எல்லாத்திலும் Upgrade செய்யவேண்டிய இடத்திற்கு ஒளிப்பதிவாளர்கள் வந்து நின்னே ஆகணும்!



ஒளிப்பதிவாளர் லக்ஷ்மண் அதிரடி

‘‘இப்ப வரைக்கும் காலத்தை பதிவு செய்கிற மிகப்பெரிய பொழுதுபோக்கு போட்டோகிராஃபிதான். எனக்கும் அதற்கான ஆர்வம் இருந்தது.
சரியான இடத்தில், சரியான நேரத்தில் எடுத்திட்டால் ஒரு நல்ல போட்டோ கிடைச்சிடும். ஆனால், அப்படி எடுத்த படத்தில் உங்க பங்கு என்ன என்பதுதான் இங்கே கேள்வி.

ராஜா பொன்சிங், கணேஷ்குமார், ரத்னவேலுன்னு தாண்டி வரும்போது சினிமா புரிந்தது. அதை கூர்மைப்படுத்தியது ராஜிவ் மேனனின் ‘மைண்ட் ஸ்கிரீன்’. சினிமான்னா நிறைய விஷயம் இருக்கும். எல்லா திறமையும் எடுத்துக்கொண்டு காண்பிப்பதால் இந்த ஒளிப்பதிவு முக்கியமாகிடுச்சு.
ஒரு ஃப்ரேம்ல நிறுத்தி வைச்சு செய்றதுதான் போட்டோகிராஃபி. புகைப்படக் கலையின் பிதாமகன் ஆன்சில் ஆடம்ஸ் (Ansel Adams), ‘நமக்குத் தெரிஞ்ச வித்தைகளை சேர்த்து எடுத்தால் அது பெரிய புகைப்படம் ஆகாது. அந்தப்படத்தை பார்க்கிறவங்களைப் பொறுத்துத்தான் அது பெரிய போட்டோ’னு சொன்னார்.

ஆக, பார்க்கிறவங்க நாலெட்ஜ்தான் போட்டோகிராஃபியோட நாலெட்ஜ் ஆகிவிடுகிறது...” வித்தியாசமாக பேச ஆரம்பிக்கிறார் ஒளிப்பதிவாளர் லக்ஷ்மண். 22 வயதில் ‘வெண்ணிலா கபடிக்குழு’வில் ஆரம்பித்து ‘போடா போடி’, இப்போது சிம்புவின் ‘மகா’ வரைக்கும் வந்து நிற்கிறார்.

ஒளிப்பதிவோட தாத்பர்யம் என்ன..?

ஒவ்வொரு கதைக்குள்ளும் ஓர் உலகம் இருக்கும். அதிலும் சிலது எல்லோராலும் பார்க்கக் கூடியதாக இருக்கும். சிலது நீங்களே கிரியேட் பண்ணியாகணும். ‘வெண்ணிலா கபடிக்குழு’வில் ஒரு திருவிழா மாதிரியான விஷயங்களை உண்டாக்குகிறோம். அப்படி செய்திட்டு அந்த உலகத்தை படம் பிடிக்கிறோம். அது நீங்கள் நம்புற மாதிரி இருக்கணும்.

பி.சி.ராம் எப்பவும் ஓர் உலகத்தை கிரியேட் பண்றார். ‘அக்னி நட்சத்திரத்’தில் இருக்கிற லைட்டிங் பாணின்னு ஒண்ணு கிடையவே கிடையாது.
அதை சார் உருவாக்குகிறார்.  ‘மௌனராகம்’ கூட அப்படி ஒரு கிரியேஷன்தான். நாம் இங்கே கணவன் - மனைவியாக இருந்துக்கிட்டு குளோசப்ல அப்படி உத்து பார்த்துக்கிட்டு இருக்கிறது கிடையாது.

‘நிலாவே வா…’னு எஸ்பிபி ஆரம்பிக்கும்போது வீட்டிற்குள்ளே ஒரு நிலா தெரியும். அது ஒரு லைஃப் கிரியேஷன். அவர் எப்பொழுதும் அதுக்கு மெனக்கெடுவார். ‘தேவர் மகன்’ல எமோஷனை படம் பிடிக்கிற வேலை மட்டும் நடக்கும்.

சந்தோஷ் சிவன் ‘அஞ்சான்’, ‘தர்பாரி’ல் capture மட்டும் செய்திருப்பார். கிரியேட் பண்ணலை. மௌலிகிட்டே வேலை பார்க்கும்போது பி.சி. சார் இப்படிச் செய்யலை. மணி சாரும், அவரும் சேரும்போது இந்த மாற்றம் எல்லாம் நடந்திருக்கு. இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைச்சு நடந்தது இது.

Wong kar  wai படங்களில் Christopher Doyle தொடர்ந்து பணிபுரியும்போது ஒருவித லைட்டிங்கை பின்பற்றினார். அதுவே டைரக்டர் வாங்கரின் ஸ்டைல் ஆகி, கடைசியில் கொரியன் படங்களின் பாணியாகவே மாறிப்போச்சு. Roger Deakins இப்போது வந்த ‘1917’ வரைக்கும் வகை வகையாக படம் பண்றார்.

அவருக்கு வயசு 75 ஆகிருச்சு. இங்கேயே இருந்தா அவரை விழாவில் பெரிய சேர் போட்டு உட்கார வைச்சு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து அனுப்பி வைச்சிருப்போம். ஒளிப்பதிவு பெரிய கலை. அதன் ஆழ அகலங்களை இந்தப்பேட்டியில் சொல்லித் தீர்வது இயலாது.ஏன் மிஷ்கின் படங்கள் காட்சிப்படுத்தலில் ஒரே மாதிரியிருக்கு…

அது இயக்குநரின் சிக்நேச்சர். அவர் சினிமா மாறினாலும் விஷுவல் மாறாது. மகேஷ் முத்துசுவாமி, வைட் ஆங்கிள் ரவிசங்கர், சத்யன் சூரியன், யார்  வேண்டுமானாலும் வரட்டும், அவர் சொன்னதை மட்டுமே எடுக்க முடியும். அவர் கதை எழுதுகிற உலகம் அப்படித்தான் இருக்கும்னு அவர் விரும்புறார்னு அதை எடுத்துக்கணும். அவருக்கு கேமராவும் தெரிஞ்சிருந்தால், அவர் படத்தை அவரே எடுத்திட முடியும்.

சிலபடங்களில் கெமிஸ்ட்ரி ஒண்ணு வேலை செய்யும். ஷங்கர் ஒவ்வொரு கேமராமேனிடம் வேலை செய்யும்போதும் அதன் தன்மைகள் மாறும். ஜீவா, ரவி கே.சந்திரன், மணிகண்டன்னு வரும்போது ஸ்டைல் மாறியது. அது இரண்டு பேரும் சேர்ந்து செய்த கிரியேஷன். பாலச்சந்தர், பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன் செய்த அத்தனை படங்களையும் ஒன்றிரண்டு கேமராமேன்களே செய்திருப்பாங்க. அவங்க இரண்டு பேர் உலகமும் ஒரே உலகமாக இருக்கிறதுதான் காரணம்.

கேமராக்கள் நவீனமடைந்து விட்டது. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் தயாரிப்புகள் வேற மாதிரியாக இருக்கே…OTT-யில் பட்ஜெட்டும், நுணுக்கமும், புதுத்தன்மையும் அதிகமாக வேண்டப்படுகிறது.

செல்போனின் 5.5 இஞ்சும், வீட்டிலிருக்கிற LED டிவியின் 55 இஞ்சும்தான் இனிமேல் அடுத்தகட்ட சினிமாட்டோகிராஃபிக்கான நகர்தல். இதுக்குள்ளே பொருந்தி நிற்கிறவங்கதான் இனிமேல் நிலைச்சு நிற்க முடியும்.

பெரிய ஸ்கிரீனில் பிரம்மாண்டமும், நுணுக்கமும் தருவது  ஈஸியாகி விட்டது. இன்னும் கொஞ்ச நாளில் மக்கள் எதைத் தொடர்ந்து பார்க்கப் போகிறார்களோ, அதற்கு வேலை செய்ய ஒளிப்பதிவாளர்கள் பழகிக்கணும். நீங்க செய்கிற வேலை செல்போன், LED டிவி வரைக்கும் தெளிவாக, கூர்மையாக இருக்கணும்.

ஐ போனில் படம் எடுக்கிற காலம் வந்துவிட்டது. எல்லாத்திலும் Upgrade செய்ய வேண்டிய இடத்திற்கு ஒளிப்பதிவாளர்கள் வந்து நின்னே ஆகணும். அப்படி இல்லாட்டி டெக்னாலஜி நம்மை காலி பண்ணிட்டு முன்னே போய் நிக்கும்.

கேமராவை படிக்கிறதை விட்டுட்டு இப்ப output பத்தி படிக்க வேண்டியிருக்கிறது. 10,000 ரூபாய் கொடுத்து வாங்கின செல்போனுக்கும், 50,000 கொடுத்து வாங்கின போனுக்கும் இடையில் இருக்கிற மாற்றங்களே அசர வைக்குது.

உங்க கணிப்பில் பெரிய திறமையாளர்களாக மதிப்பிடுவது யாரை?
மனோஜ் பரமஹம்சாவும், ஜார்ஜ் வில்லியம்ஸும் கவனம் ஈர்க்கிறார்கள். அவர்களால் ஹீரோவை அழகாகக் காட்ட முடியுது. அதே நேரத்தில் களத்தை அதற்கு எதிர்மறையாகவும் காட்ட முடியுது.

ஒரு கமர்ஷியல் படத்தில் ரொம்ப முக்கியமான வேலை இது. ‘கத்தி’யெல்லாம் பாருங்க. படத்தோட Mood வேறயா இருக்கும். ஆனால், விஜய் அழகாக இருந்துகிட்டே இருப்பார். செலிபிரிட்டி சினிமாவிற்கு ஏற்ற இரண்டு பேர் இவங்கதான். ரசனையாக இவங்க படத்தைப் பார்க்கப்பிடிக்கும்.

பி.எஸ்.வினோத்தைப் பாருங்க, அவருக்குப் பிடிச்சாதான் படம் செய்வார். அவங்க மனைவி வெப் சீரிஸ் பண்ணும்போது, அழகாக வீட்டில் உட்கார்ந்து குழந்தைகளைப் பார்த்துக்கிட்டார். அவர் செய்யுற படத்தை மீறி இதெல்லாம் அழகில்லையா பிரதர்!                  

நா.கதிர்வேலன்