பச்சிளம் குழந்தைகளுக்கு போட்டோ ஷூட் எடுக்கும் தாய்!



தலை நிறைய கருகருவென்று வளர்ந்த எண்ணெய் பூசிய கேசம், புருவங்களில் தீட்டிய கண்மை, கன்னம் குழி விழ சிரித்த முகத்தில் முழுவதும் பவுடர் பூசி, தலையில் பூச்சூடி, நடுநெற்றியில் மட்டும் பொட்டு வைத்தால் போதாது என்று கன்னத்தில் அதனைவிட பெரிய கறுப்பு வட்டத்தில் திருஷ்டி பொட்டு வைத்து தரையில் தவழவிட்டு குழந்தைகளை கறுப்பு வெள்ளையாக போட்டோ எடுத்து அழகு பார்த்து அதனை வீட்டின் வரவேற்பறையில் அலங்கரித்து வைத்தது ஒரு காலம்.இன்று, பிறந்து ஒரு சில நாட்களே ஆன குழந்தைகளை விதவிதமான தோற்றப் பொலிவை ஏற்படுத்தி ‘கலர்ஃபுல்’ ஆக போட்டோ எடுப்பது ‘நியூ பார்ன் பேபி போட்டோகிராபி’ என்று உலகம் முழுவதும் டிரெண்ட் ஆகிவருகிறது.

குழந்தைகளை அவர்களின் இயல்பான நிலையிலும், கம்பளித் துணிகளால் பொதிந்து அதற்கான கட்டமைப்புகளில் அமர வைத்தும் விதவிதமாக போட்டோ எடுத்துத் தள்ளு
கிறார் குமரி மாவட்டம் அழகப்பபுரத்தைச் சேர்ந்த அனு ஜோஸ்.நாகர்கோவில், வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள பழமையான வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதனை ஸ்டூடியோவாக மாற்றி வைத்துள்ளார். கன்னியாகுமரி அருகே உள்ள அழகப்பபுரம் கிராமத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்து போட்டோ ஷூட் பணியை மேற்கொள்கிறார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

‘‘ஒரு குழந்தை பிறந்த தருணம், தாயும் பிறக்கிறாள். புதியதாக பிறந்த குழந்தையின் முதல் தொடுதல் நமது வாழ்வின் மிக அருமையான தருணங்களில் ஒன்றாகும். அவர்கள் பிறந்த தருணங்கள் நம்மை ஆச்சரியத்தில் சிலிர்ப்படைய வைக்கிறது. இது நமது முகத்தில் ஒரு புன்னகையைத் தருகிறது.
அது ஒருபோதும் மங்காது. பிறப்பு என்பது குழந்தைகளை உருவாக்குவது மட்டுமல்ல; இது தங்களை நம்புகின்ற வலிமையான, திறமையான தாய்மார்களையும் உருவாக்குவது பற்றியது ஆகும்...’’ என்கிறார் அனு ஜோஸ்.‘பச்சிளங் குழந்தைகளை எப்போது முதல் போட்டோ எடுக்கத் தொடங்கினீர்கள்... எப்படி இந்த ஆர்வம் வந்தது’ என்றால் தனது மகனின் புகைப்படத்தைக் காண்பிக்கிறார்.

‘‘சென்னையில் எம்பிஏ படித்தேன். எனது கணவர் ஜோஸ் கிறிஸ்டோ. அவர் இன்ஜினியரிங் படித்துள்ளார். அவர் முழுநேர ‘வெட்டிங்’ போட்டோகிராபராக இருந்து வருகிறார். எங்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. 2 வயது மகன் ஸ்டீவ் ஹாபின்ஸ். குழந்தைகளை புகைப்படம் எடுக்கின்ற ஆர்வம் காரணமாக இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தேன். எனது கணவர் புகைப்படத்துறையில் இருப்பதால் எனக்கு இதில் சிரமங்கள் ஏதும் ஏற்படவில்லை. அவருக்கும் இதில் மகிழ்ச்சி. அவர் எனக்கு மிகவும் ஊக்கம் தந்தார்.

அவரது வழிகாட்டுதலுடன் போட்டோகிராஃபி படித்தேன். எனது குழந்தையை போட்டோ எடுப்பது எனது கிரேஸ் ஆக இருந்தது. நானே கேமரா எடுத்து அவனை பலவிதமாக போட்டோ எடுக்க ஆரம்பித்தேன். எனது குழந்தையே எனக்கு மாடலாக இருந்தான். அவனை வைத்தே விதவிதமாக புகைப்படங்கள் எடுத்தேன். இப்படியே ‘நியூ பார்ன் பேபி’களை படம் எடுப்பதை நான் தேர்வு செய்தேன்...’’ என்னும் அனு ஜோஸ், குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை தருகிறார்.

 ‘‘குழந்தை பிறந்த ஐந்தாவது நாள் முதல் ஷூட் செய்கிறோம். அதற்கு குழந்தைகளைக் கையாளுதல் என்பது மிக மிக முக்கியம். பிறந்த குழந்தைகளை எல்லோரும் எடுத்து வைத்திருத்தல் என்பது சாதாரணமான ஒன்றல்ல. அதற்குப் பயிற்சி தேவை. அந்த வகையில் நான் எனது மகனைக் கையாண்ட விதத்தில் அவனே எனக்கு மாடலாக, ரோல் மாடலாக உள்ளான். நானும் அவனிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். எனது சிந்தனைகளை மகன் வாயிலாக புகைப்படங்களாக எடுத்துக்கொள்வேன்.

இதுவரை மூன்று வயதுக்கு உட்பட்ட 140 குழந்தைகளை போட்டோ எடுத்துள்ளேன். பிறந்து ஐந்து நாள் முதல் மூன்று வயது வரையுள்ள குழந்தைகளை புகைப்படங்கள் எடுத்துள்ளேன்...’’ என்பவரின் ஸ்டூடியோ முழுவதும் விதவிதமான தீம்களை உருவாக்கும் பொருட்களால் நிரம்பி வழிகிறது. பழமை வாய்ந்த, வழக்கில் இருந்து மறைந்து வரும் பொருட்களும் இதில் அடங்கும்.

ஸ்டூடியோவில் பச்சிளம் குழந்தை ஒன்றைப் புகைப்படம் எடுக்க தயாரானார். அந்தக் குழந்தையை தனது மடிமீது வைத்து துணிகளால் பொதிந்து, அழுகின்றபோது தட்டிக் கொடுத்தும் தாலாட்டியும் தூங்க வைத்தார். கிறிஸ்துமஸ் காலம் என்பதால் குழந்தைக்கு அதற்கேற்ற வகையில் வண்ணத்துடன் உடைகளைத் தயார் செய்து வைத்து புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார்.அரைமணி நேரத்தில் அழகான புகைப்படங்கள் ரெடி.

‘‘பச்சிளங் குழந்தைகள் பிறந்து 15 நாட்கள் வரை பெரும்பாலான நேரமும் தூங்கிக்கொண்டேதான் இருப்பார்கள். குழந்தையின் உடலைக் கம்பளித் துணியால் சுற்றி அவர்களைப் பொதிந்து தயார்படுத்தும்போது அவர்களுக்குத் தங்களது தாயின் வயிற்றுக்குள் இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். அதனால் அவர்கள் உடனே எளிதாகத் தூங்கிவிடுவார்கள்.

ஒரு குழந்தையைப் புகைப்படம் எடுக்க 10 நிமிடத்தில் ஒரு தீம் தயார் செய்து போட்டோ எடுத்து முடித்துவிடலாம். குழந்தைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். சில நேரங்களில் ஒரு குழந்தையை போட்டோ எடுக்க 4 மணி நேரம் வரை ஆனது கூட உண்டு.

அதேபோன்று 2 மணி நேரத்திற்குள் 8 விதமான தீம்களுடன் ஒரு குழந்தையை புகைப்படம் எடுத்துள்ளேன். முதலில் நமக்கு இதில் பொறுமை அதிகம் தேவை.பிறந்து 5 நாட்கள் நிலையில் உள்ள குழந்தைகள் எனில் ஒரு நாள் ஒரு குழந்தையை மட்டும் புகைப்படம் எடுப்பதுடன் நிறுத்திக்கொள்வேன்...’’ என்றவர், குழந்தைகளை போட்டோ எடுப்பதில் மக்களிடம் ஆர்வம் எந்த அளவுக்கு உள்ளது என்றும் விளக்கினார். ‘‘சிலர் 41 நாட்களுக்கு குழந்தைகளை வெளியே எடுத்துவரமாட்டார்கள். சிலர் 90 நாட்கள் ஆகியும் வெளியே எடுத்து வரமாட்டார்கள். ஆனால், பிறந்து 12 நாட்களில் கூட இங்கு குழந்தையுடன் ஸ்டூடியோவிற்கு வந்துள்ளார்கள்.

முன்பெல்லாம் சின்னஞ்சிறு குழந்தைகளை போட்டோ எடுக்கக்கூடாது என்பார்கள். இப்போது மக்கள் மாறி வருகிறார்கள். எல்லார் கையிலும் மொபைல் இருப்பதால் எல்லோரும் போட்டோகிராபர்கள் ஆகிவிடுகின்றனர்...’’ என்றவர் தனது புகைப்படம் எடுப்பதற்கான பயணத்தைப்பற்றிக்கூறுகிறார். ‘‘நான் மும்பை வரை சென்று புகைப்படம் எடுத்துள்ளேன். திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கோவில்பட்டி, மதுரை உள்ளிட்ட இடங்களுக்கும் கார்களிலேயே சென்று புகைப்படம் எடுத்து வந்துள்ளேன். மும்பை, சென்னை போன்ற இடங்களுக்கும் விமானத்தில் சென்று புகைப்படங்கள் எடுத்து வந்துள்ளோம்.

ஓடி விளையாடுகின்ற குழந்தைகளை அவர்கள் போக்கிலேயே விட்டு அவர்கள் தயாராகும் வரை காத்திருந்து புகைப்படம் எடுத்துள்ளேன். ஒரு குழந்தையை படம் எடுக்க ஒரு நாள் முழுக்க ஆனதும் உண்டு. அதனைப் போன்று இரட்டைக் குழந்தைகளையும் புகைப்படம் எடுத்துள்ளேன். அவர்களை புகைப்படம் எடுப்பது மிகவும் சிரமம். அவர்களை தயார்படுத்த அதிக நேரம் ஆகும்.குழந்தையின் புகைப்படத்தை பார்த்துவிட்டு நாம் ஒரு தீம் தயார் செய்திருப்போம்.

ஆனால், அவர்களை நேரில் பார்த்துவிட்டு அதற்கு ஏற்ப செட் ஆகும் விஷயங்களை தீம் ஆக தயார் செய்து வைத்துக்கொள்வேன். அதனை நானே தீர்மானித்துக் கொள்வேன். பெற்றோர்களிடம் அப்படி இப்படி என்று கூறி ஏமாற்றுவது இல்லை.

சிலர் குறிப்பிட்ட தீம்களைப் பார்த்துவிட்டு அதுபோன்று வேண்டும் என்று கேட்டால் அதுபோன்றே செய்து கொடுப்பேன். குறைந்தபட்சம் 2 புகைப்படங்களும், அதிகம் 4 படங்களும் எடுப்பது உண்டு...’’ என்பவரின் ஸ்டூடியோ அறை ஒன்று விருதுகளால் நிரம்பியிருக்கிறது.

‘‘நியூ பார்ன் பேபி போட்டோகிராபிக்காக விருதுகள் பல பெற்றுள்ளேன். வருடத்திற்கு ஒருமுறை சர்வதேச அளவில் விருதுக்கு விண்ணப்பித்தால், சில நேரங்களில் விருது கிடைக்கும். அதற்கான அளவுகளுக்கு ஏற்ப அனுப்பி வைத்தால் நம்மைத் தேர்வு செய்வார்கள்.வெண்கலம், வெள்ளி, தங்கம் என்றும், கேஷ் பிரைஸ் போன்றவையும் வழங்குவார்கள். ஆஸ்திரேலிய, அமெரிக்க விருதுகளும் பெற்றுள்ளேன்.

இன்டர்நேஷனல் பேபி போட்டோ அவார்ட்ஸை அமெரிக்கா  வழங்குகிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து ‘ரைஸ் அவார்டு’ கிடைத்துள்ளது. லட்சக்கணக்கான போட்டோக்கள் போட்டிக்கு வரும். அவற்றில் இருந்து விருதுக்கான போட்டோக்களைத் தேர்வு செய்வார்கள். அதில் நானும் ஒருத்தி என்பதில் எனக்கு மகிழ்ச்சி...’’ என்கிறார் அனு ஜோஸ்.

செய்தி: எம்.இராஜகுமார்

படங்கள்: டி.ரகு