கார்பன் Neutral film எப்போது தமிழில் வரும்..?



இன்றைய டிஜிட்டல் உலகில் எல்லாமே நம் கைக்குள் அடங்கும் வண்ணம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இதில் மிகப்பெரிய பங்காக அங்கம் வகிப்பது விஷுவல் மீடியா.
பல நல்ல கருத்துகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லக்கூடிய இதனால், அந்த நல்ல விஷயங்களை பின்பற்ற முடிகிறதா..? சான்றாக உலகையே இன்று அச்சத்தில் நிலைகொள்ளச்  செய்திருக்கும் பருவநிலை மாற்றத்திற்கான காரணிகளில் ஒன்றாக திரைத்துறையும் உள்ளது என்பது வியப்பாகக் கூட இருக்கலாம்.   

2015ம் ஆண்டு ‘Aisa Yeh Jahaan’ என்ற இந்தி திரைப்படம் முதல் கார்பன் neutral film ஆக வெளியானது. ஆனால், அதன் பின் இது போன்ற முயற்சி இன்றளவும் இந்தியாவில் எடுக்கப்படாமலேயே இருக்கிறது.

அது என்ன கார்பன் neutral film?

ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கான ஒவ்வொரு நிலையையும், சூழலியல் கண் கொண்டு மிகத்தீவிரமாக ஆராய்ந்துள்ளனர். அதாவது, கார்பன் தடமாக (ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நபரோ, ஏதேனும் நிறுவனமோ வெளியிடும் பசுமைக் குடில் வாயுக்களின் அளவு) உள்ள பொருட்களான போக்குவரத்து (தரை-வான்வழி), அரங்க அமைப்புகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், தங்கும் விடுதிகளின் பயன்பாடு, பிளாஸ்டிக்கின் அளவு, காடுகளை அழித்து அதில் உருவாக்கப்படும் அரங்கு, மண்ணை அசுத்தம் செய்வது… போன்ற காரணிகளை வைத்து அறிவியல்பூர்வமாக Centre for Environmental Research and Education (CERE) கணக்கிட்டதில் 78.47 மெட்ரிக் டன் கார்பன் சராசரியாக வெளியிடப்படுகிறது என்பதை கணக்கிட்டுள்ளனர்.

வெளியேற்றப்படும் கார்பனை வளிமண்டலத்திலிருந்து எவ்வாறு திருப்பி எடுக்கலாம் என்கிற ஆலோசனையினையும் CERE அமைப்பு இப்படக்குழுவிற்கு பரிந்துரைத்திருக்கிறது. இவர்கள் படப்பிடிப்பு நடத்திய சுற்றுவட்ட பகுதிகளில் மறுபடி காடு வளர்ப்பதற்காக சுமார் 560- வெவ்வேறு வகையான, அந்த நிலத்தில் வளரக்கூடிய வகையில் இருக்கும் மரங்களை நட்டு, மூன்று ஆண்டு காலம் பராமரித்துள்ளனர். இதனால் இத்திரைப்படம் கார்பன் neutral film-மாக உருவாகியிருக்கிறது.

‘‘ஒரு காலத்தில் சில சூழலியல் ஆர்வலர்களும், அறிவியலாளர்களும், கால நிலை மாற்றம் வந்துள்ளதால் உலகம் அழிவதற்கான, மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்று எச்சரித்தனர். இதை பூச்சாண்டி காட்டுவதாகவே பலரும் கருதினர்.ஆனால், இப்போது உண்மையிலேயே உலகம் அழிவதற்கான நிலை வந்துள்ளதால் ‘பருவ நிலை நெருக்கடியை உடனடியாக அறிவிக்க வேண்டும்’ என்ற குரல் உலகம் முழுவதும் ஒலிக்கத் துவங்கியுள்ளது!” என்கிறார் ஆவணப்பட இயக்குநரும் சூழலியல் ஆர்வலருமான ஆர்.ஆர்.சீனிவாசன்.

ஐ.பி.சி.சி. (பருவநிலை மாற்றத்துக்கான நாடுகளுக்கு இடையிலான குழு) கடந்த ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அறிக்கையை வெளியிட்டது.
புவி வெப்பமடைதல் காரணமாக பூமியின் சராசரி வெப்பம், தொழிற்புரட்சிக்கு முன்பு இருந்ததைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பநிலையை எதிர்பார்க்கப்பட்டதற்கு முன்பே தொட்டுவிடும். அதன் தாக்கங்கள் மிக மோசமாக இருக்கும். முன்பு கூறப்பட்ட சராசரி வெப்பநிலை அதிகரிப்பு 2 டிகிரி செல்சியஸை எட்டும்போது இந்தியா போன்ற வளரும், ஏழை நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்படும்...

இந்த அறிக்கையை சுட்டிக் காட்டி பேசும் சீனிவாசன், “இப்போது உலக நாடுகள் உமிழ்ந்துகொண்டிருக்கும் கரியமில வாயு வெளியீட்டை 2030க்குள் 45 சதவீதம் கட்டுப்படுத்தி, 2050க்குள் முழுமையாகக் (அதாவது, தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலைக்கு) கட்டுப்படுத்தினால் மட்டுமே உலக சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிப்புக்குள் வைக்க முடியும்.

இல்லையெனில் 2050 - 2100க்குள் மிகப்பெரிய மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது. அதற்கான அறிகுறிகள் நம் கண்முன் நிற்கின்றன. சமீபத்தில் கூட ஆஸ்திரேலியாவில் 50 கோடி விலங்குகள் அழிந்ததாக சொல்கிறார்கள். இதுபோன்று பல செய்திகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன.
சூழலியல்வாதியாகவும், ஆவணப்பட இயக்குநராகவும் இருப்பதால் இது குறித்த விழிப்புணர்வை கடந்த சென்னை புத்தகத் திருவிழாவின்போது
பிரசாரமாக ஆரம்பித்தோம்.

ஒரு வருடம் நிறைவும் அடைந்துள்ளது. ஆனால், எந்த மாற்றமும் நிகழவில்லை. யாரும் இதை புரிந்து கொண்டார்களா எனத் தெரியவில்லை. மிகப் பெரிய பிரச்னை என்பதை உணர்ந்து கொள்ளவும் இல்லை...” என்று கூறுபவர், திரைப்படத் துறையில் கார்பனின் ஆதிக்கம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து பேசினார்.

‘‘ஒரு கருத்தினை மக்களிடம் எடுத்துச் செல்லும் தளமாக திரைத்துறை இருக்கிறது. புகைப்படம், ஒளிப்படம், சினிமா என்று உலகம் மாறியிருக்கிறது. இணையத்தின் பயன்பாடு நீண்ட நாட்களாக இருந்தாலும், ஃபேஸ்புக் போன்ற செயலிகள் வந்தபின்னரே அதன் வீரியம் அதிகரித்துள்ளது.
இதற்குக் காரணம் விஷுவல் மீடியா.

புகைப்படமாகவும், ஒளிப்படமாகவும் ஒரு செய்தியை ஷேர் செய்யும்போது பலரை எளிதாகச் சென்றடைகிறது. அழிவையும் இதன் வழியாகவே சொல்லலாம் என்கிறோம். உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் திரைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த திரைப்படம் எடுப்பதில் எவ்வளவு கார்பன் வெளியாகிறது என்பதுதான் இன்றுள்ள பிரச்னை.

மிகப்பெரும் பொருட் செலவு, மனித உழைப்பு, பல்துறை அறிஞர்கள், ஆயிரக்கணக்கான வேலையாட்களாக இருக்கும் நிறுவனமாக சினிமா இயங்குகிறது. ஒரு படம் ஆறு மாதத்திலிருந்து இரு வருடங்கள் கூட எடுக்கப்படுகிறது. அந்த இரு வருடங்களில் எவ்வளவு கார்பன் வெளியாகிறது என்பதைக் குறித்து இவர்கள் சிந்திப்பதில்லை. அதுவே மிகப்பெரிய அழிவுக்குள்ளான விஷயமாக இருக்கிறது...” என வருத்தப்படுகிறார்.
1999ம் ஆண்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக 15 மில்லியன் டன் கார்பன்டை ஆக்ஸைடை அமெரிக்கா  உருவாக்கியதாக 2006ம் ஆண்டு UCLA ஆய்வில் கண்டறியப்பட்டது.

CERE அமைப்பின் பணிகள் குறித்து கூறும் ஆர்.ஆர்.சீனிவாசன், “படம் எடுக்கும் கருப்பொருளை தாண்டி, படம் எடுக்கும் நிகழ்வுகளையே கார்பனை குறைப்பது எப்படி என்று சொல்கிறார்கள். இது அவசியமானது, புதுமையானது. இதில் முக்கியமான விஷயம் - இந்த பிரக்ஞை வேண்டும். அதுவே வெற்றி. படம் எடுப்பவர் கார்பனை குறைக்கும் முயற்சியில் ஈடுபட நினைத்தாலே போதும்.

அதை எவ்வளவு தூரம் செயல்படுத்துகிறார்கள் என்பதெல்லாம் இரண்டாவது விஷயம். ஒரு திரைப்படத்திற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், செட் அமைக்கப்படும்போது பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், லைட் வெளிச்சங்கள், அதிக அளவிலான வாகன பயன்பாடு… போன்ற அம்சங்களால் கார்பனை உருவாக்குகிறார்கள்...” என்று கூறும் சீனிவாசன் இதனை மாற்றுவதற்கான வழிமுறைகளையும் கூறுகிறார்.

‘‘செட்டு போடாமல், இயற்கையான முறையில் படமெடுக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். வெறித்தே, கினோ ஆய் போன்ற இயக்கங்கள் ஒரு காலத்தில் இதை வலியுறுத்தின. ‘இந்தப் படத்தில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதில்லை’ என்று டைட்டிலில் போடுகிறார்கள். அதேபோல், ‘இந்தப் படம் 20%, 50% அல்லது கார்பன் இல்லா திரைப்படம்’ என்று டைட்டிலில் போடுமளவிற்கு மாற்றம் வரவேண்டும். இதுவே சுற்றுச் சூழல் பற்றிய மிகப்பெரிய விழிப்புணர்வாக அமையும். இது குறித்து அரசாங்கமும் பரிசீலித்து சான்றிதழ்களை வழங்க வேண்டும்.

இப்போது சூரிய ஒளியிலான LED பல்புகள் வந்துள்ளன. அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம். அதேபோல் முன் தயாரிப்பின்போதும் குறைந்த அளவு கார்பன் உள்ள பிரிண்டுகளை பயன்படுத்தலாம். ஆடியோகிராஃபியில் ரீசார்ஜபுள் பேட்டரிகளை உபயோகிக்கலாம்.ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ஐம்பது பேர் செல்கிறார்கள் என்றால், ஆளுக்கு ஒரு காரில் செல்பவர்களாக இருக்கின்றனர். இந்த ஐம்பது பேரும் ஒரு பொது வாகனத்தில் சென்றால் கார்பன் அளவினை குறைக்கலாம்.

காடுகளில் ஷூட்டிங் என்றால் காட்டையே அழிக்கின்றனர். குறைந்தது ஒரு கிளையாவது ஒடிக்காமல் எடுப்பதில்லை. சுற்றுச்சூழல் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் படம் எடுப்பவர்கள் கூட இதே காரியத்தையே செய்கிறார்கள்.

மக்களின் முழுகவனமும் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது  இருக்கிறது. எனவே நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை, ‘பருவ நிலை மாற்றத்துக்கான காரணிகளாக இருக்கும் பொருட்களை பயன்படுத்தும் அளவைக் குறைப்போம்...’ என அறிவிக்க வேண்டும்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் ஆர்.ஆர்.சீனிவாசன்.

அன்னம் அரசு