நியூஸ் சாண்ட்விச்



82 வயது யூத்!

பாரா கிளைடிங் செய்து சாதனை படைத்துள்ளார் துக்மிட் லெப்ஜா என்ற 82 வயது பாட்டி. சிக்கிமில் உள்ள ராங்காவில் இந்த பாட்டி பாராசூட்டில் பறந்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். சிக்கிமில் 68 வயதில் பாராசூட்டில் முதியவர் ஒருவர் பறந்ததே அங்கு சாதனையாக இதுவரை இருந்தது. அதனை துக்மிட் முறியடித்துள்ளார். சுமார் 4500 அடிகள் உயரத்தில் 6 நிமிடத்துக்கு மேலாக வானில் பறந்து அசத்தியுள்ளார் துக்மிட் லெப்ஜா!

அமெரிக்க அதிபருக்கு மணல் வாழ்த்து!

அமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் வெற்றி பெற்றுள்ளதற்கு உலக நாடுகளைச் சேர்ந்த அனைத்துத் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து விஷயங்களுக்கும் தன் கருத்தை தெரிவித்து வரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சிறந்த மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், தனது வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக அவ்விருவரின் மணல் சிற்பத்தை ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில்  உருவாக்கியுள்ளார். 25 அடி நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மணல் சிற்பம் வடிவமைக்க 6 மணி நேரமானதாம்!

இனி சாலையில் குப்பை கொட்டினால் இதுதான் தண்டனை!

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் தூய்மை பணியாளர்கள் தினமும் வீடு வீடாக குப்பைகளை சேகரிக்க செல்கின்றனர். ஆனால், இவை அனைத்தையும் மீறி, சிலர் சாலைகளில் குப்பைகளை கொட்டி மாசுபடுத்துவது தொடர் கதையானது. இதற்கு ஒரு முடிவு கட்டுவதற்காக நகராட்சி ஆணையர் ஸ்வப்னில் தினகர், குப்பைகளை சாலைகளிலேயே தூக்கி எறிபவர்களை கண்டறிந்து, குப்பைகளை சேகரித்து அவர்களது வீட்டு வாசலுக்கே சென்று கொட்டுமாறு உத்தரவிட்டுள்ளார்!

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய யானைக் குட்டி!

கேரளாவின் தென்மாலா வனப்பகுதியில் கடந்த ஆண்டு கடுமையான காயங்களுடன் குட்டி யானை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. 3 வாரக் குட்டியாக இருந்த ஸ்ரீகுட்டி யானை பிழைக்க, அப்போது 40% வாய்ப்பு மட்டுமே இருந்தது. முதலுதவி அளித்துவிட்டு, தாய் யானை வந்துவிடும் என்று வனத்துறையினர் ஒரு நாள் அங்கேயே காத்திருந்த நிலையில், எந்த யானையும் வரவில்லை.

பின்னர் கோட்டூர் யானைகள் மறுவாழ்வு மையத்துக்கு அழைத்து வரப்பட்ட குட்டிக்கு குளுக்கோஸும் லாக்டோஜனும் அளிக்கப்பட்டது.
மெல்ல மெல்ல உடல் தேறிய குட்டி யானை, பி-புரோட்டீன், ராகி ஆகியவற்றை உட்கொண்டு நலம் பெற்றது.

இந்த குட்டிதான் தனது முதல் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி யுள்ளது! விழாவில் யானைப் பாகனுடன் கோட்டூர் யானைகள் மறுவாழ்வு மையத்தில் இருக்கும் 15 யானைகளும் கலந்துகொண்டன!

யூ டியூபை இப்படியும் பயன்படுத்தலாம்!

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம், கெண்டாகாவ்ன் கிராமத்தைச் சேர்ந்த மண்பாண்ட கைவினைக் கலைஞர் அசோக் சக்கரதாரி. 62 வயதான இவர், தொடர்ந்து சுடர்விட்டு எரியும் மண் விளக்கை உருவாக்க தீவிர முயற்சிகள் எடுத்ததன் பலனாக 24 மணி நேரம் முதல் 40 மணி நேரம் வரை தொடர்ந்து சுடர்விட்டு எரியும் மண் விளக்கை உருவாக்கி உள்ளார். குடுவை போன்ற அமைப்பில் அகல்விளக்கை இணைத்து புதிய மாடலில் உருவாக்கி இருக்கும் இதற்கு ‘மேஜிக் லேம்ப்’ என பெயரிடப்பட்டுள்ளது.

‘‘யூ டியூபில் பல வீடியோக்களைப் பார்ப்பேன். அப்படித்தான் தொடர்ந்து எரிவதற்கு தேவையான எண்ணெய், தானாகவே செல்லும் வகையில் இருந்த விளக்கு ஒன்றை பார்த்தேன். அதேபோல நுட்பத்துடன் கூடிய பல வீடியோக்களைப் பார்த்து இந்த விளக்கை வடிவமைத்தேன்...” என்கிறார் அசோக்.

அன்னம் அரசு