வெடிகளில் வளரும் செடிகள்!
தீபாவளி என்றாலே பட்டாசுகளும், வாண வேடிக்கைகளுமே கொண்டாட்டம் தருபவை. ஆனால், பட்டாசால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு சொல்லிமாளாது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் பரவிக் கிடக்கும் பட்டாசுக் குப்பைகளால் அந்த ஏரியாவே அல்லோலகல்லோலப்
படும்.
ஆனால், சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான ஹபீஸ்கானுக்கு இந்தப் பட்டாசுக் குப்பைகளே கொண்டாட்டம் தருகின்றன. ஏனெனில், அந்தக் குப்பையினுள் சுற்றுச்சூழலுக்கு உகந்த செடிகளை நட்டு மரமாக்குகிறார். இவர், வெடித்த வாணவெடி டப்பாக்கள் ஒவ்வொன்றிலும் ஒரு செடியை முளைக்க வைத்து ஆச்சரியப்படுத்துகிறார். செவன் ஷாட்ஸ், ஃபிப்டி ஷாட்ஸ் எல்லாம் அவரின் நாற்றங்கால் பண்ணையில் செடிகளாக மிளிர்வதை வியப்பாகப் பார்க்க முடிகிறது. சென்னை கொட்டிவாக்கத்தில் ‘communitree’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் ஹபீஸை சந்திக்கச் சென்றால் அங்கேயும் வெடிகள் செடிகளாக மின்னுகின்றன.
‘‘சொந்த ஊர் கோவை. அங்க எஞ்சினியரிங் முடிச்சுட்டு ஒரு செல்போன் நிறுவனத்துல சேல்ஸ் அண்ட் சர்வீஸ்ல வேலை செய்தேன். 2003ல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் பணியைத் தொடங்கினேன். எப்படி தலைமைப் பண்பை வளர்க்கிறது, எப்படி டீமை புரிஞ்சிருக்கிறதுனு இப்படியான பயிற்சிகள் அளிச்சோம். அடுத்து, 2006ல் Ezone engagementனு ஒரு திட்டத்தை ஆரம்பிச்சேன். அதன்வழியா மராத்தான் நடத்துறது, நிகழ்வுகள் நடத்துறதுனு நிறைய செய்தேன். அப்படியே மரங்கள் நடுகிற வேலைகளையும் பண்ணினேன். அங்கிருந்துதான் நான் சமூகம் சார்ந்த திட்டங்களுக்குள்ள வந்தேன்.
இதுக்காக 2018ல் ‘Communitree’னு ஓர் அமைப்பை ஆரம்பிச்சேன். அதை அறக்கட்டளையா பதிவு செய்தேன். அதன்வழியா, பெரிய நிறுவனங்கள்கிட்ட ஸ்பான்சர் வாங்கி செடிகள் நடுகிற வேலைகளைச் செய்தேன். முதல்ல நாங்க மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளைப் பார்த்துப் பேசி இடங்களை வாங்குவோம். அப்புறம், நீர் இருக்கானு பார்ப்போம். பெரும்பாலும் பம்புசெட் போட்டு நீர் எடுக்கிறதில்ல. கழிவுநீைர சுத்திகரிச்சு செய்ய முடியுமானு பார்ப்போம். அது முடியாதபட்சத்திலேயே பம்புசெட் வழியா நீர் எடுப்போம்.
பிறகு, ஸ்பான்சர்ஸ் பெற்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் பேசி செடிகள் நடுவோம். இப்ப சென்னையில் 34 இடங்கள்ல 140 ஏக்கர்ல செடிகள் நட்டிருக்கோம். பரனூர் அருகே உள்ள மஹிந்திரா வேர்ல்டு சிட்டியில் எங்களின் நாற்றுப் பண்ணை இருக்கு. அங்கேயும் காடுகள் உருவாக்கியிருக்கோம். பண்ணையில் 40 ஆயிரம் செடிகள் வரை வச்சிருக்கோம்.
நிறைய பேர் கல்யாணம், காதுகுத்து, பிறந்தநாள்னு வந்து செடிகள் வாங்கிட்டுப் போறாங்க. இதுதவிர, அபார்ட்மெண்ட், பள்ளிகள்ல காடுகள் உருவாக்கித் தர்றோம். சில அபார்ட்மெண்ட்வாசிகள் பட்டாம்பூச்சி காடு அமைக்கணும்னு கேட்பாங்க. அந்தப் பகுதியில் எந்தவிதமான பட்டாம்பூச்சிகள் இருக்குனு பார்த்து, அதுக்கேற்ற செடிகளை கொண்டு போய் நடுவோம்.
என்னவிதமான பட்டாம்பூச்சி அந்தப் பகுதியில் இருக்குனு தெரிய ஒரு குழு இருக்கு. அவங்ககிட்ட கேட்டு அதைச் செய்றோம். அப்புறம், பள்ளிகள்ல பெரும்பாலும் பழ மரங்கள் நடுவோம். ஏன்னா அதுல பறவைகள், அணில்கள், பூச்சிகள் எல்லாம் வரும். குழந்தைங்க அதைப் பார்த்து கத்துப்பாங்க, ரசிப்பாங்கனு செய்றோம்.
இதுவரை 5.6 லட்சம் செடிகள் வச்சிருக்கோம். இந்த வருஷம் 4 லட்சம் செடிகள் வச்சிருக்கணும். ஆனா, கொரோனாவால முடியல...’’ என்கிறவர், பட்டாசுக் கழிவில் செடி வளர்க்கும் ஐடியா பற்றி தொடர்ந்தார். ‘‘பொதுவா எல்லோரும் செடிகள் சின்னதா இருக்கும்போது ஒரு பாலிதீன் பையைப் பயன்படுத்துவாங்க. பெரிசானதும் இன்னொரு பாலிதீனுக்கு மாற்றுவாங்க. அப்புறம், நாலு அடியா வளர்ந்ததும் அதுக்கேற்ற பாலிதீனுக்கு மாற்றணும்.
இந்தப் பாலிதீன் பைகள் எல்லாம் சூழலுக்கு ேகடு விளைவிக்கக் கூடியது. ஆனா, வேறு வழியில்லாம இந்தச் செடிகளை அந்தப் பாலிதீன் பைகள்ல வளர்க்க வேண்டிய நிலை. இவற்றை மறுசுழற்சியும் செய்யமுடியாது. அதனால, நாங்க இதை எப்படி குறைக்கலாம்னு யோசிச்சிட்டே இருந்தோம்.மண் சட்டியில் செடிகளை வச்சு மாத்தலாம்னு நினைக்கிறப்ப அது சரியா வரலை. நிறைய மண் சட்டிங்க உடைஞ்சது. பிறகு, சாணியில் ஒரு பானை மாதிரி செய்து பார்த்தோம். அது தண்ணீரில் கரைஞ்சு போயிடுச்சு. அப்புறம், பேப்பர்ல பை மாதிரி செய்து பயன்படுத்தினோம். ரொம்ப நாள் நீடிக்கல. பிறகு, மூங்கில்ல செய்தோம். ஆனா, அது ரொம்ப செலவு பிடிச்சது.
இப்படியே இருந்தப்ப, போன வருஷம் நாங்க தீபாவளி அன்னைக்கு இரவு கொட்டிவாக்கம் பீச்ல நடந்தோம். அப்ப வெடிச்ச வெடி அட்டைகள் நிறைய கிடந்ததைப் பார்த்தோம். ஒவ்வொண்ணும் நல்ல பலமா இருந்தது. இதை ஏன் செடிகள் வளர்க்க பயன்படுத்தக் கூடாதுனு தோணுச்சு. உடனே களத்துல இறங்கினோம். எங்களுக்கு தெரிஞ்ச அபார்ட்மெண்ட்வாசிகள், நண்பர்கள்னு எல்லார்கிட்டயும், வெடி போட்டதும் அந்த வேஸ்ட்டை எங்ககிட்ட கொடுங்கன்னோம். இதை என் ஃபேஸ்புக் தளத்துலயும் போட்டேன். இப்படி 27 ஆயிரம் வெடிக் கழிவுகளைச் சேகரிச்சோம். வெடி மருந்து எதுவும் இருக்கக்கூடாது என்பதற்காக சாணித் தண்ணீரில் கழுவி, பிறகு மண் போட்டு விதைகள் போட்டோம். அருமையா வளர்ந்தது. இந்த ஆண்டு ஒரு லட்சம் வெடிக் கழிவுகள் சேகரிக்கணும்னு முடிவெடுத்தோம்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் சாரை சந்திச்சு எங்க நோக்கத்தைச் சொன்னோம். அவர் வளசரவாக்கம், போரூர் பகுதிகள்ல சேகரிச்சுக் கொடுக்க உதவினார். ஆனா, தீபாவளிக்கு மறுநாள் செம மழை. அதனால, அந்த வெடிக் கழிவுகளுடன் மற்ற கழிவுகள், மண் எல்லாம் சேர்ந்திடுச்சு. அதனால, 80 ஆயிரம் வெடிக் கழிவுகள் மட்டுமே கிடைச்சது. அதை சேகரிச்சு செடிகள் நட்டிருக்கோம்.
இதில் நன்மை என்னன்னா, பிளாஸ்டிக்ல இருந்து இன்னொரு பிளாஸ்டிக்ல மாத்தும்போது மண்கட்டி உடையும். வேர் வெளியே வந்திடும். அப்ப புது மண்ல வைக்கும்போது வளர நாட்களாகும். உதாரணத்துக்கு இப்ப நாம் நம் வீட்டைவிட்டு வெளியிடங்கள்ல தங்க நேரும்போது நமக்கு அந்தச் சூழல்ல பழக கொஞ்சம் நாட்கள் எடுக்குமில்லையா? அதுபோல! ஆனா, இதுல அப்படியே நடலாம். நீர் ஊற்றும்போது வெடி வேஸ்ட் எல்லாம் பேப்பர் என்பதால் வேர்கள் குளிர்ச்சியா இருப்பதற்கும் உதவுது. அப்புறம் கொஞ்ச நாட்கள்ல மக்கிடுது. இதனால, இயற்கைச் சூழல் கெடுறதில்ல.
நாங்க சேகரிச்ச வாணவெடிகள்ல 250, 110 ஷாட்கள் நிறைய இருக்கு. மியாவாக்கி முறை காடுகள் உருவாக்க இந்த வாணவெடிகள் பயனுள்ளதா இருக்கு. முதல்ல நாலு இஞ்ச் வளர இதுபோதும். அதன்பிறகு, தனியான வாணவெடியில வைக்கிறோம். இப்ப நாங்க தையல்காரர்கள்கிட்டயும் பேசிட்டு இருக்கோம். அந்த நூற்கண்டுல நூல் முடிஞ்சதும் எங்ககிட்ட கொடுக்கச் சொல்லி கேட்டிருக்கோம். அதிலும் சின்ன செடிகள் வைக்கலாம் இல்லையா?!’’ எனச் சிரிக்கிறவரின் எதிர்காலத் திட்டம் வீட்டில் காட்டை உருவாக்குவதாம்.
‘‘இப்ப ஒரு முயற்சியா என்னுடைய வீட்டுல இதை ஆரம்பிச்சிருக்கேன். நான் சிங்கிள். அதனால, ஒவ்வொரு அறையிலும் அதுக்கேத்தமாதிரி இன்டோர் செடிகள் வளர்க்கிறேன். பாத்ரூம்ல கூட வச்சிருக்கேன். பசுமை வீடாக்கணும் என்பதே என் ஆசை...’’ உற்சாகமாகச் சொல்கிறார் ஹபீஸ்கான்!
செய்தி : பேராச்சி கண்ணன்
படங்கள் :ஆ.வின்சென்ட் பால்
|