பணக்கார லுக் தெரியணுமா..? சஸ்பெண்டர் அணிங்க!
சில ஃபேஷன்ஸ் மட்டுமே பல யுகங்கள் தாண்டி நிற்கும். அப்படிப்பட்ட ஃபேஷன்களில் 300 ஆண்டுகளுக்கும் மேல் நிற்கும் ஒரு ஃபேஷன் சஸ்பெண்டர்தான். அதாவது பாட்டம்வேர்களை தோள்பட்டைகளுடன் இணைக்கும் பெல்ட் போன்ற வகையறாக்கள்.
300 ஆண்டுகளாக இருப்பினும் மாடர்ன் சஸ்பெண்டர் அதிகாரபூர்வமாக வெளியாகி அதற்கென அங்கீகாரம் பெற்றது 1822ம் ஆண்டுதான். பிரபல லண்டன் ஹேபர்டாஷர் ஆல்பர்ட் தர்ஸ்டன் நிறுவனத்தால் பிரேஸர்கள் என்னும் பெயரில் இது வெளியிடப்பட்டு பிரபலமானது.
இப்போதும் இந்த பிராண்ட் சஸ்பெண்டர் மற்றும் பிரேசர்கள் எனில் பெரும் பணக்காரர்கள் முதல் உலகின் அத்தனை பிரபலங்களும் ஆர்வம் காட்டுவார்கள்.
சரி; இந்த சஸ்பெண்டர் எப்படி அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்தன..? இப்போது சஸ்பெண்டர்களின் டிரெண்ட் என்ன..?
கேட்டதுமே புன்னகைக்கிறார் ஃபேஷன் டிசைனர் விக்கி கபூர். ‘‘19ம் நூற்றாண்டு ஆரம்பத்துலேதான் இந்த இடுப்புக்கு மேலே போடுகிற பாட்டம்கள் (High Waist Pants) வரவு அதிகமாச்சு. பழைய எம்ஜிஆர், சிவாஜி படங்கள்ல கூட பணக்கார கேரக்டர்கள் இந்த பெல்ட் பயன்படுத்துறதை பார்த்திருக்கலாம்.
தவிர 50 வயசுக்கு மேல பேன்ட்களை இறுக்கமா பெல்ட் போட்டு அணிய முடியாது என்பதால் இந்த சஸ்பெண்டர் பயன்பாடு அதிகரிச்சது. அப்ப இதை கல்லூஸ்னு சொல்வாங்க. 1940களுக்குப் பின் இந்த சஸ்பெண்டர் கொஞ்சம் குறைஞ்சு பெல்ட்களின் ஆதிக்கம் அதிகமாச்சு. அமெரிக்க ‘லைஃப்’ பத்திரிகையின் சர்வே 60% ஆண்கள் சாதாரண பெல்ட்களையே விரும்புவதா சொல்லியிருக்கு.
நம்ம நாட்டுக்குள்ள இந்த சஸ்பெண்டர் 1960கள்லதான் பயன்பாட்டுக்கு வந்தது. அப்போதைய கருப்பு- வெள்ளை படங்கள்ல பணக்கார நாயகியின் அப்பா இந்த சஸ்பெண்டரை அணிந்திருப்பார். ஃபார்மல் உடைகளின் முக்கிய அம்சமா பார்க்கப்பட்ட இந்த சஸ்பெண்டர் கொஞ்ச காலங்கள்ல இன்னும் அதிக மாறுதலுக்கு ஆளாகி மாடர்ன் ஃபேஷன் உலகுல பெண்களுக்கான உடைகள்லயும் இணைய ஆரம்பிச்சது.
ஸ்கர்ட், ஷார்ட்ஸ், டெனிம், பலாஸ்ஸோ, 3/4 பாட்டம்ஸ்... இப்படி எல்லாத்துலயும் சஸ்பெண்டரை அழகுக்காக சேர்த்துக்கிட்டோம். இதன் இன்னொரு வடிவம்தான் டெனிம்கள்ல வந்த பாபா சூட். ‘வாலி’, ‘குஷி’ படங்கள்ல சிம்ரனும் ஜோதிகாவும் இந்த பாபா சூட் ஸ்டைல் உடைகளை அணிந்திருப்பாங்க. பாலிவுட்ல சல்மான்கான் சஸ்பெண்டரை அதிகம் பயன்படுத்துவார்...’’ என்னும் விக்கி கபூர் இப்போது இந்த சஸ்பெண்டர் எவ்வித பயன்பாட்டில் இருக்கின்றன என்பதையும் பகிர்ந்து கொண்டார்.
‘‘இந்த சஸ்பெண்டருக்கு எந்த ரூல்ஸும் கிடையாது. புடவை கட்டிக்கிட்டுகூட சஸ்பெண்டர் பிளவுஸ் அணியலாம்! இப்ப நிறைய டிசைன்கள்ல பிரிண்ட் செய்யப்பட்ட சஸ்பெண்டர் வருது. ஆனா, ஃபேஷன் உலகம், சினிமா உலகம் கடந்து அல்லது மேல்தட்டு மக்களைக் கடந்து இன்னமும் இந்த டிரெண்ட் சாதாரண மக்கள்கிட்ட வரலை.
ஆனா, எந்த உடையையும் ஸ்டைலா, போல்ட் லுக்குல காட்டக் கூடிய அம்சம் சஸ்பெண்டருக்கு உண்டு. ஒரே ரூல்தான்: கொஞ்சம் பளிச் கலர் உடைனா அடர் நிற சஸ்பெண்டர்கள்; அடர் நிற உடைகள்னா பளிச் கலர் சஸ்பெண்டர்கள் அணியணும். அவ்வளவுதான்!’’ என்கிறார் விக்கி கபூர்.
மாடல்கள்: ரஜித் இப்ரான், பூஜாடிசைனர்: விக்கி கபூர் ஸ்டைலிஸ்ட் : ஜெயா மேக்கப் & ஹேர் ஸ்டைல்: ஜெயந்தி
செய்தி: ஷாலினி நியூட்டன்
படங்கள்: கார்த்திக் சுப்ரமணியன்
|