ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு தாத்தா!



அகழி, அசும்பு, அலந்தை, ஆவி, ஆறு, இலஞ்சி, இலந்தை, உடுவை, உவளகம், ஊருணி, எல்வை, ஏல்வை, ஏம்பல், ஏந்தல், ஏரி, ஓடை, கண்மாய், கயம், கால், கால்வாய், கிடங்கு, கிணறு, குட்டை, குட்டம், குண்டு, குண்டம், குண்டகம், குழி, குளம், கூவல், கூபம், கேணி, கோட்டகம், சட்டம், சலதரம், சிலந்தரம், சிக்கரி, சுனை, சூழி, சேங்கை, தடம், தடாகம், தம்மம், தாகம், தாங்கல், தரவு, பாக்கம், பொய்கை, மங்கல், மடு, மடுவு, மூழி, வலயம், வாக்கம், வாய்க்கால், வாவி... - இவை அனைத்தும் சங்க காலம் முதல் தற்காலம் வரை நீர்நிலைகளைக் குறிப்பிடும் சில பெயர்கள்.
நீர்நிலையைக் குறிக்க இத்தனை பெயர்கள் இருப்பதே தமிழர்கள் வாழ்வு நீரோடு எவ்வளவு ஒன்றி இருந்தது என்பதற்கான சான்று.

இப்படி மரபுப் பெயர்கள் சூட்டி தமிழ்ச் சமுதாயம் மகிழ்ந்தது. ஆனால், இன்று தமிழகத்தின் நிலைமை என்ன? காவிரிக்கு கர்நாடகத்தையும், முல்லைப் பெரியாறுக்கு கேரளத்தையும், ஆந்திரத்தில் இருந்து கிருஷ்ணா நதிநீரையும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இயற்கையின் வரம்தான் மழை. அந்த மழையின் மூலமே நமக்கு அதிக தண்ணீர் கிடைக்கிறது.காவிரியின் குறுக்கே முதலாம் நூற்றாண்டில் கரிகாலன் கல்லணை எழுப்பினான். 1900 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரியின் வெள்ளத்தை தடுத்து வருவது இந்த கல்லணையாகும். அந்த அளவுக்கு நீர் மேலாண்மை அப்போதே மேலோங்கி இருந்துள்ளது.

நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு. இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசிக்கும் நீர் முக்கியம். உலகின் மூன்று பக்கமும் கடலால் சூழ்ந்துள்ளது. புவிப்பரப்பில் 71 சத வீதப் பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. எனினும் உலகத்தில் உள்ள நீரில் 3 சதவீதம் மட்டுமே நன்னீர். அதில் 2 சதவீதம் பனிக்கட்டியாகக் காணப்படுகிறது. எஞ்சியுள்ள ஒரு சதவீதம் தண்ணீர் மட்டுமே பூமி முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

மனித உடலில் 70 சதவீதம் தண்ணீர் காணப்படுகிறது. தண்ணீர் இல்லையெனில் நம் உடலில் உள்ள செல்கள் அழிந்து மனித உயிர் இறப்பிற்கு தள்ளப்படும். பழமையான பெருமை குறித்து பேசுவது உள்ளபடியே மகிழ்ச்சிதான் என்றாலும், இன்று நிலைமை அப்படி இல்லை. குடிநீர் இல்லாமல் ஒரு கிராமமே காலியாகி இருக்கிறது என்ற உண்மையை நினைக்கிறபோது கசக்கத்தான் செய்கிறது. தவிச்ச வாய்க்கு தண்ணி கிடைக்குமா என்பது கிராமத்துச் சொலவடை. அதைத்தான் சொல்கிறது மீனாட்சிபுரத்தின் வரலாறு.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கிறது இந்த கிராமம். நெல்லை - தூத்துக்குடி சாலையில் பொட்டலூரணி விலக்கில் உள்ள ரோட்டில் பிரிந்து சென்றால் கரிசல் பூமியாக எங்கும் காட்சியளிக்கும் விவசாய நிலங்கள் நம்மை வரவேற்கின்றன.அங்கிருந்து செக்காரக்குடி செல்லும் சாலையில் சென்று மீனாட்சிபுரம் செல்ல வேண்டும் என்றால், ‘அங்கு யார் இருக்கிறார், அங்க போய் என்ன செய்யப் போறீங்க’ என கிராமத்துப் பாணியில் அப்பாவியாகக் கேட்கின்றனர். கடைசியாக மீனாட்சிபுரத்தை அடைந்தால், கரிசல் பூமிக்கு நடுவே கல் கட்டடங்கள், ஓட்டு வீடுகள் என அனைத்தும் சிதிலமடைந்து கிடக்கின்றன.

ஆள் அரவமற்று காட்சியளிக்கும் அந்த ஊரில் ஒரு வீட்டில் கைத்தாங்கலாக ஒற்றைக் கம்பைப் பிடித்துக் கொண்டு வருகிறார் 73 வயதாகும் கந்தசாமி. மீனாட்சிபுரத்தின் ஒரே சாட்சியாக இருக்கும் ஒற்றை மனிதர் இவர்தான். இந்த ஊருக்கு என்னதான் ஆயிற்று... ஏன் ஊர் மக்கள் அனைவரும் ஊரைக் காலி செய்துவிட்டார்கள் என்பதற்குப் பின்னால் ஒரு பெரிய கதை நீள்கிறது.

மீனாட்சிபுரம் கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்துள்ளனர். தீவிர குடிநீர்ப் பிரச்னையால் மக்கள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறினர். ஆனால், சொந்த கிராமத்தை விட்டு வெளியேற மனமில்லாமல் இப்போது ஒற்றை நபராக வசித்து வருகிறார் கந்தசாமி.

ஆரம்பத்தில் ரேஸ் வண்டி கட்டிக்கொண்டு ஊர் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் இன்று தனிக்கட்டையாகிப் போனார். சிறு வயதில் ரேஸ் வண்டி கட்டிக்கொண்டு மதுரை, மேலூர், தஞ்சாவூர், குறுக்குச்சாலை என்று ஊர், ஊராகச் சென்று 35க்கும் மேற்பட்ட பரிசுகள், மாலை, மரியாதையோடு அமர்க்களப்பட்டவர் இன்று தனியே வசித்துவருகிறார்.
ஆரம்பத்தில் செழிப் பாகத்தான் இருந்தது இந்த கிராமம். உளுந்து, பாசிப்பயறு, கம்பு என கரிசல் காட்டில் விளையாத பயிர் இல்லை. ஆனால், நாளுக்கு நாள் அதிகரித்த தண்ணீர் தட்டுப்பாடுதான் இன்று மீனாட்சிபுரத்தை தனிமைப்படுத்திவிட்டது.

காலி வீடுகள் சேதமடைந்த நிலையில் வரிசையாக நிற்க, தனது வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருக்கும் கந்தசாமி, தான் பிறந்து வளர்ந்த கிராமத்தின் இலையுதிர் காலங்களை மனதில் அசை போட்டபடி காலத்தைக் கழித்து வருகிறார். 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்துவந்த கிராமத்தில் இப்போது இவர் மட்டுமே வாழ்ந்துவருகிறார். இவரது சொந்தக் குடும்பம் கூட இவரது மனைவி வீரலட்சுமி மறைவிற்குப் பிறகு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறிவிட்டது.

இந்தப் பாழடைந்த கிராமத்தில் நீடித்த குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் இங்கு வசித்தவர்கள் அனைவரும் மீனாட்சிபுரத்தை கைவிட்டு விட்டனர். ஆனால், “என்னுடைய மனைவி வீரலட்சுமி இறந்த இதே அறையில்தான் என்னுடைய கடைசிக் காலத்தைக் கழிப்பேன்...” என்பதில் உறுதியாக இருக்கிறார் கந்தசாமி. இந்த கிராமத்தில்தான் உயிர் விடுவேன் என்ற அவரது முடிவை பிள்ளைகளாலும், உறவினர்கள், நண்பர்களாலும் மாற்ற முடியவில்லை.

“என்னுடைய குடும்பத்தினர் செல்வதற்கு முன்னரே மற்றவர்கள் அனைவரும் இங்கிருந்து சென்றுவிட்டனர். 7 வருடங்களுக்கு முன்பு எனது இரண்டாவது மகன் திருமணமாகிச் சென்றதும், தூத்துக்குடியிலுள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் இருக்கும் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒரே நபராகிப் போனேன்.

2011 மக்கள் தொகை கணக்கின்படி, இக்கிராமத்தில் 1,135 பேர் வசித்துவந்தனர். விவசாயத்தில் தொடர்ந்து நல்ல உற்பத்தி இல்லாததால் கொஞ்சம் கொஞ்சமாக விவசாயம் மோசமடைந்தது. தண்ணீர் இல்லை. விளை நிலங்களை எல்லாம் மக்கள் காற்றாடி அமைக்க விற்றுவிட்டு உயிர் பிழைப்பதற்காக வேறு வழியின்றி அனைவரும் வெளியேறத் தொடங்கினர்...” என்கிறார் கந்தசாமி.

ஊரில் உள்ள இரு கோயில்கள்தான் கிராமத்திற்கும் இங்கிருந்து சென்றவர்களுக்கும் ஒரே பிணைப்பாக உள்ளது. மீனாட்சிபுரத்திற்குச் செல்லும் சாலையில் வைஷ்ணவ கோயிலான காரியசித்தி சீனிவாசப்பெருமாள் கோயில் அடையாளம் தென்படுகிறது. கந்தசாமியின் பிரார்த்தனைகளுக்கு இன்னும் பதில் கிடைத்தபாடில்லை. இங்கிருந்து வெளியேறியவர்கள் நிச்சயம் ஒருநாள் திரும்பி வருவார்கள் என நம்பிக்கையோடு இருக்கிறார்.

இவரது குடும்பம் பராமரித்து வரும் பராசக்தி மாரியம்மன் கோயிலின் திருவிழாவிற்கு மக்கள் வருகை தருகிறார்கள். இந்தக் கோயிலில் பூஜை மட்டும் நடக்கிறது. திருவிழாவிற்கு மட்டும் மூன்று நாட்கள் ஊர்க்காரர்கள் வந்து போகிறார்கள்.கந்தசாமிக்கு முதியோர் ஓய்வூதியமும் கிடையாது. தமிழ்நாடு முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கவும் இவர் தகுதியுடையவர் இல்லை. இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இருவரும் காசிலிங்கபுரம், எப்போதும்வென்றானில் டிரைவர்களாக இருக்கின்றனர். இவரது இளைய மகன் பாலகிருஷ்ணன் அவ்வப்போது இவரைப் பார்க்க வருவதோடு மாதத்திற்கு ரூ.1500ஐ செலவுக்கு வழங்குகிறார்.

இவருடைய நண்பர் ஒருவர் கிராமத்தை விட்டுச் செல்லும்போது இவருக்கு பரிசாகக் கொடுத்த இருசக்கர வாகனத்துக்கு அவ்வப்போது பெட்ரோல் போட சிறு தொகை வைத்துள்ளார். “எனக்கு பெரிய செலவுகள் எதுவும் இல்லை...” எனக் கூறும் கந்தசாமி, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மளிகைப் பொருட்கள் வாங்க ஸ்கூட்டரில் செக்காரக்குடி செல்வார். ஒவ்வொரு முறை அக்கிராமத்திற்குச் செல்லும்போதும் சில மணி நேரம்  அங்கு செலவழிப்பார். தபால்காரர் கூட இவரது கிராமத்திற்கு வருவதில்லை.

கந்தசாமிக்கு தபால், மணியார்டர் எப்போதாவது வரும். அப்போது ஊர் பூசாரி மூலம் தகவல் வந்து சேரும். செக்காரக்குடி தபால் நிலையத்திற்கு சென்று அந்த மணியார்டரை பெற்றுக் கொண்டு வருவார். இப்போதைக்கு வீட்டில் அவருக்கு   துணையாக  திமுக அரசு வழங்கிய கலைஞர் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது. அவரது தனிமையைப் போக்க ராஜா, ராணி என இரண்டு நாய்கள் உள்ளன.

நான்கு வருடங்களுக்கு முன்பு இந்த தெரு நாய்கள் என்னிடம் வந்தன. நான் தனியாக இருக்கிறேன் என அதற்கும் எப்படியோ தெரிந்துவிட்டது போல. ராஜா, ராணி என அதற்கு பெயர் வைத்துள்ளேன். இதற்கும் சேர்த்து நானே சமைக்கிறேன். இன்னொரு உயிருக்கு சமைப்பது நல்ல விஷயம் தானே... ரேஸ் வண்டி ஓட்டினேன் என்பதற்கு சாட்சியாக இப்போது இந்த குதிரையை எனது மகன் வாங்கித் தந்துள்ளார்...’’ எனக்கூறி தனது இளமைக் காலத்தை நினைவு கூர்கிறார்.

ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த அவரது வயலும் மீனாட்சிபுரத்தின் நினைவுகளும் இன்றும் அவரது மனதை விட்டு அகலவில்லை. “அன்றைய நாட்களில் அரிசி பிரதானமான உணவு கிடையாது. சிறுதானியங்களையே அதிகம் பயன்படுத்தினோம்...” என நினைவு கூர்கிறார். மக்கள் உளுந்தும், பாசிப்பயறும் பயிரிட்ட நிலங்கள் இன்று காலியாகி, கைவிடப்பட்ட வீடுகளே கிராமத்தில் உள்ளன. அவருடைய செருப்பு, இரு சக்கர வாகனம் மற்றும் பரவிக் கிடக்கும் உடைகள் இவற்றை தவிர்த்து கந்தசாமி வாழ்ந்து வருவதற்கான அறிகுறிகள் சிலவையே தென்படுகின்றன.

குடிநீருக்காக காலி செய்து போன இந்த கிராமத்தில் இப்போது குடிநீர் டேங்க் வந்து விட்டது. இருக்கும் ஒரே நபரான கந்தசாமி வீட்டுக்கு கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் பைப் லைன் போட்டுக் கொடுத்திருக்கிறது பஞ்சாயத்து நிர்வாகம். நான்கு தெரு விளக்குகள் பளிச்சிடுகின்றன. அங்குள்ள வீடுகளைப் போல தெருக்களும் புல், பூண்டுகள் முளைத்து உருமாறி விட்டன.

சப் கலெக்டர், தாசில்தார் என அதிகாரிகள் வந்து சென்ற போதிலும் இந்த கிராமத்தை மீண்டும் உயிரூட்ட முடியவில்லை. ஆனாலும் இந்த கிராமத்தை விட்டு நகரமாட்டேன் என நீங்காத நினைவுகளோடு காத்திருக்கிறார் கந்தசாமி.

குடிநீர் இருக்கு... ஆனா, யாரும் இல்லை!

மீனாட்சிபுரம் கிராமம், செக்காரக்குடி பஞ்சாயத்தின் ஒன்றாவது வார்டில் வருகிறது. இந்த ஒன்றாவது வார்டு முன்னாள் உறுப்பினர் 29 வயதான காமராஜ், மீனாட்சிபுரத்தின் நினைவுகளைப் பகிர்ந்தார். ‘‘இந்த கிராமம் இன்று இல்லைனா, அதற்குக் காரணம் குடிநீர்ப் பிரச்னை மட்டும்தான். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் பக்கத்து கிராமங்களில்தான் வசிக்கிறாங்க. மீனாட்சிபுரத்துல 20 ஓட்டு இருக்கு. தேர்தல் நேரத்துல மட்டும் கரெக்டா வந்து ஓட்டு போட்ருவாங்க.

2018ல் சப் கலெக்டர் வந்தபிறகுதான் அந்த கிராமத்துக்கு குடிநீர் வசதி கிடைச்சது. இப்போது அங்கு குடிநீர் வசதி இருக்குன்னாலும், அந்த கிராமத்தில் இருந்து வந்தவங்க எல்லாம் காசிலிங்கபுரம், செக்காரக்குடி, தூத்துக்குடின்னு செட்டில் ஆயிட்டாங்க. அதனால அந்த கிராமத்துக்கு போக தயாரா இல்லை...’’ என்கிறார் காமராஜ்.

செய்தி: க.முத்துகிருஷ்ணன்

படங்கள்: வா.முருகன்