மாஸ்டர் பேபி!
‘வாத்தி கமிங்...’ பாடலுக்கு ஸ்டைலாக ஆடிய விஜய்க்குப் பிறகு அதே பாடலுக்கு நடனமாடியவர்களில் யாரை அதிகம் ரசித்திருக்கிறோம்; ரசிக்கிறோம்..?‘ராமுலோ ராமலா...’ என ரப்பராக உடலை நெளித்து வளைத்து ஸ்டெப் வைத்த அல்லு அர்ஜுனுக்குப் பிறகு அதே பாடலுக்கு தன் உடலை அசைத்த வேறு யாரை ரசித்திருக்கிறோம்; ரசிக்கிறோம்..?இரண்டுக்கும் பதில் ஒன்றுதான்.
அது, விருதி!குட்டியாக, க்யூட்டாக, ஸ்வீட்டாக அச்சு அசலாக ஸ்டெப் போடும் இந்த ‘மாஸ்டர் பேபி’தான் இப்போது டிஜிட்டல் டிரெண்ட். சோ கியூட்... சோ ஸ்வீட்... என ஆளாளுக்கு கமெண்ட்டுகளில் கொஞ்சிக் கொண்டிருக்க, விருதியின் அப்பா விஷால் கண்ணன் நமக்கு ஹாய் சொன்னார்‘‘விருதி, என் பொண்ணுதான்.
பேசிக்கலி நான் டான்ஸ் கோரியோகிராபர். என் மனைவி காயத்ரி விஷாலும் டான்ஸ் மாஸ்டர்தான். எங்களுக்கு இன்னொரு பையன் இருக்கான். மூணு மாசக் குழந்தை. பெயர் வித்யுத் விஷால். நாங்க ரெண்டு பேருமே டான்ஸர்களா இருக்கறதால விருதியும் பிறக்கும்போதே டான்சர்! ‘விருதி ஸ்கூல் ஆஃப் டான்ஸ்’ என்கிற டான்ஸ் டிரெய்னிங் ஸ்கூல் வெச்சிருக்கோம். விருதிக்கு இப்ப வயசு 5. யூகேஜி படிக்கிறாங்க. எங்க சொந்த ஊர் கேரளா. சொந்தக்காரங்களோ ஃப்ரெண்ட்ஸோ யார் வீட்டு ஃபங்ஷனுக்கு போனாலும் என்னையும், காயத்ரியையும், விருதியையும் மேடைல ஏத்தி டான்ஸ் ஆடச் சொல்லிடறாங்க...’’ சந்தோஷமாகச் சிரிக்கும் விஷால், வைரல் வீடியோக்கள் குறித்து பேசத் துவங்கினார்.
‘‘ஒரு ஃபிரண்ட் கல்யாணத்துல என் டான்ஸ் டீம் ஆடினாங்க. கூடவே விருதியும் ‘மாஸ்டர்’ பட ‘வாத்தி கமிங்...’ பாட்டுக்கு ஆடினாங்க. அடுத்து ‘ஆல வைங்குண்டபுரம்லோ’ பட ‘ராமுலோ ராமலா...’ விருதி ஆடின இந்த ரெண்டையும் சும்மா ரிக்கார்ட் செஞ்சு அப்லோடு செய்தோம். பார்த்தா அவ்ளோ லைக், ஷேர்ஸ். ஒரே வாரத்துல மில்லியன் வியூஸைக் கடந்துடுச்சு. யூ டியூப், இன்ஸ்டா, ஃபேஸ்புக், டுவிட்டர்னு எல்லா சமூக வலைத்தளங்களிலும் நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு ஷேர்ஸ்.
தொடர்ந்து சில டிக்டாக் வீடியோக்கள் செய்தாங்க. ஒரு முக்கியமான விஷயம். விருதிக்கு ஒரே கனவு, விஜய் சாரையும், அல்லு அர்ஜுன் சாரையும் சந்திக்கிறதுதான்! அவங்க ரெண்டு பேரையும் மீட் பண்ண வைக்கிறேன்னு விருதிக்கு பிராமிஸ் செய்திருக்கேன்...’’ என்கிற விஷால், இந்த வீடியோக்கள்தான் விருதியை அடுத்த கட்டத்துக்குப் பயணிக்கச் செய்திருக்கிறது என்கிறார்.
‘‘இந்த வீடியோக்களை எல்லாம் பார்த்துட்டு சீரியல் வாய்ப்பு வந்துச்சு. ‘மஞ்ஞில் விரிஞ்ச பூவு’ வாய்ப்பு கிடைச்சது. அடுத்தடுத்து மலையாள விளம்பரங்கள் தவிர ஆறு படங்கள்லயும் ஒப்பந்தம் ஆகியிருக்காங்க. இப்ப பிருத்வி ராஜ் சாருடைய பெரிய பட்ஜெட் படமான ‘கடவு’ல நடிக்கிறாங்க. இது தவிர ரெண்டு தமிழ்ப் படங்களும் ரிலீஸுக்கு தயார். விருதியேதான் டப்பிங் எல்லாம் பேசுறாங்க...’’ என விஷால் முடிக்க, அப்பாவைப் பார்த்துவிட்டு பேசத் தொடங்கினார் விருதி.
‘‘எனக்கு விஜய் அங்கிள்... அல்லு அங்கிளைப் பார்க்கணும்... அவங்க கூட டான்ஸ் ஆடணும். இதெல்லாம் எப்ப நடக்கும்னு தெரியலை. எப்பவும் அவங்க ரெண்டு பேர் டான்ஸ் வீடியோஸைத்தான் போட்டு ஆடுவேன். இப்ப பிருத்வி அங்கிள் கூட ஒரு படம் நடிச்சிருக்கேன். அதே மாதிரி அவங்க கூடவும் நடிக்கணும். என் குட்டித் தம்பியை அவங்ககிட்ட காட்டணும்...’’ கண்கள் விரிய சொல்கிறார் விருதி. விருதியின் கனவு நிறைவேற வாழ்த்துகள்!
ஷாலினி நியூட்டன்
|