சாதனை படைக்கும் சச்சின் மகளின் முன்னாள் காதலர்!
* அதிவேக 1000 ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர்.
* சர்வதேச அளவில், அதிவேக 1000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர்.
* ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதமடித்த இளம் வீரர் (23 வயது). இதற்கு முன்னர் கடந்த ஆண்டு இஷான் கிஷன் இரட்டை சதமடித்தபோது, அவருக்கு வயது 24.
*சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோரைத் தொடர்ந்து இரட்டை சதமடித்த 5வது இந்திய வீரர்...
இத்தனைக்கும் சொந்தக்காரராக கடந்த வாரம் கெத்து காட்டினார் சுப்மான் கில் என்ற இந்திய வீரர்.“சுப்மான் கில் வலைப்பயிற்சி செய்யும்போது பார்த்தேன். எனக்கு 19 வயதாக இருந்தபோது சுப்மான் திறமையில் 10 சதவீதம்கூட இல்லை என்பதை நான் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்...” இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாரான விராட் கோலி 2019ம் ஆண்டில் கூறிய வார்த்தைகள் இவை. கோலி அப்படிச் சொன்ன 3 ஆண்டுகளில் அவர் வார்த்தைகளை மெய்யாக்கி இருக்கிறார் சுப்மான் கில்.
இந்திய அணிக்காக மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் (24 இன்னிங்ஸ்கள்) 1,000 ரன்களைக் கடந்த வீரர்களாக நேற்றுவரை விராட் கோலியும், ஷிகர் தவானும் இருந்துள்ளனர். ஆனால், இப்போது 19 இன்னிங்ஸ்களிலேயே 1000 ரன்களைக் கடந்து அந்த சாதனையை முறியடித்துள்ளார் சுப்மான் கில். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மிக இளம் வயதில் இரட்டை சதம் எடுத்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
சுப்மான் கில்லின் இந்த சாதனைகளின் பின்னணியில் அவரது அப்பா லக்வீந்தர் சிங்குக்கு முக்கிய பங்குள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பசில்கா என்ற ஊரில் விவசாயியாக இருந்தவர் லக்வீந்தர் சிங். சிறுவயதில் லக்வீந்தருக்கு கிரிக்கெட் வீரராகும் ஆசை இருந்தது. குடும்பச் சூழலால் அவரால் கிரிக்கெட் வீரராக முடியவில்லை. தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்யவேண்டி வந்தது.
பின்னாளில் தன் மகன் சுப்மான் கில்லுக்கு கிரிக்கெட்டில் விருப்பம் இருப்பது தெரிந்ததும், அவர் அதில் ஜெயிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார். முதல் கட்டமாக தனது வயலில் ஒரு பகுதியை நிரவி அங்கு கிரிக்கெட் மைதானத்தை ஏற்படுத்தினார். அதன் நடுவில் பிட்ச்சை அமைத்து சுப்மான் கில்லுக்கு பேட்டிங் பயிற்சி கொடுத்தார்.
“தினமும் 500 முதல் 700 பந்துகள்வரை சுப்மான் கில்லுக்கு வீசி பேட்டிங் பயிற்சி கொடுத்தேன். இந்தப் பயிற்சிக்காக ஊரில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களையெல்லாம் பயன்படுத்தினேன். சுப்மான் கில்லை அவுட் ஆக்கினால் 100 ரூபாய் பரிசு என்று அறிவித்தேன். இதனால் பல சிறுவர்கள் கில்லுக்கு பந்துவீச முன்வந்தனர். பந்தை வீசுவது மட்டுமின்றி வேகமாக அவரை நோக்கி எறிந்தும் கில்லுக்கு பயிற்சி கொடுத்தனர்...” என்கிறார் அவரது அப்பா லக்வீந்தர் சிங்.
இதில் ஹைலைட் என்ன தெரியுமா..?
சுப்மான் கில்லுக்காக மைதானம், பந்துவீச்சாளர்கள் என்று எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்த லக்வீந்தர் சிங், பேட்டை மட்டும் பயன்படுத்த அனுமதிக்கவில்லை! ஆம். பேட்டுக்கு பதில் ஸ்டம்பை வைத்து பேட்டிங் செய்யவைத்தார்! பேட்டை விட ஸ்டம்பின் அகலம் குறைவு என்பதால், பிற்காலத்தில் பந்தை சரியாக மிடிலிங் செய்ய சுப்மான் கில்லுக்கு இது உதவியாக இருந்தது.
சுப்மான் கில்லின் கிரிக்கெட் ஆர்வமும், திறமையும் அதிகரிக்க, அவருக்கு மேலும் பயிற்சி வழங்குவதற்காக மொஹாலிக்கு இடம் மாறினார் லக்வீந்தர் சிங். அங்குள்ள பஞ்சாப் கிரிக்கெட் வாரியத்தின் பயிற்சி மையத்தில் சேர்த்தார். அன்றிலிருந்து அவரது வளர்ச்சி அபாரமானதாக இருந்தது.2014ம் ஆண்டில் நடந்த மாநில அளவிலான 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் 351 ரன்களைக் குவித்தார். பின்னர் இந்தியாவின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்து சதங்களைக் குவித்தார்.
2019ம் ஆண்டில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் சுப்மான் கில்தான் ஹீரோ. இந்தத் தொடரில் இறுதிப் போட்டியைத் தவிர அனைத்து போட்டிகளிலும் 50 ரன்களைக் கடந்தார். இந்தத் தொடரில் அவரது சராசரி ரன்கள் 104. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து சச்சின் உள்ளிட்ட மூத்த வீரர்களின் பாராட்டைப் பெற்றார். இந்த நேரத்தில்தான் விராட் கோலி, அவரைப் புகழ்ந்து தனது 19 வயதில் கில்லின் திறமையில் 10 சதவீதம்கூட தனக்கு இல்லை என்றார்.
ஆனால், இப்படி பாராட்டினாலும், விராட் கோலியின் காலத்தில் கில்லுக்கு அப்படி ஒன்றும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்காக அவர் சில வருடங்கள் காத்திருக்க வேண்டி வந்தது. ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், மயங்க் அகர்வால் உள்ளிட்டோர் காயம் அடைந்தால்தான் கில்லுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இப்படி பல தடைகளைத் தாண்டித்தான் இன்று இந்தியாவின் முக்கிய வீரர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளார் சுப்மான் கில். கிரிக்கெட்டுடன் அவரது காட்டில் பணமழையும் பெய்ய, இப்போது 31 கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருக்கிறார் சுப்மான் கில். ஒருபக்கம் ஐபிஎல் கிரிக்கெட்டும், மறுபக்கம் விளம்பரங்களும் அவருக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கிறது.
பொதுவாக கிரிக்கெட்டில் கலக்கும் வீரர்கள் காதல் வலையில் சிக்குவது வழக்கம். சுப்மான் கில்லும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒரு காலத்தில் சச்சினின் மகள் சாராவுடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். கில் ஆடும்போதெல்லாம் தனது இன்ஸ்டா பக்கத்தில் சாரா அவரைப் புகழ்வது வழக்கமாக இருந்தது. இது காதலா என்று கேட்க இருவரும் பதில் சொல்லாமல் மழுப்பினர்.
ஆனால், சிறிது காலத்தில் இருவருக்குள்ளும் ஏதோ சிக்கல் ஏற்பட்டது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பின் தொடர்வதைக்கூட கைவிட்டனர்.
சச்சினின் மகள் சாராவுடன் பிரிவு ஏற்பட்ட நிலையில் மற்றொரு சாராவுடன் இப்போது காதலில் இருக்கிறார் சுப்மான் கில். அவர் பாலிவுட் நடிகையான சாரா அலி கான். அவருக்கும் இது இரண்டாவது காதல்தான். சுப்மான் கில்லை காதலிப்பதற்கு முன் பாலிவுட்டில் தன்னுடன் நடித்த கார்த்திக் ஆர்யானைக் காதலித்து வந்தார். சமீபத்தில் கில்லும், சாரா அலிகானும் டின்னருக்காக ஒரு ஹோட்டலுக்குச் சென்றது செய்தியாக மாற, அவர்களின் காதலை ஊரறிந்தது.கிரிக்கெட், பணம், காதல் என்று தேவையான அனைத்து விஷயங்களும் கிடைக்க, மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் இளைஞனாக இருக்கிறார் சுப்மான் கில்.
ஜான்சி
|