கட்டுப்பெட்டி



மேகலா சந்துருவுக்கு போன் செய்தாள். மறு முனையில் ரிங் போய்க் கொண்டிருந்தது. எடுக்கவில்லை.அழைப்பை துண்டித்தாள். இன்னொரு முறை முயன்றாள். இப்போதும் பதிலில்லை.
மூன்றாம் முறை முயற்சி செய்தபோது அலைபேசி பலவந்தமாக எதிர் முனையில் அணைக்கப்படுவது தெரிந்தது.மேகலா கண்களை மூடி யோசித்தாள். இன்றோடு பதினைந்து நாட்கள். சந்துரு அவளின் அழைப்பை ஏற்கவில்லை.“என்னம்மா... மாப்பிள்ளைக்கு போன் செஞ்சியா?”

“ம்ம்ம்ம்...”
“போன் எடுக்கல்லே... அப்படித்
தானே?”
“ஆமா...” எங்கேயோ பார்த்துக் கொண்டு சொன்னாள் மேகலா.
“உன்மேல இப்படி ஒரு கோபமா அவருக்கு?”

“கோபம் இல்லே. வெறுப்பு. என்னைக் கண்டா அவருக்குப் பிடிக்கல்லே...”
“ஊருக்கே உன்னைப் பிடிக்குது. ஆனா, அவருக்குப் பிடிக்கல்லே. விநோதமா இருக்கு...”
“அவர் கொஞ்சம் வித்தியாசமானவர்...”“கொஞ்சம் இல்லே. நிறையவே. இப்படி ஒருத்தரை நான் பார்த்ததே இல்லே...”
“அப்பா... அவர் சரியாத்தான் இருக்காரு. நான்தான் அவருக்கு ஏத்த மாதிரி இல்லே...”ஒரு வருடம் முன்புதான் மேகலாவுக்கும் சந்துருவுக்கும் திருமணம் ஆனது. ஊரே மெச்சிய திருமணம். முப்பது லட்ச ரூபாய் செலவு செய்து அமர்க்களப்படுத்தியிருந்தார் வைத்தியநாதன்.

திருமணம் முடிந்து சந்துருவுடன் புகுந்த வீட்டுக்கு அனுப்பும்போது சொன்னார். “மாப்பிள்ளை... மேகலா ரொம்ப நல்லவ. அப்பாவி. நீங்க எது சொன்னாலும் கேப்பா...”
ஆம். சந்துரு எது சொன்னாலும் மேகலா கேட்டாள். ஆனால், அவன் விருப்பங்களுக்கேற்ப நடந்துகொள்ளத்தான் அவளால் முடியாமல் போய் விட்டது.

அன்று இருவரும் ஒரு கொண்டாட்டத்திற்குப் போக வேண்டியிருந்தது. சந்துரு அலுவலகத்திலிருந்து போன் செய்தான்.“மேகலா... சாயந்தரம் ஏழு மணிக்கு ஒரு பார்ட்டி இருக்கு. என்னால வீட்டுக்கு வந்து உன்னைக் கூட்டிப் போக நேரம் இருக்காது. நான் நேரா பார்ட்டிக்கு வந்துடறேன். நீ டாக்ஸி பிடிச்சு வந்துடறியா?’’

“பார்ட்டியா? ஒரு திருவிளக்கு பூஜைக்கு கோயிலுக்கு போலாம்னு இருந்தேன்...”
“எதுக்கு இந்த பூஜை எல்லாம்?”
“நீங்க நல்லா சந்தோஷமா இருக்கறதுக்காக...”
“நீ பார்ட்டிக்கு வந்தா நான் சந்தோஷமா இருப்பேன்...”
“சரி... வர்றேன்...”

“ஆன்லைன்ல டாக்ஸி புக் பண்ணி அனுப்பறேன். வந்துடு...”
மாலை. மறுபடியும் போன் செய்தான் சந்துரு.

“பார்ட்டிக்கு ஜீன்ஸ் போட்டு வா...”
“ஜீன்ஸா? நானா?”
“ஆமா... பீரோல மேல் தட்டுல வாங்கி வைச்சிருக்கேன்...”
“வேணாங்க. எனக்கு நல்லா இருக்காது...”
“அதை நான்தான் முடிவு பண்ணணும். போட்டுக்கிட்டு வா...”
சந்துரு சொன்ன மாதிரியே ஜீன்ஸ் போட்டுக்கொண்டாள்.
கண்ணாடியில் பார்த்தாள். வித்தியாசமாய் இருந்தாள்.
ஒரு மெல்லிய  வெட்கம் முகத்தில் சிவப்பு வர்ணம் பூசியது.

பார்ட்டிக்கு வந்த அவளைப் பார்த்ததும் சந்துருவின் முகம் மாறியது.
“என்ன மேகலா இது? இப்படி வந்திருக்கே..?”
“எப்படி வந்திருக்கேன்?”
“நெத்தீல பெருசா குங்குமம்...”
“எனக்குத்தான் கல்யாணம் ஆயிடுச்சே...”
“இருக்கலாம். அதுக்காக ஜீன்ஸ் போட்டு யாராவது பெருசா குங்குமம் வைப்பாங்களா? நல்லா இல்லே...”
“தப்பா?”

“ஆமா... அதை விட தப்பு பின்னால பெருசா மல்லிகைச் சரம் வைச்சிருக்கறது. உனக்கு டிரஸ் சென்ஸே
இல்லையா?”
“இப்போ என்ன செய்யணும் நான்?”
“அந்த பூவை எடுத்துடு...”

“வைச்ச பூவை எடுக்க வேணாமே. இனிமே வேணும்னா ஜீன்ஸ் போடறப்ப பூ வைக்காம வர்றேன்...”
“இனிமே நீ ஜீன்ஸே
போட வேணாம். புடவையைக் கட்டிக்கிட்டே அழு...”
“நல்லது...”
சந்துரு அவளை முறைத்தான்.

“நீ வீட்டுக்கு கிளம்பு...”
“எதுக்கு?”
“என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பார்த்தா சிரிப்பாங்க...”
ஒரு டாக்ஸி புக் செய்தான் சந்துரு. மேகலாவை வீட்டுக்கு அனுப்பினான்.இரவு வீட்டுக்கு வந்ததும் கத்தித் தீர்த்தான் சந்துரு.
“உன்னால என்னோட எதிர்பார்ப்புக்கேத்த மாதிரி நடந்துக்கவே முடியாதா?”
“தலைல பூ வைச்சிக்கிட்டது தப்பா?”
“ஜீன்ஸ் போட்டு வைச்சிக்கிட்டது தப்பு. நீ மாறணும்...”
“முயற்சி பண்றேன். ஆனா, கொஞ்சம் நாள் ஆகும். உடனே என்னால மாற முடியல்லே...”
அன்று டி.வி யில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தாள் மேகலா. சந்துரு நுழைந்தான்.

“இந்த மாதிரி படமெல்லாம் நீ எப்படி பாக்கறே? எப்போ பார்த்தாலும் அண்ணன், தங்கை பாசம், தியாகம், அழுகை. போர் அடிக்கலே?”
“இல்லே. எனக்குப் பிடிச்சிருக்கு...”
ரிமோட் எடுத்து சேனல் மாற்றினான் சந்துரு.

“என் கூட இங்க்லீஷ் சீரியல் பாரு. வெப் சீரீஸ் பாரு. தமிழ்ப் படத்தைக் கட்டிக்கிட்டு அழாதே...”
“நாம தமிழ்நாட்லதானே இருக்கோம்?”
“நான் அமெரிக்கால இருந்தப்ப வெப் சீரீஸ் பார்த்து பழகிப் போயிடுச்சு. வெப் சீரீஸ் பாரு. வித்தியாசமான கதைகள் இருக்கும்...”
“எனக்கு அது புரியலே...”

“புரிஞ்சுக்கணும். எப்போ பார்த்தாலும் அரிசி உப்புமா, வெந்தயக் குழம்புன்னு சாப்பிட்டுக்கிட்டிருக்கக் கூடாது. பீட்சா சாப்பிடணும்...”
“சாப்பிடறேன்...”
“நீயா கேக்கணும்...”
“பிடிக்காததை எப்படி கேக்கறது?”
“எனக்குப் பிடிக்குது. உனக்கும் பிடிக்கணும்...”
“சரிங்க. ஆனா, போன வாரம் பீட்சா சாப்பிட்டு எனக்கு
வயித்துக்கு ஒத்துக்கலே. ராத்திரி முழுக்க தூங்க முடியலே...”
“உலகத்துல பீட்சா சாப்பிடற எல்லாருக்கும் வயித்துவலி வருதா?”
“இல்லே. ஆனா, எனக்கு வருதே. நான் என்ன செய்யறது சொல்லுங்க?”
சந்துரு கோபத்துடன் நகர்ந்தான்.

இரவு உணவு முடிந்ததும் அவன் அருகே வந்து அமர்ந்தாள் மேகலா. “ஏங்க எனக்கொரு சந்தேகம்?”
“என்ன?”
“நான் நல்லவ இல்லையா?”
“நல்லவதான். அது பத்தாது. ரெண்டு பேரும் ஒரே மாதிரி சிந்திக்கணும். அப்போதான் வாழ்க்கை இனிக்கும்...”
“முயற்சி பண்றேன்...”முயற்சித்தாள். அவளுக்கு வரவில்லை.

சந்துரு, மேகலாவின் அப்பாவுக்கு ஒரு முறை போன் செய்து விஷயத்தை சொன்னான். “மேகலா எனக்கு ஏத்த மாதிரி நடந்துக்க மாட்டேங்கறா. இன்னும் கட்டுப்பெட்டியாவே இருக்கா...”
“இருந்துட்டுப் போகட்டுமே...”
“அது நல்லா இல்லே...”
அடுத்த வாரம் மேகலாவை அவர்கள் வீட்டுக்கு கூட்டி வந்தான் சந்துரு. போகும்போது தனியாகப் போனான்.

“மாப்பிள்ளை, மேகலாவைக் கூட்டிப் போகல்லியா?”
“கொஞ்ச நாள் இங்கே இருக்கட்டும்...”
“எதுக்கு?”
“அவ கொஞ்சம் மாறணும்...”
“இங்கே இருந்தா மாறிடு
வாளா?”
“மாறலேன்னா இங்கேயே இருந்துட்டுப் போகட்டும்...” சந்துரு கிளம்பி விட்டான்.

இதோ... இரண்டு மாதமாக மேகலா இங்குதான் இருக்கிறாள். போன் செய்து அழைத்தால் சந்துரு பேசுவதில்லை.“மாப்பிள்ளை இப்படி செய்யறது நல்லா இல்லே. நான் போய் பேசறேன்...” என்றார் வைத்தியநாதன்.“வேண்டாம்பா... அவருக்கு கோபம் வந்துடப் போகுது. நான் கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கறேன்...”
அப்பா கேட்கவில்லை. சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பி விட்டார்.

“வாங்க...” என்றான் சந்துரு.
“வீட்டுக்கு வாங்க மாப்பிள்ளை...”
“வர்ரேன். எப்படி இருக்கா மேகலா? மாறிட்டாளா?”
“என்ன மாறணும்?”
“எனக்கேத்த மாதிரி...”
“அவ மாறினா பிரச்னை சரியாயிடுமா?”
“ஆமா...”
போன வேகத்திலேயே திரும்பி வந்தார் வைத்தியநாதன்.

“அப்பா... அவர் என்ன சொன்னாரு?”
“நீ மாறணுமாம். அதுதான் ஒரே வழியாம்...”
“சரி. வந்து கூட்டிப் போகச் சொல்லுங்க. அவர் சொல்ற மாதிரி நடந்துக்கறேன்...”
“உன்னால முடியாதும்மா. உன் வளர்ப்பு அந்த மாதிரி. அதுவுமில்லாம பிறவிக் குணம்னு ஒண்ணு இருக்கு. ‘கட்டிக் கொடுத்த சாப்பாடும் சொல்லிக் கொடுத்த புத்திமதியும் மூணு வேளைக்குத்தான் வரும்’னு ஒரு பழமொழி இருக்கு. நீ மாறுவே. ஆனா, அது தற்காலிகம்தான். மறுபடியும் உன் பழைய பழக்க வழக்கங்கள் வந்து உன்கிட்டே ஒட்டிக்கும். அது இயற்கை. யாராலும் எதுவும் செய்ய முடியாது...”மேகலா எழுந்து தோட்டத்திற்குப் போனாள்.

இரண்டு மாதங்கள் கழிந்த பிறகு சந்துரு போன் செய்தான்.“சார். உங்ககிட்டே பேசணும்...”
வழக்கமாக மாமா என்று கூப்பிடும் சந்துரு சார் என்று கூப்பிட்டது கொஞ்சம் அன்னியமாகப் பட்டது அவருக்கு. “பேசலாம். வீட்டுக்கு வாங்க...”
“என் வீட்டுக்கு வாங்க...” என்றான் சந்துரு.

“நீங்க என் வீட்டுக்கு வாங்க...”
“பொது இடத்துல சந்திக்க
லாமா?”
“தயவு செஞ்சு என் வீட்டுக்கு வாங்க...”
ஒரு மணி நேரம் கழித்து அவர் வீட்டில் இருந்தான் சந்துரு.
“உக்காருங்க...” சோபாவைக் காட்டினார் வைத்தியநாதன்.
“டிவில படம் பாத்துக்கிட்டிருந்தீங்க போல இருக்கு?”
“ஆமா... மேகலாவுக்குப் பிடிக்கும்...”
“இன்னும் வெப் சீரீஸ் பாக்க ஆரம்பிக்கல்லே?”

“பார்ப்பா. அவளுக்கு என்னைக்குப் பிடிக்குதோ அன்னைக்கு பார்ப்பா...”
மேகலா உள்ளிருந்து வந்தாள்.
“நைட் சாப்பிட்டுப் போங்க...” என்றாள்.
“இட்லிதானே?”
“ஆப்பம், தேங்காய்ப் பால்...”
சந்துரு பதில் பேசவில்லை.
“அவங்களை கொஞ்சம் உள்ளே போகச் சொல்லுங்க. முக்கியமான விஷயம் பேசணும்...” என்றான்.
மேகலா உள்ளே போனாள்.

சந்துரு நேரிடையாகச் சொன்னான். “இது ஒத்து வராது. பிரிஞ்சிடுவோம்...”
“என்ன சொல்ல வர்
றீங்க?”
“விவாகரத்து...”
“எதுக்கு?”
“ரெண்டு பேர் டேஸ்ட்டும் ஒத்துப் போகல்லே. ரெண்டு பேர் எண்ணங்களும் வேற வேற பாதைல போகுது. ரொம்ப காலத்துக்கு இப்படியே ஓட்ட முடியாது. அவ தன்னை மாத்திக்கற மாதிரியும் தெரியல்லே...”

“இது தப்பு. குணத்தை மாத்திக்க முடியல்லேங்கறதுக்காக விவாகரத்தா?”
“ஆமா. கட்டுப்பெட்டியான உங்க பொண்ணு எனக்கு வேணாம். நான் போய் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பறேன். அதுதான் தீர்வு...”
சந்துரு போய் விட்டான்.

அடுத்த வாரமே விவாகரத்து நோட்டீஸ் வந்து விட்டது.மேகலாதான் சந்துருவுக்கு அனுப்பியிருந்தாள்.“என்னுடைய எதிர்பார்ப்புக்கு நீங்கள் ஒத்து வரவில்லை. நீங்கள் கட்டுப்பெட்டியாக இல்லை...” என்று காரணம் போட்டிருந்தாள் மேகலா.

நந்து சுந்து