அன்பு பயணம்



மனதைப் பிழியும் அன்புக் கவிதையாக மிளிர்கிறது ‘அம்பிலி’. அமேசான் ப்ரைமில் வியூக்களை அள்ளி வருகிறது இந்த மலையாளப் படம்.
கள்ளங்கபடற்ற குழந்தையைப் போன்ற மனமுடையவர்களைப் பற்றி நிறைய படங்கள் வந்துவிட்டன. இதுவும் அப்படியான ஒரு படம் என்று கடந்து போக முடியாதபடி கதையில் சில புதுமைகளைக் காட்டியிருக்கிறார்கள்.

அம்பிலி, பாபி, டீனா ஆகிய மூவரும் குழந்தைப் பருவ நண்பர்கள். பாபியின் சகோதரிதான் டீனா. வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் மூன்று பேரும் வெவ்வேறு திசைக்குச் சென்றுவிடுகின்றனர். அப்பா, அம்மாவை இழந்து அனாதையாகும் அம்பிலி கேரளாவில் உள்ள ஒரு சிற்றூரில் பாட்டியுடன் வசித்து வருகிறான். இளம் வயதிலும் கள்ளங்கபடற்ற குழந்தையைப் போலவே இருக்கிறான். தன்னைச் சுற்றியிருக்கும் எல்லோரையும் எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் நேசிக்கிறான்.

அவன் வாழும் ஊரின் செல்லப்பிள்ளையாக இருந்தாலும் சிலர் அவனை மனநலம் பாதிக்கப்பட்டவனைப் போல அணுகுகிறார்கள். ஆனால், அவன் அதை ஒரு சின்னச் சிரிப்பின் மூலம் கடந்து செல்கிறான். இன்னொரு பக்கம் உலகமே புகழும் ஒரு சைக்கிளிஸ்ட்டாக உருவெடுக்கிறான் பாபி. சைக்கிளில் உலகைச் சுற்றி பல சாதனைகளைப் படைத்து வருகிறான்.

அம்பிலி வசிக்கும் ஊரில்தான் டீனாவின் குடும்பமும் இருக்கிறது. அம்பிலிக்கு டீனாவின் மீது நட்பைத் தாண்டிய ஈர்ப்பு. இருவரும் ஆன்லைனில் வீடியோ சாட் செய்து தங்களின் உறவை வளர்த்துக் கொள்கிறார்கள். இது பாபிக்கு சுத்தமாக பிடிப்பதில்லை. கேரளாவிலிருந்து காஷ்மீருக்கு சைக்கிளில் பயணம் போகத் திட்டமிட்டிருக்கிறான் பாபி. பயணத்துக்கு முன் குடும்பத்தைப் பார்க்க ஊருக்கு வருகிறான்.

அவனது வருகையை ஒரு திருவிழாப் போல கொண்டாடித் தீர்க்கிறான் அம்பிலி. ஆனால், பாபியோ ஓர் எதிரியைப் போல அம்பிலியைப் பார்க்கிறான். அம்பிலிக்கோ பாபியின் மீதான அன்பு கொஞ்சம் கூட மாறவே இல்லை. அம்பிலியிடம் முறையாக சொல்லிக் கொள்ளாமல் காஷ்மீருக்கு சைக்கிளில் பயணமாகிறான் பாபி. ஒரு ஓட்டை சைக்கிளை எடுத்துக்கொண்டு பாபியைப் பின் தொடர்ந்து அம்பிலியும் பயணமாக, கதை சூடு பிடிக்கிறது.

இந்தப் பயணத்தில் பாபியின் மனம் எப்படி மாறுகிறது... அவன் அம்பிலியிடமிருந்து எதைக் கற்றுக்கொள்கிறான் என்பதே நெகிழ்ச்சி திரைக்கதை.
சைக்கிள் பயணமே பாதி படத்தை ஆக்கிரமித்திருந்தாலும் கொஞ்சம் கூட சலிப்புத் தட்டாமல் சுவாரஸ்யமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஜான்பால் ஜார்ஜ். அப்பழுக்கற்ற குழந்தைத்தன்மை படைத்த ஒரு மனிதனை தன் நடிப்பின் மூலம் நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் சௌபின் ஷாஹிர்.