என்னை நடிகையாக மாற்றியது நயன்தாராதான்... கூச்சத்துடன் சொல்கிறார் கலா மாஸ்டர்



பாலிவுட்டுக்கு ஃபாரா கான் என்றால் கோலிவுட்டுக்கு கலா மாஸ்டர். ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தின் மூலம் நடன இயக்குநராக தன்னுடைய சினிமா கேரியரை ஆரம்பித்த இவருடைய கலைப் பயணம் மெரினா கடற்கரை போல் நீளமானது. 
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளைக் கடந்து இத்தாலி, ஜப்பான் மொழி படங்களிலும் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ள பெருமை இவருக்கு உண்டு. இதுவரை 4000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய, மாநில விருதுகள் பெற்றவர்.
 
தென்னிந்தியாவின் மோஸ்ட் வான்டட் டான்ஸ் மாஸ்டராக வலம் வரும் கலா மாஸ்டர், விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ படத்தில் நடிகையாக களமிறங்கியுள்ளார்.
‘‘டான்ஸ் எனக்குப் பிடிக்கும். அதனால் டீன் ஏஜ் தொடங்குவதற்கு முன்பே டான்ஸ் பண்ண ஆரம்பித்துவிட்டேன்...’’ என்றவாறு பேசத் தொடங்கினார், நடன இயக்குநர் கலா.
12 வயதிலேயே நடனத் துறைக்கு வருவதற்கு உங்கள் அக்கா வீட்டுக்காரர் ரகுராம் மாஸ்டர்தான் காரணமா?அப்போது எனக்கு 10 வயதிருக்கும். ‘வெண்ணிற ஆடை குழு’வில் ஸ்டேஜ் டான்ஸ் பண்ணுவேன். 12 வயதில் மாமாவுடன் உதவியாளராக சினிமாவுக்கு வந்தேன். அதுவும் விடுமுறையில். படிப்பு எனக்கு அவ்வளவாக வராது. உதவி நடன இயக்குநர், குரூப் டான்ஸ் என பல வேலைகள் பார்த்தேன்.

திருப்புமுனை கொடுத்தது ‘புன்னகை மன்னன்’. அந்தப் படத்துக்கு பரதநாட்டிய சீக்வன்ஸ் எடுக்கும்போது ரகுராம் மாஸ்டர் பிஸியாக இருந்தார். ‘என் அசிஸ்டெண்ட் கலாவை அனுப்பி வைக்கிறேன்’ என்று சொல்லி மாமா என்னை அனுப்பி வைத்தார். என்னுடைய நடனமும் ஒர்க்கிங் ஸ்டைலும் கே.பாலசந்தர் சாருக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு மாமாவிடம் ‘நீ வரவில்லையென்றாலும் பரவாயில்லை. உன் அசிஸ்டெண்ட்டை அனுப்பி வை’ என்பார். அவரே என்னை மாஸ்டராக தனது ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தில் அறிமுகப்படுத்தினார்.
சினிமாவில் பெண்கள் குறுகிய காலமே இருக்கிறார்கள். இச்சூழலில் உங்கள் தொடர் பயணத்தை எப்படி தக்கவைக்கிறீர்கள்?

நம்மை நாம் அப்டேட் செய்துகொள்ள வேண்டும். அதற்கு படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது இருந்த டிரெண்ட் வேறு, இப்போது உள்ள டிரெண்ட் வேறு. நான் பெரிய படம் சின்ன படம் என்று பிரித்துப் பார்க்கமாட்டேன். சின்ன படங்கள் பண்ணும்போது பெரிய படங்களே கைவிட்டுப் போயுள்ளது. என்னைப் பொறுத்தவரை பிஸியாக இருக்கணும். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று படங்கள் பண்ணியிருக்கிறேன். எனக்கு டான்ஸ் பிடிக்கும். பிடிச்ச விஷயத்தைப் பண்ணும்போது நேரம் காலம் பார்க்காமல் உழைப்பேன். சில வருடங்கள் ஐதராபாத், கேரளா என்று மாறிக்கொண்டேயிருந்தேன். என்னுடைய தொடர் உழைப்புதான் தொடர் பயணத்தை தக்கவைக்கிறது.

சீனியரான உங்களுக்கு பாலிவுட்டுக்கு போகும் எண்ணம் வரவில்லையா?

இல்லை. ஆனால், ப்ரியதர்ஷன் சாரின் இந்திப் படங்களை தொடர்ச்சியாக பண்ணியிருக்கிறேன். தபு,  ஜூஹி சாவ்லா ஆகியோர் என்னுடன் நல்ல தொடர்பில் இருந்தார்கள். அவர்களும் இந்திக்கு அழைப்பார்கள். ஆனால், என் மனம் பாலிவுட்டுக்குச் செல்ல தயக்கம் காட்டியது. காரணம் தெரியாது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என்றுதான் சுற்றி வந்தது. நான் பிறப்பால் மலையாளியாக இருந்தாலும் தமிழ்ப் பைத்தியம்.

நடனத்துக்காக கதை கேட்கும் வழக்கம் உண்டா?

கண்டிப்பாக. இயக்குநர்கள் முதல் சந்திப்பிலேயே கதை சொல்லிவிடுவார்கள். அந்த மாதிரி கான்ெசப்ட் பாடல்கள் நிறைய பண்ணியிருக்கிறேன். டூயட் பண்ணுவது கடினம். எந்த பாடலாக இருந்தாலும் ஸ்டோரி கேட்காமல் பண்ண முடியாது.

படப்பிடிப்புத் தளத்துக்கு போன பிறகு நடனத்தை மேம்படுத்துவீர்களா?

சிச்சுவேஷனுக்கு இப்படி நடனம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று முன்பே கம்போஸ் பண்ணி வைத்திருப்பேன். ஆனால், செட்டுக்கு போனதும் அங்குள்ள பேக்ரவுண்டால் கொஞ்சம் கொஞ்சமாக மூவ்மெண்ட் மாற ஆரம்பித்துவிடும். அப்படி ‘சந்திரமுகி’ படத்தை சொல்லலாம். 90 சதவீதம் நாங்கள் ரிகர்சல் பண்ணியதை எடுத்தோம். செட்டுக்கு போனதும் சில ஸ்டெப்ஸ் மெருகேற்றினோம். ரஜினி சார் படிக்கட்டிலிருந்து வரும்போது கம்மல் கீழே வீழ்வது, ஜோதிகாவின் நடனம் என சில மாற்றங்கள் செட்டுக்கு போன பிறகு இம்ப்ரவைஸ் பண்ணியது.

‘தவசி’ படத்தில் விஜயகாந்த், செளந்தர்யா பாடலை டிராலி மூவ்மெண்ட்டில் எடுத்திருக்கிறோம். மலையாளத்தில் மோகன்லால் படத்தில் ஒரு ‘பப்’ பாடலை ஒரே ஷாட்டில் எடுத்தோம்.

வினித், செளந்தர்யா நடித்த ஒரு படம். ஐதராபாத்தில் ஒரு லொகேஷனில் கதவுகள் நிறைய இருந்தது. அந்தப் பாடலை மூன்று ஷாட்டில் பண்ணினோம். இந்த மாதிரி லொகேஷனில் பல மெருகேற்றல் நடக்கும்.

குறுகிய நாட்களில் எடுத்த பாடல் உண்டா?

நிறைய உண்டு. ‘சந்திரமுகி’ படத்தில் ‘ரா... ரா...’ பாடலைக் குறுகிய நாட்களில் எடுத்தோம். அந்தப் பாடலுக்காக எனக்கு மாநில விருது கொடுத்தார்கள். ‘ரட்சகன்’ படத்தில் ‘சோனியா சோனியா...’ பாடலை ஐந்தாறு நாட்களில் எடுத்தோம்.

கடினமான பாடல் என்றால் எந்தப் பாடலைச் சொல்வீர்கள்?

அப்படி எதுவும் இல்லை. எந்தப் பாடலாக இருந்தாலும் ஹோம் ஒர்க் பன்ணுவேன். முதல் நாள் சில மணி நேரம் நடிகர், நடிகைகளின் புரிதலுக்கு காத்திருப்பேன். ஆர்ட்டிஸ்ட் என்னுடைய வேவ்லெங்த்துக்கு செட்டானதும் கோரியோ பண்ணுவேன். சமீபத்தில் ‘ஜெய்பீம்’ ஹீரோயின் லிஜோமோல் ஜோஸ் நடிக்கும் மலையாளப் படம்... ஒரே நாளில் எடுக்க வேண்டும். 2000 ஹை ஸ்பீட் ஷாட்டில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். உடனே அதற்குரிய கருவிகளை வரவழைத்துக் கொடுத்தார்கள்.  

நீங்கள் ஏராளமான நடிகைகளுக்கு நடனம் அமைத்துள்ளீர்கள். யார் உங்கள் சாயலில் நடனம் ஆடுகிறார்கள்?

‘சந்திரமுகி’யில் ஜோதிகாவின் நடனத்தைப் பார்த்தவர்கள் ‘கலா மாஸ்டர் மாதிரி இருக்கிறதே...’ என்றார்கள். ‘ரா... ரா...’ பாடலில் முன்னாடி நடந்து வரும்போதும், பின்னாடி நடந்து போகும்போதும் நான் என்ன பண்ணுவேனோ அதை அப்படியே அச்சு எடுத்த மாதிரி பண்ணினார். என்னை மாதிரியே என்றால் பானுப்ரியா, ஸ்ரேயாவைச் சொல்லலாம்.

நடிகைகள் உங்கள் நடனத்தை பிரதி எடுத்து நடனம் ஆடும்போது உங்களைக் கண்ணாடியில் பார்த்த அனுபவம் போல் இருக்குமா?

அப்படிச் சொல்லமுடியாது. என்னுடைய நடனத்தை மற்றவர் ஆடும்போது ரசிப்பேன். என்னுடைய நடனத்தில் பரதம் , ஃபோக் அதிகம் இருக்கும். அதை நடிகைகள் அப்படியே என்னுடைய பாடி ஸ்டைலில் பண்ணும்போது சந்தோஷமாக இருக்கும்.

உங்கள் தங்கை பிருந்தா இயக்குநராகிவிட்டார். நீங்கள் எப்போது படம் இயக்குவீர்கள்?

டைரக்‌ஷனில் எனக்கு ஆர்வம் இல்லை. அப்படியே பண்ணினால் டான்ஸ் முக்கியத்துவம் உள்ள ஒரு படம் மட்டுமே பண்ணுவேன்.

நடிக்கும் ஐடியா எப்போது வந்தது?

பிரபல இயக்குநர்கள் பலர் என்னை நடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். நான் மறுத்துவிட்டேன். நயன்தாராவிடம் எனக்கு நெருங்கிய நட்பு உண்டு. ஒரு நாள் ஃபோன் பண்ணி ‘விக்கி பேச வேண்டுமாம்’ என்று விக்னேஷ்சிவனிடம் ஃபோன் கொடுத்தார். ‘கதை எழுதும்போது உங்களை வைத்து எழுதினேன். மறுக்காமல் நடிக்க வேண்டும்’ என்று அவுட் லைன் சொன்னார். ‘எனக்கு டான்ஸ் போதும். மனப்பாடம் பண்ணி என்னால் டயலாக் பேச முடியாது’ என்று சொன்னேன்.

அவர் டைம் கொடுத்து யோசித்து முடிவை சொல்லச் சொன்னார். இரண்டு நாள் கழித்து, நயன்தாராவுக்கு ஃபோன் பண்ணி ஓகே சொன்னேன். படத்துல எனக்கு காமெடி கலந்த அழகான கேரக்டர். விஜய் சேதுபதி, சமந்தா காம்பினேஷனுடன் நடித்தது அருமையான அனுபவம்.

கலைஞருடன் பணியாற்றிய அனுபவம்?

மறக்க முடியாத அனுபவம் அது. அப்போது நான் நிறைய ஸ்டேஜ் ஷோ பண்ணிக்கொண்டிருந்தேன். தனியார் டிவியிலும் ரியாலிட்டி ஷோ இருந்தது. பிஸியாக இருந்த சமயத்தில் கலைஞர் டிவியிலிருந்து அழைப்பு வந்தது. அமிர்தம் சார், இராம நாராயணன் சார் இருவரும் நான்தான் டான்ஸ் ஷோ பண்ண வேண்டும் என்றார்கள். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து என்கரேஜ் பண்ணினார்கள்.

சின்னத்திரை நடிகர்களை வைத்து டான்ஸ் ஷோ பண்ணினேன். சில டைட்டில் யோசித்து வைத்திருந்தேன். கலைஞர் ‘மானாட மயிலாட’ என்று வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னாராம்.
டைட்டிலில் எனக்கு அவ்வளவு திருப்தி இல்லை. ஆனால், நிகழ்ச்சி ஹிட்டானதும் மக்கள் அதைப்பற்றிப் பேசும்போதும் டைட்டில் வைத்த கலைஞர் ஐயாவுக்கு நன்றி சொன்னேன். ஏனெனில், ‘மானாட மயிலாட’ வளையல் விற்கும் அளவுக்கு நிகழ்ச்சி ஹிட். அந்த நிகழ்ச்சி ஹிட்டுக்கு டைட்டில் முக்கிய காரணம்.

சில சமயம் நாங்கள் நேரில் சந்திக்கும் போது காரை நிறுத்தி பாராட்டிவிட்டுச் செல்வார். கலைஞர் ஐயாவுடன் 12 வருடம் பழகியுள்ளேன். அவரிடம் நான் கற்றது பாராட்டும் குணம். உழைப்புக்கு மரியாதை கொடுப்பார். அந்த நிகழ்ச்சி பண்ணும்போது நான் போயஸ் கார்டன் பகுதியில் ஜெயலலிதா மேடம் வீட்டுக்கு அருகில் குடியிருந்தேன். அவரும் என்னுடைய நிகழ்ச்சியைப் பாராட்டினார். வாழ்க்கையில் யாரை மறந்தாலும் கலைஞர் ஐயாவை  மறக்கமாட்டேன். வெள்ளித்திரையில் கே.பாலசந்தரின் மோதிரக் கையால் குட்டு வாங்கியதும், சின்னத்திரையில் கலைஞர் ஐயாவின் மோதிரக் கையால் குட்டு வாங்கியதும் என் பாக்கியம்.

சினிமாவில் உங்கள் நட்பு வட்டம் அதிகமாச்சே?

சினிமாவில் எல்லா நடிகைகளுடனும் எனக்கு நட்பு உண்டு. அதில் குஷ்பூ சம்திங் ஸ்பெஷல். எங்கள் நட்புக்கு 30 வயது. தோழிகள் மாதிரி இல்லாமல் சகோதரிகள் மாதிரி பழகுவோம்.
இளம் நடன இயக்குநர்களுக்கு உங்கள் ஆலோசனை?

உழைப்பு, கிரியேட்டிவிட்டி, நேர நிர்வாகம் இந்த மூன்று இருந்தால் வெற்றி நிச்சயம்.