வைரல் திருமணம்
இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்குக் கூட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்திலுள்ள ரத்லம் என்ற ஊரில் நடந்த திருமணம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
திருமணம் நடக்க இரண்டு நாட்கள் இருக்கும்போது மணமகனுக்கு கொரோனா வந்துவிட்டது. நிச்சயிக்கப்பட்ட நாளில் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் மணமகன். வருங்காலக் கணவரின் விருப்பத்துக்கு மணமகளும் சம்மதம் தெரிவிக்க, ஒருசிலரின் முன்னிலையில் அரங்கேறியிருக்கிறது இந்த திருமணம்.
மணமகன், மணமகள் உட்பட அனைவரும் கவச உடைகளுடன் திருமணத்தில் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளை வாழ்த்தியிருக்கின்றனர். இந்த திருமண நிகழ்வை வீடியோவாக்கி இணையத்தில் தட்டிவிட, சில மணி நேரங்களில் 5 லட்சம் பேர் பார்த்து வைரலாக்கிவிட்டனர். ஒரு பக்கம் மணமக்களின் துணிச்சலுக்குப் பாராட்டுகள் குவிந்தாலும், ‘‘இந்த சூழலில் என்ன அவசரம்...’’ போன்ற கமெண்டுகளும் குவிகின்றன.l
த.சக்திவேல்
|