லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
லாக்டவுனுக்குப் பின்னர் தமிழகத்தில் கடந்த நவம்பர் 10ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. மொத்தம் 1112 தியேட்டர்கள் இருந்தும் அதில் பாதியளவு எண்ணிக்கையிலான திரையரங்குகள் மட்டுமே திறக்கப்பட்டன. அதில் தயாரிப்பாளர்கள் - திரையரங்க உரிமையாளர்களுக்கிடையேயான ‘விபிஎஃப்’ (virtual print fee) பிரச்னைக்கு ஒரு தற்காலிக தீர்வு கிட்டியதில் புதுப்படங்களான ‘இரண்டாம் குத்து’, ‘பிஸ்கோத்’, ‘மரிஜு வானா’ ஆகிய படங்கள் திரைக்கு வந்தன.
இந்நிலையில் ‘தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை... மீண்டும் மூடத் தயாராகின்றன தியேட்டர்கள்...’ என்ற குரல்களும் கோலிவுட்டில் ஒலிக்கின்றன. ‘‘வெளியூர்களை ஒப்பிடும் போது, சென்னை மக்களுக்கு கொரோனா பயம் இன்னும் போகலைனு நினைக்கத் தோணுது. இன்னொரு விஷயம், முன்னாடியெல்லாம் 11.30க்கு காலைக்காட்சி, 2.30க்கு மேட்னி ஷோ, 6.30க்கு ஈவ்னிங் ஷோ, 10.30க்கு நைட் ஷோனு இருக்கும்.
இப்ப எல்லாமே டைம் மாறிப்போச்சு. காலையில 9 மணிக்கே காலைக் காட்சி, 12 மணிக்கு மேட்னி, நாலு மணிக்கு ஈவ்னிங் ஷோ, ஏழு மணிக்கு நைட்ஷோனு லாக்டவுன்லால எல்லாமே பத்து மணிக்குள்ளாற முடிஞ்சிடுது.
இந்த டைமிங் அடாப்டேஷனே பெரிய மைனஸா இருக்கு. சீட்கள்லே ஐம்பது சதவிகிதத்தை 75 சதவிகிதமாகவும், நைட் ஷோ நேரத்தை பழையபடியும் கொண்டு வந்தால், ஆடியன்ஸ் வர வாய்ப்பிருக்கு. என் படத்தை விடுங்க. அது ‘ஏ’ சர்டிபிகேட். ஃபேமிலி ஆடியன்ஸுக்கானது இல்ல. ஆனா, பொதுவா மத்த படங்களுக்குக் கூட ஃபேமிலி ஆடியன்ஸை அழைச்சிட்டுப் போக முடியல. குழந்தைங்களோட கூட பக்கத்து சீட்ல உட்கார முடியாதபோது, பெண்கள், குழந்தைகளை எப்படி அழைச்சிட்டு வருவாங்க?’’ என்கிறார் ‘இரண்டாம் குத்து’ நாயகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான சந்தோஷ்.
ஆனால், ‘பிஸ்கோத்’ இயக்குநர் ஆர்.கண்ணனோ வேறு விதமான கருத்தை முன்வைக்கிறார். ‘‘எங்க ‘பிஸ்கோத்’ ரிலீஸ் ஆன அன்னிக்கு நானும் சந்தானமும் சென்னையில் சில தியேட்டர்களுக்கு விசிட் அடிச்சோம். நாங்க பார்த்த இடங்கள்ல ஃபிப்டி பர்சன்ட் கூட்டம் நிறைஞ்சிருந்தது. அதாவது இப்போதைய சூழல்ல ஹவுஸ் ஃபுல்னு எடுத்துக்கலாம்.
ஆடியன்ஸுக்கு ஒரு பெரிய மைண்ட் ரிலாக்ஸேஷன் தேவைப்பட்டிருந்ததுனு தெரிஞ்சது. ஏன்னா, திரையரங்குல அப்படி ஒரு விசில் சப்தம், கை தட்டல், ஆரவாரம். இந்தப் படத்தை நானும் சேர்ந்து தயாரிச்சிருக்கேன்ற முறையில் சொல்றதா இருந்தா, கடவுள் புண்ணியத்துல முதல் மூணு நாள் வசூலே நாலு கோடி குவிச்சிடுச்சு. ஸோ, ஒரு புரொட்யூசரா நான் ஹேப்பி...’’ என்கிறார் ஆர்.கண்ணன்.
திரைப்பட ஆர்வலரும் மக்கள் தொடர்பாளருமான ரியாஸ் கே.அகமதின் கருத்தோ, வேறு கோணத்தில் இருக்கிறது. ‘‘லாக்டவுனுக்கு முன்னாடி ரிலீஸ் செய்து, நல்லா வசூல் செய்து ஓடி முடிஞ்ச ‘தாராள பிரபு’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படங்களை எல்லாம் இப்ப ரிலீஸ் செய்தா எப்படி கூட்டம் வரும்? இந்தப் படங்களை டிவிலயும் டெலிகாஸ்ட் செய்துட்டாங்க. இப்ப தியேட்டர் திறக்கும் போதும் அதே படத்தை திரையிட்டா..? சமீபத்துல ரிலீஸ் ஆன ‘தட்றோம் தூக்குறோம்’ பார்க்க ஒரு மல்டி பிளக்ஸ் தியேட்டருக்கு போயிருந்தேன். என்னையும் சேர்த்து மொத்தமே இருபது, முப்பது பேர்கள்தான் இருந்திருப்போம். அத்தனை பேருமே யங்ஸ்டர்ஸ்தான். ஃபேமிலி ஆடியன்ஸ்னு யாரும் கிடையாது.
இன்னிக்கு சூழல்ல சினிமாவோட ஆடியன்ஸ்னா, யங்ஸ்டர்ஸ்தான். இருபது வருஷத்துக்கு முன்னாடி ஸ்டோரி டிஸ்கஷன்ல சீன் பிடிக்கும்போதே, ‘இப்படி ஒரு சீன் வைங்க. நூன் ஷோ, ஈவ்னிங் ஷோவுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் வருவாங்க’னு சொல்றதை கேட்டிருக்கேன். அப்படி ஃபேமிலி ஆடியன்ஸ் இப்ப தியேட்டருக்கு வர்றது குறைஞ்சிடுச்சு. ஆனா, படம் நல்லா இருந்தா அதையே தியேட்டருக்கு வந்து பார்க்கற ஃபேமிலி ஆடியன்ஸும் இருக்காங்க...’’ என்கிறார் ரியாஸ்.
எல்லாம் சரிதான். திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் என்ன சொல்கிறார்? ‘‘ஜனங்க இயல்பு நிலைக்கு திரும்பிட்டாங்க. ஹோட்டல்ல இருந்து எல்லா இடங்கள்லேயும் கூட்டம் குவியுது. திரையரங்குகள்லயும் ஆடியன்ஸின் ரெஸ்பான்ஸ் சிறப்பா இருக்கு. நல்ல படங்கள் வந்தா, ஜனங்க தியேட்டருக்கு வரத் தயாரா இருக்காங்க. ஸ்கிரீன், சவுண்ட், டாய்லட்னு எல்லாம் குவாலிட்டியா இருக்கற தியேட்டர்களுக்கு கூட்டம் வரத்தான் செய்யுது. அதை மறுக்க முடியாது...’’ என்கிறார் சுப்ரமணியம்.
மை.பாரதிராஜா
|