சிறுகதை - இருத்தல்
பார்வை ஜன்னலுக்கு வெளியே போயிற்று. வானத்தின் கருமை மறைந்து மெல்ல வெளிச்சம் பரவத் தொடங்கி இருந்தது. ‘ஐயோ... விடியப் போகிறதா..?’ என்கிற வருத்தம் ஏற்பட்டது. விடியல் பிடிப்பதில்லை இவளுக்கு. பகல் நேரங்களை விட இரவு நிம்மதியாகத் தெரிந்தது. சாப்பிட்டுப் படுத்தால் தூங்கி விடலாம். தூக்கம் இவளைப் பொருத்தவரையில் சந்தோஷமான விஷயம். தூக்கத்தில் இருத்தல் இல்லை. எந்தவொரு நிரூபித்தலும் இல்லை.

வகுப்பறையில் தொண்டை கிழியக் கத்த வேண்டியதில்லை. அந்தக் கத்தல் எதுவும் காதில் விழாதது போலிருக்கும் மாணவிகள் இல்லை. எதிர்க் கேள்விகளே அற்று வெற்றுப் பார்வை பார்க்கும் மாணவிகளைக் கொண்ட வகுப்பறை ஒரு தண்டனை...
‘தன் வகுப்பில்தான் அப்படி இருக்கிறார்களா அல்லது மற்ற ஆசிரியைகளின் வகுப்பிலும் கூட அப்படித்தானா..?’ கேட்க வேண்டும் போலிருக்கும் இவளுக்கு. கேட்டுத் தெரிந்து கொள்கிற ஆர்வம் முன்பெல்லாம் மேலோங்கியிருந்தது. இப்போது அதுவும் கூட வடிந்து விட்டது. கேட்டு ஒருவேளை அவர்கள், ‘‘இல்லையே... எங்க கிளாஸ்ல ரொம்ப சந்தோஷமா இருக்காங்களே... கேள்வி மேல் கேள்வி கேக்கறாங்களே...’’ என்று சொல்லி விட்டால்...
அந்த பதில் அவளை வீழ்த்தும். நெஞ்சில் பலமான அடியாக விழும். பின் ஏன் தன் வகுப்பில் மட்டும் இப்படி என்கிற கேள்வி துளைத்தெடுக்கும். அதற்கு பயந்தே அவள் பேசாமல் இருந்தாள்.அவள் படித்தபோது எல்லாப் பாடங்களும் தமிழிலேயே இருந்தன. விஞ்ஞானம், பௌதிகம், ரசாயனம், பூகோளம் மட்டுமின்றி கணக்கு கூட தமிழில்தான். ஆங்கிலம் ஒன்றுதான் ஆங்கிலத்தில்.
ஆனால், இப்போது அப்படியல்ல. கல்வி கற்கும் மொழியாக ஆங்கிலம் மாறியபின்பு தமிழ் வழியில் கல்வி பயில யாருக்கும் விருப்பம் இல்லை. ஏதோ சில மாணவிகள் மட்டுமே வேறு வழியின்றி தமிழ் வழிக் கல்வி கற்றனர். இரண்டாம் மூன்றாம் மொழியாகக் கற்க இந்தியும், சமஸ்கிருதமும் வந்தபிறகு ஒவ்வொரு படிவத்திலும் தமிழ் வகுப்பில் பத்துப் பேர் கூட இருக்கமாட்டார்கள். அந்த பத்து பேர்களுக்காக மட்டுமே இவள் இந்தப் பள்ளி ஆசிரியை பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறாள்.
பாடம் நடத்த இவள் வகுப்புக்குள் நுழையும்போது அமர்ந்திருக்கும் பத்துப் பதினைந்து மாணவிகளும் எழுந்திருக்க மாட்டார்கள். வணக்கம் சொல்ல மாட்டார்கள் .வகுப்பு அற்ற சமயங்களில் இவள் ஆசிரியைகளுக்கான அந்தப் பெரிய அறையின் நீண்ட மேஜையின் முன் அமர்ந்து நோட்டுப் புத்தகங்களைத் திருத்திக் கொண்டிருக்கும் போது மற்ற வகுப்புகளிலிருந்து ‘‘குட் மார்னிங் மிஸ்...’’ என்கிற கோரஸ் குரல் பலமாக எழுந்து இவள் காதில் விழுந்து மனதை வலிக்கச் செய்யும்.
‘‘தமிழ் என்ன பாவம் பண்ணியது..?’’ என்று வாய்விட்டே கேட்டுக் கொள்வாள்.‘‘என்ன சொல்றீங்க ரோசி டீச்சர்..?’’ எதிரில் அமர்ந்திருக்கும் சக ஆசிரியை கேட்பார்.
‘‘ஒன்றுமில்லையே...’’ என்று மழுப்புவாள் இவள்.‘‘இல்ல ரோசி டீச்சர்... நீங்க ஏதோ சொன்னது காதுல விழுந்தது...’’ ‘‘இல்ல பத்மா... நான் ஒண்ணும் சொல்லல...’’‘‘சரி டீச்சர்...’’ என்று அந்தப் பெண் கையிலிருந்த வாரப் பத்திரிகையில் மீண்டும் அமிழ்வாள். அதற்குப் பின்னரும் இவள் மனசு குமுறும். எல்லோருமே அவளை ரோசி டீச்சர் என்றுதான் கூப்பிடுவார்கள். ஒருத்தர் கூட அவளை ரோசி என்று அழைத்ததில்லை.
பிறக்கும் போதே ஆசிரியையாகப் பிறந்த மாதிரி, பெயர் வைத்த போதே டீச்சர் என்பதையும் சேர்த்து வைத்த மாதிரி ரோசி டீச்சர்... ரோசி டீச்சர் என்பதா..? பள்ளியின் தலைமை ஆசிரியையிலிருந்து கடைநிலை ஊழியர்கள் வரை அவள் ரோசி டீச்சர்தான். டீச்சர் இல்லாமல் யாரும் அவளை அழைத்ததில்லை. அவள் வசிக்கும் தெருவுக்கே அவள் டீச்சர்தான்.
பள்ளியின் மற்ற ஆசிரியைகள் வயதில் சிறியவர்கள். இப்போதுதான் ஆசிரியை வேலைக்கே வந்திருப்பவர்கள். சேர்ந்து மூன்று நான்கு வருடங்களே இருக்கும். ஆனால், இவள் அப்படியல்ல. மற்றவர்களைப்போல் கல்லூரிப் படிப்பு முடிந்து, ஆசிரியை ஆவதற்குப் படித்த பின் வந்தவளல்ல. இதே பள்ளியில் படித்து, இதே பள்ளியில் ஆசிரியையாக வேண்டும் என்று வந்தவள். பள்ளிப் படிப்பு முடிந்ததும் ஆசிரியை பயிற்சி பெற்றவள். பள்ளியோடு கிட்டத்தட்ட நாற்பது வருட தொடர்பு... மூத்த ஆசிரியை. அதற்காக..?
ஆழமான பெருமூச்சோடு எழுந்துகொண்டாள். முகம் கழுவி, பல் துலக்கி விட்டு வந்து வாசல் கதவைத் திறந்துவைத்தாள். வீட்டு வேலை செய்யும் அன்னம்மா வருவாள். அன்னம்மாவுக்கும் இவள் வயது இருக்கும். அப்பா உயிரோடு இருந்த போதே வேலைக்கு வந்தவள். அப்பா பாரிச வாயுவால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானதிலிருந்து மரணிக்கும் வரை வீட்டோடு தங்கியவள். ஆனால், அவளுக்கும் கூட இவள் டீச்சர்தான்.
‘‘ஏன் டீச்சர், கண்ணாலம் கட்டாம ஒத்தையாவே நின்னுட்டீங்க..?’’ ‘‘ஆமாம். அது ஒன்றுதான் பாக்கி...’’‘‘ஏன் டீச்சர் அப்படி சொல்றீங்க? அம்மா இருந்திருந்தால் இப்படி நிக்க வச்சிருக்க மாட்டாங்க... எப்பாடு பட்டாச்சும் கல்யாணத்த முடிச்சிருப்பாங்க...’’அன்னம்மா சொன்ன போது சரி என்றே தோன்றியது. அப்பா அவளது கல்யாணத்தைப் பற்றி உண்மையாக இருந்ததில்லை என்பதை அவள் உணர்ந்திருக்கிறாள். அவள் திருமணமாகிப் போய் விட்டால் தன்னால் தனியாக என்ன செய்ய முடியும் என்கிற பயம் அவரை அழுத்தியிருக்க வேண்டும். ‘இவள் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாதே...’ என்கிற எண்ணத்துடனே இரண்டு மூன்று முறை ஒப்புக்கு அவளிடம் கேட்டிருக்கிறார்.
‘‘டேவிட்னு ஒரு நல்ல பையனாம். சர்ச்சுல ஃபாதர் சொன்னாரு...’’ ‘‘எனக்குக் கல்யாணமெல்லாம் வேணாம்ப்பா...’’‘‘ஏம்மா..?’’ ‘‘இஷ்டமில்ல... அதெல்லாம் சரிப்பட்டு வராது...’’
அவ்வளவுதான். விட்டுவிட்டார். வேண்டுமென்றே இரண்டு மூன்று முறை அந்தப் பேச்சை எடுத்தார். தன்னை யாரும் பழி சொல்லக்கூடாது என்பதற்காக மட்டுமே எடுக்கப்பட்ட பேச்சு. அதுவும் அவளுக்குப் புரிந்துதான் இருந்தது. ஆனாலும் அவரை ஒன்றும் சொன்னதில்லை. மனசு வலிக்கப் பேசியதில்லை. இது மென்மைத்தனமா அல்லது கோழைத்தனமா என்றுதான் நினைத்தாளே தவிர தீவிர ஆராய்ச்சிக்கெல்லாம் உட்பட வில்லை. அப்படி உட்பட பயமாகவும் இருந்தது.
ஆகவே ஏதோ ஒன்று... இருந்து விட்டுப் போகட்டும். எதுவாக இருந்தாலும் இதுதான் நான். இந்த ‘நான்’ இனியா மாறப்போகிறது என விட்டுவிட்டாள். அப்பா மூன்று வருடங்கள் படுக்கையில் கிடந்தார். அவரைத் தூக்கித் தூக்கித்தான் எல்லாம் செய்யவேண்டியிருந்தது. சாப்பாடு ஊட்டுவது, உடம்பு துடைத்துவிடுவது, மலஜலம் கழிப்பது எல்லாமே அந்த மூன்றடி மரத்தாலான பெஞ்ச்சில்தான்.
டயாபர் எல்லாம் இல்லாத நாட்கள் அவை. பெட்பேன் வைத்து, ஈர லுங்கி மாற்றி, சாப்பாடு கொடுத்து, பிளாஸ்க் நிறைய டீ போட்டு வைத்துவிட்டு, ‘‘பார்த்துக்க அன்னம்மா...’’ என்றுவிட்டு பள்ளிக்கு ஓடுவாள். பகல் சாப்பாட்டின்போது அந்த வேகாத வெயிலில் நடந்து வீட்டுக்கு வருவாள். அப்பாவுக்குத் துணி மாற்றி எல்லாம் செய்தபின் மீண்டும் பள்ளிக்கூடம்.
‘‘கொஞ்சம் சாப்ட்டு ஒக்காந்துட்டுப் போங்களேன் டீச்சர்...’’‘‘உனக்குக்கூட நான் டீச்சர்தானா அன்னம்மா..?’’ சிரித்தாள். ‘ஓ..! தனக்கு சிரிப்பு மறந்து போக வில்லை..!’‘‘பின்ன... என்னான்னு கூப்புட்றது..? எல்லாரும் அப்படித்தானே கூப்புட்றாங்க..?’’ ‘‘அவுங்கல்லாம் எப்படி வேணா கூப்புடட்டும். நீ ரோசின்னு கூப்புடு...’’ ‘‘ஐயோ... அது எப்படிங்க..?’’ சிரித்தாள் அன்னம்மா.
அதோடு தன் பெயர் ரோசி என்பதையே மறந்து, தானும் டீச்சர் என்றே ஆக்கிக்கொண்டு விட்டாள். அப்பா போய் இப்போது நாலைந்து வருடங்களாகி விட்டன. அப்பாவிற்குப்பின் அன்னம்மாவும் தன் வீட்டிற்குப் போகிறேன் என்றாள்.‘‘ஏன் அன்னம்மா... இங்க என் கூடத்தான் இரேன்...’’ ‘‘இல்லீங்க டீச்சர். வீட்ல பேரப் புள்ளைங்கல்லாம் கூப்பிடுதுங்க. ‘ஆயா ஆயா’ன்னு உசுர உடுதுங்க. இன்னும் எத்தினி காலம் இருக்கப் போறோமோ... யாரு கண்டது? அதுங்க கூடவே இருந்துடலாம்னு...’’ ‘‘அதுவும் நியாயம்தான். அப்படின்னா போ...’’ ‘‘தெனம் காலைல வந்து வேலை செய்துட்டுப் போயிட்றேன்...’’
அதற்கும் தலையாட்டினாள். அன்னம்மா வீட்டை விட்டுப் போய் வேலைக்கு மட்டும் வர ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அவளிடமிருந்து ஆழ்ந்த பெருமூச்சு வந்தது.தனக்கும் அன்னம்மாவுக்கும் டீ போட்டுக்கொண்டிருந்த போது அன்னம்மா வந்தாள். ‘‘இந்தா... டீ குடி அன்னம்மா...’’‘‘இருக்கட்டும் டீச்சர்...’’ தயங்கினாள் அன்னம்மா. ‘‘என்ன அன்னம்மா..?’’‘‘இனிமே வேலைக்குக் கூட வரமுடியாது போல இருக்குங்க டீச்சர்...’’ ‘‘ஏன் அன்னம்மா..?’’‘‘பையனுக்கு வேலை ஒசந்துடுச்சு. ஓசூருக்கு அதிகாரியாப் போட்டிருக்காங்க. எல்லாரும் வீட்டை காலி பண்ணிட்டு ஓசூர் கிளம்பணும் டீச்சர்...’’ ‘‘நீயும் போறியா..?’’
‘‘போய்த்தானே ஆவணும்?’’ சட்டென்று மனசுக்குள் மிகப்பெரிய பள்ளம் விழுந்தது. ‘என் கூட இரேன்’ என்பது நாக்கு நுனிவரை வந்து உள்ளே போய் விட்டது. ‘‘சரி அன்னம்மா...’’இருந்த வேலைகளை முடித்த பின்பு அன்னம்மா புறப்பட்டாள்.‘‘வரேன் டீச்சர்...’’ என்று கண் கலங்கினாள். அவள் உள்ளே போய் கொண்டு வந்த புதுப் புடவையையும் பணக்கட்டையும் கண்டு திடுக்கிட்டு வாங்க மறுத்தாள்.‘‘இது அன்பால கொடுக்கிறது அன்னம்மா...’’ என்றதும் வாங்கிக் கொண்டாள். அன்னம்மாவை வழியனுப்பி வைத்துவிட்டு, குளித்து, சாப்பிட்டு பள்ளிக்குக் கிளம்பினாள்.
முதல் வகுப்பு இல்லை. ஆசிரியை அறையினுள் மூன்று நான்கு ஆசிரியைகள் அமர்ந்து அரட்டை அடித்தனர். திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் பற்றி பேசினர். இவள் திரைப்படங்கள் பார்ப்பதோ, தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பவளோ கிடையாது. ஆகவே, சம்பந்தமற்று தனியாக உட்கார்ந்திருந்தாள். மணியடித்தது. பத்தாம் வகுப்புக்குத் தமிழ் எடுக்க வேண்டும். எழுந்து போனாள். போகும்போதே துணைப் பாடத்தில் சேர்க்கப்பட்டிருந்த பெரிய எழுத்தாளரின் நீள் கதை ஒன்றை எடுக்க முடிவு செய்தாள்.
இவள் வகுப்புக்குள் நுழைந்த போது யாரும் அசையக்கூட இல்லை. இவளாக, ‘‘என்ன பிள்ளைங்களா... இன்னிக்கு என்ன படிக்கலாம்..?’’ என்று சந்தோஷமாக இருக்கிறது மாதிரி கேட்டாள்.அவர்கள் யாரிடமிருந்தும் பதில் வராமல் போகவே அவளே மீண்டும் பேசினாள். ‘‘துணைப் பாடப் புத்தகத்தை எடுத்துக்குங்க... கதை படிக்கலாம்...’’மௌனமாகப் புத்தகத்தை எடுத்தனர்.
‘‘இருபத்தேழாம் பக்கம் திருப்புங்க...’’ பக்கங்கள் திருப்பப்படுகின்ற சத்தம் மட்டும் கேட்டது. ‘‘யாராவது எழுந்து சத்தம் போட்டுப் படிங்க...’’ யாரும் எழவில்லை.
அவளே படித்தாள். மாணவிகளில் சிலர் ஜன்னலுக்கு வெளியே பார்வையை ஓட்டினர். சிலர் வெறுமனே பக்கங்களைப் பார்த்தனர். மற்றவர்களின் தலைகள் கவிழ்ந்து கிடந்தன. கருமமே கண்ணாக ஏற்ற இறக்கங்களுடன் படித்து முடித்துவிட்டு கேட்டாள்.‘‘இந்தக் கதையின் நாயகி ஏன் அப்படி நடந்து கொண்டாள்..?’’பதில் இல்லை.
‘‘சொல்லுங்க... ஏன் தற்கொலை செய்து கொண்டாள்..?’’ எப்போதும் போலின்றி சற்று குரலை உயர்த்தி அழுத்தமாகக் கேட்டாள். மாணவிகள் திடுக்கிட்ட மாதிரி பார்த்தனர். ‘அவள் தற்கொலை செய்து கொண்டாளா..?’ என்கிற பார்வையாக இருந்தது. ‘‘கதை புரிஞ்சுச்சா, இல்லையா..?’’வகுப்பு முடிவுற்றதற்கான மணியடிக்கவே மாணவிகள் புத்தகங்களை மூடி வைத்துவிட்டு எழுந்து கொண்டனர். இடை வேளைக்கான நேரமானதால் இவள் வகுப்பை விட்டு போகும் முன்பாக வெளியேறினர்.
இவள் திடுக்கிட்டாள். ‘இந்த அளவிற்கா..? ஆசிரியை போகக் கூடக் காத்திராமலா வெளியேறுவார்கள்..?’ இவளும் வகுப்பைவிட்டு வந்து ஆசிரியைகள் அறைக்குச் செல்லாமல் நேராகத் தலைமை ஆசிரியை அறைக்குச் சென்றாள். தலைமை ஆசிரியை டீ குடித்துக் கொண்டிருந்தார்.
‘‘வாங்க ரோசி டீச்சர்... டீ குடிங்க...’’ மேஜையின் அடியில் இருந்த பொத்தானை அழுத்தி வாசலில் இருந்த ஊழியரை வரவழைத்தார். ‘‘ரோசி டீச்சருக்கு டீ குடுப்பா...’’அவன் பிளாஸ்க்கில் இருந்த டீயை ஒரு கோப்பையில் ஊற்றி வைத்துவிட்டுப் போனான். ‘‘சொல்லுங்க ரோசி டீச்சர்..?’’‘‘நான் வேலையை ராஜினாமா செய்யலாம் என்றிருக்கிறேன்...’’ அதை எதிர்பார்க்காத தலைமை ஆசிரியை திடுக்கிட்டார். ‘‘ஏன்..? என்ன ஆச்சு..?’’
பார்வையாளர்களே அற்ற, அல்லது எந்தவித உற்சாகமும், ஊக்கமும் அற்ற வெற்றுப் பார்வையாளர்களைக் கொண்ட மைதானத்தில் இதற்கு மேலும் என்னால் விளையாட முடியாது...’’‘‘புரியல ரோசி டீச்சர்...’’‘‘என் இருத்தலை சிறிதுகூட லட்சியம் செய்யாத மாணவிகளை இனியும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. இது அமைதி யான அவமதிப்பு...’’‘‘இல்ல ரோசி டீச்சர்... இந்தக் கால ஸ்டூடண்ட்ஸே இப்படித்தான். நாம நம்ம டீச்சர்சுக்கு குடுத்த மரியாதையை இவங்க கிட்ட எதிர்பார்க்க முடியாது. அதுவும் தமிழ்னா...\”
இடையில் குறுக்கிட்டாள் இவள். ‘‘அவர்கள் அப்படித்தான்னா நானும் இப்படித்தான். நம் இருத்தலை நாமே நிரூபித்துக் கொள்ள நேரிடும் சங்கடத்தை விட கொடுமையான சங்கடம் வேறு எதுவும் இருக்க முடியாது. நாளைக் காலையில் ராஜினாமா கடிதம் எழுதிக் கொண்டு வருகிறேன். என்னை விடுவித்து விடுங்கள்...’’மறு பதிலை எதிர்பார்க்காமல் எழுந்து கொண்டாள். நடந்து வீட்டிற்கு வந்தாள். தினமும் நடந்து போய் நடந்துதான் வருகிறாள். தெருவில் யாரும் அவளைக் கண்டு கொண்டதில்லை. ஒரு புன்னகை கூட உதிர்த்ததில்லை. ஆழமான பெருமூச்சுடன் பூட்டைத் திறந்து உள்ளே வந்தாள். வீட்டின் வெறுமை முகத்தில் அறைந்தது.
வாழ்க்கையின் மீது ஏற்பட்ட சலிப்பு இன்னும் அதிகமாயிற்று. சமைக்கப் பிடிக்கவில்லை. சாப்பிட வேண்டுமென்று தோன்றவில்லை. மீண்டும் மீண்டும் தன் இருப்பை ஒரு ஜீவன் கூடவா உணராது என்கிற ஆதங்கம் ஏற்பட்டு நெஞ்சை முட்டியது. ‘வகுப்பில் படித்த கதையின் நாயகி மாதிரி செய்து கொள்ளலாமா..?’
‘சீ! என்ன நினைப்பு இது..? இதுவா ஒரு ஆசிரியையின் அடையாளம்..? எத்தனையோ இளம் பெண்களுக்கு வழிகாட்ட வேண்டியவள். அவர்களை ஏற்றி விட வேண்டிய ஏணி... அது தானாக இற்று நைந்து உடைய வேண்டுமே தவிர இதுபோல் உடைத்துப் போடுகிற எண்ணமெல்லாம் வரவே கூடாது.’ சமையலறைக்குப் போய் வெறும் டீ போட்டு குடித்து விட்டு வந்து படுத்துக் கொண்டாள்.மறுநாள் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக ராஜினாமா கடிதத்தை எழுதினாள். பள்ளிக்குக் கிளம்பியபோது மறக்காமல் கையில் கடிதத்தை எடுத்துக் கொண்டாள்.
தலைமை ஆசிரியை அறையினுள் நுழைந்தபோது அவருக்கு எதிரில் ஒரு நடுத்தர வயது மனிதர் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். கம்பீரமான, கண்ணியமான மனிதராக அவர் தோற்றமளித்தார். இவள் தயங்கி நிற்பதைக் கண்ட தலைமை ஆசிரியை கூப்பிட்டார். ‘‘வாங்க ரோசி டீச்சர். இவர் ஜெயராஜ். நம் பள்ளியில் புதிதாகச் சேர்ந்திருக்கும் ஆங்கில ஆசிரியர்...’’இவள் வணக்கம் சொல்வதற்கு முன் ஜெயராஜ் எழுந்து நின்றார். முகம் நிறைந்த சிரிப்புடன் கை கூப்பினார்.
‘‘ப்ளீஸ் டு மீட் யு மிஸ் ரோசி. உங்களைப் பத்தி உங்க பழைய ஸ்டூடண்ட் ரொம்பப் பெருமையாக நிறைய சொல்லியிருக்கிறாள்...’’ இவள் திகைத்தாள். ‘‘என்னைப் பற்றியா..?!’’‘‘நீங்கதானே ரோசி... நீங்கதானே இந்த ஸ்கூல்ல தமிழ் எடுக்கறீங்க..?’’‘‘ஆ... ஆமாம்... ஆனா... நான்... என்னைப் பற்றி...’’‘‘உங்களைப் பற்றியேதான். அந்த ஒரு ஸ்டூடண்ட் மட்டுமில்ல... ரெண்டு மூணு பேர் சொல்லக் கேட்டிருக்கேன். நீங்க பாடம் நடத்தும் கம்பீரம், உங்க அழகுத் தமிழ், அளவான பேச்சு எல்லாத்தையும் பற்றி சொல்லியிருக்காங்க. எனக்கும் உங்களைப் பார்க்கணும்னு ரொம்ப நாள் ஆசை. இன்னிக்குப் பார்த்துட்டேன். உங்க கூட சேர்ந்து வேலை செய்யப் போறேன்றதே பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கு.
ஐ ஃபீல் ரியலி வெரி ஹேப்பி...’’மகிழ்ச்சியும், குதூகலமும் நிறைந்த ஜெயராஜின் முகத்தைப் பார்த்த ரோசி அவர்கள் அறியாதவாறு தன் கையிலிருந்த ராஜினாமா கடிதத்தைக் கசக்கிக் கீழே எறிந்துவிட்டு, வாழ்க்கையில் முதல் முறையாகத் தன் இருத்தலின் அர்த்தத்தை உணர்ந்து வாய்விட்டுச் சிரித்து சொன்னாள்.‘‘எஸ். ஐயம் ஆல்ஸோ வெரி ஹேப்பி...’’
தபு ஆக தமன்னா!
பாலிவுட்டில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டான ‘அந்தாதுன்’ த்ரில்லர் டோலிவுட்டில் ரீமேக் ஆகிறது. இந்தியில் தபு நடித்த கேரக்டரில் தமன்னா நடிக்கிறார் என தகவல் பறக்கிறது. ‘‘தெலுங்கு ஆடியன்ஸ் இந்திப் படங்கள் அவ்வளவா பார்க்கறதில்ல. ‘அந்தாதுன்’ எனக்கு பிடிச்ச படம். இதுக்கு முன்னாடி ரீமேக்குகள் நிறைய நடிச்சிருக்கேன்னாலும், தபு கேரக்டர்ல நடிக்கறது சவால்தான். தெலுங்கில் முதன்முதலா நிதினுடன் நடிக்கறேன்...’’ என்கிறார் தமன்னா.
எல்லாம் சரியாகிவிடும்..!
ஜீவாவின் ‘சீறு’விற்குப் பிறகு மீண்டும் தமிழில் தடதடக்க க்ளாமர் ஷூட்டுகளை தட்டிவிட்டிருக்கிறார் ரியா சுமன். டோலிவுட்டில் நானியின் ‘மஜ்னு’வில் ஜொலித்தவர். ‘‘போன வருஷம் செப்டம்பர்ல திருப்பதி போயிருந்தேன். அருமையான தரிசனம் கிடைச்சது. முந்தைய வருஷம் உதய்ப்பூர் போயிருந்தேன். ஆனா, இந்த வருஷம் வெளியே சுத்த முடியாத நிலைமை. அடுத்த வருஷம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிடுவோம்னு நினைக்கறேன்...’’ நம்பிக்கையுடன் சொல்கிறார் ரியா.
மீண்டும் பாலா படத்தில்...
‘அவன் இவன்’ மதுஷாலினி இப்போது ‘எக்ஸ்பயரி டேட்’ என்ற வெப்சீரீஸில் மிரட்டுகிறார். இதற்கிடையே மீண்டும் பாலாவின் படத்திலும் புன்னகைக்கிறார். மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஜோசப்’பின் தமிழ் ரீமேக்கை பாலா தயாரித்துள்ளதால், மதுஷாலினிக்கு அதில் சான்ஸ் கொடுத்திருக்கிறார்.
ஸ்ருதி சுத்தம்!
‘‘தனிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும். வீடு க்ளீனா இல்லேனா எனக்கு பிரைன் வேலை செய்யாது. கிச்சன்ல இருந்து பாத்ரூமை க்ளீன் பண்றது வரை எல்லாமும் நானே என் கையால பண்ணுவேன். அதனால கொரோனா டைம்ல என் வேலைகளை நானே செய்ததில் எந்த சிரமமும் ஏற்படலை...’’ என பூரிக்கிறார் ஸ்ருதிஹாசன்.
விஜய் சேதுபதியுடன் அவர் நடித்து வரும் ‘லாபம்’ படத்தில் ஒரு பாடலை சுவிட்சர்லாந்தில் எடுக்க திட்டமிட்டார்கள். கொரோனா அச்சத்தால், இப்போது சென்னையிலேயே அதை ஷூட் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.
ப்ரியாவின் ஈட்டி!
மீண்டும் ஷூட்டிங் துவங்கியதில் ஆனந்த மழையில் நனைகிறார் ப்ரியா ஆனந்த். தமிழில் ஹிட் அடித்த படம் ‘ஈட்டி’. அதனை இயக்கிய ரவி அரசு இப்போது கன்னடத்தில் மின்னுகிறார். அங்கே சிவராஜ்குமாரை வைத்து அவர் இயக்கி வரும் ‘ஆர்.டி.எக்ஸி’ல் ப்ரியாதான் ஹீரோயின்.
இது தவிர அங்கே ‘சிம்பிள் மர்டர்’ என்ற த்ரில்லரிலும் மிரட்டுகிறார். கொரோனா சீஸனில் அவரது பர்த் டே வந்துவிட, பெங்களூருவில் எளிமையான முறையில் அதை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் ப்ரியா.
- இந்துமதி
|