நான்... விஜய் கபூர் (டெர்பி ஜீன்ஸ் கம்யூனிட்டி உரிமையாளர்)



வாழ்க்கை அழகானது. அதை நாம பார்க்க மறந்திடுறோம். ஆனால், நான் அதை பார்க்கறேன். அதனால நான் நல்ல மனுஷனா உணர்றேன். எனக்கு மேலே இருக்கும் கடவுளுக்கு நன்றி. என் பக்கத்திலே எப்போதும் இருக்கற மனைவிக்கு நன்றி. இந்த வாழ்க்கையைக் கொண்டாட மறந்திடுறோம். அதான் எல்லாப் பிரச்னைக்கும் அடுத்தவங்களை சுலபமா கை காட்டிடுறோம். நமக்கு ஒரு பிரச்னை நடக்குதுன்னா நாம என்ன செய்தோம்னு யோசிச்சாலே அடுத்த முறை அதே தவறைச் செய்ய மட்டோம்.

சென்னைதான் சொந்த ஊரு. அப்பா லக்ஷ்மன் தாஸ் கபூர் ஒரு விளையாட்டு பத்திரிகையாளர். பெங்களூர்ல ஒரு பத்திரிகையில் வேலை செய்துட்டு இருந்தார். அப்பாவுக்கு மாச சம்பளம் அப்ப ரூபாய் 1500. எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு. மணி ஆர்டரில் பணம் வந்ததும் அம்மா மளிகை சாமான், பால், மற்ற செலவுகளுக்குனு தனித்தனியா பணத்தை பிரிச்சு வைப்பாங்க.

என் கூடப் பிறந்தவங்க என்னோடு சேர்த்து அஞ்சு பேர். மாசத்துக்கு ஒருமுறை ஹோட்டலுக்கு போயி 2 இட்லி சாப்பிடுவோம். தோசையோ மத்த அயிட்டங்களையோ சாப்பிடக்கூடாது. காரணம் அதன் விலை அதிகம். இப்படி வளர்ந்ததாலேயே பணத்தின் அருமை எனக்குத் தெரியும். பணத்து மேல ஆசை கிடையாது. ஆனா, மரியாதை உண்டு. கனவுகள், ஆசைகளுக்குக் கூட அனுமதி கிடையாது. நல்லா படிக்கணும். ஒரு நல்ல வேலையில் உட்காரணும். சாதாரண மிடில் கிளாஸ் அப்பா அம்மா என்ன யோசிப்பாங்களோ அதைத்தான் எங்க அம்மா அப்பா யோசிச்சாங்க.

எனக்கு படிப்பில் அந்த அளவிற்கு பெரிய ஆர்வம் கிடையாது. இதில் உயரம் வேறு கொஞ்சம் கம்மியாக இருப்பேன். இதனாலேயே வகுப்பில் துவங்கி எங்கு சென்றாலும் கிண்டல்கள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். நான் படிச்சது கிறிஸ்டியன் மிஷனரி ஸ்கூல். முதல் பெஞ்சில், உயரம் குறைவு என்கிறதால நல்லா படிக்கிற பசங்க கூட சேர்ந்து உட்கார வைச்சிடுவாங்க. ஒவ்வொரு தடவை மார்க் ரிசல்ட் வரும்போதும் எல்லா பாடத்திலும் பாஸ் ஆகி இருப்பேன். அவ்வளவுதான்.

இந்த படிக்கிற பசங்ககிட்ட ஒரு பழக்கம் உண்டு. அப்பப்போ ‘நீ என்னவாகப் போற? நீ படிச்சு எந்த வேலைக்கு போகப் போற..?’ இப்படி ஏதாவது பேசிக்கிட்டே இருப்பாங்க. அவங்க டாக்டர், கலெக்டர், இன்ஜினியர்னு எல்லாம் பேசுவாங்க. நம்ப மார்க்குதான் அப்பட்டமா நம்மை காமிச்சி கொடுத்திடுமே! அதனால பொய் சொல்ல முடியாம நான் பெரிய பிசினஸ்மேன் ஆகப் போறேன்னு சொல்வேன்.

‘எண்ணம் எப்படியோ வாழ்க்கையும் அப்படி’ன்னு சொல்வாங்க. என் வாழ்க்கைல அதை நான் பார்த்தேன். தினம் தினம் யாரு கேட்டாலும் ‘நான் ஒரு பிஸ்னஸ்மேன் ஆகப் போறேன்’னு சொல்லிக்கிட்டே இருந்தேன். இன்னைக்கு நான் பிஸினஸ் மேன் ஆகிட்டேன்!பி.காம் படிச்சு முடிச்சு ஒரு தனியார் கம்பெனியில் சேல்ஸ் டிரெயினியா வேலைக்குச் சேர்ந்தேன். ஆர்வமா வேலை செய்தேன். என் சம்பளம் ரூ.1500. ஆனா, மத்த சீனியர்களைக் காட்டிலும் கமிஷன் மட்டும் ஒவ்வொரு மாசமும் குறைந்தபட்சம் ரூ.5,000 வரை வந்துச்சு.

இந்த நேரம்தான் நண்பர் ஒருவர் மூலம் இருநூறு சதுர அடி கடையும் அதிலே ஹோட்டல் வைக்கலாம் என்கிற திட்டமும் உருவானது. ரெண்டு பேரும் பார்ட்னராகி அந்த ஹோட்டலை நடத்தலாம்னு முடிவு செய்தோம். ஏற்கனவே நான் சம்பாதிச்சு சேர்த்து வச்சிருக்கிற ஒரு லட்சம் தவிர அப்பாகிட்ட கூடுதலா ஒரு லட்சம் அடம்பிடித்து வாங்கினேன். கடையெல்லாம் கைக்கு வந்து ஹோட்டல் ஆரம்பிக்கலாம் என முடிவாகற தருணத்தில் ஒரு பிரச்னை. ‘ஸ்டவ் சிம்னி வைக்கிறதா இருந்தா டாப் தளத்தில் வைத்துக் கொள்ளுங்கள்’னு சொல்லிட்டாங்க. 13வது தளத்திலே ஹோட்டல் வைக்கணும்னா கூடுதலாக ஒரு லட்சமாகும். பிறகென்ன, உடன் இருந்த பார்ட்னர் பின்வாங்கிட்டாரு.

அன்னைக்கு ராத்திரி என்ன செய்யறதுன்னு தெரியாம படுக்கைல விழுந்து அழுதேன். அப்பதான் பழைய வேலையில் நடந்த ஒரு சம்பவம் என் ஞாபகத்துக்கு வந்தது. ஒருமுறை சேல்ஸ் வேலையிலே ஒருவரை சந்திக்க வேண்டியிருந்தது. அவரை சந்திக்க வேண்டி அப்பார்ட்மென்ட் வாசல்ல போயி நின்னா வாட்ச்மேன் என்னை உள்ளே விடலை.

அங்கே ஒரு போர்டு ‘டாக்ஸ் அண்ட் சேல்ஸ்மேன் நாட் அலவுட்...’ அந்த நேரத்துல சேல்ஸ்மேன்களுக்கு அவ்வளவுதான் மரியாதை. அடுத்த நாள் என்கிட்ட இருந்த ரூ.170 ரூபாய்க்கு ஒரு சட்டையும் பேன்ட்டும் வாங்கி மாட்டிக்கிட்டு, ஃபிரண்ட்ஸ் கிட்ட டை வாங்கி போட்டுக்கிட்டு டிப்டாப்பா போயிட்டேன். கொஞ்சம் கூட யோசிக்காம வாட்ச்மேன் எனக்கு அனுமதி கொடுத்தார். அப்பதான் உடை நமக்கு எந்த அளவுக்கு மரியாதை வாங்கிக் கொடுக்குதுன்னு புரிஞ்சது.

என்னை மாதிரி எத்தனை பேர் ஒரு நல்ல உடை கூட இல்லாம அல்லது எடுக்க முடியாம கஷ்டப்படுறாங்க... அவர்களுக்காக ஒரு கடை ஏன் ஆரம்பிக்கக் கூடாதுன்னு தோணுச்சு. நண்பர்கள் கிட்ட கடைக்கான பேர் கேட்டேன். பெரிய லிஸ்ட் கொடுத்தாங்க. அதுல ‘டெர்பி’ என்கிற பெயர் ஸ்டைலிஷாக இருந்துச்சு. ரெண்டு டெய்லர்ஸ். அப்புறம் நான். எங்களுக்கு எதிர்ப்புறத்தில் ஒரு எஸ்டிடி பூத். அங்கிருந்த பாட்டியம்மா கிட்ட நம்பர் வாங்கி கஸ்டமர்களுக்கு கொடுப்பேன்.

அந்தப் பாட்டி அம்மா என்கிட்ட பேசின டீல், ‘டெய்லி உன் கடைக்கு வர்றவங்களுக்கு என் கிட்டதான் டீ வாங்கணும்...’
எங்க எப்படி விளம்பரம் கொடுத்தாலும் அந்த பாட்டியின் போன் நம்பரைத்தான் தொடர்புக்குன்னு போட்டேன்.‘Derby gentleman’s outfit’. இதுதான் டெர்பியின் ஆரம்பம். கொஞ்சம் கொஞ்சமா 200 சதுர அடி, 500 சதுர அடியாகி, ஆயிரம் சதுர அடியைத் தொட்டது.

அப்போதெல்லாம் எந்த விழானாலும் பசங்களுக்கு சஃபாரி சூட் அல்லது ஷர்ட், பேன்ட் பிட்தான் கிஃப்ட். அதை டார்கெட் செய்தேன். ‘உங்க மெட்டீ ரியலுடன் வாங்க...  நாங்க கொடுக்குற எக்ஸ்ட்ரா டிரெஸ்ஸுடன் போங்க...’கஸ்டமர்களுக்கு பெரிய நம்பிக்கை, திருப்தி. இன்னைக்கு 45 கிளைகள் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரானு எல்லாப் பகுதியிலும் இருக்கு.

‘உங்க டிரெஸ் எல்லாம் நல்லா இருக்கு... நீங்க ஏன் பிராண்ட் ஆரம்பிக்கக் கூடாது’ன்னு என் கஸ்டமர் கேட்ட கேள்விதான், ‘டெர்பி ஜீன்ஸ் கம்யூனிட்டி’க்கு விதை.ஏன் ஜீன்ஸ்னு கேட்கலாம். ஜீன்ஸ்னாலே இளமை. அதனால ஜீன்ஸ் சேர்த்து கம்யூனிட்டி ஆக்கினோம். எங்களுக்கு அதிகம் பிரான்ச்சைஸ் கடைகள் உருவாச்சு. இடைல ஒரு சின்ன சறுக்கல். என் வீட்டைக் கூட விற்கும் அளவுக்கு போனேன்.

எந்தப் பிரச்னை எனக்கு வந்தாலும் நான் என்ன தப்பு செய்தேன்னுதான் எப்பவுமே யோசிப்பேன். அப்படி யோசிச்சு மீண்டேன்.இடைல என் தோழியை அஞ்சு வருடங்கள் காதலிச்சு திருமணமும் செய்துகிட்டேன். அவங்க பிசியோதெரபிஸ்ட் படிச்சு முடிச்சு மேற்படிப்புக்காக லண்டன் யுனிவர்சிட்டியில் அட்மிஷன் வாங்கியிருந்தாங்க. அப்படிப்பட்டவங்களை திருமணம் செய்து ஒரு நல்ல ஹவுஸ்வைஃப் ஆக்கிக்கிட்டேன். விளைவு- ஏழு வருடங்கள் இனிப்பான சந்தோஷமான திருமண வாழ்க்கை எனக்கு கிடைச்சது. ஆனா, அவங்களுக்கு..?

ஏழாவது வருடம் என் மனைவி என்கிட்ட விவாகரத்து நோட்டீசை கொடுத்தாங்க. மறுபடியும் நான் என்ன தப்பு செய்தேன்னுதான் யோசிச்சேன். நீதிமன்றம் வரையிலும்கூட போனோம். ஆனா, ஒரு நிமிஷ மன்னிப்பு போதுமேனு தோணுச்சு. இன்னைக்கு எங்க ரெண்டு பேரையும் பார்த்து பெஸ்ட் ஜோடின்னு பாராட்டறாங்க. எனக்காக அவங்களும் அவங்களுக்காக நானும் முடிஞ்ச அளவுக்கு நேரங்களை ஒதுக்கி ஒவ்வொரு வருஷமும் இந்த வயசிலேயும் ஹனிமூன் டிரிப் போறோம்.

அவங்க பெயர் ராக்கி கபூர். 20 புத்தகங்கள் வெளியிட்டிருக்காங்க. குழந்தைப் பேறு பயிற்சிக்கான கிளினிக் வெச்சிருக்காங்க. முக்கிய பிரபலங்கள் அவங்களுக்கு கிளையன்ட்ஸ். எங்களுக்கு ஒரு பையன் விக்கி கபூர். நியூயார்க்ல ஃபிலிம் டெக்னாலஜி படிக்கிறார்.

ஒரு பையன் ஒரு பொண்ணை மட்டும் கல்யாணம் பண்றான். ஆனா, ஒவ்வொரு பொண்ணும் ஒரு குடும்பத்தையே கல்யாணம் பண்றா! அத்தனை வருஷம் வேற ஒரு வீட்டுல இருந்த பொண்ணு கல்யாணமான அடுத்த நிமிஷமே இன்னொரு குடும்பம், கலாசாரம், பழக்கங்கள்னு எல்லாத்தையும் மாத்திக்கிட்டு வாழணும். இதுதான் இந்தியத் திருமணங்களுடைய விதி.

இதை சரியா ஒவ்வொரு ஆணும் புரிஞ்சிக்கிட்டாலே தன் மனைவிக்கு மரியாதை கொடுக்கத் தொடங்கிடுவாங்க.‘உழைக்கிறேன், கோடி கோடியா கொடுக்குறேன்... இதைத் தாண்டி உனக்கு என்ன வேணும்’னு கேட்கறவன் நல்ல ஆண் இல்லை. அது ஆணாதிக்கம். ‘குழந்தைய நீ பாரு, மாமியார் கூட சண்டையா... நீங்களே அடிச்சுக்கோங்க சேர்ந்துக்கோங்க’னு ரிமோட்டும் கையுமா உட்கார்றதுக்கு பேர் ஆண்மை இல்லை.

இத்தனை வருஷமா கூட இருந்த உன்னாலயே உன் அம்மாகிட்ட பேச முடியாதப்ப நேத்து நுழைஞ்ச பொண்ணு, உன்ன நம்பி வந்த பொண்ணு என்ன செய்வா?இதை எல்லாம் அலசி, புரிஞ்சுதான் என் மனைவிகிட்ட மன்னிப்பு கேட்டேன். இதன்பிறகு ‘டெர்பி’யும் வளர்ந்துச்சு... நாங்களும் வளர்ந்தோம்.

இந்த கொரோனா  காலத்திலே கூட பிரான்ச்சைஸ் உட்பட அத்தனை பேர் கூடவும் மீட்டிங் போட்டு திட்டமிட்டோம். நினைச்சதைவிடவும் நஷ்டம் இல்லாம போதுமான வரு வாயோடு ‘டெர்பி’ நல்லா போகுது.

உங்களுக்கு ஒரு பிரச்னை வருதுன்னா அதுக்கு உங்க பக்க தப்பு என்னன்னு யோசிங்க, அடுத்தவங்களை குறை சொல்லிக்கிட்டே இருந்தா நாம அதே இடத்திலேதான் இருப்போம். நிறைய திட்டங்கள் இருக்கு. சூழல் சரியானதும் அத்தனையும் முயற்சிப்போம். முடிஞ்சவரைக்கும் பாஸிட்டிவ்வா இருங்க. கிடைச்ச மனைவி, கணவர், குழந்தை, வேலை, நண்பர்களுக்கு நன்றி சொல்லுங்க.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலே முடிஞ்சவரை கூட இருக்கவங்களை சந்தோஷப்படுத்துங்க, சந்தோஷம், கேட்காமலேயே உங்களுக்கு கிடைக்கும்.
பிஸினசுக்கும் சரி வாழ்க்கைக்கும் சரி... இது பொருந்தும்!

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்