Family Tree-ஏற்றுமதி - இறக்குமதியை பிசினஸாக வடிவமைத்த உலகின் முதல் நிறுவனம் இதுதான்!



பிசினஸ் என்பதற்கு இன்னொரு பெயர் ‘ஸ்வயர்’ என்று அடித்துச் சொல்கிறார்கள் ஐரோப்பிய வர்த்தக நிபுணர்கள். அந்தளவுக்கு, தான் கால் பதித்த அனைத்து பிசினஸ்களிலும் அளவில்லா வெற்றியடைந்திருக்கிறது ‘ஸ்வயர் குரூப்’. இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்ப நிறுவனம் இது. 
‘ஸ்வயர் பசிபிக்’, ‘ஸ்வயர் ஃபுட்ஸ்’, ‘ஸ்வயர் ப்ராபர்ட்டீஸ்’, ‘த சைனா நேவிகேஷன் கம்பெனி’, ‘ஸ்வயர் ரிசோர்ஸ்’, ‘ஸ்வயர் பெவரேஜஸ்’ என பல துணை நிறுவனங்களை உள்ளடக்கிய ‘ஸ்வயர் குரூப்’பை வழிநடத்துவது ‘ஜான் ஸ்வயர் அண்ட் சன்ஸ் லிமிடெட்’ என்னும் குடும்ப நிறுவனம்.

உலகின் முக்கியமான பத்து குடும்ப நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘ஸ்வயர்’ வகுத்த பிசினஸ் நுட்பங்கள்தான் இன்றைய உலகளாவிய வர்த்தகத்துக்கு முன்னோடி.  ஆம்; ஏற்றுமதி - இறக்குமதி வணிகத்தை முதன்மையான பிசினஸாக வடிவமைத்தது இந்நிறுவனம்தான்.

ஜான் ஸ்வயர்

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் பிறந்தார் ஜான் ஸ்வயர். யார்க்‌ஷையரில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நிலமும், மாளிகை போன்ற வீடும் கொண்ட வசதியான குடும்பம் இவருடையது. ஜானுக்கு பெரிதாக பள்ளிப்படிப்பில் ஆர்வமில்லை. அவருடைய குடும்பம் விவசாயத்திலும் கம்பளி ஆடை வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்தது.

விவசாயமும் வியாபாரமும் செய்துபார்த்ததில் வியாபாரத்தில் அதிக சுவாரஸ்யம் இருப்பதாக உணர்ந்தார் ஜான். உள்ளூரில் கால்நடையாகவே நடந்து கம்பளி ஆடைகளை விற்பனை செய்ததன் மூலம் பிசினஸின்அடிப்படைகளைக் கற்றுக்கொண்டார். பள்ளிப்படிப்பில் ஆர்வமில்லாத அவர் பிசினஸ் சம்பந்தமாக தேடித் தேடி படித்தார். ஆனால், அவரது பிசினஸ் பசிக்குத் தீனி போடும் அளவுக்கு எந்தப் புத்தகமும் கிடைக்கவில்லை. இருந்தாலும் தேடலை அவர் நிறுத்தவில்லை.

ஒரு பொருளுக்கான தேவை எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு கொண்டுபோய் விற்றால் மட்டுமே லாபம் அதிகமாகக் கிடைக்கும் என்பது அவர் கற்ற முதல் பாடம். இதுதான் இன்றைய பிசினஸுக்கு முக்கிய பாடம். கம்பளி ஆடைகளுக்கான தேவை எங்கு அதிகமாக இருக்கிறது என்று சல்லடை போட்டுத் தேடினார். இங்கிலாந்தைவிட மற்ற நாடுகளில் கம்பளி ஆடைகளுக்கான தேவை அதிகமாக இருப்பதைக் கண்டடைந்தார். அந்த நாடுகளுக்குக் கடல் வழியாகப் பயணித்தார்.

ஆனால், உடனே அவருக்கு வாடிக்கையாளர்கள் கிடைக்கவில்லை. வருமானம் இன்றி மாதக்கணக்கில் நேரம் செலவழித்து வாடிக்கையாளர்களைத் தேடிக் கண்டுபிடித்தார். அவர்களிடம் ஆரம்பத்தில் பணம் பெற்ற பிறகே பொருட்களை அனுப்பினார். இது இன்றளவும் ஏற்றுமதி பிசினஸில் கவனிப்புக்குள்ளாகும் விஷயமாக இருக்கிறது. பிசினஸில் எவ்வளவு நேரம் செலவழிக்கிறோமோ அவ்வளவு ஆழமாக வேரூன்ற முடியும். பிசினஸில் பணத்தைவிட நேரம்தான் முக்கிய முதலீடு என்பது அவர் கற்றுக்கொண்ட அனுபவ பாடம்.

கம்பளி ஆடை ஏற்றுமதியில் நினைத்துப் பார்க்க முடியாத லாபம் கிடைத்தது. அடுத்து இங்கிலாந்துக்குள் என்னென்ன தேவை என்பதை அறிந்து வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தார். இறக்குமதி செய்து விற்பனை செய்ததிலும் நல்ல லாபம்.

ஏற்றுமதி - இறக்குமதி வணிகத்தில்தான் பிசினஸின் சூட்சுமம் இருக்கிறது என்பதை உணர்ந்து 1816ல் லிவர்பூலில் சிறிய அளவில் ஒரு ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனத்தைத் தொடங்கினார். அப்போது அவரது வயது 23. இதுதான் இன்று ‘ஸ்வயர் குரூப்’பாக வளர்ந்திருக்கிறது.

நிகழ்வுகள்

1847ல் ஜான் ஸ்வயர் மரணமடைய குடும்ப நிறுவனம் அவருடையான மகன்களான ஜான் சாமுவேல் ஸ்வயர் மற்றும் வில்லியம் ஹட்சன் ஸ்வயரின் கைக்கு வந்தது. நிறுவனத்துக்கு ‘ஜான் ஸ்வயர் அண்ட் சன்ஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டது. இதுவே இன்றும் தொடர்கிறது. ஜான் சாமுவேலின் நிர்வாகத்திறனும் பிசினஸ் உத்தியும் இன்றைய ‘ஸ்வயர் குரூப்’பின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது.  

1854ல் ஜான் சாமுவேல் ஆஸ்திரேலியாவுக்கு வியாபாரப் பயணம் செய்து மெல்போர்னில் பிசினஸை நிறுவினார். கம்பளி ஆடையைத் தாண்டி முள் கம்பி, ஆலிவ் ஆயில், சிமெண்ட், ‘கின்னஸ்’ பீர் என பிசினஸ் விரிவடைந்தது. 1861ல் அமெரிக்க உள்நாட்டுப் போர் கொடுத்த இடையூறால் அங்கிருந்து பருத்தி உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. அதனால் ஜான் சாமுவேலின் பார்வை சீனாவின் மீது திரும்பியது. இன்று ஆசியா முழுவதும் ஸ்வயரின் சாம்ராஜ்யம் பரவிக் கிடக்க சீனாவின் பக்கம் சாமுவேல் திரும்பியதுதான் காரணம்.

1866ல் சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் ‘பட்டர்ஃபீல்டு’ என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ‘பட்டர்ஃபீல்டு அண்ட் ஸ்வயர்’ என்ற புது நிறுவனத்தை நிறுவினார் சாமுவேல். இந்நிறுவனம் தேயிலை, பட்டு மற்றும் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பருத்தி மற்றும் கம்பளி ஆடைகளை சீனாவில் வர்த்தகம் செய்தது.

இங்கிலாந்திலுள்ள ஸ்வயரின் பிசினஸுக்கு சீனாவில் ஒரு ஏஜெண்ட் போல இயங்கியது ‘பட்டர்ஃபிளை அண்ட் ஸ்வயர்’. அத்துடன் நிறுவனத்துக்கு ‘டைக்கூ’ என்று சீன மொழியிலும் பெயரிடப்பட்டது. 1859ம் வருடம் ஜப்பானில் உள்ள யோகோஹோமா நகரில் சர்வதேச வர்த்தகத்துக்காக துறைமுகங்கள் அமைக்கப்பட்டன. 1867ல் யோகோஹோமாவில் தனது கிளையைத் திறந்தது ‘பட்டர்ஃபீல்டு அண்ட் ஸ்வயர்’.

1868ல் தலைமை அலுவலகத்தை லண்டனுக்கு மாற்றினார் சாமுவேல். பட்டர்ஃபீல்டு உடனான பார்ட்னர்ஷிப்பை முடித்துக்கொண்டார். ஆனால், ஆசியாவில் இருந்த ஸ்வயரின் அலுவலகங்கள் ‘பட்டர்ஃபீல்டு அண்ட் ஸ்வயர்’ என்ற பெயரிலேயே 1970 வரை இயங்கின.

1870ல் ஹாங்காங்கில் புதிய கிளை திறக்கப்பட்டது. 1872ல் ‘த சைனா நேவிகேஷன் கம்பெனி’ என்ற பெயரில் ஷிப்பிங் தொழிலில் கால் பதித்தது ‘ஸ்வயர்’. ஷிப்பிங் தொழில் புதுப்புது பிசினஸ் கதவுகளைத் திறந்துவிட்டது. 1882ல் உணவுத் துறையில் இறங்கியது. ஜாவா, பிலிப்பைன்ஸில் இருந்து கரும்பை இறக்குமதி செய்து அதை சர்க்கரையாக்கி சீனா, ஜப்பான் சந்தைகளில் வர்த்தகம் செய்தது.

1907ல் கப்பலை பழுதுபார்க்கவும் பராமரிக்கவும் ஓர் இடம் உருவாக்கப்பட்டது. 1912ல் ஜான் சாமுவேலின் மகன் ஜாக்கின் கைக்கு நிர்வாகம் வந்தது. இரண்டாம் உலகப் போர் ஸ்வயரைச் சிதைத்துவிட்டது. சர்வதேச வர்த்தகம் முற்றிலும் பாதித்தது. ஷிப்பிங் தொழிலுக்கும் பல தடைகள் வந்தன. இருந்தாலும் மீண்டது ‘ஸ்வயர்’. காரணம், ஜான் கிட்ஸ்டன் ஸ்வயர்.

ஜான் கிட்ஸ்டன் ஸ்வயர்

இரண்டாம் உலகப்போரில் சிதைந்து போன நிறுவனத்தை புதுப்பொலிவுடன் மறுகட்டமைப்பு செய்தவர் ஜான் கிட்ஸ்டன் ஸ்வயர். இவரது நிர்வாகத் திறனால் 1950ல் மீண்டும் சர்க்கரை ஆலை திறக்கப்பட்டு, ஷிப்பிங் தொழிலும் ஆரம்பிக்கப்பட்டது. சர்வதேச வர்த்தகத்துக்காக ஹாங்காங் துறைமுகத்தை இவர் தேர்வு செய்தது பிசினஸை வெகு உயரத்துக்குக் கொண்டு சென்றுவிட்டது.

விமானப் போக்குவரத்துதான் எதிர்காலம் என்று விமானங்களைப் பராமரித்து பழுதுபார்க்கும் தொழிலில் இறங்கினார். ‘கதே பசிபிக்’ என்ற விமானப் போக்கு வரத்து நிறுவனத்தின் அதிகப்படியான பங்குகளை வாங்கி அதற்கு உரிமையாளரானார். இன்று விற்பனைஅடிப்படையில் உலகிலேயே ஐந்தாவது விமானப் போக்குவரத்து நிறுவனம் ‘கதே பசிபிக்’தான். இன்றும் இந்நிறுவனத்தில் அதிக பங்குதாரர் ‘ஸ்வயர்’தான்.

அடுத்து ஹாங்காங்கில் கோகோ கோலாவிற்கு பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனத்தைக் கைப்பற்றினார். இன்று கோகோ கோலா நிறுவனத்துக்கு அதிக பாட்டில்களை சப்ளை செய்வது ‘ஸ்வயர்’தான். 1966ல் ஜான் அந்தோணி ஸ்வயர் நிர்வாகத்துக்கு வந்தார். பிசினஸ் பல துறைகளிலும் விரிவடைந்தது. குறிப்பாக சர்வதேச பொருள் போக்குவரத்தில் உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக ‘கதே பசிபிக்’கை வளர்த்தெடுத்தார்.
 
இன்று ‘ஸ்வயர் குரூப்’பில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர். ஹாங்காங் மற்றும் லண்டனில் தலைமை யகங்கள் செயல்படுகின்றன. ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த பார்னபி ஸ்வயர் நிறுவனத்தின் சேர்மனாக இருக்கிறார். இவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 47 ஆயிரம் கோடி ரூபாய்!

த.சக்திவேல்