தீதி!



‘நான் அடிமட்டத்தில் இருந்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். நான் பிறவியிலேயே போராட்ட குணம் கொண்டவள்...’ இது மம்தா பானர்ஜியின் புகழ்பெற்ற வார்த்தைகள்.
உண்மைதான். சிறு வயதில் அரசியலைத் தொடங்கி, வாழ்வில் பல போராட்டங்களையும், அவமானங்களையும் சந்தித்தவர். வெள்ளை காட்டன் புடவையும், ஹவாய் செப்பலும் அவரது அடையாளங்கள். தன் அரசியல் வாழ்வில் தன்னை எதிர்ப்பவர் எவ்வளவு பெரிய சக்தியாக இருந்தாலும் சிறிதும் அஞ்சாமல் எதிர்த்து நின்று போராடியவர்; போராடுபவர்.

1955ம் ஆண்டு கொல்கத்தாவின் அஸ்ரா பகுதியில் பிறந்த மம்தா பானர்ஜி அதே மாநிலத்தில் சிறந்து விளங்கிய ரவீந்திரநாத் தாகூர், விவேகானந்தர், நேதாஜி உள்ளிட்டவர்களைப் படித்தே வளர்ந்தார். தன் 15வது வயதில், காங்கிரஸில் இணைந்தவர், பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் உற்சாகத்துடன் கலந்துகொண்டார்.

சிறு வயதிலிருந்தே வறுமையை மட்டுமே கண்டவர், அரசியலில் பங்கேற்ற படியே படிக்கவும் செய்தார். இளங்கலை வரலாறு முடித்ததுமே ஜோகேஷ் சந்திர சௌதுரி சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். படிப்பில் மட்டுமல்ல, பேச்சுத் திறன், கவிதை, ஓவியம் வரைவதிலும் மம்தா கெட்டிக்காரர்.

உள்ளூர் காங்கிரஸில் படிப்படியாக முன்னேறி மேற்கு வங்க மகளிர் காங்கிரசின் பொதுச் செயலாளரானார். 1984ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். இந்திய அரசியலில் மிகச் சிறிய வயதில் நாடாளுமன்றத்தில் நுழைந்தவர் இவர்தான்.

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் மீது எதிர்ப்பலைகள் வீசிய 1989ம் ஆண்டு தேர்தலில் மம்தா தோல்வியைத் தழுவினார். எளிமை, போராட்ட குணம், எப்போதும் மக்களுடன் இருப்பது போன்றவை இவரது அடையாளங்கள். அது அடுத்து வந்த 1991ம் வருட தேர்தலில் கைகொடுத்தது. அந்த ஆண்டு தொடங்கி இப்போது வரை கொல்கத்தா தெற்கு தொகுதியின் நிரந்தர சட்டமன்றப் பிரதிநிதி மம்தாதான்! இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பூசலின் காரணமாக 1997ல்கட்சியில் இருந்து வெளியேறி 1998ல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.

கட்சி தொடங்கப்பட்ட அதே ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றிபெற்று மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்று கூட்டணிகளுடன் இணைந்து இரண்டு முறை மத்திய ரயில்வே துறை அமைச்சராகவும் ஒரு முறை மின்சாரத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார்.  

2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வரானார்.இதோ 2021 சட்டமன்றத் தேர்தலிலும் பெரும்பான்மை பெற்று 3வது முறையாக முதல்வராகிறார் மம்தா பானர்ஜி!