தல! sixers story -26



Bossஐ வெறுப்பேற்றிய Baaz!

ஒரே ஆண்டுதான்.தோனி, சர்வதேச கிரிக்கெட் களத்துக்கு வந்து ஓராண்டுக்குள் பல லட்சம் கிரிக்கெட் ரசிகர்களின் உள்ளங்களை வென்றார்.

இந்தியாவில் மட்டுமின்றி, கிரிக்கெட் விளையாடும் வெளிநாடுகளிலும் தோனியின் பெயர் ஆச்சரியத்தோடு உச்சரிக்கப்பட்டது.
வித்தியாசமான ஹேர்ஸ்டைல், சிரிப்பே காட்டாத இறுகிய முகம், பட்டாலே பவுண்டரி, விளாசினாலே சிக்ஸர் என்று எதிரணி பவுலர்களுக்கு பீதியும், சொந்த அணியினருக்கு ஆரவாரமும் தந்த பேட்டிங் அசுரன்.ஏகப்பட்ட பெண் ரசிகைகள். பொதுவாக ஒரு கிரிக்கெட்டருக்கு பெண் ரசிகைகள் இருந்தால், அவர் பிளேபாயாக ஊடகங்களால் சித்தரிக்கப்படுவார்.

ஆனால் -தோனியோ, ரசிகைகளுக்கு அண்ணன். ரசிகர்களுக்கு தல.தோனி அளவுக்கு க்ளீன் பர்சனல் இமேஜ் அமையப்பட்ட கிரிக்கெட் நட்சத்திரங்கள் வெகு அரிதானவர்கள்.இத்தனைக்கும் அவர் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கூட அப்போது விளையாடி இருந்ததில்லை.ஒருநாள் போட்டியில் யார் வேண்டுமானாலும் நாலு சிக்ஸர்களை பறக்கவிட்டு பிரபலமாகலாம்.

ஒரு கிரிக்கெட்டராக மதிக்கப்பட வேண்டுமானால் டெஸ்ட் போட்டிகளிலும் திறனை காட்டியாக வேண்டும்.அப்படியிருக்க -தோனிக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து கொடுத்து உலகமே அவரை மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக ஒப்புக் கொண்டது.அணிக்கு புதுமுகங்களாக வரும் வீரர்களை முதலில் ‘சி’ கிரேடு தரவரிசையில்தான் கிரிக்கெட் வாரியம் நியமிக்கும்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடும் பட்சத்திலேயே ‘பி’ கிரேடு, ‘ஏ’ கிரேடு என்று படிப்படியாக புரமோஷன் கிடைக்கும்.இந்த கிரேடுகளின் பலன் என்னவென்றால் போட்டிக்கு வழங்கப்படும் சம்பளத்தில் இருக்கும் வித்தியாசம்தான்.மேலும் -‘ஏ’ கிரேடு வீரர்களுக்கே பெரும்பாலும் பெரிய நிறுவனங் களின் விளம்பர வாய்ப்புகள் கிடைக்கும்.தோனிக்கு எடுத்தவுடனேயே டபுள் பிரமோஷன்தான்.

‘சி’ கிரேடு வழங்கப்படாமல், நேரடியாகவே ‘பி’ கிரேடு வீரராக, கிரிக்கெட் வாரியம் அவரை அங்கீ கரித்தது.2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் களத்துக்கு அறிமுகமான தோனிக்கு, 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் முதன்முதலாக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடக்கூடிய வாய்ப்பு அமைந்தது.இத்தனைக்கும் தோனி அறிமுகமான பின்னர் இந்தியா பதினைந்துக்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் விளையாடி இருந்தது.
அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக இருந்த தினேஷ் கார்த்திக், பெரும்பாலும் ஒற்றை இலக்க ரன்களிலேயே அவுட் ஆகிக் கொண்டிருந்தார்.

எனவே, இலங்கை அணிக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக தோனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
டிசம்பர் 2ம் தேதி போட்டி தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.பிற்காலத்தில் கிரிக்கெட் உலகின் Boss ஆக அறியப்பட்ட தோனிக்கு, இன்னொரு பாஸ் சோதனையாக அமைந்தது.இந்த பாஸ் ஒரு புயல்.

Baaz என்று பெயர் சூட்டப்பட்டிருந்த இப்புயல், சென்னையை அப்போது பந்தாடியது.எனவே -முதல் மூன்றரை நாட்களுக்கு போட்டியில் ஒரு பந்துகூட வீசப்படவில்லை.பெவிலியனில் அமர்ந்து கொண்டு, மழையால் வெள்ளக்காடாகி இருந்த சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் தோனி.நான்காவது நாள் வருணபகவான் கருணை காட்ட, சூரிய பகவான் வானத்தில் தெரிந்தார்.

ஈரமான மைதானத்தில் இந்தியா முதலில் விளையாடத் தொடங்கியது.மிகவும் மந்தமான ஆட்டம்.ஓப்பனிங் பேட்ஸ்மேன் காம்பிர், டக்-அவுட் ஆகி நடையைக் கட்டினார்.சேவாக் மட்டும் 7 பவுண்டரி கள் விளாசி கொஞ்சம் சுறுசுறுப்பை ஏற்படுத்தினார். திராவிட்டும், டெண்டுல்கரும் செமையாக கட்டையைப் போட்டு, இலங்கை பவுலர்களை வெறுப்பேற்றினர்.

அவர்களும் வெளியேறிய பிறகு அப்போதைய இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களான லட்சுமணனும், கங்குலியும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள்.ஏழாவது விக்கெட்டாக களமிறங்கிய தோனி, ஆறு பவுண்டரிகளை விளாசி, கேலரியில் இருந்த கொஞ்சநஞ்சம் கூட்டத்தை குஷிப்படுத்தினார்.அவரும் 30 ரன்கள் எடுத்த திருப்தியில் வெளியேறிய நிலையில், வால் வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆனார்கள்.

இந்தியா முதல் இன்னிங்ஸில் 167 ரன்கள்தான் எடுத்தது. 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்த திருப்தியோடு ‘டிரா’ செய்துகொள்ள இலங்கை சம்மதித்தது.

விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியே தோனிக்கு திருப்தியாக அமையவில்லை.முதல் ஓவரிலேயே அவுட் ஆன இலங்கை ஓப்பனர் குணவர்த்தனேயின் கேட்ச்சைப் பிடித்து, விக்கெட் கீப்பராக தன் கணக்கினை அவர் தொடங்கியிருந்தது மட்டுமே ஆறுதல்.

இருப்பினும் -இலங்கை அணியுடன் தில்லியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி, இந்திய அணிக்கு மறக்க முடியாத போட்டியாக அமைந்தது.
உலகிலேயே அதிக டெஸ்ட் செஞ்சுரி என்கிற சாதனையை 22 ஆண்டுகளாக தக்க வைத்திருந்தார் சுனில் கவாஸ்கர்.அவரது சாதனையை மிஞ்சும் விதமாக 35வது செஞ்சுரியை அந்தப் போட்டியில் விளாசினார் டெண்டுல்கர்.

போட்டியில் முதல் இன்னிங்ஸில் தகத்தகாய சூரியனாக டெண்டுல்கர் மிளிர, லட்சுமணனின் அரை செஞ்சுரி தவிர்த்து இந்திய வீரர்கள் வேறு எவரும் குறிப்பிடும்படியாக ஸ்கோர் செய்யவில்லை தோனி வெறும் 5 ரன்களிலேயே, முத்தையா முரளிதரனின் தூஸ்ராவுக்கு பலியானார்.முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் எடுத்த இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க முற்பட்ட இலங்கை 230 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அனில் கும்ப்ளே 6 விக்கெட்டுகளை அள்ளி அசத்தினார்.

பரபரப்பான இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது.முதல் போட்டி மழையால் சொதப்பி டிரா ஆகிவிட, இந்தப் போட்டியில் எப்படியும் வென்றே ஆகவேண்டும் என்று வியூகம் அமைத்தார் கேப்டன் திராவிட்.விரைவாக ரன்களைக் குவிக்க திட்டமிட்டார்.எனவே -தான், ஓப்பனிங் இறங்காமல் அதிரடியாக ஆடுவதற்கு ஏதுவாக பவுலர் இர்ஃபான் பதானை அனுப்பினார்.

பதானும் டிராவிட்டின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பவுண்டரி களும், சிக்ஸர்களுமாக விளாசி 93 ரன்கள் எடுத்தார்.ஆனால் -இம்முறை தோனி, தன் திறமையை நிரூபிக்க இந்த இன்னிங்ஸை பயன்படுத்திக் கொண்டார்.

(அடித்து ஆடுவோம்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்