ரத்த மகுடம்-119பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘கரிகாலா... நிறுத்து...’’ சாளுக்கிய மன்னர் கர்ஜித்தார். ‘‘என் முன்னால் எனது ஒற்றர் படைத் தலைவியின் கழுத்தை நெரிக்கும் துணிச்சல் உனக்கு எங்கிருந்து வந்தது..?’’‘‘மன்னிக்க வேண்டும் மன்னா...’’ சிவகாமியின் கழுத்தி லிருந்து தன் கரங்களை கரிகாலன் எடுத்தான். ‘‘உங்கள் உத்தரவில்லாமல் இவளைக் கொல்ல முயன்றது பிழைதான்...’’‘‘பிழை என்றால்... தவறு இல்லை என்கிறாயா..?’’ சாளுக்கிய இளவரசனின் கண்கள் கூர்மையடைந்தன.
‘‘ஆம் இளவரசே!’’ பதற்றமின்றி கரிகாலன் பதில் அளித்தான்.

‘‘என்ன... இது உனக்குத் தவறாகப்படவில்லையா..?’’ விக்கிரமாதித்தர் நிதானத்தை வரவழைத்தபடி கேட்டார்.‘‘படவில்லை மன்னா... ஏனெனில் இது...’’ தன் கரங்களில் இருந்த கச்சையை உயர்த்தினான் கரிகாலன். ‘‘போலி...’’ ‘‘எந்த விதத்தில் இதைப் போலி என்கிறாய் கரிகாலா..?’’ ஸ்ரீராமபுண்ய வல்லபர் குறுக்கிட்டார்.‘‘போர் அமைச்சரான நீங்கள் இந்த வினாவைத் தொடுக்கலாமா..?’’ புருவத்தை உயர்த்தினான் கரிகாலன். ‘‘காலாட் படையும் காலாட் படையும் மோதுவதும்; புரவிப் படையை புரவிப் படை எதிர்கொள்வதும்தான் தர்மப்படி நடக்கும் போர் முறை.

இதற்கு மாறாக காலாட் படையை புரவிப் படையும்; புரவிப் படையை யானைப் படையும் எதிர்கொள்வது அதர்மப் போர்; அசுரப் போர். கொம்பு ஊதி அறிவித்தபிறகே போரைத் தொடங்க வேண்டும்... சூரிய அஸ்தமனத்துக்குப் பின்... குறிப்பாக இரவில் யுத்தம் செய்யக் கூடாது... என்ற நியாயங்களை எல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டு நள்ளிரவிலும் எதிர்த் தரப்பினர் மீது பேயாட்டம் ஆடுவதுதான் அசுரப் போர்.

நச்சு நீரில் ஊற வைத்த கற்களை எதிர்த் தரப்பினர் மீது வீசுவது... கந்தகக் குண்டுகளை பந்தத்தில் கொளுத்தி பகை நாட்டின் வீரர்கள் மீது வீசுவது... எதிரி நாட்டின் குடிநீரில் விஷத்தைக் கலப்பது... விவசாய நிலங்களை அழிப்பது... செயற்கையாக யானைகளுக்கு மதம் பிடிக்க வைத்து அவற்றை வேளாண் நிலங்களில் குதறவிட்டு எக்காலத்திலும் அந்தப் பிரதேசத்தில் பயிர் செய்ய முடியாதபடி நிலத்தை மலடாக்குவது... அப்பாவி மக்களை கொத்துக் கொத்தாகக் கொன்று குவிப்பது... காட்டு விலங்குகளையும் பறவைகளையும் எதிரிப் படைகள் மீது ஏவுவது... இவை எல்லாம்தான் அசுரப் போர் வகையில் சேரும்.

அசோகச் சக்கரவர்த்தி அப்படியொரு அசுரப் போரைத்தான் கலிங்கத்தின் மேல் தொடுத்தார். நரசிம்மவர்ம பல்லவர் வாதாபி மீது பாய்ந்ததும் அப்படித்தான். அப்படிப்பட்ட கொடூரமான போர் வியூகத்தை மூன்று விதங்களில் பரஞ்சோதி தீட்டினார். அதில் ஒன்று இதில் இருப்பதாக நினைக்கிறீர்களா..?’’ ‘‘இல்லை என்கிறாயா கரிகாலா..?’’ கண்களை விரித்தார் ராமபுண்ய வல்லபர்.

‘‘ஆம்... இதிலிருக்கும் கோடுகள் தவறான இடங்களைச் சுட்டிக் காட்டுகின்றன... தமிழக நிலப்பரப்புகளை நன்கு அறிந்த எவர் ஒருவரும் இது உண்மையைப் போல் தோற்றமளிக்கும் போலி என்பதைக் கண்டு கொள்வார்கள்...’’ விக்கிரமாதித்தர் திரும்பினார். ‘‘கரிகாலனின் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறாய் சிவகாமி..?’’ தன் கழுத்தைத் தடவியபடி சுவாசத்தைச் சீராக்கிக்கொண்ட சிவகாமி நிமிர்ந்தாள். ‘‘அபாண்டமாக என் மீது சோழ இளவரசர் பழி சுமத்துகிறார் மன்னா... இதிலிருக்கும் வியூகம் பொய் என்றால்... பரஞ்சோதியே போலியாக இப்படியொரு அசுர வியூகத்தை அமைத்தார் என்றுதான் பொருள்!’’

‘‘உனது திருட்டுத்தனத்தை மறைக்க பரஞ்சோதி மீது பழியைப் போடுகிறாயா..?’’ கரிகாலன் ஆவேசத்துடன் கேட்டான்.
‘‘இந்த மிரட்டலை எல்லாம் வேறு யாரிடமாவது வைத்துக் கொள்ளுங்கள்... இன்னொரு முறை என் கழுத்தை நெரிக்க நீங்கள் முற்பட்டால்... மூட்டு வரை மட்டுமே உங்களுக்குக் கை இருக்கும்!’’ ‘‘வெட்டி விடுவாயா..?’’‘‘அறுத்து விடுவேன்!’’ சிவகாமியின் நயனங்கள் சிவந்தன.

‘‘ஏய்...’’ கரிகாலன் கோபத்துடன் அவளை நோக்கி நடந்தான்.விக்கிரமாதித்தர் அவன் கைகளைப் பிடித்துத் தடுத்தார். ‘‘இரண்டாவது முறையாக ஆணையிடுகிறேன்... இனியொரு முறை என் முன்னால் நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் வீழ்த்திக் கொள்ள முயன்றால்... விநயாதித்தா... உத்தரவுக்குக் காத்திராமல் இருவரின் சிரசையும் சீவி விடு...’’சாளுக்கிய இளவரசன் தன் வாளை உருவினான்.

‘‘மன்னா...’’ சிவகாமி தன் கோபத்தை அடக்கினாள். ‘‘சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு விடைபெறுகிறேன்...’’

உதட்டைக் கடித்தவள் சில கணங்களுக்குப் பின் நிமிர்ந்து தன்னைச் சுற்றி நிற்பவர்களை ஒரு பார்வை பார்த்தாள்.‘‘இது உறையூர் விருந்தினர் மாளிகை. அதாவது சோழ சிற்றரசுக்கு உட்பட்ட மாளிகை. இங்கு கரிகாலர் இருப்பார் என்று எனக்குத் தெரியும்.

தெரிந்தும் இங்கு நான் ஏன் உங்களைச் சந்திக்கவும் இந்த அசுரப் போர் வியூகத்தைக் கொடுக்கவும் வந்தேன்..? உண்மையாக இருப்பதால்தானே..? போலியாக நான் ஒன்றைத் தயாரித்திருந்தால் அதை எடுத்துக் கொண்டு இங்கு... அதுவும் கரிகாலர் இருக்கும் சமயத்தில் வந்திருப்பேனா..?’’ஸ்ரீராமபுண்ய வல்லபரும் விநயாதித்தனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

கரிகாலனின் பார்வையும் விக்கிரமாதித்தரின் கருவிழிகளும் சிவகாமியையே இமைக்காமல் நோக்கிக் கொண்டிருந்தன.‘‘மன்னா... பயன்படுத்தப்படாத பரஞ்சோதி அமைத்த இரு அசுரப் போர் வியூகங்கள் குறித்த தகவல் உங்களுக்குக் கிடைத்ததும் அதைக் கைப்பற்ற நீங்கள் திட்டமிட்டீர்கள்.

இதற்கு சாளுக்கியர்களைப் பயன்படுத்த நீங்கள் விரும்பவில்லை. மாறாக உங்களை காஞ்சிக்கு வரவழைத்த... பல்லவ அரியணையில் நீங்கள் அமர காரணமாக இருந்த... உள்ளுக்குள் உங்கள் நலவிரும்பியும் வெளிப்பார்வைக்கு பல்லவ உபசேனாதிபதியுமான கரிகாலரைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தீர்கள்.

உண்மையில் மிகப்பெரிய ராஜதந்திரம் இது. இந்த பாரத தேசத்திலேயே உங்கள் அளவுக்கு நுண்ணுணர்வு கொண்ட இன்னொரு மன்னரைப் பார்ப்பது அரிது. ஏனெனில் எந்த பல்லவ சேனாதிபதி சாளுக்கியர்களை அழிக்க அசுரப் போர் வியூகத்தை அமைத்தாரோ அதே வியூகத்தை அதே பல்லவ உபசேனாதிபதியைக் கொண்டே கைப்பற்றி பல்லவர்களை வேரோடு சாய்க்க காய்களை நகர்த்துகிறீர்கள்.

இந்தப் பணியில் அடியேன் வெறும் துரும்புதான். ஆனால், சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது போல்... இதோ... நீங்கள் பல ஆண்டுகளாகப் பெறக் காத்திருந்த பரஞ்சோதி அமைத்த அசுரப் போர் வியூகத்தை லாவகமாகக் கைப்பற்றி வந்து உங்களிடம் கொடுத்திருக்கிறேன்...’’

நிறுத்திய சிவகாமி கணத்துக்கும் குறைவான நேரத்தில் இமைகளை மூடித் திறந்தாள். ‘‘மன்னா... பரஞ்சோதி அமைத்த மூன்று அசுரப் போர் வியூகங்களையும் பார்வையிட்டு அலசி ஆராய்ந்த நரசிம்மவர்ம பல்லவர், அதில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுத்தார். மற்ற இரண்டும் சீனத்தின் மெல்லிய பட்டில் வரையப்பட்டு காஞ்சி பொக்கிஷ அறையின் நிலவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

வாதாபியை எரித்து தீக்கிரையாக்கியதும் நரசிம்மவர்ம பல்லவர் செய்த முதல் காரியம்... பயன்படுத்தப்படாமல் இருந்த பரஞ்சோதி யின் மற்ற இரு அசுரப் போர் வியூகங்கள் வரையப்பட்ட சீனப் பட்டை எரித்துச் சாம்பலாக்கியதுதான்.ஆனால், பரஞ்சோதி அசுரப் போர் வியூகத்தைத் தீட்டும்போதே உடனிருந்து கவனித்த ஒரு வீரன் முழுமையாக அதை... பயன்படுத்தப்படாமல் இருந்த இரு அசுர வியூகங்களையும்... தன் உள்ளத்தில் செதுக்கிக் கொண்டான்.

பேராசைக் குணமிக்க அந்த வீரன், களவுக் குற்றத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டு காஞ்சியின் பாதாளச் சிறையில் அடைக்கப்
பட்டான். ஆனாலும் போர்க் காலங்களில் பல்லவர்களுக்கு விசுவாசமாக அவன் இருந்ததால் காஞ்சியின் அறங்கூர் அவை, அவனுக்கு ஆயுள் தண்டனையோ மரண தண்டனையோ விதிக்கவில்லை. மாறாக, நாடு கடத்தியது.

பல்லவ நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அந்த வீரன், நேராக பாண்டிய நாட்டுக்குச் சென்றான். அங்கும் களவையே மேற்கொண்டான். பிடிபட்டு மதுரை பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டான். அச்சிறையிலேயே மரணமும் அடைந்தான்.ஆனால், உயிர் விடுவதற்கு முன் அந்த வீரன், பரஞ்சோதியின் பயன்படுத்தப்படாத இரு அசுரப் போர் வியூகங்களையும் தன் நினைவில் இருந்து தீட்டினான் என்ற நம்பத்தகுந்த தகவல் உங்களுக்குக் கிடைத்தது.

அந்த வியூகம் உங்களுக்குத் தேவை. எனவே அதை எடுத்து வரும்படி கரிகாலருக்கு கட்டளையிட்டீர்கள். சாளுக்கியர்களின் ஒற்றர் படைத்தலைவியான என்னை, இவருக்கு... இந்த சோழ இளவரசருக்கு... துணையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டீர்கள்.

பாரத தேசத்திலுள்ள அனைத்து பாதாளச் சிறைகள் குறித்த விவரங்களும்... அதன் வரைபடங்களும் காஞ்சிக் கடிகையிலுள்ள நூலகத்தில் சுவடிக் கட்டுகளாக இருக்கின்றன.எனவே கரிகாலர் அந்த சுவடிக் கட்டுகளை கடிகையில் இருந்து எடுத்தார். முதலில் காஞ்சி பாதாளச் சிறைக்குச் சென்றார். அங்கு பரஞ்சோதியின் இரு அசுரப் போர் வியூகங்களும் இல்லை. எனவே மதுரைக்குப் பயணப்பட்டார். பாண்டிய இளவரசர் முன் நாடகமாடி என்னை மதுரை பாதாளச் சிறையில் அடைக்கும்படி செய்தார்.

அங்குதான் பரஞ்சோதி தீட்டிய இரு அசுரப் போர் வியூகங்களும் கிடைத்தன. பாதாளச் சிறையின் சுவரில் தன் கை நகத்தால் அந்த வீரன் செதுக்கி வைத்திருந்தான். அதை அப்படியே எனது கச்சைகளில் வரைந்து எடுத்து வந்திருக்கிறேன்.  ஒரு வியூகத்தை முன்பே உங்களுக்கு அனுப்பிவிட்டேன்... இரண்டாவது வியூகத்தை காபாலிகனிடம் இருந்து நீங்கள் கைப்பற்றி விட்டீர்கள்...’’நிறுத்திய சிவகாமி அனைவரது கண்களையும் நேருக்கு நேர் சந்தித்தாள்.

‘‘அப்படியானால்... இங்கு நீ கொண்டு வந்த இது..?’’ தன் கையில் இருந்த கச்சையை உயர்த்திக் காட்டிவிட்டு அங்கிருந்த நாற்காலியின் மீது அதை கரிகாலன் வைத்தான். ‘‘மூன்றாவது அசுரப் போர் வியூகம்! இதன்படிதான் நரசிம்மவர்ம பல்லவரின் படைகள் போரிட்டு வாதாபியை எரித்தன! பொறுங்கள்...

உடனே பின் எதற்காக சற்று நேரத்துக்கு முன் இந்த அறையை விட்டு வெளியேற முயற்சித்தாய் என்றுதானே கேட்க வருகிறீர்கள்..? அரும்பாடுபட்டு இதைக் கொண்டு வந்த என்னைத் திரும்பத் திரும்ப நீங்கள் சந்தேகப்பட்டு ‘போலி’ என்று சொல்லி குற்றவாளியாக்கினால்..? உங்கள் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் ஓட முயன்றேன்... இதோ இப்பொழுதும்... வருகிறேன் மன்னா... பிறகு உங்களைச் சந்திக்கிறேன்...’’ சொல்லிவிட்டு விடுவிடுவென சிவகாமி வெளியேறினாள்.

‘‘சிவகாமி... நில்...’’ அழைத்தபடியே கரிகாலன் அவளைப் பின்தொடர்ந்தான்.விக்கிரமாதித்தரும் விநயாதித்தனும் ஸ்ரீராமபுண்ய வல்லபரும் சிலையாக நின்றார்கள்.அடுத்த ஒரு நாழிகையில் கரிகாலனின் பரந்த மார்பில், கச்சையில்லாமல் தன் கொங்கைகளை அழுத்தியபடி சிவகாமி படுத்திருந்தாள்.
கரிகாலனின் கரங்களில் அவளது கச்சை இருந்தது.அவனது மார்பில் வளர்ந்த ரோமங்களைக் கடித்தபடி சிவகாமி முணுமுணுத்தாள்... ‘‘இதுதான் உண்மையான அசுரப் போர் வியூகம்!’’

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்