இவர் நாடகம் பார்க்க ஸ்பெஷல் ரயில் விடப்பட்டது!



கல்கியின் நாவலுக்கு வசனம் எழுதியவர்... ‘கப்பலோட்டிய தமிழன்’ டயலாக் ரைட்டர்...

 சட்ட மேலவை உறுப்பினர்... சீர்காழி பாடிய பக்திப் பாடல்களின் பாடலாசிரியர்...

பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பழைய பாடல்களில் ஒன்று -
அன்பொளி வீசி
உயிர் வழிந்தாடும்
விழியில் மான்
கண்டேன் - தன் இதழ்
ஓசை இசையினில்
வாணியின்
வீணையை நான்
கேட்டேன்
பசும் பொன்னுடல்
வாரி வீசிய ஜோதியில்
வாட்டிய குளிர்
உணர்ந்தேன் - பின்னவள்
அருகே
புன்னகையோடு வர
என்னை
நான் மறந்தேன் ....

‘மந்திரி குமாரி’ படத்தில் ராஜகுரு எம்.என்.நம்பியாரின் மகனாக தோன்றி ‘கொலை அல்ல, அது கலை...’ என்று மந்தகாச சிரிப்போடு ஹீரோ ரேஞ்சுக்கு பேசப்பட்ட வில்லன் நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தயாரித்த ‘கோகிலவாணி’ படத்தில் இடம் பெற்ற பாடலிது. இசைமேதை ஜி.ராமநாதன் இசையில் ஒலித்த இந்த பாடலை எழுதியவரை பாடலாசிரியர் என்று மட்டும் சுருக்கிட முடியுமா?சுதந்திரப் போராட்ட வீரர், திரைப்பட இயக்குநர், நாடக ஆசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், தமிழ் வித்வான், சட்டமன்ற மேலவை உறுப்பினர், இயல், இசை, நாடக மன்றச் செயலாளர், கவிஞர் என அவருக்கு இன்னும் பல அடையாளங்கள் உண்டு.

அவர் பெயர் எஸ்.டி.சுந்தரம்.சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த எஸ்.டி.சுந்தரத்திற்கு சிறுவயதிலேயே நாடகத்தின் மீது கொள்ளைப் பிரியம். இதன் காரணமாக நவாப் ராஜமாணிக்கம் நாடகக்குழுவில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அவரின் தமிழ்ப் பற்றைக் கண்ட ராஜமாணிக்கம், திருவையாறு அரசு கலைக்கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார்.

எஸ்.டி.சுந்தரம் வித்வான் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். சுதந்திர வேட்கை கொளுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த காலமது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற எஸ்.டி.சுந்தரம் ஒன்பது மாத காலம் தஞ்சை சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு கிடைத்த நேரங்களில் நாடகங்கள் எழுத ஆரம்பித்தார்.

சிறையில் இருந்து வெளிவந்த பின்பு மீண்டும் நாடக மேடையை நோக்கி அவர் பயணித்தார். சக்தி கிருஷ்ணசாமியுடன் இணைந்து ‘சக்தி நாடக சபா’வை உருவாக்கினார். அவர் எழுதிய ‘கவியின் கனவு’ நாடகத்திற்கு தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக இந்த நாடகம் ஆயிரக்கணக்கான முறை மேடை ஏற்றப்பட்டது. இந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக திருச்சியிலிருந்து நாகப்பட்டினத்திற்கு ‘கவியின் கனவு ஸ்பெஷல் ரயில்’ விடப்பட்டது. தமிழறிஞர் மு.வரதராசன், எழுத்தாளர் கல்கி ஆகியோரால் இவரது நாடகங்கள் பாராட்டப்பட்டன.

நாடக உலகில் இருந்து எஸ்.டி.சுந்தரத்திற்கு திரைக்கதவு  திறந்தது. 1948ம் ஆண்டு ‘ஜூபிட்டர் பிக்சர்ஸ்’ தயாரித்த ‘மோகினி’ படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. லங்கா சத்யம் இயக்கிய இப்படத்தில், எம்ஜிஆர், வி.என்.ஜானகி முதன் முதலாக இணைந்து நடித்தனர். டி.எஸ்.பாலையா, மாதுரிதேவி, எம்.என்.நம்பியார் உள்ளிட்டோர் நடித்த வெற்றிப் படமிது.

1949ம் ஆண்டு பி.எஸ்.ராமகிருஷ்ணா இயக்கிய ‘லைலா மஜ்னு’ மொழிமாற்று தமிழ்ப் படத்திற்கு வசனம், பாடல்களை எஸ்.டி.சுந்தரம் எழுதினார். நாகேஸ்வரராவ், பானுமதி நடித்த படமிது. இப்படத்தில் எஸ்.டி.சுந்தரம் எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ்பெற்றவை. இலங்கை வானொலி ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. சி.ஆர். சுப்புராமன் இசையில் பானுமதி, கண்டசாலா பாடிய -

இக வாழ்வினில்
காதல் மகாஜோதியே
மாறுமா ஆசை தீருமா
ஜீவனச்சோலையும்
நீயே மாருதம் நானே...

இப்பாடலுக்கு இருவரின் குரல்களுக்கும் இணையாக இசை போட்டி போடும். இப்படத்தில் லலிதா, பத்மினி நாட்டியம் இடம் பெற்றுள்ளது. நீண்ட நேர இசைக்குப் பிறகு ‘குளிருது சுவை மது...’ என்று துவங்கும் அவர்கள் ஆடும் பாடலை ஜிக்கி, பி.லீலா இணைந்து பாடியுள்ளனர்.

1952ம் ஆண்டு கே.ராம்நாத் இயக்கத்தில் வி.நாகையா, எம்.வி. ராஜம்மா, மனோகர், கணேஷ் உள்பட பலர் நடித்த ‘தாய் உள்ளம்’ படத்தின் திரைக்கதையை எஸ்.டி.சுந்தரம் எழுதினார்.
1953ம் ஆண்டு சிவாஜிகணேசன், மாதுரி தேவி, டி.ஆர்.ராமச்சந்திரன், எம்.என்.ராஜம் உள்ளிட்டோர் நடித்த ‘மனிதனும் மிருகமும்’ படத்தை தயாரித்ததுடன், கதை, வசனம், பாடல்கள் ஆகியவற்றை எஸ்.டி.சுந்தரம் எழுதினார். அத்துடன் கே.வேம்புவுடன் இணைந்து இப்படத்தை இயக்கவும் செய்தார். இப்படத்தில் ஜி.கோவிந்தராஜுலு நாயுடு இசையில் 7 பாடல்களை எஸ்.டி.சுந்தரம் எழுதினார்.

காலமெனும்
சிற்பி செய்யும்
கவிதைத் தாய்க்
கோயிலடா
கோலமின்னும்
இயற்கை அருள்
கோடி மலர்த்
தோட்டமடா...

என்று இசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமன் குரலில் ஒலிக்கும் தத்துவப்பாடல் கேட்பதே சுகானந்தம். இந்தப் பாடல் அடங்கிய ‘வானமுதம்’ என்ற எஸ்.டி.சுந்தரத்தின் நூலை 1964ம் ஆண்டு ‘சுதேசமித்திரன்’ அச்சகம் வெளியிட்டது. கர்மவீரர் காமராஜருக்கு எஸ்.டி.சுந்தரம் இந்நூலை காணிக்கையாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.‘மனிதனும் மிருகமும்’ படத்தில் எம்.எல்.வசந்தகுமாரியின் சங்கீத இசையைப் பருகும் வகையில் எஸ்.டி.சுந்தரம் ஒரு பாடலை எழுதியிருந்தார்.

இமய மலைச்
சாரலிலே
இசை பாடும்
கங்கையென
இதயமதில்
அன்பெழுந்து
இன்பநிலை
காட்டுதடி...

எனத் துவங்கும் இப்பாடல் இலக்கிய செழுமையோடு எழுதப்பட்டது. டி.ஆர்.ராமச்சந்திரன், ஜிக்கி பாடிய -
உன்னை
நினைக்க நினைக்க
உயிர்
இனிக்குமென்றானே
வண்ணக்கிளியே
வாராய்...
பாடல், ‘ஓ ரசிக்கும் சீமானே...’ பாடலை ஞாபகமூட்டும்.

பாரதியின் ‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ வரிகளோடு துவங்கும் பாடலை எம்.எம்.மாரியப்பா அற்புதமாக பாடியுள்ளார்.

ஓய்வில்லாத
உலகத்திலே
ஒரே கொண்டாட்டம்
ஒரே கொண்டாட்டம் -
அந்த
கொண்டாட்டத்தில்
ஏழைபாடு
திண்டாட்டம்...

இந்தப் பாடல் முழுவதும் நாட்டின் வறுமை குறித்து எஸ்.டி.சுந்தரம் எழுதிய வரிகள் கேட்போரின் செவிகளை மட்டுமின்றி இதயத்தையும் சுடும்.
நகைச்சுவை நடிகர் என்று அறியப்பட்ட டி.ஆர்.ராமச்சந்திரன் மிகச்சிறந்த பாடகராகவே இருந்துள்ளார். ‘மனிதனும் மிருகமும்’ படத்தில் ஜிக்கியோடு அவர் பாடிய இந்தப் பாடல், காதலைப் பற்றி வித்தியாசமாக எழுதப்பட்டுள்ளது. கற்பனை எஸ்.டி.சுந்தரம்.

மோட்டாருக்கு
பேட்டரி போலே
மனசுக்கு
வேணும் காதல்
மாட்டை ஓட்டும்
சாட்டை போலே
மனுஷனை
ஆட்டுது காதல்...

1937ம் ஆண்டு ‘ஆனந்தவிகடனி'ல் கல்கி கிருஷ்ணமூர்த்தி தொடராக எழுதிய ‘கள்வனின் காதலி’ 1955ம் ஆண்டு திரைப்படமானது. வி.எஸ்.ராகவன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், பி.பானுமதி, டி.ஆர்.ராமச்சந்திரன், கே.சாரங்கபாணி, டி.எஸ்.துரைராஜ், குசலகுமாரி, எஸ்.ஆர். ஜானகி உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வசனத்தை எஸ்.டி.சுந்தரம் எழுதினார். இப்படத்தில் கண்டசாலா பாடிய ‘மண்ணுக்கீடு பொன் கேட்டால்...’ பாடலையும் அவர்தான் எழுதியிருந்தார்.

1958ம் ஆண்டு வி.எஸ்.ராகவன் இயக்கத்தில் சிவாஜிகணேசன், பி.பானுமதி, எம்.என்.நம்பியார், எஸ்.வி.ரங்கராவ் உள்ளிட்டோர் நடித்த ‘சாரங்கதாரா’  படத்திற்கு திரைக்கதை, வசனத்தை எஸ்.டி.சுந்தரம் எழுதினார்.1953ம் ஆண்டு கமல்கோஷ் இயக்கத்தில் எஸ்.வி.ரங்காராவ், மாதுரிதேவி, எஸ்.ஏ.நடராஜன் உள்பட பலர் நடித்த ‘ரோகிணி’ படத்தின் திரைக்கதையை எஸ்.டி.சுந்தரம் எழுதினார்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் குறித்து ‘விப்ர நாராயணா’ என்ற பெயரில் நாகேஸ்வர ராவ், பானுமதி நடித்து தெலுங்கில் வெற்றிபெற்ற படம், தமிழில் அதே பெயரில் 1954ம் ஆண்டு வெளியானது. இப்படத்திற்கு வசனம், பாடல்களை எஸ்.டி.சுந்தரம் எழுதினார். ராஜேஸ்வர ராவ் இசையில் ஒரு மொழிமாற்றுப்படம் என்று தெரியாத அளவிற்கு எஸ்.டி.சுந்தரம் இப்படத்தில் பாடல்களை எழுதியிருந்தார்.

வாராய் என்
ஸ்வாமி வாராய்...
வாராய் அன்பாக
வீண்வேஷம்
ஏன் இன்னும்
வாராய் என்
ஸ்வாமி வாராய்...

என சுழன்று சுழன்று பரதநாட்டியம் ஆடிக்கொண்டே பி.பானுமதி பாடும் பாடல் ரசிக்க வைக்கும். ‘தேவா என்மேல் தயை செய்யலாகாதா...’ என்ற பாடலை தனித்தும், ‘இனி ஆறாத சோகம் ஆனதா மனஓசைகள் வாழ்ந்து போனதா...’ என்ற பாடலை ஏ.எம்.ராஜாவுடன் இணைந்தும் பி.பானுமதி பிரமாதமாக பாடியுள்ளார்.1956ம் ஆண்டு மனோகர், எஸ்.வி.சகஸ்ரநாமம் நடிப்பில் வெளியான ‘ஒன்றே குலம்’; 1958ம் ஆண்டு சிவாஜிகணேசன், ஜமுனா, மைனாவதி நடிப்பில் வெளியான ‘பொம்மைக் கல்யாணம்’ ஆகியவற்றிற்கு எஸ்.டி.சுந்தரம் வசனம் எழுதினார்.

1957ம் ஆண்டு இந்தியில் திலீப்குமார், வைஜயந்தி மாலா நடித்து வெளியான படம், தமிழில் ‘பாட்டாளியின் சபதம்’ என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு வசனம் எஸ்.டி.சுந்தரம் எழுதினார். 1961ம் ஆண்டு சிவாஜிகணேசன், சாவித்திரி, ஜெமினி கணேசன் உள்பட பலர் நடித்த ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தும் வகையில் வசனங்களை எழுதி பாராட்டுக்களைப் பெற்றார் எஸ்.டி.சுந்தரம்.

‘நம் தாய்’, ‘காந்தியுகம்’, ‘கவியின் குரல்’, ‘சிரிப்பதிகாரம்’, ‘கவியின் கனவு’, ‘மகாபுத்திசாலிகள்’, ‘இந்தியா எங்கே’ உள்பட பல்வேறு நூல்களை எழுதிய எஸ்.டி.சுந்தரம் 1965ம் ஆண்டு சிறந்த வசனகர்த்தாவுக்கான தமிழ்நாடு சங்கீத நாடக சங்க விருது பெற்றவர். இந்தியா சுதந்திரம் அடைந்து 25ம் ஆண்டு நிறைவை போற்றும் வகையில் இவருக்கு பிரதமர் இந்திரா காந்தி தாமிரபத்திர விருதை வழங்கியுள்ளார்.

தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக 1964ம் ஆண்டு முதல் 1968ம் ஆண்டு வரை செயல்பட்டுள்ளார். 1968ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளராகவும் எஸ்.டி.சுந்தரம் பணியாற்றியுள்ளார். தமிழக அரசு இவருக்கு 1979ம் ஆண்டு பாரதிதாசன் விருது வழங்கியதுடன் இவருடைய நூல்களை நாட்டுடமையாக்கியது.

1962ம் ஆண்டு இந்திய-சீன யுத்தத்தின் போது, தனது சொந்த செலவில் ‘சிங்கநாதம் கேட்குது, சீன நாகம் ஓடுது...’ என்ற ஆவணப்படத்தை எடுத்து தமிழகம் முழுவதும் திரையிட்ட பெருமகனார் எஸ்.டி.சுந்தரம்.

டி.ஆர்.பாப்பா இசையில் பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ஏராளமான பக்திப் பாடல்களை எஸ்.டி.சுந்தரம் எழுதியுள்ளார்.தமிழ் கூறும் நல்லுலகத்திகு எஸ்.டி.சுந்தரத்தின் பெயரை பறைசாற்ற ஒரு பாடல் உண்டு. 1958ம் ஆண்டு வி.ராமநாதன் இயக்கத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், சி.ஆர்.விஜயகுமாரி, பண்டரிபாய், டி.பி.முத்துலட்சுமி நடித்த ‘பெற்ற மகனை விற்ற அன்னை’ படத்தில் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி இசையில் டி.எம்.சௌந்தரராஜன், பி.லீலா இணைந்து பாடிய,

காலமென்னும்
காட்டாறு
கரை மீறி ஓடுதடா
கேலிமிகும்
உலகெல்லாம்
காலம் செய்யும்
பாவமடா...
பாடல் எஸ்.டி.சுந்தரத்தை திரையிசை ரசிகர்களுக்கு நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது.

ப.கவிதா குமார்