கதம்எந்தவித ஆரவாரமுமில்லாமல் அமைதியாக வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது, ‘கதம்’. அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது இந்த தெலுங்குப்படம். ஒரு சைக்கோவின் காதல் வலையில் சிக்கி, ஆபத்துக்குள்ளான மகளை மீட்கப் போராடும் தந்தையின் கதைதான் இந்தப் படம்.
தலையில் அடிபட்டு நினைவிழந்து கிடக்கிறான் ரிசி.

சிகிச்சைக்குப் பிறகு கண் விழித்த அவனுக்குக் கடந்த காலம் முழுவதும் மறந்துவிட்டது. ரிசிக்கு உறுதுணையாக அவனின் காதலி அதிதி மட்டுமே இருக்கிறாள். ஆனால், அதிதியைக் கூட அவனுக்கு சுத்தமாக நினைவில் இல்லை.
இருவரும் காரில் ரிசியின் தந்தையைப் பார்க்கச் செல்கின்றனர். வழியில் கார் ப்ரேக்டவுன் ஆக, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்த மெக்கானிக் கடையும் இல்லை.

அப்போது அந்த வழியாக வரும் அர்ஜுன், அவர்களுக்கு உதவ முன்வருகிறார். மட்டுமல்ல, கார் சரியாகும் வரை தன்னுடைய வீட்டிலேயே அவர்கள் தங்கிக்கொள்ள வேண்டுகோள் வைக்கிறார். முன்பின் தெரியாத அர்ஜுனின் வீட்டில் ரிசியும் அதிதியும் தயக்கத்துடன் தங்குகின்றனர்.

அருகில் எந்த வீடும் இல்லை. அர்ஜுனின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மர்மமாக இருக்கிறது. அவரின் மகன் அதிதியிடம் மோசமாக நடந்துகொள்கிறான். தப்பான இடத்துக்கு வந்து மாட்டிக்கொண்டோம் என்று அதிதியும் ரிசியும் தவிக்கின்றனர்.

அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயற்சிக்கும்போது அர்ஜுனுக்கும் ரிசிக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது. தனக்கும் அர்ஜுனுக்கும் இடையில் ஏதோ ஒரு தொடர்பு இருக்குமென்று ரிசி நினைக்கிறான். அது என்னவென்று அறிய  துப்பாக்கியைக் காட்டி அர்ஜுனை மிரட்டுகிறான்.

அப்போது ரிசியின் பக்கம் நிற்காமல் அர்ஜுனுக்கு அதிதி உதவ, வெடிக்கிறது டுவிஸ்ட். அர்ஜுனுக்கும் ரிசிக்கும் இடையில் என்ன தொடர்பு... உண்மையில் அதிதி யார்... ரிசியின் கடந்த காலம்... அவனுக்கு எப்படி அடிபட்டது... அவன் நல்லவனா? கெட்டவனா? போன்ற மர்ம முடிச்சு கள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படுவது திரில்லிங் திரைக்கதை.

ஆரம்ப நிமிடங்கள் கொஞ்சம் சலிப்பைத் தந்தாலும் அட்டகாசமான ஒரு டுவிஸ்ட்டுடன் வேகமெடுக்கும் திரைக்கதை படத்துடன் நம்மை ஒன்றச் செய்கிறது. ஏரியை ஒட்டிய பனி சூழ்ந்த லொகேஷனும் கதாபாத்திரங்களின் தேர்வும் பின்னணி இசையும் அருமை. ஹைதராபாத்தில் பி.டெக் முடித்துவிட்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட இயக்குநர் கிரணுக்கு இது முதல் படம். தன்னைப் போலவே சினிமா ஆர்வமுள்ளவர்களைக் குழுவாக இணைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.

படப்பிடிப்பின் போது ஒரு லட்சம் டாலர் மதிப்புள்ள லென்ஸ் பாக்ஸ் தொலைந்துவிட்டது. லொகேஷனுக்கு அருகிலிருப்பவரின் கையில் அது கிடைத்திருக்கிறது. கடைசி நாள் ஷூட்டிங்கின்போது அவர் லென்ஸ் பாக்ஸைத் திருப்பித்தந்தது இன்னொரு சுவாரஸ்யம்.