அணையா அடுப்பு-20



அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

மூடம், முண்டம்!

தருமச்சாலை தொடக்கம்தான்.அன்னதானம் மட்டு மல்ல.சன்மார்க்க சங்கம் மூலம் ஓர் அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அத்தனை வேலைகளையும் வள்ளலார் திட்டமிட்டிருந்தார்.வைத்திய சாலை, சாஸ்திர சாலை, உபகார சாலை, விருத்தி சாலை, உபாசனா சாலை, யோக சாலை, விவகார சாலை என்று பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென சங்கத்தினரை வேண்டிக் கொண்டார்.

ஆனால் -அவற்றில் பலவும் அவருடைய வாழ்நாளில் நிறைவேறவில்லை.அதற்குள்ளாக வள்ளலார் இயற்கையோடு இணைந்து விட்டார்.எனினும் -வள்ளலார் இருந்த காலத்திலேயே அவருக்கு பெரும் மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளித்தது ‘சன்மார்க்க போதினி’ என்கிற பாடசாலை.தருமச்சாலை நிறுவப்பட்டவுடனேயே இதுவும் நடைமுறைக்கு வந்தது.

இந்தியாவில் கல்வி அப்போது தான் அனைவருக்குமானதாக மாறிக்கொண்டு இருந்தது.அதற்கு முன்பாக குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கல்வி என்பது கிடைக்கக்கூடிய வரமாக இருந்தது.கல்வி ஜனநாயகப்பட்டது என்பதே அன்னியர் ஆட்சியால் நமக்குக் கிடைத்த சிற்சில நன்மைகளில் ஒன்று.
‘அனைவருக்கும் கல்வி’ என்கிற முழக்கத்தோடே ‘சன்மார்க்க போதினி’யை துவக்கினார் வள்ளலார்.

வள்ளலாரின் பாட சாலைக்கு…

ஆண், பெண் பேதமில்லை.வயது வித்தியாசமில்லாமல் சிறுவர் முதல் முதியோர் வரை கற்கலாம்.அந்த காலக்கட்டத்தில் அறிவு விருத்திக்கு அவசியமான பல்வேறு நூல்கள் சமஸ்கிருதத்தில் இருந்ததால், அதைக் கற்பதும் அத்தியாவசியமானதாக இருந்தது.எனவே -‘சன்மார்க்க போதினி’யில் தமிழுடன் சமஸ்கிருதமும் கற்பிக்கப்பட்டது.அது மட்டுமல்ல.

உலகத்தோடு தொடர்பு  கொள் வதற்கான பொதுமொழியாக உருவெடுத்திருந்த ஆங்கிலத்தையும் கற்பித்தார்கள்.தமிழ், ஆரியம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளைக் கற்பிக்கும் பாடசாலை என்கிற வகையில் ‘சன்மார்க்க போதினி’க்கு மக்கள் மத்தியிலே நல்ல வரவேற்பு கிடைத்தது.
முதியோர் கல்வி பற்றியெல்லாம் கடந்த அரை நூற்றாண் டாகத்தான் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே முதியோர் கல்வியை அறிமுகப் படுத்தினார் வள்ளலார் என்னும்போது எதிர்காலத்துக்காக சிந்தித்தவர் அவர் என்பது தெளிவாகிறது அல்லவா?

வள்ளலாரின் தலை மாணாக்கராக விளங்கிய தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்கள்தான் ‘சன்மார்க்க போதினி’க்கு பொறுப்பேற்றுக் கொண்டவர்.
முதலியார் பன்முகத்தன்மை வாய்ந்த ஆசிரியர். தமிழ், சமஸ்கிருதம் மட்டுமின்றி ஆங்கிலம், கன்னடம், மராத்தி உள்ளிட்ட பல மொழிகள் கற்றவர். பெங்களூர் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அன்றிருந்த ஆங்கிலேய நீதிபதிகளுக்கு இவ
ரது மொழிபெயர்ப்பு காரணமாகவே பல்வேறு வழக்குகளில் சரியான தீர்ப்பு வழங்க முடிந்தது. ‘உபயகலாநிதிப் பெரும் புலவர்’ என்று அந்நாளில் தென்னாடெங்கும் பிரசித்தி பெற்றவர்.

முதலியார் மட்டுமின்றி வேறு சில திறமையாளர்களும் இங்கே ஆசிரியர்களாகப் பணிபுரிந்ததாகத் தெரிகிறது.‘சன்மார்க்க போதினி’யின் பெரும் சிறப்பு என்னவென்றால், முதன்முறையாக இங்கேதான் திருக்குறள் பாடமாக எடுத்து நடத்தப்பட்டது.இன்று உலகப் பொதுமறையாக பல்வேறு நாட்டினராலும், பலதரப்பட்ட மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் திருக்குறளுக்கு அப்போதே கவுரவம் ஏற்படுத்திக் கொடுத்தார் வள்ளலார்.

திருக்குறள் வகுப்பை தொழுவூர் வேலாயுதம் முதலியார்தான் எடுப்பார்.திருக்குறளில் மூழ்கிவிட்டால் ஓரிரு முத்துக்களா கிடைக்கும்?சில நாட்களில் ஒரே ஒரு குறளை விளக்கவே நாள் முழுக்கக்கூட முதலியார் செலவழிப்பார்.‘சன்மார்க்க போதினி’க்கு பொறுப்பேற்ற பிறகு முதலியாரின் புகழ் நாடெங்கும் பரவ ஆரம்பித்தது.அதிலும் திருக்குறளின் சிறப்பு களை அவர் எளிமையான முறையில் போதித்ததைக் கேள்விப்பட்டு வெளியூர்களில் இருந்து கல்வியாளர்களும் கூட வடலூருக்கு வந்து அவரது வகுப்பில் அமர்ந்ததுண்டு.ஒருவருக்கு புகழ் கூடக்கூட எதிரிகளும் உருவாவார்கள் அல்லவா?

அம்மாதிரி சில எதிரிகள் வடலூரிலேயே இருந்தார்கள்.வள்ளலாரிடம், முதலியார் குறித்து இல்லாததும் பொல்லாததுமாகப் பற்ற வைத்தார்கள்.
“திருக்குறள் வகுப்பு எடுக்கிறார் தொழுவூரார். மூன்று மாதங்கள் ஆகிறது. இன்னும் முதல் அதிகாரம் கூட முற்றுப்பெறவில்லை. ஒருவன் தன் வாழ்நாள் முழுக்க இவரிடம் திருக்குறள் மட்டுமே கற்றுக்கொண்டு இருக்கவேண்டியதுதான்...” என்று ஒரு புகார்.

வள்ளலார் சினந்தார். “எங்கே அந்த மூடமுண்ட வித்வான்?” என்று கர்ஜித்தார்.“வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்...”“நானே நேரில் போய் முதலியார் வகுப்பெடுக்கும் லட்சணத்தைப் பார்க்கிறேன்…”வகுப்புக்கு வந்தார் வள்ளலார்.இவர் வந்ததைக் கவனிக்காமல் தன்னுடைய போதனையில் மூழ்கிப்போய் இருந்தார் முதலியார்.அந்த வகுப்பு முடியும் வரை பொறுமையாக அமர்ந்து கவனித்தார் வள்ளலார்.பின்னர் வள்ளலாரைக் கவனித்த முதலியார், படபடப்பாக ஓடிவந்து வணங்கினார்.அவரோ, “மூடம்... முண்டம்...” என்று மட்டும் திட்டிவிட்டு, அமைதியாக எழுந்து போனார்.
இதையெல்லாம் ரகசியமாக மறைந்து நின்று பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள் தொழுவூராரின் எதிரிகள்.

வள்ளலார் போனதுமே அவர்கள் வந்து சூழ்ந்துகொண்டார்கள்.“என்ன முதலியாரே… நீங்க உசுரைக் குடுத்து பாடமெடுக்குறீங்க. சுவாமி என்னவோ உங்களைத் திட்டிட்டுப் போறாரே…?”“திட்டினாரா? இல்லையே! வாழ்த்திட்டுப் போறாரு…”
“காது குத்தாதீங்க சாமி. அவர் ‘மூடம் முண்டம்’னு திட்டினதை நாங்கதான் காதாலே
கேட்டோமே?”
“வள்ளலாரா ஒருவரைத் திட்டுவார்?”

எதிரிகள் குழம்ப, முதலியார் தொடர்ந்தார்.“அவர் என்னை ‘மூடம் முண்டம்’ என்று வாழ்த்தினார். அதாவது அனைவரின் மூடத்தை உண்ட வித்வான் என்று பாராட்டினார். புரிகிறதா?”“புரியவில்லை…”“உங்களுக்குப் புரியாது. அதனால்தான் நீங்கள் இன்னும் மற்றவனைப் பற்றி புகார் சொல்லும் நிலையில் இருக்கிறீர்கள். எனக்குப் புரியும் என்பதால்தான் என்னை மற்றவர்களுக்கு போதனை செய்யும் பொறுப்பில் வைத்திருக்கிறார் சுவாமிகள்…” என்றார் முதலியார்.

தமிழகத்தில் கல்விப் புரட்சி ஏற்படுத்திய முன்னோடி நிறுவனமான ‘சன்மார்க்க போதினி’, வள்ளலாரின் காலத்துக்குப் பிறகு நிலைபெறாமல் போனது.
ஒருவேளை இன்று இருந்திருந்தால்?உலகின் தலைசிறந்த பல்க லைக்கழகங்களில் ஒன்றாக உருவெடுத்திருக்கும்.

(அடுப்பு எரியும்)

- தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்