அரண்மனை குடும்பம் -55
குரங்கு குல்லாய் போட்டவன் சொன்ன செய்தி குலசேகர ராஜாவை கிண்டிக் கிழங்கெடுக்கத் தொடங்கி விட்டது.“டேய்... அந்த மூணு பேர் யாருன்னு எனக்கு தெரிஞ்சாகணும். நான் அனுப்பித் தந்தேன்னு ஒரு வாழைப்பழத் தாரோட உள்ள போய் அவங்கள உன் செல்போன்ல எப்படியாவது போட்டோ எடுத்து எனக்கு அனுப்பு. கமான் க்விக்...” என்று அவர் மறுபக்கமிருந்து கூறவும் குல்லாய்க் காரனும் தயாரானான்.அங்கிருந்து ஒரு வாழைத்தாரை வாங்கிவர புறப்பட்டான். எதிரில் ஆட்டோ ஒன்றில் இருந்து இறங்கினான் நாச்சிமுத்து. கூடவே ஒரு மெடிக்கல் கிட்பேக்குடன் டாக்டரும் இறங்கினார்.
நாச்சிமுத்து, குல்லாய்க்காரனைப் பார்க்கவும் குல்லாய்க் காரன் வேகமாக நகரத் தொடங்கி பின்பு அது தவறு என்று வேகமாய் உணர்ந்து திரும்பிப் பார்த்து “யாருக்குப்பா உடம்பு சரியில்ல... டாக்டரெல்லாம் வந்துருக்காரு?” என்று சமாளிக்க முயன்றான். நாச்சிமுத்துவிடம் சந்தேகம் நெளியத் தொடங்கி விட்டது.“எலே... நீயாருடா... என்னவோ தெரிஞ்சவன் மாதிரி கேக்கே..?”“நான் யாரா... சரிதான்... ஐயாதான் என்னை வெளிய இருந்து பாத்துக்கன்னு சொல்லியிருக்காரு...” என்றான் குல்லாக்காரன்.
‘‘ஐயா...’’ என்று அவன் சொன்னதை நாச்சிமுத்து, கணேசன் என்று புரிந்து கொண்டு பதிலுக்கு எதுவும் சொல்லாமல் டாக்டரோடு உள்ளே நுழைந்தான்.குல்லாகாரனும் வாழைப்பழத்தார் வாங்கிவர வேண்டி ஒரு பெருமூச்சோடு விலகிப் போனான்.உள்ளே மூவருமே வலி முனகலோடு கிடந்தனர். அவர்கள் குடிக்க டீ கொடுத்ததில் பாதியைத்தான் குடித்திருந்தனர். டாக்டர் வரவும் அவரை வெறித்துப் பார்த்தனர். அவரும் அவர்களை ஒரு மாதிரிதான் பார்த்தார். காயம்பட்ட இடங்களில் பழைய துணிகளைக் கிழித்து பங்கஜம் கட்டுப் போட்டிருந்தாள்.
“டாக்டரய்யா... மொதல்ல வலி தெரியாம இருக்க ஒரு ஊசிய போடுங்கய்யா... மத்த எல்லாத்தையும் அப்புறம் பாத்துக்கலாம்...” என்று கெஞ்சலோடு முனங்கினான் போதிமுத்து. “ஆமா... எப்படி இப்படி ஆச்சு... ஏதாவது ஆக்சிடென்ட்ல சிக்கினீங்களா... அப்படின்னா இது போலீஸ் கேஸ்...” என்று அதிர்வளித்தார் டாக்டர்.“டாக்டரய்யா... ஆன துரத்தி பள்ளத்துல உழுந்துட்டாங்க. இது எப்படிங்க போலீஸ் கேசாகும்?” என்று திருப்பிக் கேட்டான் போதிமுத்து.டாக்டரும் பரிசோதிக்கத் தொடங்கினார். வாத்தியார் காலைத் தொட்டு அசைக்க முயலவும் “ஆத்தி...” என்று ஒரு அலறு அலறினார் வாத்தியார்.
“எலும்பு முறிஞ்சிருக்கு... முதல் வேலையா எக்ஸ்ரே எடுக்கணும். அப்புறம்தான் மத்த எல்லாமே... ஒரு டி.டி. இஞ்ஜெக்சனை இப்ப போட்டுட்றேன். ஆம்புலன்சுக்கு போன் பண்ணி முதல்ல ஜி.எச் கொண்டு போங்க. இல்ல போன் ஸ்பெஷலிஸ்ட்கிட்ட கூட்டிகிட்டு போங்க...” என்று மூவருக்கும் ஊசி போட்டு முடித்தார்.“இங்க வெச்சே எதுவும் பண்ண முடியதா டாக்டர்?” ரத்தி இடையிட்டுக் கேட்டாள்.“இல்லம்மா... ப்ளட் வேற நிறைய போயிருக்கு. ஹாஸ்பிட்டல் அட்மிஷன் மஸ்ட்.
லேட்டாக ஆக செப்டிக் ஆகத் தொடங்கிடும். அப்புறம் ரொம்ப கஷ்டமாயிடும்...”“நீங்களே ஆம்புலன்சுக்கு சொல்றதோட ஜி.எச்சுக்கும் சொல்ல முடியுமா டாக்டர்...”“ஆம்புலன்சுக்கு சொல்லலாம். ஜி.எச்சுக்கும் சொல்லலாம். எல்லாரும் தெரிஞ்ச டாக்டர்கள்தான்... ஆனாலும் பிரைவேட்ல காட்றதுதான் சரி. செலவை பாக்காதீங்க...”டாக்டர் அப்படிச் சொல்லவும் மாரப்ப வாத்தியார் “செலவெல்லாம் ஒரு விசயமே இல்லீங்க... எங்களுக்காக எவ்வளவுன்னாலும் செலவழிக்க எங்க முதலாளி ஒருத்தர் இருக்கார். நீங்களே எந்த ஆஸ்பத்திரின்னு சொல்லுங்க டாக்டர்...” என்றார்.
“சேலத்துல அஸ்தம்பட்டில கே.ஆர்.. ஹாஸ்பிடல்னு ஒரு ஹாஸ்பிடல் இருக்கு. அது மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல். அங்க போயிடுங்க. ஆமாம்... யார் உங்க முதலாளி?” டாக்டர் இயல்பாகத்தான் கேட்டார்.“அவர் பேர் குலசேகர ராஜா... சேலத்து அரண்மனைக் குடும்பத்த சேர்ந்தவருங்க...”“அவரா... அட என்னய்யா நீங்க... இப்ப நீங்க இருக்கறதே அந்த குடும்ப பங்களாவுலதாம்ப்பா...”டாக்டர் அப்படிச் சொல்லவும் நாச்சிமுத்து, பங்கஜம், ரத்தி என்று மூன்று பேருமே திகைத்தனர்.
டாக்டரின் பதில் வாத்தி குரூப்பையும் ஒரு ஆட்டு ஆட்டிவிட்டது.“ஓ... இது அவர் பங்களாவா? சரிதான்... இப்பதான் புரியுது. அப்ப குலசேகர ராஜா சார்தான் சாமி மூலமா உங்கள அனுப்பி எங்கள காப்பாத்தினாரா?’’ என்று பதிலுக்கு சரியாகக் கேட்பதாக நினைத்துக்கொண்டு தப்பாகக் கேட்டான் போதிமுத்து.
“மண்ணாங்கட்டி... அவருக்கும் நீங்க இங்க இருக்கறதுக்கும் சம்பந்தமே கிடையாது. எங்க முதலாளியம்மாவோட பெரிய மனசும் சாமி சொன்னதும் தான்யா காரணம்...” என்றான் நாச்சிமுத்து.
அடுத்த நொடியே மூவரிடமும் ஒருவித கனத்த மௌனம். அந்த நொடியே அவர்கள் மனதில் பல கேள்விகளுக்கு விடையும் கிடைக்கத் தொடங்கி விட்டது.“தாயி... நீதான் வடநாட்ல இருந்து வந்த அந்தக் குடும்பத்து மருமகளா?” என்று வாத்தி புருவ வளைசலோடு கேட்கவும், ரத்திக்கும் மெல்லப் புரியத் தொடங்கியது.
‘ஆம்’ என்கிற சமிக்ஞையை பார்வையில் காட்டினாள். அதைக் கண்ட நொடியே பெரும் பதைப்பு மூவரிடமும்.அப்போதே ஆம்புலன்ஸ் ஒன்று சப்தமுடன் வந்து வாசலில் நிற்கவும், எல்லோருமே எட்டிப் பார்த்தனர்.“யார் போன் பண்ணது?” என்று டாக்டரும் கேட்டிட, நாச்சிமுத்து திருதிருவென விழிக்க, வேனில் இருந்து மூன்று ஸ்ட்ரெச்சர்களோடு வந்த அட்டெண்டர்கள், “நீங்கதான் பேஷண்டுங்களா..?” என்று கேட்டபடி சென்று அவர்களைத் தூக்கி ஸ்ட்ரெச்சரில் போட்டு தூக்கிச் செல்லவும் தொடங்கினர்.
“நாச்சிமுத்து... யார் போன் பண்ணதுன்னு அவங்க கிட்டயே கேளு...” என்றாள் ரத்தி. நாச்சிமுத்துவும் ஓடிப்போய் கேட்டான்.“அது எங்களுக்குத் தெரியாது... இந்த அட்ரஸ்ல போய் பேஷண்டை தூக்கிட்டு வாங்கன்னு எங்க ஆஸ்பத்திரில சொன்னாங்க. அதான் தூக்கிட்டு போறோம்...” என்ற பதிலோடு மிக வேகமாக ஏறி ஆம்புலன்ஸைக் கிளப்பிக் கொண்டு அவர்கள் போயே விட்டனர்.
உள்ளே டாக்டரும் “சரி... யார் போன் பண்ணா என்ன... அவங்க அட்மிட் ஆகறதுதான் இப்ப சேஃப்டி. அது நடந்துடிச்சி. நானும் கிளம்பறேன்...” என்று புறப்பட்டுப் போனார். ரத்தி முகத்தில் பலத்த சிந்தனை.
“என்னம்மா... எல்லாமே ஒரே மர்மமா இருக்குல்ல?” பங்கஜம் ரத்தியைக் கிளற ஆரம்பித்தாள்.“ஆமாம் பங்கஜம்... இவங்களுக்கு என்னை நல்லா தெரிஞ்சிருக்கு. இவங்க மாமாவோட ஆட்கள்னும் தெரிஞ்சி போச்சு. என்னை கொலை செய்ய சில முயற்சி நடந்ததுல இவங்களுக்கு நிச்சயமா பங்கு இருக்கு...” என்றாள்.“அம்மா சரியா சொன்னீங்க... நம்ம பங்களாவுக்கு வெளியில கூட ஒருத்தன் நின்னு நோட்டம் போட்டுகிட்டிருந்தான். நான் கேட்டதுக்கு ஐயா கண்காணிக்க சொன்னதா சொன்னான்...”“அப்ப அந்த ஐயாவும் மாமாவாதான் இருக்கணும்...” என்று ரத்தி சொல்லும்போதே அந்த குல்லாய்காரன் கையில் வாழைத் தாரோடு உள் நுழைந்து கொண்டிருந்தான்.
“அம்மாம்மா... இவன்தாம்மா அவன்...” என்று நாச்சி முத்துவும் படபடத்தான். உள்ளே வந்த அவனும் “நீதானே நாச்சிமுத்து... இதோ... வாங்கி வை. ஐயா கொடுக்கச் சொன்னார்...” என்றான். அப்படியே நாலாப்புறமும் பார்த்தான்.“எந்த ஐயா..?” நாச்சிமுத்துவும் ஒரு மாதிரி குரலில் கேட்டான்.“ஆமா... ரத்தக் காயங்களோட மூணுபேரைத் தூக்கிட்டு வந்தீங்களே... எங்க அவங்க?”“என் கேள்விக்கு பதிலைச் சொல்லாம பதிலுக்கு என்னைக் கேக்கறியா நீ?”“ஐயான்னா என்ன நூறு பேரா இருக்காங்க... நம்ம கணேசராஜா ஐயாதான்...”அவன் பதில் அவர்களை கொஞ்சம் குழப்பத் தொடங்கிற்று. சமாளித்து, “அப்ப அவருக்கு அந்த மூணு பேர் பத்தி தெரியுமா?” என்று கேட்டான் நாச்சிமுத்து.
“நான்தான் சொன்னேன்... இப்ப கூட அவங்கள போட்டோ புடிச்சி வாட்ஸ் அப்ல அனுப்பச் சொன்னார். அதான் கேட்டேன்...” “அப்ப இப்ப ஆம்புலன்ஸ்ல வந்து ஐயா சொன்னார்னு மூணு பேரையும் ஸ்ட்ரெச்சர்ல தூக்கிட்டு போனாங்களே..?”“அப்படியா..?” குல்லாய்க் காரன் முகம் விகாரமாகியது.
“எலேய்... உண்மைய சொல்லு... எந்த ஐயா உன்னை அனுப்புனது... அதே போல ஆம்புலன்ஸை அனுப்புனதும் யார்?”நாச்சிமுத்து குல்லாய்க் காரனை மடக்கவும் ரத்தியிடம் ஒரு தீர்க்கமான முடிவு.“நாச்சி... இரு... நான் அவர்கிட்டயே கேட்கறேன். எங்களை கண்காணிக்க இவன் யாரு? சம்திங் ராங்!”ரத்தி தன் செல்போன் மூலமாய் கணேசராஜாவை அழைக்கத் தொடங்கினாள்!அரண்மனை பங்களா! கணேச ராஜாவின் அறை... மஞ்சு மங்களகரமாய் உள்நுழைந்தபோது கணேசன் பாத்ரூமில் இருக்க அவன் செல் மோடாவில் அமட்டிற்று. திரையில் ரத்தி பெயர் தெரிந்தது.
அதைப் பார்க்கவும் கையில் எடுத்த மஞ்சு, எடுத்த வேகத்தில் கட் செய்தாள். அடுத்த சில நொடிகளில் திரும்பவும் அமட்டிற்று. திரும்ப கட் செய்தவள் பின் ஸ்விட்ச் ஆஃபே செய்தாள்.மறுமுனையில் ரத்தி முகத்தில் பலத்த ஏமாற்றம்.“என்னம்மா... ஐயா எடுக்கலீங்களா?”
“ஆமாம்... முதல்ல ரிங் போச்சு... அப்புறம் பாத்தா செல்லையே ஆஃப் பண்ணிட்டாரு...” “அப்படி என்னம்மா கோபம் உங்க மேல?” நாச்சிமுத்து கேட்க, - “அம்மாம்மா அந்த தொப்பிக்காரன் போய்ட்டாம்மா...” என்று இடையிட்டு அலறினாள் பங்கஜம். “என்னம்மா இது... ஒண்ணுமே புரியலியேம்மா?”
“எனக்கு ஒண்ணு மட்டும் நல்லா புரியுது... பெருசா ஒரு தப்பு என்ன சுத்தி நடந்துக்கிட்டிருக்கு...” “ஆமாம்மா... இந்த மூணு பேரைக் கூட மாமாதான் ஆம்புலன்ஸ் அனுப்பி கூட்டிக்கிட்டிருக்கணும். இந்த மூணு பேரை நாம காப்பாத்தி கூட்டிக்கிட்டு வருவோம்னு அவர் கொஞ்சம் கூட நினைச்சுப் பாத்துருக்க மாட்டாரு...”“அப்படித்தான் எனக்கும் தோணுது... இவங்களப் பத்தி நமக்கு தெரிஞ்சிடக் கூடாதுன்னு நினைச்சுக் கூட ஆம்புலன்ஸை அனுப்பி கூட்டிக்கிட்டு போயிருக்கலாம்...”அவர்கள் தங்களுக்குள் மாற்றி மாற்றி கேள்வி கேட்டு பதில்களைச் சொல்லிக் கொண்டபோது -வெளியே சென்றுவிட்ட அந்த குல்லாய்க்காரன் குலசேகர ராஜாவை அழைத்து பேசிக் கொண்டிருந்தான்.
“சார்...” “என்னய்யா... அவங்கள பாத்தியா... போட்டோ எடுத்து அனுப்பிட்டியா?” “இல்ல சார்... இப்ப அந்த மூணுபேர் இங்க பங்களாவுலயே இல்ல. ஒரு ஆம்புலன்ஸ் வந்து அவங்கள கூட்டிக்கிட்டு போயிடிச்சு...” “ஆம்புலன்ஸா..? அவ்வளவு சீரியஸாவா இருக்காங்க?” “அது சரி... அதை நீங்க அனுப்பலியா?”
“யார்னே தெரியாம நான் எப்படிய்யா அனுப்புவேன்?” “சார்... அங்க உள்ள இருக்கறவங்களுக்கும் யார் அனுப்பினாங்கன்னு தெரியல சார்...”“என்னய்யா சொல்றே... யாரும் போன் பண்ணாம ஆம்புலன்ஸ் எப்படி வரும்?” “நான் நீங்க சொன்னதை கச்சிதமா செய்துட்டேன்... நீ யாருன்னு அந்த நாச்சிமுத்து கேட்டப்ப கணேசனய்யா ஆள்னுதான் சொன்னேன். உங்க பேரை சொல்லல…” “குட்... ஆனா, கத்தி போய் வாலு வந்த கதையால்ல இருக்கு. ஆமா... அது எந்த ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ்…?” “நான் பாக்கலீங்க சார்...”
“என்னய்யா இது... ஒரு பக்கமும் போக முடியல... திரும்பின பக்கமெல்லாம் இடிக்குது...” குலசேகரர் போனில் கசங்கிக் கொண்டிருக்கையில் மஞ்சு வந்து நின்றாள். அவரும் “சரி, நான் அப்புறம் பேசறேன்...” என்று கட் செய்தார். “என்னப்பா... ஒரே டென்ஷனா இருக்கீங்க?”
‘‘டென்ஷனாவா... தலைய பிச்சிக்கலாம் போல இருக்கு...” “விஷயத்தைச் சொல்லுங்கப்பா...” அவரும் சொல்லி முடிக்க - “அதான் ரத்தி அத்தானுக்கு போன் பண்ணாளா?” என்றாள்.
“ஐயோ கணேசன் என்ன சொன்னான்..?” “பேசினாதானே சொல்ல... நான்தான் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டேனே?” “திரும்ப பண்ணமாட்டான்னு என்ன நிச்சயம்?”“வாஸ்தவம்தான்... ஆனா, இப்ப பயங்கர குழப்பத்துல இருப்பா. இது ஒரு ரைட் டைம்... நீங்ககூட அவளை கிணத்துல தள்ளி கொலை செய்யற ஒரு பிளான் போட்டு வெச்சிருக்கீங்களே..?”“அதுக்கு..?”
“இப்ப மேல போய் அதை முடிங்க... அந்த கிணத்து கிட்ட அவளை வரச் சொல்லி அத்தான் செல்லுல இருந்தே நான் ஒரு மெஸேஜை அனுப்பி அப்புறம் அழிச்சிட்றேன். நீங்க போகும்போது அங்க அவ அந்த குட்டியோட இருப்பா. இது போதாதா உங்களுக்கு?”மஞ்சு கேட்க குலசேகர ராஜா முகத்தில் ஒரு குரூர பிரகாசம்!
(தொடரும்)
மண்ணாங்கட்டியாரின் பீடிகையைத் தொடர்ந்து அசோகமித்திரனும், கனபாடிகளும் கூர்மையாகினர். இதுவரை தாங்கள் அறிந்திராத ஒன்று தங்களுக்குத் தெரியவரப் போகிறது என்கிற ஒரு உற்சாகமும் இருவருக்குள்ளும் ஏற்பட்டது.மண்ணாங்கட்டியாரும் பேசத் தொடங்கினார். “லட்சக்கணக்குல உயிரினங்கள் இருக்கு உலகத்துல... அது தொடர்ந்து உயிர்வாழ அததுக்குன்னு ஒரு வழிமுறையும் இருக்கு. அந்த பராசக்தி இதையெல்லாம் ரொம்ப திட்டமிட்டு அமைச்சிருக்கா... அசோகமித்திரா... நீ வேணுமின்னா பராசக்திங்கற இடத்துல இயற்கைன்னு வெச்சுக்கோ.
‘நான்’ங்கற மமகாரம் தூக்கலா இருக்கறவங்க பகுத்தறிவு, சுயமரியாதை அப்படி இப்படின்னு சொல்லிக்கிட்டு எல்லாத்துக்கும் ஆதாரம் கேப்பாங்க. இந்த பராசக்திங்கற விஷயத்தை ஏற்கமாட்டாங்க. அதனாலதான் இயற்கைன்னு வெச்சுக்க சொன்னேன்.என் மாதிரி சித்தனுக்கு இயற்கை, பராசக்தி, நீ, நான், இந்த தோட்டம்... தா அங்க விழுந்து கிடக்குதே தென்ன மட்டை... இந்த எல்லாமே ஒண்ணுதான்.
நான் விசயத்துக்கு வந்துட்றேன்.லட்சக்கணக்கான உயிரினங்கள்னு சொன்னேனில்லையா? இந்த உயிரினங்களுக்கு அது தொடர்ந்து உயிர் வாழத் தோதா கால், கை, கண், காது, மூக்கு, வாய்னு எல்லாம் இருக்கும். இருந்தாதானே அதால வாழமுடியும்?
இதுல இரண்டு உயிரினம் மட்டும் ரொம்ப ஆச்சரியம் தரும். ஒண்ணு மீன், இன்னொண்ணு பாம்பு! இந்த இரண்டுக்கும் ஒரு ஒத்துமை என்னன்னா இருக்கறதுலயே சின்னதும் இதுதான், பெரியதும் இதுதான்!உயிரினங்கள்ல திமிங்கலத்தைவிட பெருசான ஒண்ண காட்ட முடியுமா? அதேபோல நூறடி நீளத்துக்கெல்லாமும் பாம்புங்க உண்டு இல்லையா?
ஆனா, இதுங்க குஞ்சா இருக்கும் போது பார்த்தா இதை நம்பவே முடியாது.அடுத்து இந்த இரண்டு உயிரினத்துக்கு மட்டும்தான் ஒரு குறிப்பிட்ட இடம்னு ஒண்ணு கிடையாது. ஒரு ஏரியிலயோ, குளத்துலயோ இருக்கற மீன் ஒரு இடத்துல இருந்து பாக்கமுடியுமா? பாம்பும் அப்படித்தான். இரையைத் தேடி திரிஞ்சபடியே இருக்கும். புத்துங்கறதுகூட அதோட வீடு கிடையாது. அதுக்கு இரை இருக்கற இடம் அது. இந்த இரண்டுலயும் கூட ஒரு படி மேலானது சர்ப்பம்தான். மீன் தண்ணில மட்டும்தான் வாழமுடியும். ஆனா, பாம்பு இரண்டுக்குள்ளேயும் உயிர் வாழும்! அடுத்து மண்ணுக்குள்ள போயும் உயிரோட இதால மட்டும்தான் திரும்ப முடியும். இதுக்கு எதிரி கருடன்... கருடனோ வானத்துல எவ்வளவு உயரமும் போகும் - இதுவோ பூமிக்குள்ள எவ்வளவு ஆழமும் போகும். இதனாலதான் ஒண்ணுக்கொண்ணு நேர் எதிரானதா இருக்கு.
இதுல ஒரு வேடிக்கை என்னன்னா கருடனுக்கு கால் இருக்கு, சிறகு இருக்கு, அலகு இருக்கு, கண்பார்வையும் கூர்மையானது. பாம்புக்கு வாயைத்தவிர எதுவுமே இல்ல... ஒரே புலன்தான் அதுக்கு.இந்த பாம்புகிட்ட இன்னொரு அம்சத்தகூட பார்க்கலாம். இதுக்கு அசைய முடிஞ்ச இன்னொரு உயிர்தான் உணவு. புழு, பூச்சி, தவளை, பறவை, விலங்குன்னு உயிர் வரிசைல ஓரறிவுல ஆரம்பிச்சு ஆறறிவுள்ள மனுஷன் வரை இது விழுங்கிடும். இது தாவரங்களைத் தீண்டவே தீண்டாது.
சுருக்கமா சொல்லப்போனா, பாம்புங்கற ஒரு உயிர், உயிர் வாழணும்னா அதுக்குத் தேவை இன்னொரு உயிர்!சிங்கமும் புலியும் செத்துட்ட ஆடு மாடுகளைக் கூட சாப்பிடும். ஒரு பாம்போ உயிரோட இருப்பதை மட்டுமே சாப்பிடும். சாப்பிட்டதை அப்படியே அதால திரும்ப வெளியேற்றவும் முடியும்.இது எதுவுமே மற்ற உயிரினங்கள் கிட்ட சாத்தியமில்லாத ஒண்ணு... இல்லையா?”
மண்ணாங்கட்டியார் சற்று இடைவெளி விட்டார். ஒரு பாம்பின் பின்புலத்தில் இத்தனை விஷயங்களா என்கிற வியப்பு இதனால் கனபாடிகளிடமும், அசோகமித்திரனிடமும் ஏற்பட்டது. ‘‘இதோட இன்னொரு சிறப்பம்சம் இதோட சட்டை! நம்மால அப்படி உரிக்க முடியுமா? ஆனா, ஒரு சர்ப்பம் சாதாரணமா இதை செய்யும். அது உரிக்கிற ஒவ்வொரு சட்டையும் அதோட பிறவி முடியற மாதிரி... அதுக்கப்புறமான அதோட வாழ்வுங்கறது இன்னொரு ஜென்மம் மாதிரி...’’என்று ஒரு சட்டையைத் தொட்டு அவர் சொன்ன ஜென்மம் என்கிற விஷயம் இருவரையுமே வெகுவாக ஊன்றச் செய்தது!
இந்திரா செளந்தர்ராஜன்
ஓவியம்: வெங்கி
|