கடவுள்களை உருவாக்கும் கலை
faceb(JP)ook மினி தொடர்-12
மோடி எனும் ஆபத்பாந்தவனை, அநாதரட்சகனை, புனிதத் திருவுருவை உருவாக்கும் மாபெரும் நாடகத்தில் ஒரு புதிய கதாபாத்திரமாக 2013ம் ஆண்டில் நுழைகிறார் சிவ்நாத் துக்ரால். தனியார் தொலைக்காட்சியில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த துக்ரால், அங்கே கார்ப் பரேட் மற்றும் பங்குச்சந்தை தொடர்பான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வந்தார்.
2009ம் ஆண்டு அந்தப் பணியிலிருந்து விலகி ரூயா குடும்பத்தாருக்கு சொந்தமான எஸ்ஸார் க்ரூப்பில் கார்ப்பரேட் பிராண்டிங் மற்றும் கொள்கை கோட்பாடுகளை வகுக்கும் தலைவர் பதவியில் அமர்கிறார் சிவ்நாத் துக்ரால். இது ஒரு முதல் கட்ட நகர்வு. இந்த எஸ்ஸார் க்ரூப்தான் பின்னாட்களில் கோவாவில் தெஹல்கா நடத்திய சிந்தனைத் திருவிழாக்கள் போன்ற கருத்தரங்குகளுக்கு எல்லாம் ஆதரவாக இருந்தது.
அரசியல் மட்டங்களோடு நெருங்கிய தொடர்புடைய இந்த நிறுவனம் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் உட்பட பலருக்கும் பரிசுப் பொருட்கள் தருவது உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் தங்கள் அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்ள முயன்றது. இந்த நிறுவனத்திலிருந்து கார்னியேஜ் பவுண்டேஷன் நிறுவனத்துக்குச் சென்ற துக்ரால், பின்னர்தான் ஒரு மிக முக்கிய பொறுப்புக்குச் செல்கிறார். அது, முகநூலின் தெற்காசியா - இந்தியாவுக்கான ஒரு முக்கிய பதவி.
இந்தியாவில் இருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் செல்வாக்கு மிக்க மனிதர்களை ஃபேஸ்புக்கின் வணிக நலன்களுக்காகப் பயன்படுத்துவது தொடர்பான அந்தப் பதவியை துக்ரால் அடைந்த பிறகு மேலும் வலுவான மனிதராகிறார். அங்கிதாஸ் உள்ளிட்டோரோடு இணைந்து இந்த வேலையில் இறங்குகிறார்.
இவர்கள் இருவரும் அனுஜ் குப்தா என்ற வங்கி முதலீட்டாளரோடு இணைந்துதான் ஹிரான் ஜோஷி தொடங்கிய ‘மேரோ பரோசா’ (எனது நம்பிக்கை) என்ற பிஜேபியின் புகழ்பாடும் இணையப்பக்கம் வடிவமைக்க உதவுகிறார்கள். துக்ரால் ஓர் அறிவிக்கப்படாத பிஜேபி உறுப்பினர் போலவே நடந்துகொண்டார்.
’எனது நம்பிக்கை’ என்ற இந்த இணையதளத்தில் 2014ம் ஆண்டுக்கு முன்பு வந்த ஆர்ச்சிவ்களை ஆராய்ந்தால் ஒரு விஷயம் புரியும். அது, இதில் சொல்லப்பட்டுள்ளவை பெரும்பாலும் பொய்களுக்கும் அவதூறுகளுக்கும் மேல் வேறு ஒன்றுமே இல்லை என்பதே!
இவற்றின் மைய நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அன்றைய ஆளும் காங்கிரஸ் அரசு, சோனியா காந்தி, மன்மோகன் சிங் போன்றவர்கள் மீது அவதூறு அள்ளி வீசுவது; பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி அதை உண்மை போலாக்க முயற்சிப்பது; இதன் வழியாக மோடி மட்டுமே இங்குள்ள ஒரு உண்மையான ரட்சகர், மீட்பர் என்ற சித்திரத்தை வலுவாக நிலைநாட்டுவது.
இதுதான் இந்த இணையதளத்தின் ஒரே நோக்கமாக இருந்திருக்கிறது. ‘சோனியா காந்தியால் எவ்வாறு வெங்காய விலை உயர் கிறது’, ‘இந்தியாவை ஆப்பிரிக்கா போலாக்கும் சோனியா காந்தி’, ‘மலட்டு காங்கிரஸ்’ என்பதெல்லாம் இந்த இணையத்தில் வெளிவந்த கட்டுரைகள் சிலவற்றின் தலைப்புகள்.
அனுஜ் குப்தாவே இதில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ‘மோடியும் லைசன்ஸ் ராஜும்: விடுதலைக்கான உரிமம்’ என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கட்டுரை, மோடி அதிகாரத்துக்கு வந்தால் புதிய தாராளவாத சட்டங்கள் மூலம் தொழில் விருத்திக்குத் தடையாக இருக்கும் சட்ட நடைமுறைகளை மாற்றி அமைத்து துரிதமான பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுவார் என்று பேசியது.
ஆனால், இன்று நடப்பது என்ன..? இந்தியாவின் பொருளாதார நலன்களையே குழி தோண்டிப் புதைக்கும் பல்வேறு வகையான அபத்தமான சட்டங்களைத்தான் மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.இந்த அனுஜ் குப்தாதான் பின்னர் ஒரு முக்கியமான நிர்வாகத்துறை சேவை மையத்தில் பணிக்குச் சேர்ந்தார். ஹாங்காங் மற்றும் மும்பையை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் கார்ப்பரேட் மற்றும் அரசுகள் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவது தொடர்பான சேவைகள், பணிகள் செய்து தரப்படும்.
இந்த நிறுவனத்தில் பணியாற்றுவது ஒன்றும் எளிய செயல் அல்ல. இந்தியாவின் மிகப் பெரிய, முக்கியமான கல்வி மையங்களான ஐஐஎம் மற்றும் ஐஐடி போன்றவற்றில் எம்பிஏ, பொறியியல் போன்ற உயரிய படிப்புகளைப் படித்துவிட்டு வரும் இளைஞர்களுக்குத்தான் இங்கு அடிமட்ட வேலைகளே கிடைக்கும் எனில் இதன் செயல்பாடுகள் எந்த அளவில் அதிகார மையங்களோடு பிணைந்தது என்று யோசித்துக் கொள்ளுங்கள்.
வலதுசாரிகளின் கருத்தியல் சார்புக்கு ஏற்ப இந்திய வரலாற்றையும் பண்பாட்டையும் திரித்துச் சொல்லும் ‘சுபோதினி’ என்ற அமைப்புக்காக ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற நிறுவனங்களில் படித்த மேல்தட்டு இளைஞர்களை பணிக்கு அமர்த்தும் வேலையை குப்தா, துக்ரால் இருவருமே மேற்கொண்டுள்ளனர்.
புராணத்தை வரலாற்றைப் போலவும் வரலாற்றைப் பொய்யைப் போலவும் அணுகும் வலது சாரி கும்பலின் சிந்தனைகளுக்கு இந்த படித்த மேல்தட்டு இளைஞர்கள்தான் எளிதில் பலியாகும் இலக்குகளாக இருந்தார்கள். இவர்களைக் கொண்டே இந்தியாவின் மற்ற பிரிவினரின் மூளையைக் கழுவும் வேலையை ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அதன் நிர்வாகிகள் ஆசியோடு செய்யத் திட்டமிட்டது பிஜேபி. அதில் உறுதியான பலன்களையும் அடைந்தது.
இந்தியா போன்ற ஒரு நாட்டில் ஒரு மாபெரும் தேர்தல் வெற்றிக்கு வெறுமனே கருத்தியல் சார்பு உள்ளவர்களின் ஆதரவும் களச் செயல்பாடும் மட்டுமே போதாது. அந்தக் கருத்தியலுக்கு வெளியே உள்ளவர்களின் ஆதரவும் அவசியம். அவர்கள்தான் எந்தக் கருத்தியலும் இல்லாத வெள்ளை இதயங்களை தம் பக்கம் இழுத்துக்கொண்டு வரும் வலிமையுடையவர்கள்.
வெளிப்பார்வைக்கு நடுநிலை போல் தோற்றம் தரும் அவர்களின் செயல்பாடுகள் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவை. அதற்கென ஒரு வலிமையுண்டு என்பதை பிஜேபி புரிந்து வைத்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் துக்ரால் போன்ற அரைகுறை அரசியல் செயல்பாட்டாளர்களைப் பயன்படுத்திக்கொள்ள முன்வந்தது.
அரைகுறை என்பதை அவர்களின் அறிவுநிலையின் அரைகுறை என்று புரிந்துகொள்ள வேண்டியதில்லை. தங்களது சித்தாந்த முடிவுகளைத் தெளிவாக வெளியே சொல்வதில் காட்டும் அரைகுறைத்தனத்தையே இங்கே சொல்கிறோம். இவர்கள் நடுநிலை போலவே தங்களைக் குறிப்பிட்டு மொத்தமாகக் குழப்பும் இயல்புடையவர்கள். உள்ளுக்குள் தங்களுக்கான தனிப்பட்ட நலன் சார்ந்த விழைவுகளே இவர்களிடம் இருக்கும். ஆனால், பொதுவெளி யில் அதை வெளிப்படையாகக் காட்டாமல் செயல்படுவார்கள். காட்டிக்கொண்டாலும் அதை பகிரங்கமாகச் செய்ய மாட்டார்கள். உண்மை விளம்பிகள் போல் பாவனை செய்வார்கள்.
இதனை துக்ரால் போன்றவர்கள் கடந்த ஆண்டின் நாடாளு மன்றத் தேர்தல் வரைகூட மிகச் சிறப்பாகச் செய்தார்கள். பெயர் சொல்ல விரும்பாத ஐடி ஊழியர் ஒருவர் ஒருமுறை துக்ராலின் செயல்பாடுகள் பற்றிச் சொன்னது: “அவர் பணியாற்றும் ஃபேஸ்புக்கின் நலனுக்காகவும் பிஜேபியின் நலனுக்காகவுமே அவர் அப்படிப் பேசிக்கொண்டிருக்கிறாரே அன்றியும் அதில் உண்மையைப் பேசுவதற்கான ஆர்வமும் அக்கறையும் சிறிதும் இல்லை..!’’ உண்மைதான்.
இந்த போலி தேவதூதர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்துதான் ஒரு மாயையான ரட்சகரின் வருகையை உலகுக்கு அறிவித்தார்கள். அதில் அவர்களின் சொந்த நலனுக்கு மேல் வேறு எதுவுமே இருந்திருக்கவில்லை.
(தொடர்ந்து தேடுவோம்)
இளங்கோ கிருஷ்ணன்
|