அமெரிக்க அதிபர் தேர்தலை தீர்மானிக்கும் கறுப்புப் பொருளாதாரம்!



உலகில் இரண்டு வகையான பொருளாதாரங்கள் உள்ளன. ஒன்று நம் எல்லோருக்கும் தெரிந்த, நாம் எல்லோரும் ஈடுபட்டிருக்கும் வெள்ளைப் பொருளாதாரம். சராசரி குடிமகன் ஒருவர் தன் அன்றாட உழைப்பின் வழியே உருவாக்கும் பண்டம் அல்லது சேவையால் திரளும் செல்வமே வெள்ளைப் பொருளாதாரம்.

இதற்கு நிறுவனங்கள், அரசுகள் உட்பட அனைத்து அமைப்புகளிடமும் முறையான கணக்கு இருக்கும். இந்த செல்வத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ சட்டரீதியாகவோ யாரும் தார்மிகமாக நுகர முடியும். இதற்கு சட்டத்தால் தடை இருக்காது. இதற்கு நேர் மாறாக கறுப்புப் பொருளாதாரம் என்பது சட்டத்துக்குப் புறம்பான காரியங்களால் திரளும் செல்வம். கறுப்புப் பொருளாதாரத்தின் வரலாறு வெள்ளைப் பொருளாதாரத்தின் வரலாற்றுக்கு இணையானது.

பண்டமாற்றுமுறை நிகழ்ந்து கொண்டிருந்த சமூகங்களில் கறுப்புப் பொருளாதாரம் இல்லை. ஆனால், பணம் என்பதை தனியொரு மதிப்பு மிக்க பண்டமாக மனிதர்கள் வரித்துக் கொண்டபோது பொருளாதாரம் என்ற துறை வேறொரு பரிணாமம் பெற்றது. அப்போதுதான் கறுப்புப் பணம் உருவானது. அரசு மையச் சமூகங்கள் வலுப்பெற்றுவிட்ட காலத்திலேயே கறுப்புப் பொருளாதாரங்களும் உருவாகிவிட்டன.

ஒரு சமூகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட தொழில்களின் மூலம் திரளும் செல்வம் கறுப்புப் பொருளாதாரம் என்று சொல்லலாம்.
இன்று உலகம் முழுதும் பெரும்பாலும் கறுப்புப் பொருளாதாரம் என்பது போதைப் பொருட்கள், ஆட்கடத்தல், விபசாரம், ஆயுத வணிகம், கொள்ளை, கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் ஆகியவை மூலம் திரள்வதாக உள்ளது.

கறுப்புப் பொருளாதாரம் என்று பொதுவாகச் சொன்னாலும் அதில் நான்கு வகைகள் உள்ளன என்கிறார்கள் நிபுணர்கள்.
சட்டத்துக்குப் புறம்பான செல்வம், சட்டத்திடம் அறிவிக்கப்படாத செல்வம், சட்டத்தில் பதிவாகாத செல்வம், சட்டத்துக்கு அப்பாற்பட்ட செல்வம் என இதனைச் சொல்வார்கள்.

சட்டத்துக்குப் புறம்பான செல்வம் என்பது மேலே சொன்னது போல் அரசுகளால் தடைசெய்யப்பட்ட குற்றச் செயல்கள் மூலம் திரட்டப்படும் செல்வம். இந்த செல்வம்தான் இன்று அரசு களின் மாபெரும் தலைவலியாக உருவாகியிருக்கிறது. சட்டத்திடம் அறிவிக்கப்படாத செல்வம் என்பது வரி ஏய்ப்பு போன்ற காரணங்களுக்காக மறைக்கப்படும் செல்வம். இதனை கணக்கில் கொண்டு வராமல் கையில் ரொக்கமாகவோ சொத்துக்களாகவோ வைத்திருப்பார்கள்.

சட்டத்தில் பதிவாகாத செல்வம் என்பது அறிவிக்கப்படாத செல்வங்கள் மூலம் உருவாகும் செல்வங்களும், பினாமி சொத்துக்களும்தான்.
சட்டத்துக்கு அப்பாற்பட்ட செல்வம் என்பது சட்டத்தால் வரையறுக்கப்பட்ட தொழில்கள், தடை செய்யப்பட்ட தொழில்கள் இவை இரண்டுக்கும் அப்பாற்பட்டு திரட்டப்படும் செல்வம். ஓர் அரசின் உள்நாட்டு உற்பத்திக் கணக்கீடுகள் போன்றவற்றில் வராத செல்வங்களையும் இந்த வகையில் சொல்வார்கள்.

இப்படி நான்கு வகையான கறுப்புப் பொருளாதாரங்கள் இருந்தாலும் ஒவ்வொரு அரசுக்குமே மாபெரும் அச்சுறுத்தல் என்பது சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் திரட்டப்படும் செல்வங்கள்தாம். கறுப்புப் பணச் சந்தையிலும் கறுப்புப் பொருளாதாரத்திலும் இதுவே அளவிலும் பெரியது. வெள்ளைப் பொருளாதாரத்துக்கு இணையான ஆழ் நீரோட்டமும் உயிர்ப்பும் துடிப்பும் கொண்டது.

ஓர் உதாரணத்துக்கு, இந்திய கண்டம் முழுதும் நாடு விடுதலைக்குப் பிறகு திரட்டப்பட்ட வெள்ளைப் பொருளாதாரம், அதேபோல் அதற்குப் பக்கவாட்டில் திரண்டு வந்திருக்கும் கறுப்புப் பொருளாதாரம் இரண்டையும் எடுத்துக்கொண்டால், முதலாவதற்கு நம்பகத்தன்மையான வரலாறும் கணக்கும் இருக்கிறது. ஆனால், பின்னது காட்டு வெள்ளம் போல் கட்டற்றுப் பெருகி சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் அரூபப் புகை போல் நிரம்பியிருக்கிறது.

இன்று ஒரு கறுப்புப் பொருளாதாரத்தின் செல்வம் யார் கையில் என்னவாக இருக்கிறது என்பதைக் கண்டறிவதோ சொல்வதோ யாராலும் இயலாத காரியம். பல சமயங்களில் உலகம் முழுதும் உள்ள அரசுகளை அமைக்கவும் கலைக்கவும் தீர்மானிக்கவும் கறுப்புப் பொருளாதாரமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மாபெரும் மாஃபியாக்கள் இன்று உலகம் முழுதும் நிழல் உலகில் கோலோச்சுகிறார்கள்.

நமது மீடியாக்களின் மஞ்சள் வெளிச்சம் விழுந்தது என்னவோ எஸ்கோபார், பின்லேடன், சோட்டா ராஜன், தாவுத் இப்ராஹிம் போன்ற ஓரிருவர் மீதுதான். ஆனால், ஒருங்கிணைக்கப்பட்ட குற்றச் செயல்களில் மாபெரும் கார்ப்பரேட்டுகள் எல்லாம் கறுப்புப் பொருளாதாரத்தில் இருக்கின்றன.

உலகின் மாபெரும் கறுப்புப் பொருளாதாரம் என்று அமெரிக்கக் கறுப்புப் பொருளாதாரத்தைச் சொல்கிறார்கள்.

ஆயுதம் மற்றும் போதைப் பொருள் வணிகம்தான் இந்த மாபெரும் சந்தையின் மூல காரணம். அமெரிக்காவிலிருந்து உலகம் முழுதும் எல்லாப்பகுதிகளுக்கும் இவை கடத்தப்படுகின்றன என்கிறார்கள்.

குறிப்பாக, தென் அமெரிக்காவின் நேரடிப் பொருளாதாரத்தோடு ஒப்பிடும்போது அதன் கறுப்புப் பொருளாதாரம் ஐம்பது சதவீதம் வரை கரைபுரண்டு ஓடுகிறது என்கிறார்கள். ஆசியாவில் முப்பது சதவீதமும் இந்தியாவில் இருபத்தாறு சதவீதமும் ஆப்பிரிக்காவில் நாற்பத்தைந்து சதவீதமும் கறுப்புப் பொருளாதாரம் இருக்கிறது.

ஐம்பது சதவீதத்துக்கு மேல் கறுப்புப் பொருளாதாரம் உள்ள நாடுகளில் சராசரியாக ஒவ்வொரு மூன்றாவது மனிதனும் சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் சம்பாதிக்கிறான் என்றாகிறது.இப்படிப் புழங்கும் பணம் எங்கு செல்கிறது என்பதுதான் கவனிக்க வேண்டியது.

இவை ஆயுத வியாபாரிகளின் பகாசுர வயிறுகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் தீவிரவாதச் செயல்களுக்கும் மடையற்றுப் பாய்கின்றன. வெள்ளைப் பொருளாதாரத்தோடு நேரடியாக மோதாத கறுப்புப் பண முதலைகள் இப்படியான தீய சக்திகள் மூலம் தேசங்களை, அதன் முதலீடுகளை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி, வெள்ளைப் பொருளாதாரத்தை நிர்மூலமாக்குகிறார்கள்.

ஊழலின் ஊற்றுக்கண்ணான அரசியல்வாதிகள், உயர்மட்ட அதிகாரிகள் என வெள்ளைப் பொருளாதாரத்தின் அதிகாரத்தரப்புகள், தங்களுக்கு அவசியம் எனில் கறுப்புப் பொருளாதாரத்தைப் பயன்படுத்தி தங்களை வலுவாக்கிக் கொள்கிறர்கள்.உலக அளவில் அமெரிக்கா, சீனா, மெக்சிக்கோ, ஸ்பெயின், இத்தாலி, ஜப்பான், கனடா, இந்தியா, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளே டாப் டென் அளவில் கறுப்புப் பொருளாதாரம் புழங்கும் நாடுகள் என்று கருதப்படுகிறது.

இதில், அமெரிக்காதான் உலக கறுப்புப் பொருளாதாரத்தின் தாயகமாகவும் தலைமையிடமாகவும் இருக்கிறது. ஆண்டுதோறும் 625.63 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்த செலாவணியில் புழங்குகிறது என்கிறார்கள். இது, கறுப்புப் பண புழக்கத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சீனாவைப் போல் இரண்டு மடங்கு!

இந்தப் பணத்தைக் கொண்டுதான் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் முதல் மத்திய கிழக்கின் ஆயுத மோதல் வரை சகலமும் தீர்மானமாகிறது. வெள்ளை மாளிகையையே ஆட்டிப்படைக்கும் வல்லமை இந்த நிழல் உலகப் பொருளாதாரத்துக்கு உண்டு என்பதை சிலர் மறுக்கிறார்கள்.

ஆனால், அன்றும் இன்றும் என்றும் இவர்களின் பலம் அசாதாரணமானது தான். அது அரசாங்கங்களை மட்டும் அல்ல, தேசங்களையே உருவாக்கவும் சிதைக்கவும் வல்லது.

நமது நவீன சமூகங்கள் இந்த கறுப்புப் பொருளாதாரங்களிடமிருந்து எப்படி விடுதலை அடைவது என்பதுதான் இன்று நம்மிடையே உள்ள மிகப் பெரிய சவால். அதற்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விடையே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

இளங்கோ கிருஷ்ணன்