சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்ற வேட்பாளர்!



தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா, பாண்டிச்சேரியில் நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தனித்துவமானவர் அகில் கோகோய். ஆம்; ஒரு நாள் கூட பிரசாரத்துக்குச் செல்லாமல், சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்றிருக்கிறார் அகில். இப்படி அசாமில் நடப்பது இதுவே முதல் முறை.

தனக்கு எதிராக போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுரபி ராஜ்கோன்வாரியைவிட, 11,875 வாக்குகள் அதிகம் பெற்று அசாமின் சட்டமன்ற உறுப்பினராகியிருக்கிறார் அகில். 2019ல் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகப் போராடியதால் இவர் மீது தேசத் துரோக வழக்கு சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த வருடம் அக்டோபரில் சிறையில் இருந்தபடியே விவசாய அமைப்புகள், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்து ராய்ஜோர் தால் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்தக் கட்சியின் சார்பாக சிப்சாகர் தொகுதியில் போட்டியிட்டார். பிரசாரம் செய்ய எந்த வழியும் இல்லை. அதனால் கடிதம் மூலம் தொகுதி மக்களுடன் உரையாடினார். மகனுக்காக 85 வயதான அம்மா பிரசாரத்தில் ஈடுபட்டது ஹைலைட்.

த.சக்திவேல்