அங்க ஷிவ்ராஜ்குமார்... இங்க விக்ரம் பிரபு! ரெய்டு நடத்தும் பாடம்
போலீஸ் லுக், ஸ்டிரிக்ட் ஆபீசராக விக்ரம் பிரபு, ‘என்ட மாட்டாத, காணா போயிடுவ, வேணாம் மோதாத, வீணா ஆயிடுவ...’ என சாம் சி.எஸ் இசையில் வெளியான முதல் பாடலும் தெறிக்கும் ரகமாக ஃபயர் மோட் காட்டுகிறது ‘ரெய்டு’.இயக்குநர் முத்தையா பட்டறையிலிருந்து முதன்முறையாக ரீமேக் படம். அவருடைய தயாரிப்பில் முதல் படம் இயக்கியிருக்கும் மகிழ்ச்சியுடன் முகம் மலர்கிறார் அறிமுக இயக்குநர் கார்த்தி.
‘‘என் அம்மாவுடைய அண்ணாதான் இயக்குநர் முத்தையா. எனக்கு தாய்மாமா. அவர் கிட்டேதான் சினிமா கத்துக்கிட்டேன்...’’ என ஆரம்பமே அடடே போட வைத்தார். உங்களைப் பற்றி சொல்லுங்க?சொந்த ஊர் தேனி பக்கம் ஆண்டிப்பட்டி. கிராமங்களைப் பொறுத்தவரைக்கும் படிப்புதான் எல்லாமே. படிச்சாதான் சென்னைக்கே விடுவாங்க. அப்பா டி.இருளாண்டி, அம்மா முத்துலட்சுமி. அண்ணன் துரை விக்ரம் பாண்டியன்.
எங்க வீட்ல அப்பா உட்பட எல்லாருமே பி.டபிள்யூ.டி துறையிலேதான் வேலை செய்யறாங்க. பெரும்பாலும் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன், டெண்டர், சிவில் இப்படிதான் இருப்பாங்க. அதனாலேயே என்னையும் சிவில் இன்ஜினியரிங் படிக்க வெச்சாங்க.
ஆனால், என்னவோ நமக்கு சினிமா மேலே ஆர்வம். தாய்மாமா பார்த்தே வளர்ந்த காரணம், அவர் கூடவே அசிஸ்டெண்டா வேலை செய்தேன். ‘புலிக்குத்திப் பாண்டி’, ‘தேவராட்டம்’, ‘கொடிவீரன்’ படங்கள்ல வேலை செய்திருக்கேன். அவரும் கூட படிக்கச் சொல்லிதான் முதல்ல சொன்னார். சினிமாவிலே ஒரு வாய்ப்புக்காக, தான் எவ்ளோ கஷ்டப்பட்டோம் என்பதையும் சொன்னார். ஆனால், சமூகத்துக்கு ஒரு கருத்தை சொல்ல சினிமாவை விட பிரமாதமான மீடியா எதுவும் இல்லை. அதனாலேயே சினிமாவிலேதான் நம்ம வாழ்க்கைன்னு முடிவு செய்தேன். வீட்டிலே முதல்ல சொல்லும் போது செம ஷாக். ஆனால், என் மேலே ஒரு நம்பிக்கை இருந்துச்சு. முதல் படம் கிடைச்ச உடனே அந்த நம்பிக்கை சந்தோஷமாகவும் மாறிடுச்சு. ‘ரெய்டு’ எங்கே, எப்படி உருவானது?
கன்னடத்தில் ஷிவ்ராஜ்குமார் நடிச்சு ஹிட்டான படம் ‘டகரு’. இந்தப் படத்தினுடைய ரீமேக் ரைட்ஸை முத்தையா மாமா வாங்கி வெச்சிருந்தார். அவரே இந்தப் படத்தைக் கொடுத்து நீ டைரக்ட் செய்னு சொன்னார். படத்துக்கு டயலாக் கூட மாமாதான் எழுதியிருக்கார். படத்துக்குத் தயாரிப்பும் அவரேதான்.அமைதியான ஒரு நபர், அதே சமயம் தப்புன்னா தப்பு, அதைத் தட்டிக் கேட்கணும்னு நினைக்கற கேரக்டரும் கூட. அப்படிப்பட்ட ஒருத்தர் சார்ஜ் எடுத்தா என்ன ஆகும்ங்கற போலீஸ் கதைதான் ‘ரெய்டு’.
‘புலிக்குத்திப் பாண்டி’ படத்திலேயே விக்ரம் பிரபு அண்ணா கூட நல்ல பழக்கம் உண்டாச்சு. அப்பவே அண்ணா, தம்பின்னுதான் இருப்போம். அந்த நட்பின் அடிப்படைலதான் இந்தப் படத்திலே விக்ரம் பிரபு அண்ணா ஹீரோவானார். விக்ரம் பிரபு கேரக்டர் எப்படி வந்திருக்கு... திவ்யாவுக்கு மீண்டும் கம்பேக் படமா இந்தப் படம் இருக்குமா?
விக்ரம் பிரபு அண்ணனின் லுக், ஸ்டைல்னு எல்லாத்துக்கும் தனியா ஒர்க் செய்திருக்கோம். ‘டாணாக்காரன்’ எப்படி வித்யாசமான படமா விக்ரம் பிரபு அண்ணா கரியர்ல இருந்துச்சோ அப்படி இந்தப் படமும் கமர்ஷியலாவும் நல்ல படமா அமையும்னு நம்புறேன். டெடிகேஷனா வேலை செய்யக் கூடிய நபர், ரிஸ்க் எடுத்து ஆக்ஷன் காட்சிகள்ல நடிச்சிருக்கார். அவர் கேரக்டர் ரொம்ப நல்லா வந்திருக்கு.
திவ்யாவுக்கு, ஆறு வருஷம் கழிச்சு இந்தப் படம் வந்தாலும் இன்னமும் மக்கள் மனசிலே அவங்க வீட்டுச் செல்லப் பொண்ணா மறக்காம இருக்காங்க. எங்க கிராமத்திலேயே நிறைய பேர் அவங்க கேரக்டர் பத்தி விசாரிப்பாங்க. ‘வெள்ளைக்கார துரை’ படத்துக்கு அப்பறம் விக்ரம் பிரபு - திவ்யா ஜோடியை திரும்ப ‘ரெய்டு’ படத்தில் ஸ்டைலா, சிட்டி மோட்ல பார்க்கலாம். நிச்சயமா எப்போதுமான கேரக்டரா இல்லாம அவங்க கேரக்டர் புதுசா இருக்கும்.
படத்தில் இருக்கும் மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் பற்றி சொல்லுங்க? படத்திலே இன்னொரு நாயகியா ஆனந்திகா, கதகளி டான்சரா வர்றாங்க. மலையாள நடிகையான அவங்க கேரக்டரும் நல்லா வந்திருக்கு. அட்டு ரிஷி , சௌந்தர்ராஜன், செல்வா சார் நடிச்சிருக்காங்க. டைரக்டர் வேலு பிரபாகர் சாருக்கு ஒரு நல்ல கேரக்டர் இந்தப் படத்திலே இருக்கு. ஒளிப்பதிவு கதிரவன், அவர் டைரக்டர் மற்றும் சினிமாட்டோகிராபராக இதுக்கு முன்னாடி ‘கோடைமழை’ படம் செய்திருக்கார். ‘ஆன்டி இந்தியன்’ பட சினிமாட்டோகிராபரும் அவர்தான்.
படத்துக்கு எடிட்டர் மணிமாறன், கே.எல்.பிரவீன் சாருடைய அசிஸ்டெண்ட். அவருக்கு இந்தப் படம் முதல் படம். இந்தப் படம் முழுக்க முழுக்க எடிட்டிங்குக்கான படம். திரைக்கதையிலேயே ஒரு வித்யாசமான எடிட்டிங் இருக்கு. அதை தனித்துவமான எடிட்டிங்கில் முயற்சி செய்திருக்கோம். மியூசிக் சாம் சி.எஸ். இயக்குநர் மோகன் ராஜா சார் வரிகள்ல ‘என்ட மாட்டாத...’ பாடலை தெறி மோடில் கொடுத்திருக்கார். அடுத்தடுத்து பாடல்களும் ரிலீசுக்குக் காத்திருக்கு. சாம் சி.எஸ் பேக்ரவுண்டு பத்தி சொல்லவே வேண்டாம். மாஸ் காட்டியிருக்கார். முதல் படமே ரீமேக் படம்... இதன் பிளஸ் என்ன, மைனஸ் என்ன?
ரீமேக் படம் செய்து முடிச்சதும் வேறு எந்தப் படத்தையும் தில்லா செய்யலாம்ன்னு ஒரு நம்பிக்கை வந்திருக்கு. இன்னொரு விஷயம், ஏற்கனவே ஒரு ஹிட் மீட்டர் படம். அதை ரீமேக் செய்யும்போது நிச்சயமா ஒப்பீடு இருக்கும். அதை விட சிறப்பா கொடுக்கணும்ங்கற பொறுப்பு இருக்கும். விக்ரம் பிரபு அண்ணாவே ‘ஷிவ்ராஜ் குமார் சார் அங்கே சூப்பர் ஸ்டார்... அவர் என்ன செய்தாலும் அதுக்கு கிளாப்ஸ் வரும்... இங்கே ஒர்க்கவுட் ஆகுமா’ன்னு கேட்டார்.
இந்தக் கேள்வியையும் சேலஞ்சா எடுத்து முடிச்சிருக்கேன். நிறைய ஸோனர்கள்ல கதைகள் இருக்கு. இந்தப் பட வெளியீட்டுக்குப் பிறகுதான் அடுத்த பிளான். இயக்குநர் முத்தையாவிடம் கற்றுக்கொண்ட பாடம் என்ன?நீ செய்கிற தொழிலுக்கு துரோகம் செய்யாம, உண்மையா இரு, வெற்றி தானா தேடி வரும்... இதைத்தான் தாரக மந்திரமா அவர்கிட்டேருந்து கத்துக்கிட்டிருக்கேன்.
ரசிகர்களுக்கு ‘ரெய்டு’ என்ன உணர்வைத் தரும்?கமர்ஷியல் பரபரப்பு விரும்பிகளுக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸா இருக்கும். இந்தப் படத்துக்கு முதல்ல வெச்ச பெயர் ‘டைகர்’. எப்படி புலி ஒரு காட்டுக்குள்ள இருந்தா அந்தக் காடு சுத்தமா இருக்குமோ அப்படி கதைப்படி நாயகர் இருக்கும் இடம் எந்த அநீதிக்கும் இடமில்லாம இருக்கும். இதுதான் ‘ரெய்டு’. கண் முன்னாடி நடக்குற தப்பை பார்த்துட்டு சும்மா இருக்கக் கூடாதுன்னு ஒரு சின்ன கருத்தும் படத்துல இருக்கு.
ஷாலினி நியூட்டன்
|