தல! sixers story -20



பேஷன்ட் சக்சஸ்! ஆபரேஷன் அவுட்!

விசாகப்பட்டினத்தில் தோனி அடித்த 148 ரன்கள்தான், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஓர் இந்திய விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ரன் சாதனையாக அன்று அமைந்தது.

பின்னர் ஆறு மாதங்கள் கழித்து இலங்கை அணியிடம் அவர் அடித்த 183 (நாட் அவுட்) ரன்கள்தான் இன்று வரையில் உலக அளவிலேயே ஒரு விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ரன் என்கிற சாதனையாக யாராலும் முறிக்கப்படாததாக இருக்கிறது.எனினும் -விசாகப்பட்டினத்தில் அவர் அடித்த 148 ரன்களையே இன்றுவரை அதிசயமாக கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பேசுவதுண்டு.

ஏனெனில் -அப்போது உலகையே மிரட்டிக் கொண்டிருந்த பாகிஸ்தானின் அபாரமான பவுலிங் வரிசையை சீர்குலைத்திருந்தார்.
இன்னொரு சுவாரஸ்யமான சம்பவமும் அன்று விசாகப்பட்டினத்தில் நடந்தது.

தோனி செஞ்சுரி அடித்தபோது ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஸ்டேடியமே அதிர்ந்தது.எங்கோ ஸ்டேடியத்தின் ஓரமாக கூடு கட்டியிருந்த தேனீக்கள் மைதானத்துக்குள் படையெடுத்தன.பாகிஸ்தான் அணியினர், அம்பயர்கள், எதிர்முனையில் ஆடிக்கொண்டிருந்த டிராவிட் உள்ளிட்ட அத்தனை பேரும் அப்படியே மைதானத்தில் படுத்து தேனீக்களின் தாக்குதலில் இருந்து தங்களைக் காத்துக் கொண்டனர்.

ஆனால் -தோனி மட்டும் ‘பாகுபலி’ மாதிரி, கையில் பேட்டுடன் கம்பீரமாக களத்தில் நின்று கொண்டிருந்தார்.
இந்திய ரசிகர்கள் என்றுமே தோனியின் அந்த அற்புதமான அதிரடி போஸை மறக்கவே மாட்டார்கள்.இந்தியா அன்று 58 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.

தோனிதான் மேன் ஆஃப் த மேட்ச்.போட்டி முடிந்ததுமே ஒன் டவுனாக பேட்டிங் வரிசையில் தோனியை அனுப்பியது குறித்து கங்குலி விளக்கினார்.
“முதல் 15 ஓவர்களில் அதிக ரன்களைக் குவிக்க வேண்டுமென நினைத்துதான் தோனியை அனுப்பினேன். அவர் இப்படிப்பட்ட விஸ்வரூபம் எடுப்பார் என்று நினைக்கவே இல்லை...” என்று தோனி புகழ் பாடினார்.

அடுத்த போட்டி ஜாம்ஷெட்பூர் நகரில்.ஒன்றுபட்ட பீகாராக இருந்தபோது ஜாம்ஷெட்பூர் மைதானத்தில் ஏராளமான போட்டிகளில் விளையாடியிருக்கிறார் தோனி.ஆனால் -முதன்முறையாக ஒரு சர்வதேசப் போட்டியில் தன் சொந்த மண்ணில் விளையாடப் போகிறார்.
முந்தைய போட்டியில் 148 ரன்கள் வேறு எடுத்திருந்ததாலும், நம்ம ஊரு பையன் என்கிற உணர்வு இருந்ததாலும் ஜாம்ஷெட்பூரில் தோனிக்கு ரசிகர்களால் மகத்தான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

மேலும் -ஓவர்நைட் ஸ்டார் ஆகிவிட்ட தோனியின் பின்னாலேயே மொத்த மீடியாவும் அலைந்தது.ஆனால் -முந்தைய போட்டி தோல்விக்கு பாகிஸ்தான் இங்கே இந்தியாவை பழி தீர்த்துக் கொண்டது.முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 319 ரன்கள் குவித்தது.மகத்தான இலக்கை எட்ட முடியாமல் இந்தியா திணறியது.சேவாக், டெண்டுல்கர், கங்குலி என்று இந்தியாவின் முன்வரிசை பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்டினார்கள்.

தோனியும், டிராவிட்டும் ஓரளவுக்குப் போராடினார்கள். ஆளுக்கு தலா 28 ரன்கள்தான் அவர்களால் அடிக்க முடிந்தது.
பின்னர் முகம்மது கைஃபுடன் இணைந்து பவுலரான இர்ஃபான் பதான் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்.அவர் அரை செஞ்சுரி அடித்து அவுட்டான பின்பு இந்திய அணியின் கதையும் முடிந்தது.பாகிஸ்தான் 106 ரன்கள் வித்தியாசத்தில் பிரும்மாண்டமான வெற்றியை எட்டியது.

தன்னுடைய சொந்த ஊரில் நடந்த போட்டியில் ஜொலிக்க முடியவில்லையே என்று தோனி வருத்தப்பட்டார்.ஆயினும் -தோனிக்கு அங்கேயே முதல் மரியாதை செய்தார் கேப்டன் கங்குலி.ஆம்.போட்டி முடிந்ததும் இந்திய கேப்டனாக பத்திரிகையாளர்களிடம் பேட்டி தரவேண்டிய நிலையில் இருந்த அவர், “எனக்குபதிலாக இந்திய அணியின் புதிய அதிரடி மன்னனும், உங்கள் மண்ணின் மைந்தனுமான தோனி பேசுவார்...” என்று கூறி இன்ப அதிர்ச்சி அளித்தார்.அதுதான் தோனி எதிர்கொண்ட முதல் பெரிய பிரஸ்மீட்.

அன்று இந்தியா தோல்வி அடைந்திருந்ததால், பத்திரிகையாளர்கள் உக்கிரமாக இருந்தார்கள்.கங்குலி மாட்டியிருந்தால் கிழித்துத் தோரணம் கட்டியிருப்பார்கள்.மாட்டியது தோனி என்பதால் மட்டும் அவர்கள் கருணை காட்டிவிடவில்லை.எடுத்ததுமே கேள்வியில் சூடு பறந்தது.“ஏன் இவ்வளவு கேவலமாக தோற்றீர்கள்? பாகிஸ்தான் 319 ரன்கள் அடித்ததுமே இந்திய பேட்ஸ்மேன்கள் இலக்கை நினைத்து மலைத்து பயந்து போய்விட்டார்களா?”
தோனியின் பதிலோ ஐஸ் சர்பத் மாதிரி சில்லென்று இருந்தது.

“கிரிக்கெட் என்பது நாம் நினைப்பது போல சுலபமான விளையாட்டல்ல. இத்தொடரில் நாம் எதிர்கொண்டிருப்பது உலகின் மிகச்சிறந்த பவுலிங் வரிசையை என்பதை நினைத்துப் பாருங்கள்.

என்ன கேட்டீர்கள்?பயமா?
இந்திய பேட்ஸ்மேன்களுக்கா? (ரஜினி மாதிரி ஹாஹாவென்று சிரிக்கிறார்)நம்முடைய ‘பாய்ஸ்’ இன்றும் மிகச்சிறப்பாக விளையாடினார்கள். ஏற்கனவே இரண்டு போட்டிகளை பிரமாதமாக வென்றிருக்கிறார்கள். அடுத்தும் வெல்லப் போகிறார்கள் என்பது நிச்சயம்...”தோனி, தன் சக வீரர்களை ‘பாய்ஸ்’ என்று குறிப்பிட்டது பத்திரிகையாளர்களுக்கு மட்டுமல்ல, சீனியர் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஆச்சரியம்.சீனியர் வீரர்கள்தான் அணியினரை ‘பாய்ஸ்’ என்று குறிப்பிடுவது வழக்கம். தோனியோ அப்போதுதான் ஐந்து போட்டிகளே ஆடியிருந்த புதுமுகம்.
ஆனால் -

ஒரு கேப்டனுக்குரிய தோரணை அவருக்கு அப்போதே வந்துவிட்டது என்பதை அனைவரும் உணர்ந்தார்கள்.அதற்கேற்ப அன்று பிரஸ் மீட்டில் வீசப்பட்ட அனலான கேள்வி அஸ்திரங்களை அசால்ட்டாக எதிர்கொண்டார்.குறிப்பாக சீனியர் வீரர்களான டெண்டுல்கர், சேவாக் போன்றவர்கள் அப்போது அவ்வளவாக ஃபார்மில் இல்லாதது குறித்த கேள்விகள்.அணிக்கு புதியதாக வந்திருக்கும் ஒரு வீரரிடம் இதைக் கேட்பதில் எந்தவிதமான லாஜிக்கும் இல்லை.

ஆனால் -வம்பாக ஏதாவது உளறி வைக்க மாட்டாரா என்கிற ஆர்வத்தில் ஊடகங்கள் கேட்டன.கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக அந்தக் கேள்விகளை தனக்கே உரித்தான ‘மிஸ்டர் கூல்’ மனோபாவத்தில் எதிர்கொண்டு, மைதானத்தில் பிய்த்து உதறுவதைப் போன்றே கவனமாகவும், அதிரடியான பதில்களாலும் எதிர்கொண்டார் தோனி.

அந்த பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட ஒரு பத்திரிகையாளர் எழுதினார்.“பல நூறு போட்டிகள் விளையாடி அனுபவம் கொண்ட ஒரு வீரரைப் போல அவ்வளவு பொறுப்புடனும், நிதானத்துடனும் பேசினார் தோனி...”தோனிக்கு நேரம் நன்றாக இருந்தாலும், இந்திய அணிக்கு அப்போது ஏதோ ஜாதகக் கோளாறு.முதல் இரண்டு போட்டிகளின் வெற்றியோடு இந்தியா திருப்திப்பட்டுக்கொண்டது.

தொடரில் மிச்சமிருந்த நான்கு போட்டிகளையும் பாகிஸ்தான் வென்று, இந்திய மண்ணிலேயே 4 - 2 என்கிற கணக்கில் இந்தியாவைச் சூறையாடியது.
இந்தியா எப்போது தோற்குமென்று கழுகு மாதிரி காத்திருந்த ஊடகங்கள் இந்திய அணியின் முக்கியமான வீரர்களைக் கடித்துக் குதறத் தொடங்கினார்கள்.எனினும் -தோனி அத்தொடரில் மட்டுமே 261 ரன்கள் குவித்து, கங்குலி தன் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் காப்பாற்றினார். ஒரு போட்டிக்கு சராசரி யாக 43.50 ரன்கள். ரசிகர்கள் மத்தியில் ‘மகேந்திர சிங் தோனி’ என்கிற பெயர் நினைவில் இருக்குமளவுக்கு நல்ல
ஆட்டமே.

தோனியைவிட அத்தொடரில் சிறப்பாக ரன்கள் குவித்தவர் டிராவிட் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.அந்தப் போட்டித் தொடருடன் இந்திய அணிக்கு பயிற்சி யாளராக இருந்த ஜான்ரைட் ஓய்வு பெற்றார்.இளம் வீரர்களையும், மூத்த வீரர்களையும் ஒருங்கிணைத்து இந்தியாவின் அடுத்த சில ஆண்டுகளுக்கான தொடர்ச்சியான வெற்றிகளுக்கு வித்திட்ட பலமான ஃபார்முலாவின் மூளை, ஜான் ரைட்டுடையது.

ஜான் ரைட் விடைபெற்று விட்ட நிலையில் அடுத்த கோச் யார்?
புதுமுகமான தன்னை அவர் எப்படி நடத்துவாரோ என்றெல்லாம் தோனிக்கு லேசான சஞ்சலம் இருந்தது.

(அடித்து ஆடுவோம்)

 யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்