ராயல்டி பிரச்னைக்குப் பிறகு இளையராஜாவும் எஸ்பிபியும் இணைந்த பாடல் இதுதான்...



ராஜாவின் இசையில் எஸ்பிபி பாடிய கடைசிப் பாடலும் இதுவேதான்...

‘இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... கேளாய் பூ மனமே...’ என எஸ்பிபி பாடிய வரிகளே நிதர்சனமான உண்மையாகிவிட்டது. அவரது மறைவு இசை உலகின் பேரிழப்பு.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இமான் இசையில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’வுக்காக
எஸ்பிபி பாடியதுதான் அவரது கடைசி பாடல். போலவே இளையராஜாவின் இசையில் அவர் கடைசியாகப் பாடியது பாபு யோகேஸ்வரன் இயக்கி வரும் ‘தமிழரச’னுக்காக!அதில் இடம்பெறும் ‘நீதான் என் கனவு - மகனே வா வா என் கண் திறந்து...’ என்ற பாடலை பாலுதான் பாடியிருக்கிறார்.
ராயல்டி விவகாரத்தினால் இளையராஜா - எஸ்பிபி இருவருக்கிடையே பெரிய சண்டை... இருவரும் இனி ஒன்று சேர மாட்டார்கள்... என்ற பேச்சுக்களை எல்லாம் உடைத்த பெருமை இந்தப் பாடலுக்கு உண்டு.

அவர்களின் சந்திப்பின் போது அங்கே இருந்த வெகுசிலரில் ‘தமிழரசன்’ பட இயக்குநர் பாபு யோகேஸ்வரனும் ஒருவர்.
‘‘இது ராஜா சார், பாலு சார் ரீயூனியன்ங்கறது மாதிரி வெளியே பலரும் பேசிக்கிட்டது போலதான் நாங்களும் எதிர்பார்த்தோம். ஆனா, அந்த
சந்திப்பு எங்களுக்கே சர்ப்ரைஸ். ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சப்ப அவ்வளவு பிளசன்ட்டா... இயல்பா... நீண்ட கால நண்பர்கள் சந்திச்சது மாதிரி இருந்தது...’’ நெகிழ்ச்சியுடன் பேச ஆரம்பிக்கிறார் பாபு யோகேஸ்வரன்.

‘‘எல்லோரையும் போல நானும் பாலு சார் ரசிகன். அவ்வளவுதான். அவரோடு பெரிய அறிமுகம் எனக்கில்லை. என் முதல் படமான ‘தாஸ்’ல கூட பாலு சார் பாடலை.  ஆனா, அவர் பையன் சரணுடன் நட்பு உண்டு. என்னோட முதல் புராஜெக்ட்ல சரண் நடிச்சிருக்கார். அந்த டைம்ல அவர் தன் அப்பா பத்தி நிறைய பேசியிருக்கார்.

பாலு சார்கிட்ட நான் வியந்த ஒரு விஷயம், எந்த ஒரு மனிதனையும் பார்த்து அவர் ‘ஹலோ’ சொல்ற ஒரு செகண்ட்தான் ‘நான் உங்களை முதன்
முதலா சந்திக்கறேன்’ என்கிற உணர்வு ஏற்படும். அதுக்கு அடுத்த செகண்ட், பல ஜென்மங்களா நாம பழகிட்டு வர்றோம் என்ற உணர்வை ஏற்படுத்திடு வார்...’’ தழுதழுத்த பாபு யோகேஸ்வரன், சமாளித்து தொடர்ந்தார். ‘‘விஜய் ஆண்டனி நடிப்பில், பெப்சி சிவா தயாரிப்பில் உருவாகி வரும் ‘தமிழரசன்’ படத்துல இடம்பெறும் ‘நீதான் என் கனவு...’ ஒரு சென்டிமென்ட் பாடல். பழநிபாரதி அற்புதமா இதை எழுதியிருக்கார். ஒரு அப்பா தன் மகனை நினைச்சுப் பாடுற பாட்டு அது. அதை எஸ்பிபி சார் பாடினா சிறப்பா இருக்கும்னு எங்க டீம்ல எல்லாருமே நினைச்சோம்.

ஆனா, அப்ப அவருக்கும் இளையராஜா சாருக்கும் இடைல ராயல்டி இஷ்யூ ஓடிட்டு இருந்தது. ரெண்டு பேரும் சேருவாங்களா மாட்டாங்களானு வெளில பரபரப்பா பேசிட்டிருந்தாங்க. ரெண்டு பேரும் சேர்ந்தா பழைய நட்பு துளிர்க்கும்... நல்ல பாடல்களும் கிடைக்கும்னு இசை ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாங்க.இது தொடர்பா ராஜா சார்கிட்ட நாங்க பேசினோம்.

ராஜா சார் சிரிச்சார். ‘அது எங்க ரெண்டு பேருக்கான விஷயமில்ல. அது எல்லாருக்குமான ஒரு பொதுவான லீகல் இஷ்யூ. எனக்கு ஒரு காப்பிரைட்ஸ் டீம் இருக்காங்க. முன்னாடி காலங்கள்ல காப்பிரைட்ஸ் பத்தி எல்லாம் கவனமா பார்க்கல. இன்னிக்கு டெக்னாலஜி, மீடியானு பெருசானதும் காப்பிரைட்ஸ் முக்கியமானதாகிடுச்சு.

அதனால எல்லாத்தையும் சட்டப்படி கொண்டு வர விரும்பினோம். அந்த  டீம்தான் அதை எல்லாம் செயல்படுத்துது. அவங்கதான் எல்லாருக்கும் அனுப்பற மாதிரி எஸ்பிபி-க்கும் ஃபார்மலான இன்டிமேஷன் ஒண்ணு கொடுத்திருந்தாங்க. ஒருவேளை பாலுகிட்ட நானே பேசியிருந்தா அவர் என்னவாக ரியாக்ட் பண்ணியிருப்பார்னு எனக்குத் தெரியாது. பொதுவான ஒரு இன்டிமேஷன் அவருக்குப் போனதால, அவர் அதுமாதிரி ரியாக்ட் பண்ணியிருக்கலாம்.

எங்க நட்பு பத்தி அவருக்குத் தெரியும். எனக்கும் தெரியும். எத்தனை வருஷமா ஒண்ணா இருக் கோம்னு ரெண்டு பேருக்குமே தெரியும். அப்புறம், அந்த ரைட்ஸுக்கான பேமென்ட்டை அவங்க செலுத்திட்டாங்க. அத்தோடு அந்த பிரச்னை முடிஞ்சிடுச்சு. பலரும் பேசின மாதிரி அது பெரிய பிரச்னையும் இல்ல. அது சால்வ் ஆனதும் பெரிய விஷயம் கிடையாது. அதனால ரியாக்ட் பண்றதுக்கு ஒண்ணும் இல்ல...’ என்ற இளையராஜா சார் ‘இந்த பாடலை பாலுதான் பாடணும்னு உங்களுக்கு விருப்பம் இருந்தா நீங்க கூப்பிடுங்க’னு க்ரீன் சிக்னலும் கொடுத்தார்.

அந்தப் பாடலை எஸ்பிபி பாடணும்னு நாங்க நினைச்சோம். ராஜா சார் மனசுல எந்தப் பாடகர் இருந்தார்னு எங்களுக்குத் தெரியாது. ஆனா, எங்க ஆசைக்கு ராஜா சார் தடை போடலை. எஸ்பிபி சாரை நாங்க தொடர்பு கொண்டோம். உடனே ஓகே சொன்னார்.அந்தப் பாடல் கம்போஸிங் டைம்ல ராஜா சாருக்கு வேற ஒரு இசைப் பணியும் போயிட்டிருந்தது. அதாவது மியூசிக் அசோசியேஷனுக்கு ஒரு பெரிய கட்டடம் கட்டுவதற்கான நிதி திரட்டலுக்கான இசை நிகழ்ச்சியோட ரிகர்சல்.

அதுல ராஜா சார் பிசியா இருந்தப்ப எஸ்பிபி சார் நுழைஞ்சார். ரெண்டு பேரும் சந்திச்ச அந்த நேரத்துல நாங்களும் அங்க இருந்தோம்.
ரெண்டு பேரும் நேருக்கு நேர் சந்திச்ச அந்த செகண்ட்ல ரெண்டு பேர் முகத்துலயும் எந்த மாறுதலும் ஏற்படலை. தினமும் சந்திச்சுப் பேசற ஃப்ரெண்ட்ஸ் மாதிரியே அவ்வளவு இயல்பா ‘வாடா போடா’னு பேசிக்கிட்டாங்க.

‘நீதான் பாடணும்னு சொல்றாங்க. டியூனை போய் கேளு’னு ராஜா சார் சொல்லிட்டு ரிகர்சல் வேலைகளை கவனிக்க போயிட்டார்...’’ நிறுத்திய பாபு யோகேஸ்வரன் சில நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு தொடர்ந்தார். ‘‘எஸ்பிபி சார் டியூனை உள்வாங்கினார். அப்புறம் ‘டைரக்டர்கிட்ட
பேசணும்’னு சொன்னார். மத்தவங்க எங்க ரெண்டு பேரையும் ரூம்ல விட்டுட்டு வெளியேறினாங்க.

பாலு சார் எங்கிட்ட ‘இந்தப் படத்தோட கதை என்ன... எந்த சூழல்ல இந்தப் பாட்டு வருது... ஹீரோ பாடுறாரா இல்ல வேற யாரும் பாடுறாங்களா? லிப் சிங் இருக்குதா இல்ல என்னோட வாய்ஸ் ஓவர்ல வருதா? கொஞ்சம் விளக்குங்க. அப்பதான் என்னால mood-ஐ செட் பண்ணிக்க முடியும்’னு சொன்னார்.

அவர் கேட்ட எல்லா கேள்வி களுக்கும் நான் பதில் சொன்னேன். கண்களை மூடி எல்லாத்தையும் உள்வாங்கினார். ‘சரி, நான் பாடறேன். எங்காவது உங்களுக்கு வேற மாதிரி வேணும்னு தோணினா தயங்காம சொல்லுங்க. மாத்தி பாடறேன்’னு சொல்லிட்டு பாட ஆரம்பிச்சார்.

பாடலின் செகண்ட் பிஜிஎம் (பின்னணி இசை) வந்தப்ப பாலு சார் பாடறதை நிறுத்தினார். ‘போடா... நிறுத்து...’னு சவுண்ட் என்ஜினியரைப் பார்த்து சொன்னவர், ‘இது எப்படி ராஜாவுக்கு மட்டும் வருது..? என்னுடைய இத்தனை வருஷ பாடல் அனுபவத்துல பல இசையமைப்பாளர்கள் இசைல பாடியிருக்கேன். ஆனா, ஒரு இன்ஸ்ட்ரூமென்ட்டை சரியான வகைல எப்படி பயன்படுத்தணும்னு ராஜாவுக்கு மட்டும்தான் தெரிஞ்சிருக்கு. எந்த பாட்டுக்கு எந்த வாத்தியத்தை முதன்மைப்படுத்தணும்னு அவன் மட்டும்தான் அறிஞ்சு வைச்சிருக்கான்... லெஜண்ட்...’ இத்தனைக்கும் அந்தப் பாட்டுல பெரிய ஆர்க்கெஸ்ட்ரா எல்லாம் இருக்காது. ஆனா, பிரமாதமான ஒரு mood-ஐ ராஜா சார் கிரியேட் செய்திருந்தார். அதுதான் அந்தப் பாட்டின் Base mood.

பத்து நிமிஷம் அதுல ஆழ்ந்துட்டு, அதுக்கப்புறம்தான் மீதமுள்ள வரிகளை பாலு சார் பாடினார். ‘என்னோட கச்சேரிக்கு இன்னொரு நல்ல பாட்டு கிடைச்சிருக்கு’னு சந்தோஷமா சொல்லிட்டு கிளம்பினார். அவர் பாடுறதுக்கு முன்னாடி ராஜா சார் சில இடங்கள்ல நோட்ஸ் சொல்லிக் கொடுத்துட்டு அவர் ரூமுக்கு போயிட்டார். ரெக்கார்டிங் டைம்ல ராஜா சார் ரிகர்சல்ல இருந்தார்.

பாலு சார் பாடி முடிச்ச தகவலை ராஜா சார்கிட்ட சொன்னேன். அவர் ‘எப்படி இருக்குது உங்களுக்கு...’னு கேட்டார். ‘என்ன எதிர்பார்த்தோமோ அது இருக்கு சார்’னு சொன்னேன். ராஜா சார் சிரிச்சிக்கிட்டே, ‘அதான் பாலு’ன்னார். அவ்ளோதான். என் படத்துலதான் ராஜா சார் இசைல பாலு சார் கடைசியா பாடினார்னு வெளியே சொல்றாங்க. இதுக்கு வருத்தப்படுறதா சந்தோஷப்படுறதானு தெரியல. பெருமைப்படுறதுக்கும்
எதுவுமில்ல.

‘என் படத்துல பாடினதுதான் கடைசியா அமையணுமா’னு எனக்குள்ள எழும் கேள்வி, நான் சாகற வரைக்கும் என்னைத் துரத்திட்டு இருக்கும்...’’ கண்கலங்குகிறார் பாபு யோகேஸ்வரன்.

மை.பாரதிராஜா