அணையா அடுப்பு - 27



வெள்ளையரை எதிர்த்தாரா வள்ளலார்?

தமிழ் சமூகத்தை எப்படி யெல்லாம் வள்ளலார் சீர்திருத்தினார் என்று வாசித்து வரும் பலருக்கும் ஒரு சந்தேகம் எழுகிறது.அருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கம் அவர்கள் 1823ம் ஆண்டு பிறந்து, 1874ம் ஆண்டு வரை வாழ்ந்தவர்.அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் நாம் அடிமைத்தளையில் அல்லலுற்றிருந்தோம். வெள்ளையரின் கொடுங்கோல் ஆட்சி யில் நம்முடைய செல்வங்கள் சுரண்டப்பட்டு, இங்கிலாந்துக்கு கப்பலில் ஏற்றுமதி ஆகின.

அப்படிப்பட்ட காலக்கட்டத்தில் சமூகப் புரட்சியில் ஈடுபட்ட வள்ளலார், வெள்ளையர் ஆட்சியை எதிர்க்கவில்லையா என்று சிலர் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.நியாயமான சந்தேகம்தான்.பொதுவாகவே துறவிகள் நாடுகளின் எல்லைகளைக் கடந்தவர்கள்.அவர்களுக்கு ஒட்டுமொத்த மானுட விடுதலைதான் பிரதானமே தவிர, மனிதர்களுக்குள் இருக்கும் இனம், சாதி, மொழி, மதம், நாடு போன்ற பிரிவினைகளின் அடிப்படையில் தனித்தனி விடுதலையுணர்வு சாத்தியமில்லை.

வாடிய பயிருக்கே வாடிய வள்ளலார் எந்தவிதமான அடிமைத்தனத்தையும் ஆதரித்தவர் அல்ல.ஆதிக்கம் என்பது எதன் பேரில் நடந்தாலும் அதை எதிர்த்துப் போராட வேண்டும் என்கிற உணர்வு கொண்டவரே.சிதம்பரம் ஆலயம் குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதிக்கத்தில் தன்னுடைய இயல்பை இழந்த நிலையில், எல்லாத் தரப்பு மக்களுக்காகவும் அவரே ஒரு சிதம்பரத்தை வடலூரில் நிறுவி, உத்தரஞான சிதம்பரம் என்றும் பெயரிட்டார்
அல்லவா?

தவிரவும் வள்ளலார் பிறந்து, வளர்ந்து, சமூகத்துக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றிய நாட்களில், தேசிய விடுதலை இயக்கங்கள் அவ்வளவாகத் தோன்றவில்லை.ஆங்காங்கே நடந்த கலகங்களும் கூட அந்தந்தப் பிராந்தியப் பிரச்சினைகளின் அடிப்படையில் நிகழ்ந்தனவே தவிர்த்து, இந்தியா என்கிற ஒட்டுமொத்த தேசத்துக்கான போராட்டங்களாக அமையவில்லை.முதல் இந்திய சுதந்திரப் போர் என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிற சிப்பாய்க் கலகம் கூட 1857ம் ஆண்டுதான் நடந்தது.

அதுவும் கூட சிப்பாய்களுக்கு இடையே மதரீதியான மோதல்களை உருவாக்க முயன்ற கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகவே அமைந்தது.
இந்தக் கலகத்தின் விளைவாகவே, இந்தியா நேரடியாக இங்கி லாந்து அரசியின் ஆளுகைக்கு உள்ளானது.அதுநாள் வரை கிழக்கிந்தியக் கம்பெனியின் மேற்பார்வையில் ஆங்காங்கே வலுகுறைந்த இந்திய அரசர்களே பிராந்தியங்களை ஆண்டு வந்தார்கள்.

தில்லியில் பேருக்கு முகலாயர் அரசாங்கம் இருந்தது போல, ஒவ்வொரு பிராந்தியத்திலும் அரசர்கள் இருந்தார்கள். அவர்கள் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்டுவித்த பொம்மைகளாகவே பெயருக்கு இருந்தார்கள்.1858ம் ஆண்டு இங்கிலாந்து, இந்தியாவின் ஆளுகையைக் கைப்பற்றியிருந்தாலும், இந்தியாவின் பேரரசியாக மாட்சிமை தங்கிய விக்டோரியா மகாராணி தன்னை அறிவித்துக்கொள்ள மேலும் இருபது ஆண்டுகள் ஆனது.

இவ்வளவு விரிவாக இதை விளக்குவதற்குக் காரணம், வள்ளலார், தான் வாழ்ந்த காலக்கட்டத்தில் நேரடியாக வெள்ளையர் அரசாங்கத்தின் அடக்குமுறைகளை எதிர்கொள்ளவில்லை என்பதை விளக்குவதற்காகவே.விக்டோரியா மகாராணி, தன்னை பிரிட்டிஷ் இந்தியாவுக்கும் மகாராணியாக அறிவித்துக்கொண்டபிறகே இந்தியர்கள் மீதான அடக்குமுறையும், சுரண்டலும் அதிகரிக்கத் தொடங்கின.

அதற்குமுன்னரே வள்ளலார் தன்னை இயற்கையோடு இணைத்துக் கொண்டார்.வள்ளலார் மறைந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான், நாட்டுக்கு விடுதலையைப் பெற்றுத்தர பாடுபட்ட இயக்கமான காங்கிரசே தோன்றியது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

எனினும் -வள்ளலாரின் காலக்கட்டத்திலேயே ஆங்கிலேய ஆட்சியின் அக்கிரமங்களுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டிருக்க வேண்டும்.
அவர் எழுதிய பாடல் ஒன்றில் ஆட்சியை எதிர்க்கும் தீவிரம் தென்படுகிறது.

“கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக
அருள்நயந்த நன்மார்க்க ராள்க  தெருணயந்த
நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்றுநினைத்
தெல்லாரும் வாழ்க விசைந்து”
- என்று போகும் அப்பாடலின் முதல் வரியே மாட்சிமை பொருந்திய மகாராணி விக்டோரியா தலைமையிலான ஆங்கிலேயரின் ஆட்சியை எதிர்த்துதான் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

இருப்பினும் -ஆங்கிலேயர் ஆட்சியின் மீதான அதிருப்தி, கோபமாக வெடித்து போராட்டங்களாக மாறக்கூடிய சூழல் வருவதற்கு முன்பே அவர் மறைந்துவிட்டார்.ஒருவேளை மேலும் சில ஆண்டுகள் இருந்திருக்கும் பட்சத்தில், வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து அவரும் தெருவில்
இறங்கி, மக்களைத் திரட்டி பெரும் போராட்டங்களை நடத்தியிருப்பார் என்பதில் எவருக்கும் எவ்வித சந்தேகமும் தேவையில்லை.

(அடுப்பு எரியும்)

-தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்


வள்ளலாரும் பெரியாரும்!


தந்தை பெரியார் சுயமரியாதை சிந்தனைக்கும், கடவுள் மறுப்புக்கும் பேர் போனவர். சாதி, சமயங்களை மிகவும் கடுமையாக எதிர்த்தவர். அவரது அதிரடியான அணுகுமுறையால், பெரியார் காலத்தில் வாழ்ந்த ஆன்மீகவாதிகள் பலரும் பெரியாரை தங்கள் எதிரியாகவே கருதி வந்தார்கள்.
ஆனால் -பெரியார் மிகவும் மதித்த ஆன்மீகவாதி, வள்ளலார்.

திருவருட்பாவின் ஆறாம் திருமறையில் இடம்பெற்றிருக்கும் நூறு பாடல்களைத் தொகுத்து, ‘இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு’ என்று ஒரு நூல் வெளிவந்தது. சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த சாமி சிதம்பரனார் இந்தப் பாடல்களைத் தொகுத்தார். வெளியிட்ட பதிப்பகம், தந்தை பெரியாரின் ‘குடியரசுப் பதிப்பகம்’.‘குடியரசுப் பதிப்பகம்’ ஓர் ஆன்மீக நூலை வெளியிட்டது என்று சொன்னால், இன்று பலராலும் நம்ப முடியாது.
இப்பாடல்களில் சாதி, வருணாசிரம முறை மிகவும் கண்டிப்புடன் எதிர்க்கப்பட்டதை பெரிதும் பாராட்டினார் பெரியார்.

எனவே -எல்லாத் தரப்பு மக்களையும் வள்ளலாரின் இப்பாடல்கள் சென் றடைய வேண்டும் என்கிற குறிக்கோளோடு மக்கள் பதிப்பாக, மலிவு விலையில் கொண்டு சேர்த்தார். நூல் விற்பனைக்காக பெரியளவில் விளம்பரமும் செய்யத் தவறவில்லை.பின்னாளில் ஒருமுறை வடலூருக்கு பெரியார் வந்த போது, அவரை சபைக்கு அழைத்து மரியாதை செய்ய நினைத்தார்கள்.

சபை வாசலில் ‘புலால் உண்ணாதவர்கள் உள்ளே வரலாம்’ என்பதைப் போன்ற அறிவிப்பைக் கண்டு, பெரியார் உள்ளே வரவில்லை.“நான் வள்ளலாரை மதிக்கிறேன். எனவேதான் உள்ளே வரவில்லை. ‘புலால் உண்பவர்கள் உள்ளே வரக்கூடாது’ என்று எழுதி யிருந்தால், நான் போராட்டம் நடத்தி உள்ளே வந்திருப்பேன். ஆனால், வள்ளலாரின் அன்பு வழியில் வந்தவர்களோ விடுத்திருப்பது வேண்டுகோள். அதை நான் மதிக்கிறேன்...” என்று விளக்கம் அளித்தார் பெரியார்.

அந்தளவுக்கு வள்ளலாரின் மீதும், அவரது கருத்துகளின் மீதும் பெரியாருக்கு பெரும் அன்பு இருந்திருக்கிறது.ஒருமுறை தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர், ‘ஈரோட்டு வள்ளலார் பெரியார், வடலூர் பெரியார் வள்ளலார்’ என்று அழகிய சொல்லாக்கத்தில் இருவரையும் ஒப்பிட்டார்.பொதுவாக ஆன்மீகத்துறையை தர்க்கரீதியாகக் கேள்வி கேட்டு சங்கடத்துக்கு உள்ளாக்கும் திராவிட இயக்கத்தாரேகூட வள்ளலார் மீது வைத்திருக்கும் அளப்பரிய மரியாதை, வள்ளலாரின் சமூகப் பணிகளுக்கும், சிந்தனைகளுக்கும் கிடைத்திருக்கும் குறிப்பிடத்தக்க நற்சான்றிதழ் ஆகும்.