ராஷி 11



மினுமினு ஸ்கின் கேர்ள் ராஷிகண்ணா, தமிழில் நடித்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால், ‘இமைக்கா நொடிகளி’ல் ஆரம்பித்து ‘சங்கத்தமிழன்’ வரை லிமிட்டெட் க்ளாமரில் ஸ்கோர் அள்ளியவர். மும்பையில் வசித்து வரும் அவரிடம் ‘நாலு வார்த்தையில உங்களப் பத்தி சொல்லுங்க’ என சிம்பிளாக கேட்டால்,  ஹம்பிளாக வந்து விழுகிறது பதில். ‘Seeker... Traveller... Star gazer... Sunset lover... Singer... Actor...’ இப்போது சுந்தர்.சி.யின் ‘அரண்மனை 3’யில் பரபரக்கிறார் ராஷி.

லாக்டவுன்ல என்ன படங்கள் பார்த்தீங்க?
எல்லா நாளும் டிவி முன்னாடிதான் இருந்தேன். வேர்ல்டு மூவீஸ், நம்மூர் மூவீஸ், வெப்சீரீஸ், ரியாலிட்டி ஷோஸ்னு எதையும் விடல. அத்தனையும் ஒரு க்ளான்ஸ் கவனிக்க ஆரம்பிச்சேன். ஓடிடியில கொஞ்ச நேரம் டைம் பாஸ் பண்ணினா, பார்க்கவேண்டிய விஷயங்கள் அவ்ளோ கொட்டிக்கிடக்குது. நமக்குதான் டைம் இல்லைனு மலைப்பா இருக்கு.

படங்கள் பார்க்கறது ரொம்ப பிடிக்கும். ஐ லவ் த்ரில்லர். அதுவும் க்ரைம் த்ரில்லர்னா கண்கொட்டாம பார்க்கப் பிடிக்கும். நிறைய திகில் படங்கள் பார்த்தேன். அதைப்போல டைம் ட்ராவல் பத்தின சீரீஸ், மூவீஸும் பிடிக்கும். படங்கள் எப்ப வேணா பார்க்கலாம் என்பதால சீரீஸ் நிறைய பார்த்தேன். ‘Dogs of Berlin’னு ஒரு ஜெர்மன் சீரீஸ் பார்த்தேன். பிரமாதமா இருந்துச்சு. ஜெர்மன்ல ரியாலிட்டி ஷோஸ் கொஞ்சம் பார்த்தேன்.

அப்புறம் உலகப் படங்கள்ல ‘Mirage’னு ஒரு ஸ்பானிஷ் படம் பார்த்தேன். அருமையான படம். எல்லாரும் ரெஃபர் பண்ணினதால ‘மணி ஹீஸ்ட்’ தொடரும் பார்த்தேன். அமெரிக்கன் த்ரில்லர் சீரீஸான ‘How to get away with murder’ சீரீஸும் பிடிச்சிருந்தது. அதுல அத்தனை பேரின் பர்ஃபாமென்ஸும் அவ்ளோ அசத்தல். அதோட ஒவ்வொரு சீஸன் முடிவிலும் ஒரு சஸ்பென்ஸ் வச்சு முடிப்பாங்க. ‘அடுத்து என்னா’னு நமக்குள்ள ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும் தொடர் அது.

அமெரிக்கன் க்ரைம் ஸ்டோரீஸ்ல ‘Dexter’ சீரீஸும் பிடிச்சிருந்தது. லவ் ஸ்டோரீஸ்ல ‘Proposal’ சீரீஸ் பார்த்தேன். இன்ட்ரஸ்ட்டிங்.

அப்ப நம்ம படங்கள் எதுவும் பார்க்கலீயா?

நம்ம படங்களை டைம் கிடைக்கறப்ப பார்த்துடுவேன். கன்னடத்துல ‘தியா’ பார்த்தேன். அப்புறம் என்னோட ஃபேவரிட் ‘தொல்லி பிரேமா’வை பதினோராவது தடவையா கண்டு களிச்சேன். டோலிவுட்ல என்னோட குட் நேமை அதிகரிக்க வச்ச படமாச்சே! ஆக்ட்டிங்ல உங்க ரூட் ஹோம்லியா? க்ளாமரா?

ரெண்டும்தான். ஆனா, நல்ல பர்ஃபார்மர்னு பெயர் வாங்கணும்னு தான் விரும்பறேன். மலையாள ‘வில்லன்’ல நடிக்க கேட்டப்போ, அதுல எனக்கு சின்ன ரோல்தான்னு தெரியும். இருந்தாலும் நடிச்சேன். எல்லாரும் பாராட்டினாங்க. ஒரு நடிகையா சந்தோஷப்பட இப்படிப்பட்ட பாராட்டுகள்தான் தேவை.

நான் கமிட் ஆகுற படங்கள்ல கதை சொல்ல வர்றவங்ககிட்ட பவுண்டட் ஸ்கிரிப்ட் கேட்டு வாங்கிப் படிப்பேன். அதுல என் கேரக்டருக்கு ஸ்கோப் இருக்கானு பார்ப்பேன். மத்தபடி சின்ன ரோல், பெரிய ரோல், மெயின் ரோல், எந்த லாங்வேஜ் படம்... இதெல்லாம் முக்கியமில்ல. நல்ல நடிகைனு பெயர் வாங்கினா போதும்.

ராஷி ஒரு படிப்பாளி ஆச்சே... சமீபத்துல படிச்ச புத்தகம்.. ?

பயணங்கள்ல புக்ஸ் படிக்கப் பிடிக்கும். வீட்ல நிறைய ஆங்கில நாவல்கள் வச்சிருக்கேன். நம்மள சுத்தி நெகட்டிவிட்டி நிறைய இருக்கறதால, பாசிட்டிவிட்டியை அதிகப்படுத்த அது தொடர்பான புக்ஸ் நிறைய படிக்கறேன். சமீபத்துல Dr.Wayne W.Dyer எழுதின ‘Power of Intention’ வாசிச்சேன்.

உங்களோட உலகத்தை உங்க வழியிலேயே உருவாக்கற விதம் பத்தி அழகா சொல்லியிருப்பார். மெடிடேஷன் பண்ண பிடிக்கும். ஸோ, தியானம் தொடர்பான புக்ஸும் நிறைய படிச்சேன். ஆனா, அதை எல்லாம் அப்ளை பண்றதுக்கான டைம் இனிமே கிடைக்குமானுதான் தெரியல!  

மை.பாரதிராஜா