்தாஸும் ஆட்டோ இம்யூன் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிய வந்திருக்கிறது.மம்தா மோகன்தாஸுக்கு ஆட்டோ இம்யூன் பிரச்னையான ‘விட்டிலிகோ’ நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மலையாளம், தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்திருக்கும் மம்தா, கிறங்கவைக்கும் தனது இனிமையான குரலில் பல சினிமா பாடல்களையும் பாடியிருக்கிறார்.பரபரப்பாக அவர் நடித்துக்கொண்டிருக்கும்போதே, அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு, புற்றுநோய் சிகிச்சையில் இறங்கினார். மன தைரியத்துடன் அதிலிருந்து மீண்டார். ஆனால், அந்த சந்தோஷம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.
மீண்டும் புற்றுநோய் தாக்கியது. தனது போராடும் குணத்தால் இரண்டாவது முறை தாக்கிய புற்றுநோயையும் வெற்றி கொண்டு நடிக்க ஆரம்பித்தார்.எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கையில் இப்போது அவருக்கு விட்டிலிகோ நோய் இருப்பதாக மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்திருக்கிறது.விட்டிலிகோ நோய் வந்துவிட்டால், சருமத்தின் நிறம் மாற ஆரம்பிக்கும். படை படையாக நிற மாற்றம் அதிகரிக்கும். இதனால் சருமத்தின் வசீகரம் குறையும், அழகில் மாற்றம் உண்டாகும்.
தனக்கு விட்டிலிகோ இருப்பதை வெளிப்படையாகவே ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார் மம்தா மோகன்தாஸ். தனது போராட்ட குணத்தாலும் மன உறுதியாலும் இந்தப் பிரச்னையில் இருந்தும் நிச்சயம் மம்தா மீண்டு வருவார்.
காம்ஸ் பாப்பா
|