தேர்தல் காலங்களில் மட்டும் திமுகவை எதிர்ப்பது ஏன்..?



விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுடன் நேருக்கு நேர்

முனைவர் தொல். திருமாவளவனுக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழ்நாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவராகவும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழக ஒடுக்கப்பட்ட சமூகத் தலைவர்களில் முக்கியமானவராகவும் இருக்கும் இவர், சட்டம், சமூகம், அரசியல்... என அனைத்துத் தளங்களிலும் சமூக நீதிக்காகவும் சாதி விடுதலைக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். பத்திரிகையாளர்கள் கேட்கும் அனைத்துக் கேள்வி
களுக்கும் நிதானமாக பதில் சொல்வது இவரது அடையாளம். இந்த நேர்காணலும் அந்தவகையில் ஒரு சோறு பதம்தான்...

அருந்ததியர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்த குரல் வலு வடைந்து வருகின்ற நேரத்தில்... உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த சூழலில்... அருந்ததியரையும், தேவேந்திரரையும் விட்டுவிட்டு எஞ்சிய சாதிகள் அனைத்தையும் ‘ஆதிதிராவிடர்’ என்ற அடையாளத்தில் திரட்ட வேண்டும் என உங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஒருபுறம் சொல்கிறார்...

மறுபுறம் ‘அருந்ததியர் உள் ஒதுக்கீடு தலித்துகளைப் பிளவுபடுத்த பாஜக மேற்கொண்டுள்ள செயல்திட்டம்’ என உங்கள் கட்சியின் இன்னொரு முகமான வன்னி அரசு குற்றஞ்சாட்டுகிறார்...உங்கள் கட்சியின் நிலைப்பாடுதான் என்ன..?

முக்கியமான கேள்வி இது. ஆனால், பத்திரிகைக்கு அளிக்கும் பதிலாக இதைக் கடந்து போக விரும்பவில்லை. இதுகுறித்த முழுமையான அறிக்கையை விரைவில் கட்சி சார்பில் வெளியிட இருக்கிறோம். கண்டிப்பாக உங்கள் கேள்விக்கு அதில் பதில் இருக்கும்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின்குரலாக அது எதிரொலிக்கும்.தந்தை பெரியாரை இந்துத்துவ சக்திகளும் அண்ணல் அம்பேத்கார் ஆதரவு சக்திகளும்  ஒருசேர எதிர்க்கின்றன... இதை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள்..? ஆர்எஸ்எஸ் அமைப்பு தந்தை பெரியாரை விமர்சிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் சனாதன சக்திகளை அடையாளம் காட்டி  அம்பலப்படுத்தியதால் முழுமூச்சாக தந்தை பெரியாரை எதிர்க்கிறார்கள்.

இதே  எதிர்ப்பை அம்பேத்காரின் வழியைப் பின்பற்றுவதாகச் சொல்லும் ஒருசில  அமைப்பினரும் மேற்கொள்வது உண்மையிலேயே வருந்தத்தக்கது. இவர்கள் அறிந்தோ  அறியாமலோ தந்தை பெரியாரை எதிர்ப்பதன் வழியாக நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ...  சனாதன சக்திகளுக்கு துணை போகிறார்கள். இவர்கள் தந்தை பெரியாரை முழுமையாகப்  படித்து உள்வாங்கவில்லை. அவரது ஆளுமையின் அருமை இவர்களுக்குத் தெரியவில்லை.
தந்தை பெரியாரை நீக்கிவிட்டு அந்த இடத்தில் யாரை வைக்கப் போகிறீர்கள்... கோட்சேவையா?! தெளிவு இல்லாமல் இவர்கள் செயல்படுகிறார்கள்.
அண்ணல் அம்பேத்கார் மீது ‘வலதுசாரி - முதலாளித்துவவாதி’ என்ற முத்திரையை தீவிர இடதுசாரி அமைப்பினர் சுமத்துகிறார்களே..?

அண்ணல் அம்பேத்காரை முழுப் பரிமாணத்தில் பார்த்து அதன்பின் வைக்கும் விமர்சனமாக இதை நான் கருதவில்லை. அவர் ஒரு தலித், சாதியவாதி, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போக்கு இல்லாதவர்… போன்ற முன் தீர்மானங்களுடன் இப்படி முத்திரை குத்துகிறார்கள்.

உண்மையில் அவர் ஒட்டு மொத்த ஆதிக்கம், அடக்குமுறை, சுரண்டல் ஆகிய மூன்றையும் எதிர்த்த போராளி. முதலாளித்துவவாதி என்று சொல்லும்போது எந்த முதலாளிகளோடு கைகோர்க்கிறார்... எந்த முதலாளித்துவ கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்... என்று பார்க்க வேண்டாமா..?

ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட சமூகத்தில், மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று நினைப்பதே இடதுசாரி சிந்தனை. சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, சமூக நீதி… இது எல்லாமே இடதுசாரி சிந்தனைதான். இது எப்படி வலதுசாரி சிந்தனையாக இருக்க முடியும்?
வலதுசாரி சிந்தனையில் இருப்பவர்கள் ஏற்கனவே இருக்கும் சமூக ஒழுங்கை பாதுகாப்பதோடு, முதலாளித்துவ நலன்கள் பாதிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்கள்.

சாதியை ஒழிக்க வேண்டும் என்று அவர் சொன்னது முதலாளிகள் எல்லோருக்கும் சிக்கல்தானே! சாதிய பாதுகாப்பில்தானே எல்லோரும் முதலாளி களாக உருவாகியிருக்கிறார்கள்! இந்தியாவில் சாதி கொடுக்கும் பாதுகாப்பில்தானே ஒருவனால் முதலாளியாக முடிகிறது!
அதனால்தான் எந்த ஒரு தலித்தாலும் பொது இடங்களில் டீக் கடையோ, உணவகங்களோ… வைக்க முடியவில்லை. நகரத்தில் ஆயிரம் கடைகள் இருந்தால் அதில் ஒரு கடை கூட தலித்துக்கு சொந்தமாக இருக்காது. சாதிதான் இதைத் தடுக்கிறது.

சாதி ஒழிப்பு என்றாலே அது வலதுசாரி, முதலாளித்துவ, சனாதனத்துக்கு எதிரானதுதான். இதை புரிந்து கொள்ள முடியாதவர்கள்தான் அண்ணலை வலதுசாரி சிந்தனையாளர் என்கிறார்கள்.தமிழ்தேசிய எழுச்சி என்கிற பெயரில் அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார் ஆகியோரின் கருத்துகளை சிலர் விமர்சித்து புறம் தள்ளுகிறார்களே..?   

இருவரும் மொழிவழி தேசியத்திற்கு எதிரானவர்கள் இல்லையே! அண்ணல் அம்பேத்கார் இந்தித்  திணிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘ஒரே இந்தியாவாக இருக்க வேண்டுமென்றால்  இந்தியாவின் தலைநகரம் வடக்கே தில்லி, தெற்கே ஹைதராபாத் என்று இரண்டு  இடத்தில் இருக்க வேண்டும்’ என்று சொன்னதோடு, ‘இந்தியா முழுவதும் ஆண்டவர்கள்  நாகர்கள். அந்த நாகர்கள்தான் தமிழர்கள்; தமிழர்கள்தான் திராவிடர்கள் என்று  அழைக்கப்பட்டார்கள்’ என்ற கருத்தையும் சொல்லியிருக்கிறார்.

அதேபோல்  இன்று தமிழ்நாடு கோரிக்கையை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் தந்தை  பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற கோரிக்கையை 1938லேயே  முன்வைத்திருக்கிறார். இன்று அவரை தமிழ் தேசியத்தின் எதிரி என்று சொல்வது  அறியாமை.திராவிட ஆட்சியை வீழ்த்த வேண்டும் என ஒரு சில தலித் அமைப்புகள் குரல் கொடுத்து வருகிறதே..?

சிறுபிள்ளைத்தனமானது. இன்று தமிழகத்தில் பெருவாரியான மக்கள் ஆதரவுடன் இயங்கும் கட்சிகள் திமுகவும் அதிமுகவும்தான். இவ்விரு கட்சி
களும் திராவிட பின்புலத்தைச் சேர்ந்தவை. இவ்விரு கட்சிகளில் ஒன்றுதான் தேர்தலில் ஜெயித்து ஆட்சி அமைக்க முடியும். இதுதான் எதார்த்தம்.
இந்த கள உண்மையை மறந்து விட்டு திராவிட ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று சொல்வது நிச்சயம் மதவாத சக்திகளுக்கு துணை போவதுதான். இவர்கள் திராவிட ஆட்சியை வீழ்த்திவிட்டு யாரை ஆட்சியில் அமர்த்தப் போகிறார்கள்..? பாஜகவையா?!

மாற்று இல்லாமல் விமர்சனம் வைக்கும்போதும், தாக்குதல் நடத்தும்போதும் அந்த இடத்தை எப்போது கைப்பற்றலாம் என்று துடித்துக் கொண்டிருக்கும் சனாதன சக்தியே வலுப்பெறும்.

ஆதிகாலத்திலிருந்து பெரி யாரை ‘BC கேடர்’ என்று சொல்லக் கூடிய அம்பேத்காரிஸ்டுகள் உண்டு. தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்காரும் நல்ல நண்பர்களாக, சமகாலத் தலைவர்களாக, ஒருவர் கருத்தை மற்றவர் மதிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். அகில இந்திய அளவில் ஒடுக்கப்பட்ட சக்திகளையும், பிராமணர் அல்லாதவர்களையும் ஒருங்கிணைத்துச் செயலாற்றிய பரந்த பார்வை அவர்களிடம் இருந்தது.

இப்போது அதுபோன்ற பரந்த பார்வை இல்லாததால்தான் ‘பெரியார் தமிழரா’ என்கிற கேள்வியை எழுப்புவது, அண்ணல் அம்பேத்காரை ‘வட மாநிலத்தவர்’ என விமர்சனம் செய்வது... ஆகிய போக்குகள் துளிர்விடுகின்றன. இவர்கள் இருவரையும் விமர்சிக்கிறவர்கள் யாருக்கு துணை போகிறார்கள் என்பதில் கவனம் கொள்ள வேண்டும்.

உங்கள் வாழ்வை மாற்றிய புத்தகங்கள்..?
அரசியல்  தவிர்த்தும் புத்தகங்கள் படிப்பதுண்டு. அண்மையில் சுந்தர ராமசாமி எழுதிய  ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’, இமையம் எழுதிய ‘எங்கதெ’ படித்துக்  கொண்டிருக்கிறேன். பொதுவாக நாவல் படிக்கும் வழக்கமில்லை. கல்லூரி  மாணவப் பருவத்தில் எனக்குள் தாக்கத்தையும், ஒரு விஷனையும் கொடுத்தது  ஏஎஸ்கே எழுதிய ‘கருத்து முதல்வாதமா பொருள் முதல்வாதமா’ புத்தகம்.

அதற்கு  முன்வரை கடவுள், பேய், விதி… இப்படி ஏற்கனவே கற்பிக்கப்பட்ட பல  விஷயங்கள் மீது நம்பிக்கை கொண்ட ஒரு சராசரி மாணவனாகவே  இருந்தேன். அந்தப்  புத்தகத்தைப் படித்தபின் நிறைய மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய  புத்தகங்களைத் தேடி படிக்கத் தொடங்கினேன்.
தமிழக அரசியல், சாதி ஒழிப்பு  குறித்து தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த தோழர் தமிழரசன் மீன்சுருட்டி  மாநாட்டில் வெளியிட்ட ‘சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும்’ என்ற  அறிக்கை இப்பொழுது நூலாக வந்திருக்கிறது. இதை முன்பே படித்திருக்கிறேன்.  இப்பொழுது மறுவாசிப்பு செய்கிறேன்.

1987 - 88 காலகட்டங்களில்  ஈழத்தமிழருக்கான போராட்டங்களில் தோழர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது, ‘மக்களை  எப்படி அமைப்பாக்குவது, யாரை எதிர்த்து போராட்டம் நடத்தணும், மக்கள்  யுத்தம் என்றால் என்ன?’ போன்ற விஷயங்களை அந்தப் புத்தகம் மூலம் உள்வாங்கிக்  கொண்டேன்.

அதற்குப் பிறகு நிறைய புத்தகங்கள் படித்திருந்தாலும் இந்தப் புத்தகங்கள்தான் எனக்குள் மாற்றங்களைக் கொண்டு வந்து, சிந்தனைப்  போக்கிலும், செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் வகையிலும் மடைமாற்றம் செய்தது.தேர்தல் வரும் நேரங்களில் மட்டும் திமுகவை நீங்கள் எதிர்ப்பதாகவும்... மற்ற காலங்களில் அக்கட்சிக்கு இணக்கமாக இருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறதே..?  

உண்மையில் தேர்தல் வரும் நேரங்களில் மட்டும் திமுகவோடு எங்கள் கட்சி இணக்கமாக இருப்பதாகத்தான் சொல்ல வேண்டும்! உங்கள் கேள்வியும் அப்படித்தான் இருக்க வேண்டும்!2001, 2011 சட்டமன்றத் தேர்தல்கள், 2006 உள்ளாட்சித் தேர்தல், 2009, 2019 நாடாளுமன்றத் தேர்தல்கள்... ஏன், 2021 சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் இந்த நேரம் வரை திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! திமுக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருந்தால் எப்படி அக்கட்சியோடு கூட்டணி வைக்க முடியும்!

எந்தக் கூட்டணியில் இருந்தாலும் தனி சின்னத்தில் நிற்கிறோம் என்பது எங்கள் சுதந்திரம். அதிமுகவுடன் கூட்டணி வைத்தபோது கூட இதே கோரிக்கையைத்தான் வைத்தோம். திமுகவோ அதிமுகவோ, புது சின்னத்தில் நாங்கள் நின்றால் அது நம்மை எதிர்த்து நிற்பவர்களுக்கு சாதகமாகிவிடும் என்ற கோணத்தில்தான் தங்கள் கட்சி சின்னத்திலேயே போட்டியிடச் சொல்கிறார்கள். இதையும் கட்டாயமாகச் சொல்லவில்லை. எங்களை ஆக்கிரமிப்பு செய்கிறார்கள் என்றும் நாங்கள் கருதவில்லை.  

மத்திய அரசின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்..?

சனாதனக் கொள்கைகளை மறுபடியும் நிலைப்படுத்துவதில்தான் கவனமாக இருக்கிறார்கள். எல்லா சட்டங்களையும் அவசரச் சட்டங்களாகக் கொண்டு வருவது, அடாவடித்தனமாக மாநிலங்களவையில் நிறைவேற்றுவது என்கிற போக்குதான் இருக்கிறது. ஜனநாயகம், அரசியல் அமைப்புச் சட்டம், மக்களின் உணர்வுகள்... ஆகியவற்றின் மீது இவர்களுக்கு மரியாதை இல்லை.

‘இந்து’ என்று சொல்லி இந்துக்களுக்கு எதிரான சட்டங்களைத்தான் கொண்டு வருகிறார்கள். சுற்றுச்சூழல் சட்டம், விவசாய மசோதா, லேபர் லாஸ்… என எது கொண்டு வந்தாலும் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இந்துக்களுக்கு எதிரான சட்டங்களையே அமல்படுத்துகிறார்கள்.
இந்துக்களின் முதல் எதிரி பாஜகதான்!

‘கொள்கை வெல்லக் களமாடுவோம்... கோட்டையில் ஒரு நாள் கொடியேற்றுவோம்...’ அந்த நாள் எப்போது?
எங்கள்  கட்சியின் வெள்ளி விழா மாநாடு மதுரையில் நடைபெற்றபோது தொண்டர்களை  அரசியல்படுத்துவதற்காகவும், அவர்களுக்கு ஓர் இலக்கை  தெளிவுபடுத்துவதற்காகவும் முன்வைக்கப்பட்ட முழக்கம் இது.

கொள்கை வெல்ல களமாடுவோம் என்பதை ஒரு முன்நிபந்தனையாக வைத்து கோட்டையில் ஒரு நாள் கொடியேற்றுவோம் என்பதை இறுதி இலக்காகச் சொல்கிறோம்.  ‘சாதி  ஒழிப்பு’ என்பதுதான் நாங்கள் முன்வைக்கும் முக்கியமான கொள்கை. அதற்கு  மக்களை அரசியல்படுத்த வேண்டும், இணைந்து பணியாற்ற வேண்டும். அரசியல்  அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் இலக்கை அடைய  முடியும் என்கிற பொருளில் முன்வைக்கப்பட்டது.  

அதற்கான காலம் இத்தனை  ஆண்டுகளில் வரும் என்றெல்லாம் குறிக்க முடியாது. எந்த அளவு மக்களை  அரசியல்படுத்துகிறோம், அமைப்பாக்குகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் அது  அமையும். சீர்திருத்தமா... புரட்சியா... எது சமூக விடுதலைக்கு வழிவகுக்கும்..?சீர்திருத்தம் மாற்றத்திற்கானது அல்ல. அது முழுமையாக மாற்றமடைவதும் (transformation) கிடையாது. ஆனால், மாற்றமடைவதுதான் புரட்சி.

மகாத்மா காந்தி சொன்னது போல், ‘எல்லா சாதிகளும் அப்படியே இருக்கட்டும், சாதிகளை எல்லாம் ஒழிக்க வேண்டியதில்லை. ஆனால், தீண்டாமை வேண்டாம். சகோதரர்களாக இருப்போம்’ என்று சொல்வது சீர்திருத்தம்.

தெளிவாகச் சொல்வதென்றால், வீட்டுக்குள் துர்நாற்றம் அடித்தால்... அதற்கான காரணிகளைத் தூக்கிப் போடாமல் ஊதுபத்தி ஏற்றி, சாம்பிராணிப் புகை போடுவது சீர்திருத்தம்.அண்ணல் அம்பேத்காரும் தந்தை பெரியாரும் துர்நாற்றத்துக்கான காரணிகளைத்தான் தூக்கிப் போடச் சொன்னார்கள். இதுதான் புரட்சி. இருக்கும் கட்டமைப்பில் எந்த மாற்றமும் ஏற்படுத்தாமல் முன்னே, பின்னே சில சிறு திருத்தங்கள் செய்துகொள்ளும் சீர்திருத்தத்தால் தலித் விடுதலை சாத்தியமில்லை.

அதேபோல் தலித் விடுதலை என்பது தலித்துகள் மட்டுமே போராடி வென்றெடுக்கக் கூடியதும் இல்லை. சாதி ஒழிப்பு என்ற கருத்தில் உடன்பாடு உள்ளவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒட்டுமொத்த மனித குலத்தின் நலனில் அக்கறை கொண்டு செய்யக்கூடிய போராட்டம் அது. அப்போதுதான் விடுதலை சாத்தியம். அதற்கு சாதி அமைப்புகளுக்குப் பின்னால் இருக்கக் கூடிய கொள்கை கோட்பாடுகளைக் கட்டிக் காப்பாற்றக்கூடிய சக்திகள் யார் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் விடுதலையை நோக்கி நகர முடியும்.

அவ்வாறு இங்கு நிறுவப்பட்டிருக்கும் சமூகக் கட்டமைப்புக்குப் பின்னால் இருக்கக்கூடிய கோட்பாடுதான் சனாதனம் என்று அண்ணல் அம்பேத்காரும், தந்தை பெரியாரும் சுட்டிக் காட்டுகிறார்கள்.அந்த சனாதனத்தைக் காப்பாற்றக்கூடிய சங்பரிவார்கள்தான் இந்த சாதி ஒழிப்புக்கு எதிரான சக்திகள் என்று நூற்றாண்டுகளுக்கு முன்னரே பிரசாரத்தை ஆரம்பித்தார்கள். சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை. இதுதான் விடுதலைச் சிறுத்தைகள் முன்வைக்கக் கூடிய முழக்கம்.

அன்னம் அரசு