சூப்பர் பன்றி
கார்ப்பரேட் நிறுவனங்களின் அடாவடிகளைத் தோலுரித்துக் காட்டும் கொரியன் படம் ‘ஓக்ஜா’. ‘நெட்பிளிக்ஸி’ல் ஆங்கிலத்தில் பார்க்க கிடைக்கிறது.பி.டி.கத்தரிக்காயைப் போல மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிக்குட்டிகளை உருவாக்கி கொள்ளை லாபம் சம்பாதிக்க திட்டம் தீட்டுகிறது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனம்.
 இந்தப் பன்றிகள் யானையைப் போல மிகப்பெரிதாக வளரும். அதிக சதையுடையதாக இருக்கும். இதன் கறி ரொம்பவே ருசியானது. அத்துடன் மிகக்குறைந்த காலத்திலேயே வளர்ந்துவிடும். பரிசோதனைக்காக 26 பன்றிக்குட்டிகளை இனப்பெருக்கம் செய்து உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் விவசாயிகளுக்கு அனுப்பி வைக்கிறது அந்த நிறுவனம். பன்றி வளர்வதற்கான காலநிலை, சூழலை அறிவதற்காக இந்த ஏற்பாடு. விவசாயிகள் பன்றிகளை வளர்க்கத் தேவையான அனைத்து வசதிகளையும் நிறுவனமே செய்து தந்துவிடும்.
இதி்ல் சிறப்பாக வளர்க்கப்பட்ட பன்றிக்கு ‘சூப்பர் பிக்’ என்று பட்டம் சூட்டி பரிசு வேறு காத்திருக்கிறது. பத்து வருடங்கள் கழித்து யாருடைய பன்றி ‘சூப்பர் பிக்’ அந்தஸ்தைத் தட்டப்போகிறது என்பதை அறிய நிறுவனத்தினர் களத்தில் இறங்குகின்றனர். தென் கொரியாவின் மலைப்பகுதியில் தாத்தாவுடன் வசித்துவரும் சிறுமி மிஜாவின் பன்றி செழுமையாக வளர்ந்து சூப்பர் பிக் பட்டத்தை வெல்கிறது. சிறுமி அந்தப் பன்றிக்கு ஓக்ஜா என்று பெயர் வைத்து நெருங்கிய தோழனைப் போல வளர்த்துவந்தாள். இருவரும் இணை பிரியாமல் ஒன்றாகவே இருப்பார்கள்.
ஒரு நிறுவனம் வளர்ப்பதற்காக பன்றியைத் தந்திருக்கிறது. அது வளர்ந்த பின் நிறுவனமே எடுத்துக்கொள்ளும் என்பது மிஜாவுக்குத் தெரியாது. ஒரு நாள் மிஜாவின் வீட்டுக்கு வரும் நிறுவனத்தினர் அவளுக்குத் தெரியாமல் ஓக்ஜாவை நியூயார்க்கிற்கு கொண்டு போகின்றனர். ஓக்ஜாவைக் காணாமல் உடைந்துபோகிறாள் மிஜா. பன்றியை நிறுவனம் கொண்டு போய்விட்டதை அறியும் அவள் மலையிலிருந்து ஓடியே நகரத்திற்கு வருகிறாள்.
அங்கே அவளுக்கு ஒருவரைக் கூடத் தெரியாது. அதிகாரமும் பணபலமும் மிகுந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடமிருந்து மலைவாழ் சிறுமியான மிஜா, தான் ஆசையாக வளர்த்த ஓக்ஜாவை எப்படி மீட்கிறாள் என்பதே சாகச திரைக்கதை. உணவுத்துறையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் அட்டூழியங்களைச் சொல்லும் இந்தப் படத்தில் குழந்தைகளைக் கவரும் ஆக்ஷன், அட்வெஞ்சர் காட்சிகள் இருப்பது சிறப்பு.
நிஜமான பன்றியா அல்லது கிராஃபிக்ஸா என்று தெரியாத அளவுக்கு டெக்னிக்கலாகவும் மிரட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு சூழலியல் சார்ந்த மீடியா விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.கடந்த வருடம் ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ‘பாரசைட்’ படத்தின் இயக்குநர் போங் ஜூன் ஹோதான் இந்தப் படத்துக்கும் இயக்குநர்.
|