வெள்ளம்
சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வுகளைக் கிளப்பிய மலையாளப் படம், ‘வெள்ளம்’. இப்போது ‘சன் நெக்ஸ்ட்’டில் பார்க்க கிடைக்கிறது. மதுவுக்கு அடிமையானவர் முரளி. அவசரத் தேவை என்று மனைவியிடமும் நண்பர்களிடமும் பொய் சொல்லி பணம் வாங்கி குடிக்கிறார். போதை அதிகமாகி கண்ட இடங்களில் படுத்துக்கிடக்கிறார்.
அவரது நடவடிக்கை காரணமாக திருட்டுக்குற்றம் சுமத்தப்படுகிறது. மனைவியிடமும் வெளியிலும் பணம் கிடைக்காததால் வீட்டிலுள்ள பொருட்களை விற்று மது அருந்துகிறார். சுற்றியிருக்கும் எல்லோருடைய வெறுப்புக்கும் உள்ளாகிறார். எல்லோரும் அவரை விட்டு விலகிப் போகின்றனர்.இப்படியான ஓர் அவல நிலையிலிருந்து முரளி எப்படி மீண்டார் என்பதே நம்பிக்கையளிக்கும் திரைக்கதை.
கேரளாவைச் சேர்ந்த பிசினஸ்மேன் முரளி குன்னும்புரத் என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது. மதுவுக்கு அடிமையாக இருந்து சர்வதேச அளவிலான பிசினஸில் வெற்றிக்கொடி நாட்டியவர் இவர்.
குடிப்பழக்கம் ஒரு மனிதனை என்ன மாதிரியான நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதையும், எவ்வளவு இக்கட்டான சூழலில் இருந்தும் மனிதனால் மீண்டு புது வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும் என்பதையும் அழகாகப் பதிவு செய்கிறது இந்தப் படம். முரளியாக ஜெயசூர்யா அதகளம் செய்திருக்கிறார். படத்தின் இயக்குநர் பிரஜேஷ் சென்.
|