பிரசவ ஆஸ்பிடலில் ஒரு லைப்ரரி! கர்ப்பிணிகளை படிக்கச் சொல்லி மிரட்டுகிறார் இந்த Lovable மருத்துவர்
குழந்தைக்கு அம்மா மற்றும் அப்பாவின் ஜீன் மூலமாக வரும் அனைத்தும் Genetics. கருவில் இருக்கும் சிசுவைச் சுற்றி நிகழும் விஷயங்களை தாயின் மூலம் உள்வாங்குவது Epigenetics. சுருக்கமாக, தாயின் எண்ணங்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கு கடத்தப்படும். கருவுற்ற ஒரு பெண், தன் வாழ்க்கைமுறை வழியே, மரபணுக்களின் நினைவுத்திறனை மாற்றியமைக்க முடிந்ததையே epigenetics என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
‘‘பெண் கருவுற்ற ஐந்து முதல் ஆறாவது மாதத்தில் தொடங்கி, குழந்தை தன் தாயைச் சுற்றி நிகழும் சூழலை உள்வாங்கத் தொடங்குகிறது. கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களை நல்லதையே பார், நல்லதையே கேள், நல்லதையே நினை, நல்லவற்றையே பேசு என நம் வீட்டுப் பெரியவர்கள் சொல்வது இந்த எபிஜெனடிக்ஸ் மாற்றத்தை ஏற்படுத்தவே...’’ என பேச ஆரம்பித்த தாய் சேய் மகளிர் நல மருத்துவர் சசித்ரா தாமோதரன், கோவை மாவட்டம் காரமடையில் நடத்திவரும் தன் மகளிர்நல மருத்துவமனையில் நூலகம் ஒன்றை குழந்தைகளின் எபிஜெனட்டிக்ஸ் நலனுக்காகவே இயக்கி வருகிறார்.
‘‘கர்ப்பகாலத்தில் இருக்கும் பெண்கள் புத்தகங்களைத் தேடிப் படித்தால், குழந்தையும் வெளி உலகத்திற்கு வந்தபிறகு புத்தகம் படிக்கத் தொடங்கும். அதனால்தான் என் மருத்துவமனையில் நூலகம் அமைத்திருக்கிறேன். இங்கு வரும் கருவுற்ற பெண்கள் தெனாலிராமன் கதை புத்தகத்தை எடுத்துப் படித்தால்கூட மகிழ்ச்சிதான்!
இந்த நூலகத்தில் மருத்துவம் சார்ந்த புத்தகங்கள் தவிர்த்து, ஆங்கிலம், தமிழில் புதினம், சிறுகதை, கவிதை, தத்துவம், இலக்கியம், பக்தி இலக்கியம், ஆன்மீகம், வரலாறு, தன் வரலாறு, இயற்கை மருத்துவம், கருவுற்ற மற்றும் குழந்தை பெற்ற பெண்களுக்குத் தேவையான ஆலோசனை புத்தகங்கள், பிறந்த குழந்தைக்கு பேர் வைப்பது தொடர்பான புத்தகங்கள், நோயாளிகளிடம் செவிலியர் நடந்து கொள்ளும் விதம்... என அனைத்துப் பிரிவிலும் புத்தகங்கள் இருக்கின்றன.
நூலகத்தை நிர்வகிக்க ஒரு நூலகரும் உண்டு. மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள் மட்டுமின்றி, வெளியில் உள்ள கருவுற்ற பெண்களும் நூலகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அனுமதி இலவசம். ஆனால், ஒரு கண்டிஷன். புத்தகத்தைப் படித்துவிட்டு அங்கேயே வைத்துவிட்டுச் செல்ல வேண்டும். மூன்றாம் தளத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. லிஃப்ட்டைத் தவிர்த்து பெண்கள் படியேறி மூன்றாம் தளம் செல்ல வேண்டும்...’’ புன்னகைக்கும் சசித்ரா தாமோதரன், இந்த நூலகத்தில் வகுப்புகளும் நடைபெறுகின்றன என்கிறார்.
‘‘கருவுற்ற பெண்களுக்கும், குழந்தை பெற்ற பெண்களுக்கும் தனித்தனியாக நூலக அறையில் வாரத்தில் இரு நாட்கள் சின்னச் சின்ன உடல் இயக்க பயிற்சிகள், கர்ப்பகால உணவுப் பழக்கவழக்கம் குறித்த வகுப்புகள் நடைபெறுகின்றன.
இந்த வகுப்புகளுக்கு கணவர்களும் கட்டாயம் வரவேண்டும். வகுப்பு நிறைவடையும் நேரத்தில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். அப்போது, எதற்காக நூலகத்தில் பயிற்சிகளை வழங்குகிறோம் என்கிற ‘எபிஜெனட்டிக்ஸ்’ விளக்கத்தைச் சொல்லி லைப்ரரியின் முக்கியத்துவத்தை பெண்களுக்குப் புரிய வைக்கிறோம்.
பிரசவத்துக்குப் பின் மூன்று அல்லது நான்கு நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் பெண்கள், தாங்கள் விரும்பும் புத்தகத்தை நூலகர் வழியாக இருக்கும் இடத்துக்கே வரவழைக்கலாம்.இதுதவிர குழந்தை பெற்றுத் திரும்பும் தாய்மார்களுக்கு, நினைவுப் பரிசாக மருத்துவமனை சார்பில் ஒரு மரக்கன்றை வழங்குகிறோம்.
அத்துடன் ஆர்கானிக் முறையில் தயாரான தூய்மையான காட்டன் உடையை உடுத்தியே குழந்தைகளை அனுப்பி வைக்கிறோம். இந்த நூலகத்திற்கான புத்தகங்களை நண்பர்களே அன்பளிப்பாக வழங்குகிறார்கள்...’’ என்கிறார் டாக்டர் சசித்ரா தாமோதரன். பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்தேன்!
டாக்டர் சசித்ரா தாமோதரனுக்கு அறிமுகம் தேவையில்லை. எளிய மக்கள் புரிந்துகொள்ளும் நடையில், ஆங்கில மருத்துவத்தை அழகாகத் தமிழ்ப் படுத்தி முக்கிய ஊடகங்களில் பங்களிப்பைச் செய்து வருபவர். மருத்துவம் தாண்டி எழுத்து, வாசிப்பு என இயங்குபவர்.
‘‘தாத்தா பாட்டிகளிடம் கதை கேட்டு வளர்ந்த குழந்தைகள் சோடை போவதில்லை. அவர்களிடம் சிந்திக்கும் திறனும், கற்பனையும் ஊற்றெடுக்கும். என் அம்மா வழிப் பாட்டி சிறந்த வாசகி. எதையாவது படித்துக்கொண்டே இருப்பார். நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் என்ற புத்தகம் இருப்பதே பாட்டி மூலம்தான் எனக்குத் தெரிந்தது. என் கை பிடித்து கோயிலுக்கு கூட்டிப் போகும்போதே பாட்டி 30 திருப்பாவை பாடல்களையும் பாடிவிடுவார்.
நானும் பொருள் தெரியாமலே உடன் சேர்ந்து பாடுவேன். பொருள் தெரிந்தபோது, ‘இத்தனை விஷயங்கள் இருக்கா’ என வியந்து ஆன்மீகத்திற்குள் அறிவியலைத் தேடத் தொடங்கினேன்.பாடப் புத்தகத்தில் கலைமகளும், கோகுலமும் வைத்து படித்து பாட்டியிடம் அடி வாங்கிய என் அம்மா அந்தக் காலத்து பியுசி. அம்மாதான் எழுத்தாளர் சுஜாதாவை எனக்கு அறிமுகப்படுனார்.
பாட்டி வீட்டுப் பக்கத்தில் இருந்த பழைய புத்தகக் கடைதான் என் வாசிப்புக்குத் தளம் அமைத்தது. கடைக்கார அண்ணாவும் நானும் புத்தக நண்பர்கள். எனக்காக அவர் புத்தகங்களை எடுத்து வைத்து படிக்கக் கொடுப்பார். ‘கல்வி மட்டுமே உன்னை உயர்த்தும்’ என்பதையும் பெற்றோர் ஆழமாக விதைத்தார்கள். +2வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் பட்டியலில் நானும் இருந்தேன்.
கோவை மருத்துவக் கல்லூரி மாணவியாக மருத்துவத்தில் மேல் படிப்பு, டிஸ்டிங்ஷன், கோல்ட் மெடலிஸ்ட் என வளர்ச்சி இருந்தாலும், கூடவே வாசிப்பும், இலக்கிய ஆர்வமும் வளர்ந்தது. எனக்கு சிறப்பாக எழுத வரும் என்பதை நண்பர்கள் கண்டுபிடித்து ஊக்குவித்தார்கள்.
மருத்துவத்தை தமிழில் எளிய நடையில், புரியும் மொழியில் எழுதுபவர்கள் மிகமிகக் குறைவு. எனவே அதைக் கையில் எடுத்தேன். ‘சிந்திப்பதையும், தெரிந்துகொள்வதையும் உங்கள் தாய்மொழியான தமிழில் தெரிந்துகொள்ளுங்கள்’ என ‘கொஞ்சும் தமிழில் கொஞ்சம் மருத்துவம்’ என ஹேஷ்டேக்கில் டுவிட்டர் தளத்தில் எழுதத் தொடங்கினேன்.
சமூக வலைத்தளங்களில் நான் எழுதுவதைப் பார்த்த பத்திரிகைகள், என்னை அச்சில் எழுதச் சொன்னார்கள். இப்படித்தான் மருத்துவக் கட்டுரைகளை தமிழில் எழுதும் மருத்துவ எழுத்தாளராகவும் வலம் வருகிறேன்...’’ என்கிறார் சசித்ரா தாமோதரன்.
பேசும் புத்தகங்கள்
பெண்களிடம் உள்ள கரண்டியைப் பிடுங்கிவிட்டு புத்தகத்தை கொடுங்கள் என்றார் பெரியார்ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு நூலகம் திறக்கப்படும்போது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்கிறார் விவேகானந்தர் ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, தாமதிக்காமல், நூலகம் கட்டுவேன் எனச் சொன்னார் காந்தியடிகள்
மகேஸ்வரி நாகராஜன்
|