நான்... உதயணன்



வெகுஜனப் பத்திரிகைகளால் ஒதுக்கப்பட்டவன்... உதாசீனப்படுத்தப்பட்டவன்... அவமானப்படுத்தப்பட்டவன்... இதெல்லாம்தான் நான். அடியேன் எழுதுவது எல்லாம் ஒரு கதையா என ஒரு வெகுஜனப் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் என் படைப்பை 1970களில் ஏளனம் செய்தார்; நான் எழுதிய கதையை என் முகத்தில் தூக்கி வீசினார். அப்படிப்பட்டவன் இன்று ‘குங்குமம்’ என்ற வெகுஜனப் பத்திரிகையில் ‘நான்’ என்ற தலைப்பில் என்னைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்! எல்லாம் எம்பெருமான் அருள்; பகவான் ரமணரின் ஆசி.

இதுவரை 40க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறேன். இதில் 35க்கும் மேற்பட்டவை சரித்திர நாவல்கள். 25க்கும் மேற்பட்ட வரலாற்று நாவல்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் பக்கங்கள் கொண்டவை. எனது எல்லா நாவல்களுமே பல பதிப்புகளைக் கடக்கின்றன. எனது எந்த நாவலும் எந்தப் பத்திரிகையிலும் தொடராக வெளி வராதவை. எல்லாமே ‘கெளரா பதிப்பகத்தின்’ ஓர் அங்கமான ‘சீதை பதிப்பகம்’ வழியே நேரடியாக வெளிவந்தவை; வருபவை.

கொரோனா லாக்டவுனுக்கு முன் ‘பள்ளிகொண்ட பெருமாள்’ என்ற இரு பாகங்கள் கொண்ட வரலாற்று நாவல் வெளிவந்தது. லாக்டவுன் காலத்தில் ‘கடல் நிலா’ என்ற இரு பாகங்கள் கொண்ட சரித்திர நாவல் பிரசுரமானது. இதோ இந்த டிசம்பரில் - அடுத்த மாதம் - அடுத்த வரலாற்று நாவல் வெளிவரப் போகிறது. இயற்பெயர் நரசிம்மன்.
சொந்த ஊர் காஞ்சிபுரம். வேலை நிமித்தமாக சென்னை வந்தவன். அப்பாவுக்கு சொந்தமாக ஒரு பெருமாள் கோயில் இருந்தது. பரம்பரையாகவே தர்மகர்த்தா. எங்களுக்கென தலைமுறை தலைமுறையாக இருந்து வந்த கோயில் அது. அதன் வருமானத்தில்தான் எங்கள் வாழ்க்கை ஓடியது.

வறுமை சூழ் குடும்பம். அந்தக் கோயில் வருமானத்தில்தான் ஏழு பையன்களையும், இரண்டு பெண்களையும் என் அப்பா வளர்த்தார். காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் கல்லூரியில் பிஏ படிப்பு. 1969ல் படிப்பு முடிந்து ரெண்டு வருடங்கள் வேலை தேடிக்கொண்டிருந்தேன். பின் 1971ல் சென்னையில் வேலை கிடைத்தது. நிறைய முயற்சிகள், தேடல்கள், அலைச்சல்களுக்குப் பிறகு மெடிக்கல் துறையில் வேலை.

அப்பா னிவாசன், அம்மா சீரங்கம்மாள். அப்பா ஆந்திராக்காரர், அம்மா கன்னடத்துக்காரர். அப்பா இருக்கும்போதே என் சகோதரர்கள் அனைவருக்கும் அரசாங்க வேலை கிடைத்துவிட்டது.படிக்கும்போது ‘மனோன்மணியம்’ செய்யுள் மீது ஏற்பட்ட ஆர்வம், மெல்ல மெல்ல சரித்திரக் கதைகளின் மீது காதலாகத் திரும்பியது. இதன் விளைவுதான் ‘உதயணன்’ என்ற புனைப்பெயர்.சில கதைகள் எழுதி பிரபல பத்திரிகைகளில் கொடுத்தேன். சில மாதங்களுக்குப் பின் போய்க் கேட்டால் ‘தேர்வானால் நிச்சயம் பத்திரிகையில் வரும். இல்லையெனில் இங்கே எங்காவது குப்பையில் கிடக்கும்...’ என்றார்கள்.

இப்படி ஒன்றல்ல... இரண்டல்ல... நிறைய அவமானங்களை சந்தித்திருக்கிறேன். ஆனால், ஒருபோதும் துவண்டதில்லை. எல்லா அவமானங்களையும் என்னை செதுக்கும் உளியாகவே கருதினேன்; ஏற்றேன். அமரர் கல்கி, சாண்டில்யன் மீது எனக்கு தீராக் காதல். குறிப்பாக சாண்டில்யனின் வர்ணனைகள். ஒரு மலை என்பதை தனது காட்சி ரீதியான விவரணை வழியே படிப்பவரின் மனதில் பதித்துவிடுவார். எனக்குத் தெரிந்து கதைகளில் தன் வர்ணனை மூலம் காட்சியமைப்பைக் கொண்டு வந்ததில் வல்லவர் சாண்டில்யன்தான். அவரது எழுத்தால் ஈர்க்கப்பட்டே
சரித்திர நாவல்கள் பக்கம் வந்தேன்.

கல்லூரி நாட்களில் இருந்தே எழுதும் பழக்கம் உண்டு. ஆனால், எதற்காக எழுதுகிறோம் என்னும் லட்சியம் எதுவும் இல்லாமல்தான் எழுதத் துவங்கினேன். அந்த வேளைதான் நா.பார்த்தசாரதியின் ‘பொன் விலங்கு’ நாவலைப் படித்தேன். துளிர்விட்டிருந்த எழுதும் ஆர்வம் விருட்சமாக வளர்ந்தது.சில சமூக நாவல்கள் எழுதினேன். பின்னர் சரித்திர நாவல்கள் பக்கம் முழுமையாகத் திரும்பினேன்.

அப்போதெல்லாம் பெரிய பெரிய பதிப்பகங்களில் நம் நாவல்கள் பிரசுரமாக வேண்டுமென்றால் நாம்தான் செலவு செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. என்னிடம் அந்தளவுக்கு வசதியில்லை. அதனால்தான் பத்திரிகைகளை நாடினேன். ஆனால், அவமானங்களும் உதாசீனங்களுமே கிடைத்தன.
 
1983 வரை இதே நிலைதான். 1984ல் திருமணமானது. மனைவி பெயர் வைதேகி. வீட்டில் பார்த்து முடித்த பெண். பத்து வருடங்கள் கதை எழுதாமல் இருந்தேன். என் மனைவியின் உடல்நிலை மிகவும் மோசமானதால் அவரைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. மனநிலை, உடல்நிலை என என் மனைவி மிகவும் அவதிப்பட்டார்.

அவரது உடல்நிலை கொஞ்சம் தேறியதும் எழுத்து சார்ந்த அடுத்தகட்ட வாழ்க்கை குறித்த அலசல் தலைதூக்கியது. ஏன் நாமே பதிப்
பகம் ஆரம்பிக்கக் கூடாது என யோசித்து என் மனைவியின் பெயரிலும் எனது புனைப்பெயரிலும் ‘வைதேகி பதிப்பகம்’ - ‘உதயணன் பதிப்பகம்’ என தொடங்கினேன்.

பத்து புத்தகங்கள் என் சொந்த செலவில் நானே வெளியிட்டேன். சரித்திர நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், சமூக நாவல்கள்... இப்படி. இதிலும் நஷ்டம். சில புத்தகங்கள் ஆயிரம் என்னும் எண்ணிக்கையில் அச்சடித்தேன். ஐநூறுக்குத்தான் ஆர்டர்கள் வந்தன. சில புத்தகங்களுக்கு ஆர்டர் வரவே இல்லை.

பத்து வருடங்கள்... தோல்வி தான் மிஞ்சியது. சரி, எதுவும் வேண்டாம் என மீண்டும் சில வருடங்கள் எழுதுவதற்கு ஓய்வு கொடுத்தேன்.
இதற்குள் எனக்கும் பணி ஓய்வு வந்தது. அதுவரையில் என் மாதச் சம்பளத்தை வைத்துதான் பதிப்பகம் நடத்திக் கொண்டிருந்தேன். ஓய்வு கிடைத்ததால் பதிப்பக வேலையை நிறுத்திவிட்டேன்.

அந்நேரம்தான் என் நண்பரும் என்னைப் போலவே வரலாற்று நாவல்களை எழுதி வருபவருமான மோகன் வழியாக ‘கௌரா பதிப்பகம்’ அறிமுகமானது. உண்மையிலேயே அது எம்பெருமான் என்னை ஆசீர்வதித்த நொடி. என் எழுத்துக்களை பிரசுரிக்க விருப்பம் தெரிவித்த ‘கெளரா பதிப்பகம்’, உடனடியாக எனது பழைய நாவல்கள் அனைத்தையும் வெளியிட்டார்கள்.

அடுத்து ‘வானதி பதிப்பகம்’ மூன்று நாவல்களை வெளியிட்டனர். ‘யாழினி பதிப்பகம்’ ஒரு புத்தகத்தை பிரசுரித்தது. இப்பொழுது எனது அத்தனை நாவல்களையும் ‘கெளரா பதிப்பக’மே வெளியிடுகிறது. என்னை முழுமையாக அரவணைத்து ஆதரித்து வருகிறது. முப்பது சரித்திர நாவல்களும், 6 சமூக நாவல்களும் சிறுகதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு மாக மொத்தம் 44 புத்தகங்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. அத்தனையும் விற்பனையில்
சாதனை புரிவதாக பதிப்பகத்தார் சொல்கின்றனர். இறைவனுக்கு நன்றி.  

என் மனைவி 2012ல் காலமானார். சின்ன தடுமாற்றம். அந்த இழப்பில் இருந்து மீண்டு திரும்பவும் எழுதத் துவங்கினேன். ஒவ்வொரு சரித்திர நாவல் எழுதுவதற்கு முன்பும் கள ஆய்வு செய்வேன். தொடர்புள்ள இடங் களுக்கும் ஊர்களுக்கும் பயணப் படுவேன். ஏராளமான குறிப்புகளை எடுப்பேன்.  அதன்பிறகுதான் எழுதத் தொடங்குவேன்.

காஞ்சிபுரத்தில் பிறந்தவன் என்பதால் அந்த ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளை வைத்தே பெரும்பாலும் எழுதுகிறேன். அதிகமும் பல்லவ மன்னர்கள்தான் என் நாயகர்கள். பல நாட்கள் அலைவேன். பலமணி நேரங்கள் கன்னிமாரா நூலகத்தில் செலவிடுவேன். வரலாறு சம்பந்தப்பட்ட புத்தகங்களைத் தேடித் தேடி வாங்குகிறேன். விரல் நுனியில் வந்துவிட்ட டிஜிட்டலில் முக்கியமான வரலாற்று ஆய்வுக் கட்டுரைகளைத் தேடி எடுத்து பிரிண்ட் அவுட் எடுக்கிறேன்.  

சாண்டில்யன்தான் எனக்கு மானசீக குரு, அவரைப் போலவே எழுத எண்ணி முயற்சி செய்துதான் என் நாவல்களை அமைப்பேன். அதேபோல் இருக்கிறதா என்பதை வாசகர்கள்தான் சொல்ல வேண்டும். மற்ற நாவல்கள் போல் சரித்திர நாவல்களை அவ்வளவு சுலபத்தில் எழுத முடியாது. ‘இது ஒரு சலிப்பான வகையறா’ என படிக்காமலேயே, அதை உணராமலேயே ஒதுக்கிவிடும் மக்கள் அதிகம். இதையெல்லாம் மீறித்தான் வாசகர்களை ஒவ்வொரு சரித்திர எழுத்தாளரும் தங்கள் பக்கம் ஈர்க்க முயற்சி செய்கிறார்கள்.

நண்பர் சுந்தர் கிருஷ்ணன், இதுவரை வந்த சரித்திர நாவல்களைக் கணக்கிட்டு, மொத்தமே ஆயிரம் நாவல்கள்தான் இருப்பதாகச் சொன்னார். இத்தனை வருடங்களில் வெறும் 1000 வரலாற்று நாவல்கள்தான் வெளியாகியுள்ளன. இதிலிருந்தே இதற்கு செலவாகும் உழைப்பை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
சரித்திர நாவல்கள் மட்டுமல்ல, பொதுவாகவே ஒரு கதை எழுத நிச்சயம் கள ஆய்வு வேண்டும். ஓர் இடத்தைக் குறிப்பிடுகிறோம் எனில் விரிவாக அதன் பூலோக அடையாளங்களைச் சேர்த்து எழுதும் போதுதான் அக்கதைக்கு உயிர் கிடைக்கும்.

முன்பே சொன்னபடி என் இயற்பெயர் நரசிம்மன். வீட்டில் செல்லமாக என்னை ‘ஜாலி’ என அழைப்பதுண்டு. ஏன் ஜாலி என்பது எனக்கும் தெரியாது.
சமூகமோ சரித்திரமோ எழுதும் ஆசையுள்ள அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். நிறைய படியுங்கள். தொடர்ந்து படியுங்கள். திட்டவட்டமாக கள ஆய்வும், ஆராய்ச்சிகளும் செய்தபிறகு எழுதத் தொடங்குங்கள்.

உங்கள் எழுத்தை பலரும் கிண்டல் செய்வார்கள்; அவமானப்படுத்துவார்கள். எதையும் மனதில் ஏற்றிக் கொண்டு வருந்தாதீர்கள். முடங்காதீர்கள்.
மாறாக, தொடர்ந்து அர்ப்பணிப்புடன் எழுதுங்கள். அப்படித்தான் கடந்த 40 ஆண்டுகளாக நான் எழுதி வருகிறேன். இதில் முதல் 30 ஆண்டுகள் என்னை விரல்விட்டு எண்ணக் கூடியவர்களுக்கு மட்டுமே தெரியும். இப்பொழுது கடந்த 10 ஆண்டுகளாக என்னை அறிந்தவர்களின் எண்ணிக்கை சற்றே உயர்ந்திருக்கிறது.

ஒருவேளை நான் சந்தித்த அவமானங்களும் புறக்கணிப்பு களும் என்னை முடக்கியிருந்தால் இன்று ‘குங்குமம்’ வார இதழில் ‘நான்’ பகுதியில்
பேசிக் கொண்டிருக்க மாட்டேன்.இது அறிவுரை அல்ல. உங்களைப் போன்ற ஓர் எழுத்தாளன் கடந்து வந்த பாதை. இதைத்தான் உங்கள் முன் வாக்கு
மூலம் அளித்திருக்கிறேன். ஏற்கவேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை. ஆனால், யோசித்துப் பார்க்கலாம்தானே...

எழுதுங்கள். எழுதுங்கள். எழுதுங்கள். அவமானங்களை ஏணியாகக் கருதுங்கள். ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை... சரியான வாய்ப்பு வரும்
வரை விழிப்புடன் காத்திருங்கள். உங்களை, உங்கள் எழுத்தை... பட்டை தீட்டிக் கொண்டே இருங்கள்!

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்