அணையா அடுப்பு -26



அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

ஒன்றே குலம்; ஒருவனே தேவன்!

இந்து மதத்தில் பெரும் சீர்திருத்தங்களை ஏற்படுத்திய ராஜாராம் மோகன்ராயின் பிரம்ம சமாஜம் வட இந்தியாவில் எப்படி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதுபோலவே தென்னிந்தியாவில் வள்ளலாரின் சன்மார்க்க சங்கம் புரட்சிகரமான சீர்திருத்தங்களைச் செயல்பட முனைந்தது.மோகன்ராயின் அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர் வள்ளலார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பிரம்ம சமாஜத்தைச் சார்ந்தவர்கள் உருவ வழிபாட்டை அறவே வெறுத்தார்கள்.வள்ளலாரோ அதிலிருந்து சற்று மாறுபட்டு உருவ வழிபாடும் தேவை, அருவ வழிபாடும் தேவை என்று வலியுறுத்தினார்.அருவ வழிபாட்டை செய்யுமளவு பக்குவத்தைப் பெற முதல்படியே உருவ வழிபாடு என்பது அவரது எண்ணம்.

சாமானியர்களுக்கு உருவ வழிபாடே தகுந்தது. அதிலிருந்து அவர்கள் ஆன்மீகரீதியாக மேலெழ முடிந்தால் அருவ வழிபாட்டை மேற்கொள்ளட்டும் என்றார்.தியானம் குறித்து அவர் போதிக்கும்போதும் கூட ஏதேனும் ஓர் உருவத்தை தியானிக்கச் சொல்லியே வழிசெய்து  கொடுத்தார். பின் உருவம் கரைந்து அருவமாகும் என்றார்.வடலூரில் வசித்த காலத்தில்தான் அவருக்கு திட்டவட்டமான கொள்கைகள் உருவாயின.

அவற்றை அன்பர்களுக்கு எடுத்துச் சொல்லி, நாடெங்கும் பரப்ப வேண்டுமென கேட்டுக் கொண்டார்.l ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்கிற திருமூலர் வாக்கை தமிழகமெங்கும் பரப்பியவர் வள்ளலாரே. உருவமாகவும், அருவமாகவும் ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார். இரு கடவுளர், மூன்று கடவுளர் என்றெல்லாம் சொல்வது ஓர் உடலுக்கு இரண்டு, மூன்று உயிர்கள் இருக்கிறது என்று சொல்லுவதற்கு இணையானதாகும் என்றார்.

கடவுள் ஒருவரே, அவரே அருட்பெருஞ்சோதியார் என்பது அவர் வாக்கு. தெய்வம் ஒன்றுதான் என்கிற மெய்யை உணராதவர்கள் என் தெய்வம், என் தெய்வம் என்று தங்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்திக் கொண்டு ஒருவரோடு மற்றவர் பூசலுக்கு உள்ளாகிறார். பல தெய்வங்கள் இருப்பதாக நம்புவது குருடர்கள் யானையைக் கண்ட கதைக்கு ஒப்பானதாகும் என்கிறார்.

* சிறுதெய்வ வழிபாட்டை வள்ளலார் கடுமையாக எதிர்த்தார். ஏனெனில் சிறுதெய்வங்களுக்கு காணிக்கை என்கிற பெயரில் உயிர்ப்பலி செய்யும் கலாசாரம் அப்போது வெகுவாகப் பரவியிருந்தது. வள்ளலார் இவற்றை எதிர்த்துக் கடுமையாகப் பிரசாரம் செய்தார். புலால் உண்ணக்கூடிய காட்டு விலங்குகளைப் பிடித்து வந்து பலியிட முடியவில்லை என்பதால், புல்லையும் தானியங்களையும் உண்ணும் எளிய விலங்குகளான மாடு, ஆடு, கோழிகளைப் பலியிடுகிறீர்களே என்பதைப் போன்ற அர்த்தபூர்வமான கேள்விகளை எழுப்பினார்.

நம் சமுதாயத்தில் உயிர்ப்பலியை முதன்முதலாக வள்ளலார் எதிர்த்தது முதன்மையான முக்கியமான சீர்திருத்த சிந்தனைகளில் ஒன்று. இன்று உலகம் முழுக்க பெரும் இயக்கமாக பரவியிருக்கும் விலங்குகள் மீதான ஜீவகாருண்யத்தை ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பாக தமிழ் மண்ணில் ஒருவர் இயக்கமாக நடத்தினார் என்பது எவ்வளவு ஆச்சரியமான விஷயம்!

* புலால் உண்ணக்கூடாது என்பதை ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் பிரதான பண்புகளில் ஒன்றாய் முன்வைத்தார்.
பொதுவாகவே தன்னுடைய கருத்துகளை எளிமையான முறையில் அன்பாகப் போதிக்கக் கூடியவர் வள்ளலார். ஆனால், புலால் உண்பதை மட்டும் மிகவும் வன்மையாகக் கண்டித்தார்.

* சாதி, சமய வேறுபாடுகள் கூடவே கூடாது என்று கண்டிப்பாகச் சொன்னார். பிறப்பால் எல்லோரும் சமமே என்கிற அவரது முழக்கம், அப்போது சாதி, சமய வேறுபாடுகள்தான் நீதியென்று கருதிக் கொண்டிருந்தவர்களுக்கு கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியது.
வருணாசிரம முறைக்கு எதிராக தமிழ்ச்சூழலில் மிகவும் வன்மையாக எழுந்த குரல் வள்ளலாருடையது. ‘சாதி சமயங்களிலே வீதி பல வகுத்த சாத்திரக் குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்று’ என்று முழங்கினார்.

பிற்பாடு நாத்திகம் பேசியவர்களும் கூட ஆன்மீகப் பெரியாராக இருந்த வள்ளலாரின் கருத்துகளை மேற்கோள் காட்டி பேசியதுண்டு. சாதியும், சமயமும் தவிர்த்தவர்தான் இறைவனுக்கு உறவாக முடியும் என்பது அவர் நம்பிக்கை.

* எவ்வுயிரையும் தம்முயிராய் எண்ணுவதே மனிதப் பிறப்பின் நோக்கம் என்றார். தாயுமானவரின் பாடல்களை மிகவும் விரும்பி வாசித்து இம்
முடிவுக்கு வந்தார். அவரது பேச்சுகளின்போது இடைஇடையே தாயுமானவர் பாடல்களையும் பாடியதுண்டு.

* புராணங்கள், சாத்திரங்கள் ஆகியவை மூலம் உண்மையை அறிய முடியாது என்பதில் உறுதியாக இருந்தார். ‘கலை உரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப்போக’ என்று வேத, ஆகம, சாத்திர, புராண, இதிகாசங்கள் ஆகியவற்றுக்கு சாபமே கொடுத்தார் வள்ளலார். ஆனால், இவற்றில் மனித சமுதாயம் ஏற்றுக் கொள்வதற்குரிய கருத்துகள் இருந்தால், அவற்றை பரிசீலிப்பதில் தவறு ஏதுமில்லை என்றார்.

* இறந்தவரைப் புதைக்க வேண்டும்; எரிக்கக் கூடாது. அர்த்தமற்ற கருமாதி சடங்குகளை செய்யக்கூடாது என்று வலியுறுத்தினார்.
சடங்குகள் மிகவும் கட்டுப்பாடுகளோடு கறாராக நடந்து கொண்டிருந்த காலத்தில் பிணத்தை எரிப்பதை ‘சுட்டால் அதுதான் கொலை’ என்று கண்டித்தார். இறைவன் அளித்த தேகத்தை சுடுவது தவறு என்பது அவரது வாதமாகும்.

* ஏழைகளின் பசி போக்கும் ஜீவகாருண்யமே முதன்மைப் பண்பு என்றார். மற்றவர்களுக்கு உபதேசித்தது மட்டுமின்றி, தானே அதை வடலூரில் செயல்படுத்தி முன்னுதாரணமாகவும் திகழ்ந்தார்.

வள்ளலார், வடலூரில் நிகழ்த்திக் காட்டிய சாதனைகளை இன்று உலகமெல்லாம் பல்வேறு அரசுகள் திட்டங்களாக நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன எனும்போது நூற்றாண்டுக்கு முன்பே எதிர்காலம் குறித்து ஆலோசித்தவர் என்கிற உண்மை புரிபடுகிறது அல்லவா?

*ஆன்மீக ஒருமைப்பாட்டு உரிமை எப்போதும் அவசியம் என்பதை வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் சொல்லி வந்தார். உலகத்தில் மனித நாகரிகம் எத்தனையோ படிகள் முன்னேறிய பிறகும் நீடிக்கும் பல சிக்கல்களுக்கு இந்த உரிமை மறுக்கப்படுவதுதான் காரணமாகும்.

(அடுப்பு எரியும்)

தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்