தர்பார்



போதைக்கும்பலின் தலைவனைத் தேடிக் கண்டுபிடித்து வேட்டையாடும் ‘தர்பார்’.மும்பை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்று ரஜினிகாந்த் போதைக் கும்பலின் அத்தனை நடவடிக்கைகளையும் முடக்குகிறார். அந்தக் கும்பலின் கோபத்திற்கு உள்ளாகிறார்.
கைதான கும்பலின் தலைவனைச் சிறையில் பார்க்கப்போக, அங்கே ஆள் மாறாட்டத்தில் வேறு ஒருவன் இருக்கிறான். தப்பிச் சென்றவனைத் தேடிக் கண்டுபிடிக்கும் வேலையில் களமிறங்குகிறார். எதிர்ப்பவர்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை.

ரஜினிகாந்தின் மாஸ் இமேஜ் படத்தில் தெறிக்கிறது. பார்த்து விட்டு திரும்பும்போது இப்படி எல்லாம் ஆபரேஷன் நிஜத்தில் சாத்தியம்தானா என்று முட்டி மோதுகின்றன லாஜிக் சந்தேகங்கள். ஆனால், எவையும் உள்ளே இருந்தவரையில் நினைவுக்கு வராமல் பரபர திரைக்கதையில் அசரடிக்கிறது ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கம்.

ரஜினிகாந்த் விறைப்பும், முறைப்புமாக கேரக்டருக்கு ஒவ்வொரு ஃப்ரேமிலும் அட்டகாசமாக உயிர் கொடுக்கிறார். சர்வசாதாரணமாப் பேசிக்கொண்டே கோபத்தின் உச்சிக்கு போவது, மகளின் அன்பில் மெய்மறப்பது, எதிரியிடம் நிதானமாகப் பேசிக்கொண்டே அவர்களை வகையறிந்து பதம் பார்ப்பது... என அனல் பட்டாசு. அதிகமாக பன்ச் வசனம் பேசாமல், ஸ்டைலாக அள்ளுகிறது ரஜினியின் மேனரிசம்.

அழகாக வந்து போகிறார் நயன்தாரா. கமிஷனர் ரஜினிகாந்தின் கவனம் பெற்ற பிறகு, மாறும் அவர் நடவடிக்கையெல்லாம் பாந்தம். அவர் காட்சி தரும்போதெல்லாம் ரஜினியின் பதற்றமும், குறும்பும், வேடிக்கையும் கலந்து வல்லிய நகைச்சுவையாகிறது. ஆனால், அதற்கு மட்டுமே வந்து போவது போல் மறைந்து விடுகிறார் நயன்.

மகளாக நிவேதா தாமஸ் நல்ல நுணுக்கம்! அப்பாவின் துணையாக இருக்க பெண் தேடுகிற விருப்பம், அப்படியொரு பெண் பார்வைக்குப் பட்டதும் மகிழ்ந்து போகிற விதமெல்லாம் சிறப்பு. நிவேதா திரையில் இருக்கும் போதெல்லாம் பாச சென்டிமெண்ட். கூடவே யோகிபாபு இருந்தாலும், நகைச்சுவையையும் ரஜினியே கையில் எடுக்கிறார்.

அடக்கி வாசிக்கிறார் சுனில் ஷெட்டி.பின்னணியில் பரபரக்க வைக்கிறார் அனிருத். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் டெம்போவை தக்கவைத்து பெரும் அவதாரம் எடுத்திருக்கிறார்.யாருக்கும் தெரியாமல் வாழும் சுனில் ஷெட்டி லாரியில் வந்து இடிக்கவா மும்பைக்கு வந்தார்? நிவேதாவுக்குக் கடைசி வரை சிகிச்சை அளிக்காமல் மருத்துவர் பேசியே கொன்றுவிடுவது ஏன்?ரஜினி ரசிகர்களுக்கான ‘தர்பார்’.

குங்குமம் விமர்சனக் குழு