சிதிலமடைந்த தேர்களை ஆவணப்படுத்தும் இளைஞர்…



‘‘அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி, பலதரப்பட்ட மக்களை ஒண்ணுசேர்க்கிற ஓர் இடமாகவும், நிகழ்வாகவும் இருக்கிறது தேர்த் திருவிழா மட்டும்தான். தென்மாவட்டங்கள்ல சின்ன கிராமக் கோயில்கள்ல கூட தேர்த் திருவிழா வெகுவிமர்சையா நடக்கும். அப்போ ஊரே ஒண்ணுகூடி தேரிழுத்து மகிழும். ஆனா, இன்னைக்கு நிறைய கோயில்களின் தேர்கள் சிதில
மடைஞ்சு போயிடுச்சு. வெயிலிலும் மழையிலும் பராமரிப்பின்றி கிடக்குது. அதிலுள்ள சிற்பங்கள் எல்லாம் காலத்தால் முற்பட்டது.

அழகிய வேலைப்பாடுகள் கொண்டது. மக்களின் வாழ்வியலை பேசக் கூடியது. அதை ஆவணப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கிருக்கு…’’ நெகிழ்வாகவும் இயல்பாகவும் பேசுகிறார் புகைப்படக் கலைஞரான கோ.ராஜாராம். சிதிலமடைந்த கோயில்களின் தேர்களையும் அதன் அழகிய வேலைப்பாடுகளையும் அணுஅணுவாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் இளைஞர். 2018ல் தொடங்கிய இவரின் அளப்பரிய பணி கொரோனாவால் கொஞ்சம் சுணங்கிப் போனாலும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஊர் ஊராகப் பயணித்து தேர்களை ஆவணப்படுத்தி வருகிறார்.

‘‘சொந்த ஊர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பக்கத்துல முள்ளிக்குளம்னு ஒரு கிராமம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துல பிஇ மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிச்சேன். படிப்பு முடிஞ்ச ஆண்டு அப்பாவும் அம்மாவும் தவறிட்டாங்க. அந்நேரம் ஊர்ல இருக்கவேண்டிய சூழல். நாங்க கூட்டுக் குடும்பம். அண்ணன்கள், அக்கானு எல்லோருமே வெளியூர்கள்ல இருந்தாங்க. நான் மட்டுமே அப்பா, அம்மா, பாட்டியுடன் கிராமத்துல வளர்ந்தேன். அதனால, பாட்டியுடன் விவசாயத்தைக் கவனிச்சேன். அங்கிருந்தபடியே என்னுடைய மற்ற வேலைகளை செய்திட்டு இருந்தேன். நேரம் கிடைக்கிறப்ப புகைப்படங்கள் எடுப்பேன்.

ஒரு மாற்றுத் தேடல் முயற்சியில் இருந்தப்பதான் புகைப்படக்கலை என்னை ஈர்த்துச்சு. சின்ன வயசுலயே புகைப்படங்கள் எடுத்திருந்தாலும் தொழில்நுட்ப நுணுக்கங்கள் எதுவும் தெரியாது. பிறகு நண்பர்கள் வழியா அனைத்தையும் கத்துக்கிட்டேன். கல்லூரி முடிக்கிறப்ப ஐஏஎஸ் படிக்கணும்னு ஓர் ஆசை இருந்தது. அதனால, சென்னைக்கு வந்து முழுமுயற்சியா படிச்சேன். ஆனா, கிடைக்கல. அப்ப ஃப்ரீலான்ஸ் போட்டோ ஜர்னலிஸ்ட்டா இருந்தேன். பத்திரிகைகளுக்காக மட்டுமில்லாமல் இயக்கங்களுக்காகவும் புகைப்படங்கள் எடுத்தேன். கூடங்குளம் அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம் சார்பா நண்பர்களுடன் இணைந்து கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பயணிச்சு புகைப்படங்கள் எடுத்தேன். அந்த மொத்தப் போராட்டத்தையும் ஆவணப்படுத்தினோம்.

அப்புறம், ‘குக்கூ’ குழந்தைகள் அமைப்புடன் சேர்ந்து அவங்க நடத்துற பயிற்சிப் பட்டறைகளை ஆவணம் செய்தேன். இதுதவிர, பூவுலகு அமைப்பினர் நடத்துகிற நிகழ்வுகளை புகைப்படங்கள் பண்ணினேன். அப்படியே பூவுலகு அமைப்பிலும் சேர்ந்து வேலை செய்தேன்.அங்கே ‘மின்மினி’னு குழந்தைகளுக்கான சுற்றுச்சூழல் மாத இதழுக்கு ஆசிரியரா இருந்து கவனிச்சேன். இந்நேரம் நிறைய பேரின் பழக்கம் கிடைச்சது. உலக சினிமா எல்லாம் பார்த்தேன்.

என்னுடைய விஷூவலும், டேஸ்ட்டும் மாற ஆரம்பிச்சது...’’ என்கிறவர் தேர் போட்டோகிராபி பற்றித் தொடர்ந்தார்.  ‘‘எனக்கு கிராமம் சார்ந்து இருக்கிறதுதான் ரொம்பப் பிடிக்கும். எந்த ஊருக்குப் போனாலும் மீண்டும் என் ஊருக்கே திரும்பிடு வேன். பழமை சார்ந்த விஷயங்களை நிறைய தேடுவேன். அதனால, பழங்காலப் பொருட்கள் சேகரிப்பிலும் இருக்கேன். எங்க வீடு 120 ஆண்டுகள் பழமையானது. தாத்தா காலத்துல இருந்த பழைய ஃப்ர்னிச்சர்களை எல்லாம் இப்ப சரிபண்ணி புழக்கத்துல வச்சிருக்கேன். அப்படிதான் இந்தத் தேர்களை ஆவணப்படுத்தற எண்ணம் உதயமாச்சு.

நான் தினமும் பள்ளிக்குப் போகிற வழியில் தாருகாபுரம்னு ஒரு கிராமம் வரும். அந்த கிராமத்துல ஒரு தேர் உண்டு. எனக்கு விவரம் தெரிஞ்ச காலத்துல இருந்தே அங்க தேர் ஓடல. தேரடியில் தேரை நிலைநிறுத்தி வைச்சிருப்பாங்க. அவ்வளவுதான். நான் பள்ளிக்குப் போகும் பொழுதெல்லாம் அதைப் பார்ப்பேன். ஒவ்வொரு ஆண்டும் அது சிதிலமடைஞ்சிட்டே இருந்துச்சு. அதை நான் கவனிச்சிட்டே வந்தேன். ஒருகட்டத்துல ரொம்ப சிதிலமடைஞ்சு போயிடுச்சு.  

அதன் பாதிப்பானு தெரியல. ஆனா, அது ஒரு தொடக்கப் புள்ளினு சொல்வேன். அங்கிருந்துதான் நாம் ஏன் தேர்களை ஆவணப்படுத்தக் கூடாதுனு தோணுச்சு. உடனே, என் கேமரா வழியா அந்தத் தேரை ஆவணப்படுத்தினேன். பிறகு, சிதிலமடைஞ்ச தேர்களை எல்லாம் ஆவணப்படுத்த ஆரம்பிச்சேன். முதல்ல என் சுற்றுப்புறத்துல இருக்கிற கோயில்களை எடுத்துக்கிட்டேன். தாருகாபுரத்திற்கு அடுத்து புளியங்குடி முருகன் கோயில் தேரை ஆவணப்படுத்தினேன். பிறகு, வாசுதேவநல்லூர் கோயில் தேரையும், வீரகேரளம்புதூர் நவநீத கிருஷ்ணன் கோயில் தேரையும் புகைப்படங்கள் எடுத்தேன்.

புகைப்படங்கள் எடுக்கிறதுடன் அங்குள்ளவர்களிடம் பேசவும் செய்வேன். அவங்க தர்ற தகவல்கள் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். சிலர் தங்கள் நினைவுகளை எல்லாம் பகிர்ந்துப்பாங்க.

இதுல வாசுதேவநல்லூர் கோயில் தேர்ல ஒரு சக்கரம் சிதைஞ்சு போயிருக்கும். இதைப்பத்திக் கேட்கிறப்ப இந்தத் தேரை பழுதுபார்க்க ஆளில்லனு காரணம் சொன்னாங்க. ஆனா, நான் என்ன நினைக்கிறேன்னா இப்ப தேர்த் திருவிழாவிற்கு வரக்கூடிய கூட்டங்கள் எண்ணிக்கை குறைஞ்சுபோச்சு. அதை இழுக்க நிறைய பேர் தேவை. அதனால, இழுப்பதற்கு இலகுவான ஒரு தேர் வேணும்னும் பழைய தேர்களை கைவிடுறாங்கனு தோணுது.

இப்ப வாசுதேவநல்லூர்ல எளிதா இழுக்கக்கூடிய புதுத்தேர் வந்துடுச்சு. புளியங்குடி முருகன் கோயிலிலும் புதுத்தேர் கொண்டு வந்துட்டாங்க. இந்தப் புளியங்குடியில் பழைய தேரே நல்ல நிலையில்தான் இருக்கு. ஏன் புதுசா கொண்டு வந்தாங்கனு தெரியல. இப்ப கொண்டு வந்திருக்கிற புதுத்தேர்கள் எல்லாமே பெயிண்ட் விளம்பரங்கள் மாதிரி இருக்குது. நம் முன்னோர்களின் அற்புதமான வேலைப்பாடுகளைப் பார்த்துட்டு இதை பார்க்கிறப்ப ஏதோ ஓர் இனம்புரியாத வேதனை வருது.

அப்புறம் எங்க ஊர் பக்கத்துல சிந்தாமணினு ஒரு ஊர் இருக்கு. அங்க மீனாட்சிசுந்தரேஸ்வர் கோயில்ல புதுத்தேர் கொண்டு வந்திருக்காங்க. நான் பழைய தேரை பள்ளியில் படிக்கிறப்ப பார்த்திருக்கேன். அதை இப்ப பார்க்கலாம்னு போனப்ப கடல்ல போட்டதா சொன்னாங்க. ஏன்னா, புதுத்தேர் வந்ததும் பழைய தேர் இருக்கிறது ஊருக்கு நல்லதில்லனு சிலர் சொன்னதால கடல்ல போட்டிருக்காங்க. இப்படியும் தேர்கள் அழிஞ்சிருக்கு. நான் இதுக்காக நிறைய டிராவல் பண்ணினப்ப கற்சிற்பங்கள் குறித்து இருக்கிற ஆவணங்கள், படிப்புகள் போல மரச்சிற்பங்கள் குறித்த படிப்புகளோ, ஆவணமோ பெரிய அளவில் இல்லனு தெரிஞ்சது. என் அறிவுக்கு எட்டியவரை கிடைக்கல.

அப்புறம், மரச்சிற்பக் கலைஞர்களும் குறைஞ்சிட்டாங்கனு தெரியுது. அந்தக் காலத்துல தேர்களை செய்ய அரிய வகை மரங்களைப் பயன்படுத்தியிருக்காங்க. அதுல கடவுள் சிற்பங்கள், யாளிகள்னு விதவிதமா செதுக்கியிருக்காங்க. மக்களின் வாழ்வியலையும் கொண்டு வந்திருக்காங்க. ஒவ்வொரு வேலைப்பாட்டிற்கும் அவ்வளவு மெனக்கெட்டு இருக்குறாங்க. இதையெல்லாம் பத்தி நிறைய படிச்சிட்டு இருக்கேன். இப்போதைக்கு ஐந்து கோயில் தேர்களையே ஆவணம் பண்ணியிருக்கேன். இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கு...’’ என்கிறவர் அடுத்தடுத்த பணிகள் பற்றி தொடர்ந்தார்.

‘‘இப்ப கடையம் அருகே ஒரு கோயில் தேரையும், ஆழ்வார்குறிச்சியில் ஒரு தேரையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் இருக்கேன். எல்லாமே பழமை வாய்ந்தவை. தவிர, என்னுடைய பணிகளைப் பார்த்துட்டு சில நண்பர்கள் அந்தந்த ஊர்கள்ல உள்ள தேர்களைப் பற்றிச் சொன்னாங்க. அதனால தமிழ்நாட்டுல உள்ள எல்லா கோயில்களின் தேர்களையும் ஆவணப்படுத்தலாம்னு இருக்கேன். ஆனா, அது ஒரு நீண்டகால பயணமா இருக்கும். எதிர்காலத்துல அதைச் செய்யணும்.  

பொதுவா, வடமாவட்டங்களைவிட தென்மாவட்டங்கள்லதான் தேர்த் திருவிழாக்கள் அதிகம். தேர்த் திருவிழாவுடன் ரொம்ப நெருக்கமா இருக்கிறாங்க. அதாவது, சின்னச் சின்ன கிராமங்கள்ல உள்ள கோயில்கள்ல கூட தேர்த் திருவிழா நடக்கும். தேர்த் திருவிழாவிற்காக உள்ளூர் விடுமுறை விடுறதெல்லாம் தென்மாவட்டங்கள்ல மட்டுமே நடக்கிற விஷயமா இருக்கு. அதையும் பதிவு செய்யணும்னு நினைச்சிருக்கேன்.

அப்புறம் தமிழகத்துல சமணக் கோயில்ல ஒரு தேரோட்டம் நடந்திருக்கு. திருவண்ணாமலை பக்கத்துல மேல்சித்தாமூர்னு ஒரு ஊர்ல சமணர் கோயில் இருக்கு. அங்க கிபி 5ம் நூற்றாண்டுல தேரோட்டம் நடந்திருக்கு. இப்ப அங்க தேர் இருக்கிற மாதிரி தெரியல. ஆனா, மகாவீர் ஜெயந்தி அன்னைக்கு ‘சப்பர உலா’ நடக்கிறதா சொல்றாங்க. அதையும் ஆவணப்படுத்தணும்னு மனசுல வச்சிருக்கேன். ஏன்னா, நான் சமணர்களைப் பத்தியும் சில பணிகள் பண்ணிட்டு இருக்கேன்.

அதாவது இந்தியா முழுவதும் உள்ள சமணர்களின் கோயில்களையும், அவங்க வாழ்ந்த இடங்களையும் ஆவணப்படுத்துறேன். முதற்கட்டமா கழுகுமலையில் இருக்கிற வெட்டுவான் கோயில்ல உள்ள ரெண்டு சமணப் பள்ளியை புகைப்படங்கள் எடுத்திருக்கேன்.இதுதவிர, ஒரு முழு தேர்த் திருவிழாவையும் வீடியோ ஃபுட்டேஜ் மாதிரி ஆவணப்படுத்தலாம்னும் ஓர் எண்ணமிருக்கு. இதனுடன் சிதிலமடைஞ்ச கோயில் தேர்களை ரெண்டு மூணு நிமிட வீடியோவாகப் பண்ணலாம்னு இருக்கேன். அப்பதான் கோயில் தேர்கள் நிறைய கவனம் பெறும்.

அப்புறம், மரச்சிற்பக் கலைஞர்களைப் பார்த்துப் பேசி அவங்க பணிகளை ஆவணப்படுத்த வேண்டியிருக்கு. இதனுடன் பண்பாட்டு ரீதியா சில விஷயங்களையும் சொல்ல வேண்டியது அவசியம்னு தோணுது. குறிப்பா, தேரைச் சுற்றி நடக்கிற பிரச்னைகளையும் பதிவு பண்ண வேண்டியது கடமைனு நினைக்கிறேன். மொத்தத்துல தேர் பற்றிய ஒரு முழுமையான ஆவணமா என் பணிகள் இருக்கணும்னு ஆசைப்படுறேன்...’’ என்கிறார் ராஜாராம்.

பேராச்சி கண்ணன்