தென் துருவத்துக்கு தனியாக பயணம் செய்த முதல் பெண்!



மைனஸ் 28 டிகிரி செல்சியஸில் உறைந்து போயிருக்கும் பனிப்பிரதேசம் தென் துருவம். அண்டார்க்டிகா கண்டத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதிக்குச் செல்வதே மிக சாகசமான ஒரு பயணமாக கருதப்படுகிறது. பெரும்பாலும் கூட்டமாகத்தான் தென் துருவத்துக்குப் பயணிப்பார்கள். அப்படிப் பயணிப்பவர்களின் முதல் வேண்டுதலே பாதுகாப்பாக வீடு திரும்பவேண்டும் என்பதுதான்

இந்நிலையில் தனியாக தென் துருவத்துக்குப் பயணித்த முதல் பெண் என்ற சாதனையைத் தன்வசமாக்கியிருக்கிறார் ப்ரீத். இங்கிலாந்தின் இராணுவத்தில் மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்து வரும் இவர் தென் துருவத்தில் 1120 கிலோ மீட்டர் தூரத்துக்குப் பயணித்திருக்கிறார். 40 நாட்களுக்கு மேல் நீடித்த இந்தப் பயணத்தின் ஒவ்வொரு அசைவையும் ஆடியோ பதிவு மூலம் தனது பிளாக்கில் பகிர்ந்திருக்கிறார்.

மூன்று வருடங்களுக்கு முன்புதான் தென் துருவத்தைப் பற்றிய தகவல்கள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. குழுவோடு இல்லாமல் தனியாக எந்தப் பெண்ணும் அங்கே பயணித்ததில்லை என்பதை அறிந்திருக்கிறார். உடனே பயணத்துக்கான திட்டத்தை வகுத்துவிட்டார். ஆனால், கொரோனாவின் தாக்கத்தினால் அவரது பயணம் சமீபத்தில்தான் நிறைவேறியிருக்கிறது.

த.சக்திவேல்