சிறுகதை - தீர்வு
பூமா வரும்போது வீடு அகலத் திறந்திருந்தது.குட்டியும், தாயுமாய் நாலைந்து நாய்கள் உள்ளிருந்து ஓடி வந்தன.“அடடா...” பூமா பதற்றமாய் வீட்டுக்குள் ஓடி வந்தாள். பின் பக்கக் கதவும் திறந்திருந்தது.
இரண்டு ஆடுகள் அதன் வழியே வெளியே ஓடின.பூமாவுக்கு சலிப்பு, ஆயாசம் என்று கோபம் வந்தது.“அப்பா...” என்று கத்தினாள். பதில் இல்லை. நாலைந்து முறை கூப்பிட்டும் பதில் இல்லை என்றதும் லேசாகப் பதற்றம் அதிகரித்தது. அப்பாவுக்கு காது கேட்காது. கண் பார்வையும் சிறிது மங்க ஆரம்பித்திருந்தது. அடுத்த வாரம் கண் ஆபரேஷன். வயது எண்பது ஆகிறது. இப்படி வீட்டை விரியத் திறந்து போட்டு எங்கு போனார்..? அடிக்கடி இப்படித்தான் எங்கேயேனும் போய்விடுவார். ஆனால், அப்போது பூமா வீட்டில் இருந்தாள். இன்று உளுந்து மாவு அரைக்கப் போனாள். அதற்குள் இத்தனை களேபரம்.பின்பக்கக் கதவைத் தாள் போட்டு விட்டு, வாசல் கதவைச் சாற்றிவிட்டு மீண்டும் உள்ளே வந்தாள். அப்பா ரூம் திறந்திருந்தது. உள்ளே மார்பில் கண்ணாடி விரிந்திருக்க, குறட்டையுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
“அப்பா...” ஆத்திரமாய் அவரை உலுக்க, திடுக்கிட்டு விழித்தார். ஒன்றும் புரியாமல் விழித்தவர் பூமாவைக் கண்டதும் “ வந்துட்டியா? என்ன சீக்கிரம்?” என்றார்.
“ஏம்பா... இங்க வந்தா தூங்கறே?”
“ஆமாம்மா. சாப்பிட்டேன். கண் அசந்து தூங்கிட்டேன்...” ‘‘ஏம்பா, ரெண்டு பக்கமும் திறந்து போட்டுட்டு இப்படியா தூங்குவே?” ஆதங்கத்துடன் கேட்டாள்.
“ஏன்? என்னாச்சு?”
“திறந்த வீட்டில் நாய் நுழையற மாதிரின்னு சொல்வாங்க. இப்ப பாரு. நிஜமாவே நாய், ஆடு வந்துட்டுப் போறது...”“அடடா...” அப்பா பதறினார்.அவளுடன் பின்னாடியே வந்தார். கிச்சன் முழுவதும் தானியங்கள், முறுக்கு மாவு, கீரை, தக்காளி, காய்கறிகள் என்று சிதறிக் கிடக்க, அவள் அப்பளம் போட வைத்திருந்த மாவு சமையல் ரூம் முழுவதும் புகையாய்க் கிடந்தது.“பாரு... இத்தனையையும் நான் திரும்ப சேகரம் செய்யணும். கூலி கொடுத்து ஆளை வரச் சொல்லியிருக்கேன். அவங்க வந்தா எதைக் கொடுத்து செய்யச் சொல்றது?” வேதனையுடன் பேசினாள்.
கிட்டத்தட்ட மூவாயிரம் மதிப்புள்ள சாமான்கள். அடுத்த வாரம் ஒரு சீமந்தம். அதற்காக கை சுத்து முறுக்கு, தேன்குழல், அப்பளம் போடுவதற்கான மாவு எல்லாம் நாய் வாய் வைத்து வேஸ்ட் ஆகியிருந்தது.ஆதங்கத்தில் லேசாகக் கண்ணீர் வழிய, அப்பா ஒரு குற்ற உணர்ச்சியுடன் அவளைப் பார்த்தார்.
பூமா பேசவில்லை. மௌனமாக எல்லாவற்றையும் வழித்து குப்பைத் தொட்டியில் போட்டாள். மதியம் அவள் சாப்பிட வைத்திருந்த சாதம், மோர்க்குழம்பு, ரசம் எல்லாம் திறந்தே இருந்தது. நாய் வாய் வைத்திருந்தது என்று புரிய, அதையும் எடுத்துக் கொட்டினாள். “நீ சாப்பிட என்ன இருக்கு..?”
“அப்பா... நீ கொஞ்சம் பேசாம வெளில போய் உட்கார்ரியா?” கடுப்பாகப் பேச, அப்பா முகம் சுருங்கி வெளியில் போனார்.எல்லாவற்றையும் தூக்கிக் கொட்டி விட்டு அப்படியே உட்கார்ந்திருந்தாள். மனது கொதித்துக் கொந்தளித்தது. ஏன் தனக்கு மட்டும் இப்படி? எல்லாமே நஷ்டம், விரயம். பெற்றவர்கள் பொறுப்பில்லாமல் இருந்தால் இப்படியா இருக்கும்? அப்பா ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான். அம்மாதான் இழுத்துப் பிடித்துக் கரை ஏற்றினாள். அண்ணாவையும், பூமாவையும் படிக்க வைத்து, இருவருக்கும் கல்யாணம் செய்து, அதற்காக அடுப்பில் வெந்து கரியானாள்.
பூமாவின் திருமணம் முடித்து, அப்பாடா என்று அம்மா அமர்ந்த நேரம். நிம்மதியாக ஒரு வீட்டு வளைகாப்பு சமையல் செய்து வந்து ஒரு டம்ளர் தண்ணீர் கொடு என்று வாங்கிக் குடிக்கும்போது அப்படியே சாய்ந்து விட்டாள்.
புண்ணியவதி.அண்ணி கொஞ்சம் குணம் இல்லாதவள். அப்பாவை தன் வீட்டுக்கு வரக் கூடாது என்று சொல்லி விட, அண்ணா அவள் பின்னாடி போய்விட்டான். அப்பாவை பூமா தன்னுடன் அழைத்து வந்தாள். பூமா புருஷனுக்கு அப்பாவைப் பிடிக்கவில்லை. அவனுக்கும் வேறு பெண்ணுடன் தொடர்பு. அவளுடன் அவனும் போய்விட, பூமா தன் அம்மாவின் சமையல் தொழிலைக் கையில் எடுத்தாள். காலம் ஓடுகிறது. அண்ணா இந்தக் குடும்பத்தைக் கண்டு கொள்வதே இல்லை. பூமாவும், அம்மா மாதிரி அடுப்பில் வெந்து தணிகிறாள்.வாழ்க்கை எல்லோருக்கும் சுகமாக இருப்பதில்லை. போராட்டங்களும், வேதனையுமே வாசலைத் தட்டுகிறது. இதில் வர வர அப்பாவுக்கு மறதி. சம்பந்தம் இல்லாமல் பேசுவது. வீட்டைத் திறந்து போட்டு போய் விடுவார். எத்தனை முறை சொல்லியும் கேட்பதில்லை.
எதற்கு கவலைப் படுவது என்று தெரியவில்லை. அப்பாவா? தன் வாழ்க்கை எதிர்காலமா? தொழிலா? பூமாவுக்குப் பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது.வெளியில் வந்து டிவியைப் போட்டு விட்டு உட்கார்ந்தாள். எந்தச் சேனல் என்று மனதில் பதியவில்லை.“பூமா... இன்னைக்கு உன் வீட்டுக்கு நிறைய உறவினர்கள் போல?”எதிர் வீடு வம்புக்கு வந்தது. ‘‘ஒரே ஆடும், நாயுமா ஜாலியா உள்ள போய்ட்டு வருது?”பூமா பதில் சொல்லவில்லை.
“பேசாம கொண்டு போய் ஹோமில் விட்டுடு. நீ உன் வேலையைப் பாப்பியா, இவரைப் பாப்பியா? என் மாமனாரை அங்கதான் விட்டிருக்கேன். அருமையா இருக்கு. நல்ல வசதி...” சரி என்றுதான் தோன்றியது. எத்தனை நாள் இந்தத் தொல்லையை சகித்துக் கொண்டிருப்பது? எந்த இடத்துக்கும் நிம்மதியாகப் போக முடியவில்லை. எந்த நேரம் அப்பா எங்கே போவார்? வீட்டுக்குள் யார் வந்து போவார்களோ என்ற கவலையில் தொழில் கவனம் சிதறுகிறது.
அவளும் வாழ்ந்தாக வேண்டும். புருஷனும் உதறிப் போன நிலையில் சோறு போடும் தொழிலில் கவனம் செலுத்த வேண்டுமே? சுய பச்சாத்தாபத்தில் கண்ணீர் வந்தது.
கண்ணைத்துடைத்துக் கொண்டு நிமிர்ந்த போது டிவியில் தெரிந்த ஒரு நிகழ்ச்சி அவள் கவனத்தைக் கவர்ந்தது. பறவைகள் பற்றிய ஒரு நிகழ்ச்சி.
வயது முதிர்ந்த ஒரு பறவை. பறக்க முடியாமல் வீழ்ந்து கிடக்க, அதைச் சுற்றி சிறு பறவைக் குஞ்சுகள். மெல்ல அந்த வயோதிகப் பறவையை இழுத்துக் கொண்டு ஒரு மர நிழலில் அமர்த்துகிறது. அதன் பின் சிறு பறவைகள் எங்கெங்கோ பறந்து போய் உணவு கொண்டு வந்து பெரிய பறவைக்கு ஊட்டுகிறது. பின்னணியில் ஒலிக்கும் குரல்.“வயது முதிர்ந்து பறக்க முடியாத பறவையை மற்ற குஞ்சுப் பறவைகள் ஒதுக்கி விடுவதில்லை. தாங்கள் உணவு தேடிக் கொண்டு வந்து முதிர்ந்த பறவையைக் காப்பாற்றுகின்றன. நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு பண்பு...”அந்தக் குரல் சட்டென்று ஆழமாய் மனதைத் தைத்தது.பூமாவுக்கு அவளையும் அறியாமல் கண்ணில் நீர் சுரந்தது. சின்னப் பறவை முதிர்ந்த பறவையின் வாயில் உணவைத் திணிக்கும் காட்சி, அப்பா சிறு வயதில் தங்களுக்கு உணவு ஊட்டியதை நினைவூட்டியது.
சிறு வயதில் வீட்டில் வறுமைதான். ஆனால், அதிலும் அம்மா, அவர்கள் வயிறு வாடாமல் பார்த்துக் கொண்டாள். அப்பா சாஸ்திரிகளுக்கு உதவியாக, யார் வீட்டுக்கு வேலைக்குப் போனாலும் “இந்த ஸ்வீட்ஸ் என் பொண்ணுக்குப் பிடிக்கும்...” என்று கேட்டு வாங்கி வருவார். விசேஷ நாட்களில் குழந்தைகளுக்கு மட்டும் புதுத் துணி வாங்கி விடுவார்கள்.
அண்ணா, பூமா இருவர் கையையும் பிடித்துக் கொண்டு ஸ்கூலுக்கு அழைத்துப் போனார் அப்பா. மோர் சாதம் என்றாலும், ஊறுகாய் தொட்டு, கதை சொல்லி ஊட்டி விடுவார். வறுமை கோரதாண்டவம் ஆடிய போதும் குழந்தைகளை வெறுக்கவில்லை. அநாதை இல்லத்தில் கொண்டு போய் விடவில்லை. அன்பும், கரிசனமுமாய், அவர்களின் ஆசைகளை முடிந்த வரை நிறைவேற்றினார்கள்.ஆனால், பிள்ளைகளான தாங்கள்? நன்றி என்ற உணர்வு, சுயநலம் பெருகும்போது மறைந்து விடுகிறது. தாய்ப்பால் தரும்போது அம்மா கணக்குப் பார்க்கவில்லை. பாசம் காட்ட அப்பா மறுக்கவில்லை. ஆனால், தாங்கள் பெற்றவர்களைக் கூறு போடுகிறோம். சுமையாக நினைக்கிறோம். தன்னை மிகக் கேவலமாக உணர்ந்தாள் பூமா. தலை குனிந்து அமர்ந்திருந்த பூமாவிடம் அப்பா மெதுவாக வந்து, “நான் இனி கவனமா இருக்கேன் பூமா...” என்றார். ‘‘பரவாயில்லப்பா. வாசல்ல, பின்னாடி ஒரு கம்பி கேட் போட்டுடலாம். நீ நிம்மதியா இரு. ஒண்ணும் பிரச்னை இல்லை...” “ஹோமுக்குப் போகலையா?”
“எதுக்குப் போகணும்? நீ நீயாவே இருப்பா. நீ என்கூடவே இரு...”“நான் எதுக்குப்பா உன்னை விட்டுப் போறேன். அப்பா நான் இருக்கேன்மா உனக்கு...” அப்பா உற்சாகத்தில் பேச, பூமா அவர் கையை கனிவுடன் தடவிக் கொடுத்தாள். மனது மகிழ்ச்சியாக இருந்தது.அன்பும் கருணையும் மனதில் சுரக்கும் வரை வாழ்க்கை இனிமையாகத்தான் இருக்கும். “இருப்பா, உனக்கு காபி தரேன். குடிச்சுட்டு போய் உட்காரு...”அவள் ஒரு புது உற்சாகத்துடன் எழுந்தாள்.
- ஜி.ஏ.பிரபா
|