டாக்ஸி நம்பர் 9211



காமெடியும் திரில்லிங்கும் கலந்துகட்டி வசூலை அள்ளிய இந்திப்படம், ‘Taxi No. 9211: Nau Do Gyarah’. கொஞ்சம் பழைய படம். கொரோனா லாக்டவுனில் ஹாட்ஸ்டாரில் அதிகமாக பார்க்கப்பட்ட இந்தியப் படங்களில் இதுவும் ஒன்று.

மும்பையில் வறுமையில் உழலும் ஒரு டாக்ஸி டிரைவருக்கும் பெரும் கோடீஸ்வரரின் மகனுக்கும் இடையில் நடக்கும் யுத்தம்தான் இந்தப் படம்.
தனக்குதான் மும்பை சொந்தம் என்று நினைப்பவர் ராகவ். கடுமையான கோபக்காரர். ஏதாவது பிரச்னை என்றால் கொஞ்சம் கூட யோசிக்காமல் அடித்து விடுவார்.

மனைவியிடம், இன்சூரன்ஸ் அதிகாரியாக வேலை செய்கிறேன் என்று பொய் சொல்லிவிட்டு டாக்ஸி ஓட்டுகிறார். அதனால் வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில்தான் டாக்ஸியை பார்க் செய்வார். அவர் ஓட்டும் டாக்ஸியின் எண்தான் 9211. அந்தச் செலவு இந்தச் செலவு என்று நச்சரித்துக்கொண்டே இருப்பதால் மனைவியுடன் அவருக்கு சுமுகமான உறவு இல்லை.

இன்னொரு பக்கம் தனக்குத்தான் மும்பை சொந்தம் என்று நினைக்கும் இளைஞன் ஜெய் மிட்டல். பெரும் கோடீஸ்வரரின் மகன். ஊதாரியாக சுற்றிக்கொண்டிருப்பவன். வாழ்க்கையைப் பற்றி எந்தக் கவலையும் அவனுக்கு இல்லை. மனிதர்களை மதிக்கவே மாட்டான். எப்போதும் குடியில் மூழ்கிக்கிடப்பான். அவனுக்கு ஒரு காதலி இருக்கிறாள்.

ஒரு நாள் சொத்து முழுவதையும் நண்பர் ஒருவருக்கு உயில் எழுதிவிட்டு இறந்துவிடுகிறார் ஜெய்யின் அப்பா. ஆடிப்போகிறான் ஜெய். சொத்தை மீட்க ஓர் இடத்துக்கு அவசரமாக அவன் செல்ல வேண்டும். குடித்திருப்பதால் கார் ஓட்ட அவனுக்கு பயம். அப்போது ஒரு டாக்ஸியில் ஏறுகிறான். அந்த டாக்ஸி ராகவ்வுடையது.

பழைய டாக்ஸி என்பதால் வேகம் நாற்பதைத் தாண்டவில்லை. கடுப்பாகும் ஜெய், ராகவ்வை வேகமாகச் செல்லுமாறு விரட்டுகிறான். பணத்தை அள்ளி அவரிடம் வீசுகிறான். ராகவ்வும் வேகமாகச் செல்ல, அது விபத்தில் போய் முடிகிறது.

ராகவ்விற்குத் துணையாக நிற்காமல், விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பித்துப் போய்விடுகிறான் ஜெய். இது ராகவ்வை கடுப்பாக்குகிறது.

ஆனால், தப்பிக்கும் வேகத்தில் உயில் இருக்கும் பெட்டகத்தின் சாவியை காரிலேயே விட்டுவிடுகிறான் ஜெய். சாவியைத் திருப்பிக்கேட்டால் ராகவ் தருவதில்லை. இருவரும் பரம எதிரி ஆகிறார்கள். ஒருவரை ஒருவர் கொல்ல சபதம் எடுக்கிறார்கள்.

அந்த சபதம் இருவரின் வாழ்க்கையில் நிகழ்த்தும் மாற்றங்கள்தான் சுவாரஸ்யமான கதை. இந்தப் படம் தமிழ், தெலுங்கிலும் ரீமேக் ஆனது. ஆனால், இந்திப்படம் அளவுக்குப் போகவில்லை. டாக்ஸி டிரைவராக நானா படேகரும் ஜெய்யாக ஜான் ஆப்ரஹாமும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். கொஞ்சம்கூட சலிப்பு தட்டாத இந்தப் படத்தை இயக்கியவர் மிலன் லுத்ரியா.

தொகுப்பு: த.சக்திவேல்