4 பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு ஒரேயொரு ஒன்பது கஜ புடவை போதும்!



மேட்ச்சிங் டிரெஸ், கப்புள் டிரெஸ், ஃபேமிலி காம் போ... எல்லாம் பழசு. இப்போது ‘ஒரு புடவை ஒரு ஃபேமிலி’ கான்செப்ட்தான் புதுசு!
‘‘ஒன்பது கஜம் புடவை இருந்தா போதும்... ஜமாய்க்கலாம்!’’ புன்னகையுடன் பேசத் துவங்கினார் டிசைனர் மற்றும் ஸ்டைலிஸ்ட் பேன்சி ராஜா (@tailorsbypr).
‘‘அப்பா, அம்மா, ரெண்டு குழந்தைங்க இருக்கும் குடும்பமா இருந்தா இந்த கான்செப்ட் கச்சிதமா பொருந்தும். ஆமா... ஒன்பது கஜம்னு சொல்வோம் இல்லையா..? மாமி புடவை... அதுல ஒரு குடும்பத்துல இருக்கிற நான்கு பேருக்கு போதுமான அளவுக்கு துணி கிடைக்கும். இந்த கான்செப்ட்ல இங்க ரெண்டு டிசைன்ஸ் கொடுத்திருக்கோம்...’’ என பேன்சி ராஜா சொல்ல ‘வாரே வாவ்’ என உற்சாகமாக இணைந்தனர் மகாலட்சுமி சில்க்ஸ் (@sri_mahalakshmisilks).

இரண்டு ஒன்பது கஜ புடவைகள் தேர்வு செய்யப்பட்டன. ஒன்று பட்டுப் புடவை. அடுத்தது சாதாரண காட்டன் புடவை. ‘‘பட்டுச் சேலையைப் பொறுத்தவரை ஒன்பது கஜத்துடன் கூடவே 0.80 மீட்டர் அளவுக்கு பிளவுஸ் மெட்டீரியலும் சேர்ந்து வரும். நாம எதிர்பார்த்த அளவுக்கு துணி அந்தப் புடவைலயே கிடைக்கும். அப்பா, அம்மா, ரெண்டு குழந்தைங்க கொண்ட ஒரு குடும்பத்துக்கு இந்த ஒன்பது கஜம் புடவை போதும்...’’ என்ற பேன்சி ராஜா, மஞ்சள் நிறப் பட்டுப்புடவையில் லெஹெங்கா, ஷெர்வானி டிசைன் செய்ததை மேற்கொண்டு விளக்கினார்.
‘‘கதிரவன், சந்தனா ராஜ், குட்டிப் பையன் ரக்‌ஷித், பேபி தீரா... இவங்க நாலு பேரும் இந்த கான்செப்ட்டுக்கு மாடலா இருக்க சம்மதிச்சதால அவங்க உடலுக்கு ஏத்த மாதிரி டிசைன் செய்தோம்.
உதாரணமா, மேல உள்ள பிளவுஸ் டிராப்பை ஷோல்டர் டைப்ல கொடுத்திருக்கோம். அதேபோல் தீரா குட்டிக்கு பட்டுப் பாவாடை சட்டையைத் தேர்ந்தெடுத்தோம். சட்டையின் பின்பக்கம் கீஹோல் கொடுத்திருக்கோம்.

புடவையோட மற்ற பாகங்களை வெச்சு லெஹெங்கா பாவாடை, பேபிக்கு ஸ்கர்ட், ஷெர்வானின்னு டிசைன் செய்தோம். இது முழுக்க முழுக்க அப்படியே ஃபெஸ்டிவல் மூட்ல இருக்கும்.

மாடலா இல்லாத பெண்கள் கொஞ்சம் கிளாமரா இருக்குனு நினைச்சா மேல உள்ள பிளவுஸுக்கு பதிலா கிராப் டாப், சைனீஸ் காலர் குர்தி அல்லது குர்தா கூட மேட்ச்சிங் துப்பட்டாவைக் கொடுக்கலாம். இதேபோல ஒன்பது கஜ இன்னொரு காட்டன் புடவைல கேஷுவல் லுக் கொடுத்திருக்கோம்.

கேஷுவல் லுக்கை பொறுத்தவரை ஒரே ஸ்டைல்தான். பசங்களுக்கு மட்டும் ஸ்லீவ் சுருட்டிக்கிற மாதிரி கொடுக்கும்போது இயல்பாவே ஒரு மேன்லி டோன் வந்துடும். உடன் மேட்ச்சிங்கா நீலநிற டெனிம் அல்லது கிராப் வெள்ளைநிற பேன்ட் எதை வேணும்னாலும் பாட்டம்வேரா மேட்ச் செய்துக்கலாம்...’’ என பேன்சி ராஜா முடிக்க தனது மேக்கப் டீடெயில்களை விவரிக்கத் தொடங்கினார் ரம்யா அழகேந்திரன் (@dlightbridalstudio).

‘‘ஃபெஸ்டிவல்வேரைப் பொறுத்தவரை கிராண்ட் லுக் மேக்கப் கொடுக்கணும். கோல்டன் ஐஷேடோ, பளபள லிப்ஸ்டிக், குளோ ஸ்கின் மேக்கப், கூடவே டெம்பிள் ஜுவல்லரி நகைகள், ஷெர்வானிக்கு மேட்ச்சிங்கா நகைகள்... இப்படி மேட்ச் செய்திருக்கோம். அதேபோல பசங்களுக்கு மேட்ச்சிங்கான செயின்ஸ், காலணினு அத்தனையும் செய்திருப்போம். கேஷுவல் குர்திக்கு இதெல்லாம் தேவையே கிடையாது. ஒரு போனி டெயில் ஹேர்ஸ்டைல், சின்ன ஸ்டட் காதணி, சாதாரண கலர் லிப்ஸ்டிக் மேட்ச் செய்தா நண்பர்கள் சந்திப்பு, சினிமா, சின்ன மீட்... மாதிரியான நிகழ்வுக்கு பயன்படுத்தலாம். பசங்களுக்கு அதுவும் வேண்டாம், வாட்ச் போதும்...’’ என்னும் ரம்யாவை இடைமறித்தார் பேன்ஸி ராஜா.

‘‘நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு ஒன்பது கஜம். கப்புள் அல்லது அப்பா, அம்மா, ஒரு குட்டி குழந்தைனா சாதாரண நீளமுள்ள புடவையே போதும். இந்த கான்செப்ட்டில் உங்க பழைய புடவை அல்லது சென்டிமென்டான புடவைகளைக் கூட ரீ கிரியேஷன்  செய்யலாம்...’’ என்கிறார் பேன்சி ராஜா.

மாடல்கள்: கதிரவன், நடிகை சந்தனா ராஜ், ‘மாஸ்டர்’ ரக்‌ஷித், பேபி தீரா.

நகைகள்: ஃபைன் ஷைன் ஜுவல்ஸ் (fineshine jewels)

ஸ்டூடியோ: ரமேஷ் (lights_on_studio wedding)

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்