சூர்யா , விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், நயன்தாரா...
தன் பயணத்தை விவரிக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்
‘‘அப்ப எதுவும் சினிமாவைப்பத்தித் தெரியாது. ‘தளபதி’ படத்தை தியேட்டரில் உட்கார்ந்து பார்த்தால் காட்சிகள், கலர் டோன்னு ஏதோ வித்தியாசம் தெரியுது. அதெல்லாம் எப்படின்னு அப்ப சொல்லத் தெரியலை.
 வீட்டுக்கு பக்கத்தில் இருந்தவங்க சிலபேர் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிச்சிட்டு இருந்தாங்க. சின்ன வயசிலிருந்தே காமிராவை நான் பார்த்துக்கிட்டே இருந்தேன். ஒளிங்கிற ஒற்றை வார்த்தைதான் என்னை சினிமாவுக்கு கூட்டிட்டு வந்ததோன்னு இப்ப தோணுது. எங்கேயும் எப்போதும் நம்மை எதாவது ஒரு ஒளி தொட்டுக் கிட்டே இருக்கணும்னு ஆசைப்பட்டேன்.  அப்புறம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து, பிறகு ரத்னவேலு சார்கிட்டே இன்னும் கலை பழகி வந்தேன். நான் சினிமாவின் மேல் வைச்சிருந்த பிரியத்திற்கு அது என்னைக் கைவிடலை. ‘சூது கவ்வும்’ மூலமாக இயக்குநர் நலன் குமாரசாமி கைகொடுக்க, ஒளிப்பதிவாளனாக எனக்கும் கதவு திறந்தது...’’ நிதானமாக, அழுத்தமாக பேச ஆரம்பிக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். ‘சூது கவ்வும்’ தொடங்கி இப்போது ‘மூக்குத்தி அம்மன்’, ‘மாறா’ வரை பயணம் வந்திருக்கிறார்.
 சினிமாவில் பயணம் எப்படியிருந்தது..?
ரத்னவேலு சார்கிட்டே வேலை பார்த்ததெல்லாம் அருமையான காலம். அவர் உண்மையாக, தொடர்ந்து கவனம் வச்சு வேலை செய்கிற ஆட்களை நல்லபடியாக அடையாளம் காண்பார். என்மேலேயும் அவரோட பார்வை விழுந்தது. இம்ப்ரஸ் பண்றது அவருக்குப் பிடிக்கும். ‘சேது’, ‘நந்தா’, ‘எந்திரனி’ல் எல்லாம் அவரோட இடங்கள் அப்படியே தெரியும்.
 அப்போது நலன் குமாரசாமி சார் ‘சூது கவ்வும்’ படத்திற்காக என்னை அழைத்தார். அவர் கதை சொன்னது புதுவிதமாக இருந்தது. அவர் வித்தியாசமாகக் கொண்டு வந்த கதையில் எனக்கான சுதந்திரம் இருந்தது. எனக்கு முதல் பயணமே வெற்றி யில் ஆரம்பித்தது சந்தோஷம். ஏனெனில் இங்கே இதுவும் ஒரு முக்கியமான விஷயம்.
ஒளிப்பதிவு, படத்தில் எப்படித்தான் இருக்கணும்..?
நாம் வைக்கிற ஷாட், வெளிச்சமெல்லாம் தனியாகத் தெரியக் கூடாது. ஒரு நம்பகத்தன்மைக்கு ஒளிப்பதிவாளர்கள் பாடுபட வேண்டியது அவசியம். எந்த காட்சியையும், நடிப்பையும் பார்க்கிறவர் அத்தனை பேருக்கும் அனுபவமாக்கிக் காட்டினால் அது கலை. ‘தளபதி’ பார்த்திருப்பீர்கள். நாலைந்து தூண்கள் முளைத்து, வானம் பார்த்து நிற்கிற இடத்தில் ரஜினி நின்றுகொண்டு இருப்பார். அங்கே ஷோபனா வந்து சில வார்த்தைகள் மனசு உடைகிற அழுத்தத்தில் பேசிவிட்டு ப்ரேக் அப் நடக்கும்.
ஷோபனா அப்படியே அந்த இடத்திலிருந்து நமக்கும், ரஜினிக்கும் முதுகைக் காட்டிக் கொண்டு தளர்ந்து நடந்து போவார். பின்னணி இசையில் ராஜா உலுக்கு வார். ஆனால், அந்தக் காட்சியமைப்பை சந்தோஷ் சிவன் அப்படி உருவகித்து இருப்பார். சினிமா தெரியாதவருக்கும் அந்த இடம் புரிந்தது. அந்த சிறு தூரமே நம்மைப் பிழிந்து உணர வைத்தது. கரி, வைரமாகும் ரஸவாதம் அங்கே நடந்தது. அதுதான்… எந்த காட்சி வைத்தாலும் அது மக்களிடம் போய்ச் சேரணும்.
விஜய் சேதுபதி, சூர்யா, நயன்தாரா என முக்கியமான நடிகர்களுக்கு அதிகம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்...
விஜய் சேதுபதி கிட்டத்தட்ட ஒரு அண்ணன் மாதிரிதான். முதலில் நடை பழக வந்தபோதே அவர் தோளைப் பற்றியதால் இரண்டு பேருக்குமே தோழமை தோன்றிவிட்டது. அவரோடு செய்த ‘காதலும் கடந்து போகும்’ என்னோட ஃபேவரிட் படம். நன்றாக கவனித்தால் நலனின் எழுத்தும், சேது சாரின் நடிப்பும் சரியான கலவையில் இருக்கும். அவர் கூட இருக்கும்போது அவ்வளவு அணுக்கமாக இருக்கும்.
சூர்யா சாரை மறக்கமுடியாது. ‘பெரியார்’ படத்தின் behind the scenes எடுக்கும்போது அவரைப் பார்த்தேன். பின்னாடி ‘தானாக சேர்ந்த கூட்டம்’ செய்யும்போது என்னோட வேலையைப் பத்தி அவருக்கு சந்தோஷம் இருந்தது. நான் சத்தம் போடாமல் ஒர்க் பண்றதை பார்த்துட்டு ‘ப்ளீஸ் இதை விட்டுடாதே’னு அடிக்கடி சொல்வார்.
‘மூக்குத்தி அம்ம’னில் நயன்தாரா மேடத்தைப் பார்த்தேன். அவங்களோட இவ்வளவு பெரிய இடத்திற்கு காரணம் புரிந்தது. அம்மனாக நம்பிக்கை கொள்ள வைப்பது சாதாரண காரியம் கிடையாது. அதற்காக கொஞ்சம் கூட காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாமல் அவங்க உழைச்சது தான் ஆச்சர்யம். இதுதான் அவங்களை டாப் கியரில் நிறுத்தி வைத்திருக்கிறது.
அதேமாதிரி சிவகார்த்திகேயன். ‘மிஸ்டர் லோக்கலி'ல் அவரோடு பழகியதில் அவரது சொந்தப்படத்திற்கே அழைத்தார். சாக்லேட் பாய் மாதிரி இருந்தவரை ‘கனா’வில் ஓர் அக்கறையான சீனியராகக் காட்டியது எனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு.
ஒரு ஸ்கிரிப்ட்டை எப்படி தேர்வு செய்வீங்க..?
இயக்குநர் ஒரு கதையை நல்லா புடிச்சாருன்னா அவருக்குள்ள ஒரு கரண்ட் ஓடும். பெரிய உழைப்பைப்போட்டுத்தான் இயக்குநர்கள் ஒரு படம் செய்றாங்க. பிடித்த ஸ்கிரிப்ட் என்னை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு போறதை நான் உணர்ந்திருக்கேன். கிடைச்ச அனுபவம், செய்தி, பார்வைன்னு வந்து நாமும் அந்தக் கதையோட கலந்துடணும். நான் எடுத்துக்கொண்ட படம் முடிகிறவரை அதிலிருந்து என் நினைவைத் திருப்பியது கிடையாது.
உங்கள் மனசுக்குப் பிடிச்ச ஒளிப்பதிவாளர்…
‘சூரரைப் போற்று’ செய்த நிகேத் பொம்மி எனக்கு ரொம்ப முக்கியமானவராகத் தெரிகிறார். ஒரு நல்ல கலைஞனாயிருக்க ஒன்றுமே செய்யத் தேவையில்லை. அவனுக்குப் பதிலாக அவன் படைப்பு இருந்தால் போதும்னு நினைப்பேன். ‘ஜிப்ஸி’ பண்ணின செல்வகுமாரையும் பிடிக்கும். உங்களைப்பத்தி தனியாச் சொல்லுங்க…
எப்பவும் என்னை சாதாரண மனுஷனா, சராசரியில் ஒருத்தனாகவே நினைச்சுக்குவேன். என்னைப் பொறுத்தவரை எல்லாமே கடவுள் விருப்பப்படிதான் நடக்குது.
காத்துல திக்கு திசை தெரியாமல் பறக்கிற பட்டத்தை கண்ணுக்குத் தெரியாத இந்த நூல் கண்ட்ரோல்ல வெச்சிருக்கும்ல… அப்படி இந்த வாழ்க்கை என்னை அமைதியாகவும், சந்தோஷமாகவும் வைச்சிருக்கு.
நா.கதிர்வேலன்
|