வால் முளைத்த இளைஞன்... மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!



‘குதிரைவால்’ டீசர் வெளியாகி ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. திடீரென வால் முளைத்த இளைஞன் ஒருவனைப் பார்த்து புருவம் உயர்த்தி சினிமாவிற்காக காத்திருக்கிறார்கள். ‘‘எங்களுக்கென்ன ஒரு சந்தோஷம்னா, தீவிரத்தன்மையோடும், உண்மையோடும் எல்லாருக்கும் இந்தப்படம் போய்ச் சேரணும்னு நினைக்கிறோம். பார்வையாளனோடு நாங்களும் சேர்ந்து வாழ்க்கையிலும், கலையிலும் உயர்வதற்கான எதாவது ஒரு வழியைக் கண்டு பிடிக்கணும். அப்படி ஒரு வழியாகவும் நாங்கள் ‘குதிரைவாலை’ பார்க்கிறோம்.

முதல் படத்திலிருந்தே எளிமையாக எப்படி படம் பண்ணுவது என்பதை நோக்கியே நகர்ந்திருக்கோம். வாழ்க்கையை எளிமையாக வாழ்வதும், ஒரு படத்தை எளிமையாக எடுப்பதும் கஷ்டம். உணரக்கூடிய, புரியக்கூடிய, எல்லோருக்கும் புத்துயிர்ப்பையும் தரக்கூடியதுதான் குதிரைவால்...” சீரான தொனியில் பேசுகிறார்கள் அறிமுக இயக்குநர்களான மனோஜ் - ஷியாம் இரட்டையர். இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம்’ தயாரிப்பு நிறுவனம் இதை வெளியிடுவதன் மூலம் பெரும் கவனம் ஈர்த்திருக்கிறது ‘குதிரைவால்’.

வித்தியாச அனுபவமா இருக்கும் போலிருக்கே…

நிச்சயமா! ஜி.ராஜேஷ் எங்களின் நண்பர். இலக்கிய உலகிலிருந்து கொண்டு ஒரு அருமையான ஸ்கிரிப்ட் வைத்திருந்தார். தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும்னு ஓர் எண்ணம். நாங்க யோசிச்சுக்கிட்டு இருந்த விஷயத்தோட இந்தப்படத்தின் கதை ஒற்றுமையாக இருந்தது. புதுசா ஒரு விஷயம் கொண்டு வருவதற்கு உழைப்பு தனியாக வேணும். அதற்கு மதிப்பு கொடுத்து இந்தப் படத்தை ஆரம்பிச்சோம்.

நாங்க முன்னாடி பண்ணின குறும்படங்களைப் பார்த்துவிட்டு இயக்குநர் பா.ரஞ்சித் இந்தக் கதையைக் கேட்டார். நீலம் நிறுவனம் இந்தத் தயாரிப்பிற்குள் உள்ளே வந்ததும், இதற்கான தனி அடையாளமும் வந்துவிட்டது. சும்மா காசு போட்டு பண்ணிடலாம். ஆனால் அதை மக்கள்கிட்டே போய்ச்  சேர்க்கிறதுதான் ெபரும் காரியமாக இருக்கு.

விக்னேஷ் என்ற நண்பர் ‘யாழி புரடக்‌ஷன்’ மூலமாக வந்து சேர்ந்து படம் செய்கிற சூழல் வந்தது. எதுவும் சரியாக வளர்ந்து வெளியே வர ஒரு நேரம்
பிடிக்குமில்லையா... அந்த இடத்திலிருக்கு ‘குதிரைவால்’.

கலையரசனுக்கு இதில் நிறைய வேலை இருந்திருக்கும்…
ஆமா! இதில் அமானுஷ்யமும் இருக்கு. மேஜிக்கல் ரியலிசத்தின் சில கூறுகளும் உண்டு. பேங்கில் வேலையிலிருக்கிற ஒருத்தனுக்கு ஒரு நாள் விடிஞ்சு பார்க்கும்போது வால் முளைச்சிருக்கு. அது துடிதுடிப்பாக இயங்கிட்டிருக்கு. அது அவனுக்கு மட்டுமே தெரியுமா, அல்லது ஊர் அறியுமா என்ற கேள்வியெல்லாம் இருக்கு.

ஒரு சாதாரணன் வாழ்க்கையில், அமானுஷ்யமாக ஒன்று நடந்ததென்றால் எப்படியிருக்கும்! அதுதான் கதை. ஒருத்தனுக்கு வால் முளைச்சிடுச்சு. அவன் என்ன செய்வான். அவனோட மனநிலை எப்படி யிருக்கும் என்ற கேள்வி வந்துவிடுகிறது. உளவியல் ரீதியாக இது எப்படிப்பட்ட படம் என்பதும் இதிலிருக்கு. பா.ரஞ்சித் கதையை கேட்டுட்டு சந்தோஷமாக ஓகே சொன்னார்.

கலையரசனின் உழைப்பு பற்றிச் சொல்லியே ஆகணும். சுலபமாக நடிச்சிட்டுப் போய்விடுகிற படமில்லை. இரண்டு வாரத்திற்கு முன்னாடி எல்லா நடிகர்களையும் வைச்சு ஒர்க்‌ஷாப் நடத்தினோம். வால் வைச்சிருக்கும் போது அது உடம்பை எப்படி மாற்றும் என்பதில் நடிகருக்கு அதை நிலை நிறுத்த வேண்டிய இடங்கள் இருக்கும். வால் தனியா துடிக்கும்போதும், இயங்கும் போதும் உங்கள் உடல் மொழியும் அதற்கானபடிக்கு மாறணும்.

பிஸிக்கலா கலையரசனும் அதை கொண்டு வரணும். அதோட கேரக்டரோட மனநிலையும் ஒன்று சேரணும். பல முகங்களை ஒன்று கூட்டி ஒரு முகமாகக் கொண்டு வரணும். நல்லபடியாகவும் தெளிவாகவும் வரணும். அது நடந்திருக்கிறது.

அஞ்சலி பட்டீல் நடிச்சிருக்காங்க…

நல்ல ஆர்ட்டிஸ்ட். படத்தில் அவர் அறிமுகமாவதே கலையரசனின் கனவில்தான். கனவில் வந்த பெண் நிஜத்தில் வந்தால் எப்படியிருக்கும்… அப்ப கனவு எது, நிஜம் எது என்ற கேள்வி வருமில்லையா… அவங்க சுத்தி வளைச்சு பேசுகிற கேரக்டர். இரண்டு வார ஒர்க்‌ஷாப்பிற்குப் பிறகு வந்தவருக்கு, டயலாக் சொல்லிக் கொடுத்தோம். ஒர்க்‌ஷாப் முடிஞ்சு அவங்க ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து அச்சு பிசகாமல் ஏற்ற இறக்கங்களோடு தமிழில் பேசினாங்க. இதில் ஒண்ணரை நிமிஷத்திற்கு சேர்ந்த மாதிரி டயலாக் இருக்கும். ஆனால், அவங்களுக்கு தமிழே தெரியாது என்பதுதான் உண்மை.முதல் படத்திற்கு கொஞ்சம் கடினமான கதையோட எப்படி தயாராகி இருக்கீங்க…?

முதல் படம் கொஞ்சம் புதுசாக செய்யணும்னு எங்க குழுவிற்கு ஆர்வம் இருந்தது. நாங்களும், எடிட்டர் கிரிதரன், ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துகுமார் எல்லோரும் சேர்ந்து பிரசாத் இன்ஸ்டிடியூட்டில் படிக்கும்போதே நல்ல இணைப்பு இருந்தது. இந்த ஸ்கிரிப்ட் படிக்கும் போதே எங்களுக்கு நிறைய விஷயங்கள் புதுசாக இருந்தது. இதை மக்களுக்கு கொண்டு போனால் நல்லாயிருக்கும்னு நினைச்சோம். உளவியல், ஆழ் மன கற்பனைகள், டைம் ட்ராவல் குறித்த அறிவியல் புனைவுப் படமாகவும், மேலதிகமாக மேஜிக்கல் ரியலிச சினிமாவாகவும் இருக்கும். படத்தின் முக்கியமான காட்சிகள் கிராஃபிக்ஸில் வருவதற்கு அதிகமாக உழைத்திருக்கிறோம்.

பாடல்கள் எப்படி வந்திருக்கு…
இசைக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்திருக்கோம். இவ்வளவு வித்தியாசமான படத்திற்கு பிரதீப், மார்ட்டின் விசர் இசை. இரண்டு பேரும் நமக்கு திருப்தி வந்தால் பத்தாதுன்னு அவங்களின் திருப்தியையும் பார்த்துக் கொள்கிறவர்கள். ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துகுமாரின் பங்கு அருமையானது. முக்கியமான விஷுவல்கள் காணக் கிடைக்கும். ஒளியமைப்பை உன்னதம் ஆக்கினார்.

எங்க அளவுக்கு நல்ல படம் கொடுத்திட்டோம்னு சந்தோஷமாக இருக்கோம். அதை மக்களும் பார்த்து நிஜமாகும்போது எங்களின் கனவுகள் வெற்றியடையும். கொஞ்ச நாளாக நாங்கள் வேறு எதையும் யோசிக்கலை. முடிந்த அளவு வித்தியாசப்படுத்தித் தருவதில் பாடுபட்டிருக்கோம். சில நேரங்களில் ‘நம்ம வீட்டுக் கல்யாணம் மாதிரி இழுத்துப் போட்டுச் செய்றாங்க’னு சொல்வோம் இல்லையா, அது மாதிரியான காரியம்தான் இது. நிச்சயம் ஆர்ட் பிலிம் கிடையாது. அழகியல் இருக்கு. பேசு பொருள் விட்டுப்போகவே இல்லை. அதில் நேர்மை இருக்கிறதை நீங்கள் உணர முடியும்.l

நா.கதிர்வேலன்